நம் குரல்

Tuesday, July 12, 2011

பசித்தவர் இங்கே! பத்தி எழுத்துகள் எங்கே?


‘ஸ்டார்’ (Star) ஆங்கில நாளேட்டில் எழுதிவரும் 41 பத்தி எழுத்தாளர்களில் (columnists) 30 பேரை அண்மையில் அழைத்துச் சிறப்பித்து அவர்களின் குழுப்படத்தை அந்நாளேடு பெருமையோடு வெளியிட்டிருந்தது. ‘பல்வேறு துறைகளில் மாறுபட்ட சிந்தனைகளை முன்வைத்து எங்கள் நாளேட்டுக்குத் தனித்தன்மையைத் தந்துவரும் இவர்களுக்கு நன்றி’ என அவர்களின் பங்களிப்புக்கு மகுடம் சூட்டியிருந்தது.

வாரந்தோறும் 41 எழுத்தாளர்கள் ‘ஸ்டார்’ நாளேட்டில் கல்வி, பொருளாதாரம், அரசியல், சமுகம் தொடங்கி உலக நடப்புகள், சமையல், விளையாட்டு, இலக்கியம், கலையுலகம் என பல துறைகளில் நுணுக்கமாக அலசித் தம் சிந்தனைகளை வாசகர்களுக்குப் பந்தி வைக்கிறார்கள். இதனால் அதன் வாசகர்கள் தொடர்ந்து புதிய வாசிப்பு அனுபவத்தையும் மாறுபட்ட சிந்தனைகளையும் பெறுகிறார்கள். மேலும், ஏடுகளில் அச்சேறும் செய்திகள் பற்றிய அலசல்களில் ஆழமான புரிதல்களைப் பெறுகிறார்கள். மலாய் ஏடுகளிலும் பத்தி எழுத்தாளர்களின் படைப்புகள் தொடர்ந்து வருகின்றன. வாரத்தின் ஏழு நாட்களிலும் பத்தி எழுத்துகள் ஏடுகளை அலங்கரிக்கின்றன.

‘ஸ்டார்’ நாளேட்டில் பத்தி எழுத்தாளர்களின் படத்தைப் பார்த்தபோது அத்தகைய நிலை நம் தமிழ் நாளேடுகளில் இல்லையே என்ற ஏக்கம்தான் எனக்குள் எட்டிப் பார்த்தது. நீண்ட காலமாக இந்நாட்டில் தமிழ் நாளேடுகள் வெளிவருகின்றன. உணவுக்குத் தொட்டுக்குக் கொள்ளும் ஊறுகாயாக எப்போதாவது சிலரின் சிந்தனைகள் எட்டிப்பார்க்கின்றன. ஆனால், மருந்துக்குக்கூட பத்தி எழுத்துகளைக் காண்பது அரிதாக இருக்கிறது. ஏன் நமக்கும் பத்தி எழுத்துகளுக்கும் அறவே ஆகாதா? அல்லது பத்தி எழுத்து பாரம்பரியம் நமக்கு இல்லையா? தலையங்கம் தாண்டி மற்றவர் சிந்தனைகளை ஆராதிக்கும் மனம் நமக்கு இல்லையா? இப்படி வண்டாகக் குடையும் கேள்விகளுக்கு பதில் என்ன?

பத்தி எழுத்துகள் இல்லாவிட்டால் என்ன? நம் நாளேடுகள் படிப்பதற்குச் சுவையாகத்தானே உள்ளன? ஆசிரியரின் தலையங்கம் வருகிறதே? என உங்களில் பலர் கேட்கலாம். பத்தி எழுத்துகள் நாளேட்டிற்குச் சிறப்புத்தன்மையைத் தருகின்றன. தலையங்கம் என்பது நாளேட்டின் ஆசிரியர் ஒரு முக்கியச் செய்தியை, நாட்டு நடப்பை அவரின் பார்வையில் அலசும் பகுதியாக உள்ளது. அது தவிர்த்து, கேள்வி-பதில் பகுதியில் வாசகரின் சந்தேகங்களுக்குத் தம் கருத்துகளை அவர் முன் வைக்கிறார். இவை மட்டும் போதுமா என்றால் நிச்சயம் போதாது என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கமுடியும்.

தமிழ் நாளேட்டின் ஆசிரியர் அறிவு ஜீவியாகவே இருக்கட்டும். அவர் ஒருவரின் சிந்தனை மட்டும் இந்தச் சமுதாயத்திற்குப் போதுமா? ஒருவரால் எல்லாத் துறைகள் பற்றிக் கருத்துகளை ஆழமாக முன்வைக்க முடியுமா? பல துறைகள் பற்றி மேலோட்டமாக அவர் சொல்ல முனைந்தால் வாசகருக்கு இதனால் பயன் விளையுமா?

நம் சமுதாயத்தில் நிலவி வரும் ஒரு முக்கியக் குறைபாடு, சமுதாயச் சிக்கல்கள் குறித்து நம் அறிவு ஜீவிகள், கல்விமான்கள் வாயைத் திறப்பதில்லை. போகிற போக்கில் துண்டு துணுக்காகச் சின்னச் சின்ன கருத்துகளைச் சொல்லிவிட்டு நழுவிவிடுகிறார்கள். அவற்றை அலசி விரிவாக கருத்துகளைப் பதிவுசெய்வதில்லை. அதற்கான களமும் இல்லை என்பதுதான் உண்மை. சான்றுக்கு ‘இண்டர்லோக்’ நாவல் விவகாரம் ஒன்று போதுமே! மலாய், ஆங்கில ஏடுகளில் விலாவாரியாக அலசி கட்டுரைகளாகப் பதிவு செய்தபோது நம் நாளேடுகளில் அறிக்கைப் போர் நடத்தினோம்.

நம் நாளேடுகளில் எது அறிக்கை, எது செய்தி எனப் பிரித்தறிந்து கொள்ளமுடியாத மயக்க நிலை உள்ளது. பலரின் அறிக்கைகள் செய்திகளாக முக்கியத்துவம் பெற்று ஏடுகளை அலங்கரிக்கின்றன. ஓர் அறிக்கைக்கு பதில் அறிக்கை, மறுப்பு அறிக்கை, ஆதரவு அறிக்கை என தொடர் அறிக்கைகள் வருகின்றன. அறிக்கைகளைத் தாராளமாக வெளியிட வாய்ப்பு உள்ளதால் பல இயக்கங்களின் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிடுவதைத் தம் இயக்கத்தின் முக்கியத் செயல்திட்டமாக எண்ணிச் செயல்படும் நிலைமை உள்ளது. ஒரு சமுதாயச் சிக்கலை, அது பற்றி ஆழமாக அறிந்த ஒரு வல்லுநர் கருத்துகளை பத்தி எழுத்தாக முன்வைத்தால் அறிக்கைகள் ஒதுங்கிக்கொள்ளும் நிலை உருவாகும்.

நம் தமிழ் நாளேடுகளில் பத்தி எழுத்துகள் ஏன் இல்லை என்று எண்ணிப் பார்த்தேன். நீண்ட காலமாகப் பத்தி எழுத்துப் பாரம்பரியம் தமிழ் ஏடுகளில் இல்லை. எனவே, காலப்போக்கில் அதுவே ஒரு மரபாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைவராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஒருவர் பத்தி எழுத்துகளை வழங்க முன்வந்தாலும் ஏடுகள் அவற்றை ஏற்க யோசிக்கும். அதை ஓர் அறிக்கையாக ஏதாவது இயக்கத்தின் சார்பாகத் தந்தால் உடனே வெளியிட முன்வரும். பத்தி எழுத்துகளை வெளியிடா மரபைக் கட்டிக்காப்பதால் இழப்பு இனத்துக்குத்தான் என்பதை யார் எப்படி உணர்த்துவது?

பத்தி எழுத்துகளை வெளியிட தமிழ் ஏடுகள் தயக்கம் காட்டுவதற்கு முக்கியக் காரணம் பணமா?. நமக்கு மூன்று தமிழ் நாளேடுகள் உள்ளன. சமுதாயத்தில் ஐம்பது விழுக்காட்டினர் தமிழ்ப்பள்ளிகளைத் தவிர்த்துத் தேசியப் பள்ளிக்குப் போகின்றனர். மிஞ்சியுள்ள ஐம்பது விழுக்காட்டில் தமிழ் நாளேடுகளை வாங்கிப் படிப்போர் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதுதான் நிதர்சன உண்மை. நம் ஏடுகளின் விற்பனையோடு விளம்பர வருமானமும் குறைவு. இதனால் எழுத்துப் படைப்புகளுக்குச் சன்மானமும் வழங்கப்படுவதில்லை என்று காரணங்கள் கூறப்படுகின்றன.

அண்மையக் காலத்தில்தான் சிறுகதைப் படைப்பாளர்களுக்கு RM50 வழங்கப்படுகிறது. கவிதைகள், கட்டுரைகள் படைப்போர் ‘ஆயுளுக்கும் இலவயமாக எழுதிக்கடவாய்!’ என்று சபிக்கப்பட்ட கூட்டத்தார். விற்பனை குறைவு என்றாலும் ஓரளவு இலாபத்தோடுதான் நாளேடுகள் நடத்தப்படுகின்றன. எனவே, பணம்தான் காரணம் என்று புறமொதுக்காமல் நாளேடுகள் மனம் வைத்தால் நாளுக்கு ஒருவராக குறைந்த அளவில் ஒவ்வொரு நாளேட்டிலும் வாரத்திற்கு ஏழு பத்தி எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும்.

அண்மையில், பத்தி எழுத்துகள் குறித்து ஒரு தமிழ் நாளேட்டின் ஆசிரியரோடு பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஏடுகளில் பத்தி எழுத்துகளுக்கு வழிவிடுவதால் ஏற்படும் சிக்கல்களை அலசினார். “பத்தி எழுத்தாளர்கள் தமிழ் ஏடுகளில் இல்லை என்பது ஒரு குறைதான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவர்கள் தொடர்ந்து நடுநிலையோடு எழுதிவர வேண்டுமே. அவர்கள் ஒரு சார்பாக தம் சிந்தனைகளை முன்வைத்தால் நமக்குப் பாதகமாக ஆகிவிடுமே” என்று தம் பயத்தை வெளிப்படுத்தினார்.

அவரின் பயம் எனக்கு நியாயமானதாகத் தெரியவில்லை. ‘ஒரு சார்பு’ என்பதைவிட எந்தக் கருத்தும் காய்தல் உவத்தலின்றி, நடுநிலையோடு உணர்ச்சிக்கு இடம்தராமல் அறிவுசார்ந்து அலசப்பட்ட கருத்தாக இருந்தால் அதற்கு இடமளிக்கும் ஆண்மை ஏடுகளுக்கு வேண்டும். எடுத்துக்காட்டாக, “இண்டர்லோக் நாவல் விவகாரத்தில் உங்கள் கருத்துகளை முன் வையுங்கள். ஆனால், அவை எங்கள் பத்திரிகை நிர்வாகத்தின் கொள்கைக்கு ஏற்றபடி இருக்கவேண்டும்” என்று எழுதுகோலுக்குக் கடிவாளமிட்டு எழுதச்சொல்லலாமா? அப்படி எழுதப்படும் எழுத்துகளால் யாருக்கு என்ன பயன்?

பத்தி எழுத்துகளுக்குத் தமிழ் ஏடுகள் இடமளிக்கத் தயங்குவதற்கு மற்றொரு காரணம் ஆசிரியரின் தலையங்கத்திற்கு அவை போட்டியாக உருவெடுக்கும் என ஆசிரியர் நினைப்பதும் காரணமாக இருக்கலாம் என அவரே கூறினார். இப்படி நியாயமில்லாத பயத்தைக் காரணமாக்கிக் கொண்டால் எந்தக் காலத்திலும் தமிழ் நாளேடுகளில் பத்தி எழுத்துகளைக் காணவே முடியாது. ஆங்கில, மலாய் ஏடுகளில் தலையங்கம் இடம்பெறும் பக்கங்களில் பத்தி எழுத்துகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

நம் சமுதாயத்தில் அறிவு ஜீவிகளும் கல்விமான்களும் தத்தம் துறைசார்ந்த வல்லுநர்களும் நிறைந்து இருக்கிறார்கள். அவர்களின் சிந்தனைச் சேமிப்பும் இனத்தின் மேன்மைக்கு வழிகாட்டல்களும் அரிய கருத்துகளும் நம் வாசகர்களின் பார்வைக்கு வரவேண்டும். இலக்கியம், சமயம், அரசியல், கல்வி, மருத்துவம், உலக நடப்பு, பொருளாதாரம் என எந்தத் துறையாக இருந்தாலும் அவற்றை அலசி மாற்றுச் சிந்தனையை முன்வைக்கும் எழுதுகோல்களை வரவேற்போம். வண்ணத்தில் கவர்ச்சிகாட்டிப் போதையூட்டும் சினிமாப் பக்கங்களைவிட கருத்துலகத்தில் வாசகர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பத்தி எழுத்துகளுக்கு முதல் மரியாதை செய்யும் புதிய மரபு நம் தமிழ் நாளேடுகளில் மலர வேண்டும்.

இத்தகைய பத்தி எழுத்துகளுக்காக புதிய தலைமுறை வாசகன் பசித்திருக்கிறான். முன்னேறத் துடிக்கும் வாசகனுக்கு ஏடுகளில் வந்து குவியும் வெறும் அறிக்கைகளால் தீராத சலிப்புதான் ஏற்படும் என்பதை நம் தமிழ் ஏடுகள் புரிந்துகொள்வது எப்போது?

ந.பச்சைபாலன்

செம்பருத்தி 3/2011


No comments:

Post a Comment