மரணத்தின் கோரப்பற்கள் எப்பொழுது எங்கு யாரைக் கடித்துக் குதறும் என்று முன்கூட்டியே கணித்துக் கூறுவது சிரமம்.
பெரும்பாலும் முன் அறிவிப்பு இன்றி அழையா விருந்தாளியாய் திடுதிப்பென்றுதான் அது முன்வந்து நிற்கிறது.
கடன் வாங்கியவனிடம் வட்டி, முதல் இரண்டையும் மொத்தமாய் வசூலிக்க வந்த ஆலோங்கைப் போல் ஈவு இரக்கமில்லாமல் வாசலுக்கு வந்து வம்பு செய்கிறது.
வாழ்க்கையைத் தொடங்கலாம் எனத் தயாராகும் தருணங்களில் “நான் விட்டால்தானே” என வழியை மறித்துகொண்டு மரணம் குறுக்கே வந்து நிற்கிறது.
சில சமயங்களில் தலைமாட்டிலேயே தலைசாய்த்தவாறு “காலதாமதமானாலும் பரவாயில்லை. கையோடு அழைத்துகொண்டு போகிறேன்” எனப் பிடிவாதமாய்க் காத்திருக்கிறது.
மரத்தை அடிவேரோடு சாய்த்துக் குதூகலிக்கும் புயலின் கோரத்தாண்டவத்தை ஒத்திருக்கிறது மரணத்தின் செய்கைகள்.
நமக்குப் பின்னால் துரத்திக்கொண்டு வரும் முதுமையோடு உடன் கைகோர்த்துக்கொண்டு வருகிறது மரணம்.
கண் முன்னே அன்போடு பழகியவர்களை எல்லாம் எங்கோ பிடித்து ஒளித்து வைத்துக்கொண்டு கண்ணா மூச்சி விளையாடி நம்மைக் கவலைக்குளத்தில் தள்ளிவிட்டுக் கைக்கொட்டிச் சிரிக்கிறது.
மனித மனங்கள் தமக்குள் கூடுகட்டும் வண்ண வண்ணக் கனவுகளை ஒரு நொடியில் கலைத்துப்போட்டு முடிவுரை அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளியை முன் மொழிகிறது.
மழை நின்ற பின்னும் இலைகளில் சொட்டிக்கொண்டிருக்கும் நீர்த்துளிகள்போல் மரணத்தின் சுவடுகள், இறந்தவரை விட்டுவிட்டு இருப்பவர்களின் இதயங்களில் துயரத் துளிகளைக் கசியச் செய்கின்றன.
சிறு வயது முதலே மரணத்தைப் பற்றிய பய விதைகள் எப்படியோ என் மனத்துக்குள் விழுந்து முளைக்கத் தொடங்கி விட்டன.
நான் வாழ்ந்த தோட்டத்தில் நிகழ்ந்த கோர மரணங்கள் ஒவ்வொன்றும் இனம் காண முடியாத மரணம் குறித்த மிரட்சியை எனக்குள் கசியச் செய்துள்ளன. அருகிலுள்ள ரவாங் நகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு திரும்பியபோது காரால் மோதப்பட்டு இறந்த கிருஷ்ணன், ஈயம் தோண்டப்படும் குட்டையில் தவறி விழுந்து இயந்திரத்தால் கால்கள் அரைபட்டு இறந்த விஜயன், வீடு தீப்பற்றியதால் தூக்கத்திலேயே கருகி இறந்த சிவகாமி - இப்படி இளவயது மரணங்கள் என்னை உலுக்கியிருக்கின்றன.
சாவு வீடுகளில் பிணங்களை எட்டிப் பார்ப்பதற்கும் பயந்துகொண்டு சோகத்தில் மூழ்கிய முகங்களை உற்றுப் பார்த்தவாறு நிற்பேன். ‘டண்ணணக்க’ என சாவு மேளம் அதிர, அந்த மரண இசையை மனத்துக்குள் சேமிப்பேன். எல்லாச் சாவு வீடுகளிலும் ஒரே மாதிரியான பிண வாடை வீசுவதாக என் நாசி உணர்ந்திருக்கிறது.
தோட்டத்தில் இறப்பென்றால் எல்லாரும் திட்டி போட்டு சாவு வீட்டில் திரள்வதால் தோட்டத்தின் ஒவ்வொரு மரணமும் முக்கியத்துவம் பெறும். இறுதி ஊர்வலம் லாரியில் தொடங்கி இடுகாட்டில் முடியும்வரை வேடிக்கை பார்க்கும் என் ஆர்வம் தொடரும்.
புதைகுழிக்கு அருகில் சாங்கியங்கள் முடிந்து பக்கத்திலிருக்கும் கொட்டகையில் கூடி வெட்டியானுக்குக் கணக்கைத் தீர்த்துவிட்டுத் தோட்ட லயங்களுக்குத் திரும்பி நடப்போரைத் பின் தொடர்வேன்.
இப்படித் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தவனிடம் மரணம் நெருங்கிவந்து சொல்லிவிட்டுப் போன தருணங்களை இப்போது நினைத்தால் உடலும் உணர்வும் சிலிர்க்கின்றன.
மரணம் 1 - அண்ணனின் மரணம்
1980 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு நாள், வழக்கம்போல் என் அண்ணனைப் பார்க்க செராஸ் லேடி டெம்பெளர் மருத்துவமனைக்குப் போயிருந்தேன். ரவாங், சுங்கை சோ தோட்டத்திலிருந்து பேருந்தில் பயணப்பட்டுக் கோலாலம்பூருக்கு வந்து செராஸ் நோக்கிப் போகும் இன்னொரு பேருந்தில் ஏறி மருத்துவமனைக்குப் போகவேண்டும்.
ஒவ்வொரு முறையும் அந்தப் பயணங்கள் எனக்குக் கண்ணீரால் நனைந்த பயணமாகவே அமைந்துவிடும். பிறந்தது முதல் அண்ணனுக்கு இருதயத்தில் ஏதோ கோளாறு. 26 வயதில் நோயின் தீவிரம் கூடி ஒரு மாதமாக மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்று வந்தார். எனக்கு வழிகாட்டியாக என் உயர்வுக்கு உந்துசக்தியாக அவரையே முழுமையாக நம்பியிருந்தேன்.
இப்பொழுது உள்ள இருதய மருத்துவமனையும் அதற்கான சிகிச்சையும் அப்பொழுது இல்லை. வாரத்தில் இரு முறையாவது அம்மாவிடம் கெஞ்சி எப்படியாவது பேருந்துக் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு அண்ணனைப் பார்க்கப் போய்விடுவேன். போகும் பொழுதும் திரும்பும்பொழுதும் அண்ணனுக்கு நேர்ந்த நிலைக்காக அழுதுகொண்டே பயணிப்பேன். இப்பொழுதும் ரவாங் நகருக்குப் பயணித்தால் அந்தக் கண்ணீர் நாள்கள் நினைவில் அலையாய் மோதும்.
அன்று ஒரு மரணச் செய்தியைக் கொண்டு போயிருந்தேன். இரண்டு நாள்களுக்கு முன் மரணமடைந்த சமூகக் கலைமணி சா.ஆ.அன்பானந்தனைப் பற்றியது அது. கோலாலம்பூர் யுனைடெட் ஆசியன் வங்கியில் பணியாற்றிய என் அண்ணன், கோலாலம்பூர் இலக்கிய நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்வார். அதிலும் சா.ஆ.அன்பானந்தன் மேல் பெருமதிப்புக் கொண்டிருந்தார்.
இடையில் அண்ணனுக்குக் குடல்வால் (எப்பெண்டிக்ஸ்) அறுவை சிகிச்சை நடந்ததால் தகவல்கள் தெரியவில்லை. அவரின் மரணச்செய்தியைக் கூறியபோது அவர் முகம் மாறி, அழுத்தமான வருத்தம் இழையோடியதைக் கவனித்தேன். அவர் ஒன்றும் பேசவில்லை. கட்டிலில் சாய்ந்தவாறு மேல் நோக்கிப் பார்த்தவாறு இருந்தார். சா.ஆ.அன்பானந்தனின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிறகு, கோப்புகளில் அவர் எழுதிவைத்திருந்த குறிப்புகளைப் படித்திருந்ததால் இருவரின் மானசீகமான நட்பினை நான் அறிந்திருந்தேன்.
போகும்பொழுது நாளிதழ்களையும் வீட்டிலிருந்து எடுத்து வரச்சொன்ன நூல்களையும் கொண்டு போவேன். அவற்றைப் புரட்டியவாறு இருவருக்கும் நேரம் போகும். பேசுவது குறைவுதான். சின்னச் சின்ன விசாரிப்புகளோடு உரையாடல்கள் நின்றுபோகும். வீட்டிலும் அதே நிலைதான். அப்பா அம்மா இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்வதும் குறைவு. அதனால்தானோ அண்ணன், அக்கா, நான், இரு தம்பிகள் என ஐவரும் அப்படியே வளர்ந்திருந்தோம்.
அன்று மாலை நான்கு மணியளவில் நான் விடைபெற எண்ணி எழுந்தேன். அண்ணன் என்ன நினைத்தாரோ என்னை அருகில் அமரும்படி சொன்னார். அமர்ந்தேன். அதன் பிறகு, சுமார் ஒரு மணி நேரம் என்றுமில்லாமல் எதையெதையோ முதல் முறையாக மனம்விட்டுப் பேசினார். நானும் என்னை மறந்து அவர் மனத்தோடு மனம் கலந்தேன்.
“மலாய் பரீச்சையில எப்படியாவது கிரேடிட் எடுத்துடு. உன்னால முடியும். சிறுகதையெல்லாம் அப்புறம் எழுதலாம். உன் ஆர்வம் தெரியுது. அடுத்த வருசம் படிவம் ஆறு படிச்சு யூனிவசிட்டிக்குப் போற வழிய பாரு. தம்பி குணா நல்லா படிப்பான். அவன படிக்க வைக்கணும். அம்மா பத்திதான் உனக்கு தெரியுமே. எதையாவது பேசிடும். அதெல்லாம் பெரிசு படுத்தாதே. அம்மாவ பார்த்துக்க..” இப்படி இன்னும் நிறைய பேசினார். அப்பொழுது எதையும் ஆராய்ந்து பார்க்கும் மனம் எனக்கில்லை. என்றும் இல்லாத மகிழ்ச்சியோடு நான் வீடு திரும்பினேன்.
சரியாக ஒரு வாரம் கழித்து, பேருந்துக்குப் பணம் இல்லாததால் அண்ணனைப் பார்க்கப் போக முடியாத ஒரு நாளில், சுங்கைசோ தோட்டக் கலைமகள் நூலகத்தில் நண்பர்களோடு உறங்கிக் கொண்டிருந்த நள்ளிரவில் கதவு தட்டும் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்தபோது, அண்ணனின் நண்பர் சுப்ரமணியம் அழுதுகொண்டே சொன்னார் “அண்ணன் நம்மல விட்டுட்டுப் போய்ட்டாரு”
மரணம் 2 - அப்பாவின் மரணம்
அண்ணன் மறைந்து மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள், கொளுத்தும் வெயிலில் வீட்டிற்கு முன்னே நான் கோடரியால் விறகு பிளந்துகொண்டிருந்தேன். அண்ணனின் பிரிவால் மனத்தைப் பிழிந்த சோகம் முற்றும் வடியாத காலம். கால்போன போக்கில் ரப்பர் மலைக்காடுகளில் நடந்துபோவேன். ஏதேதோ குழப்பமான சிந்தனைகள் மனத்தைக் கௌவிப் பிடித்து உலுக்கும். பாதிப்பயணத்தில் வழியே களவுபோனதால் திகைத்து நிற்கும் பயணியைப்போல் நான் உடைந்துபோயிருந்தேன்.
அன்று அப்பா வீட்டிற்கு வந்திருந்தார். வயதானதால் தோட்டத்தில் பணி ஓய்வு பெற்ற பின்னர் அம்மாவோடு ஏதோ மனவருத்தம் வந்து கோபித்துக்கொண்டு ஆடு மாடுகளை விற்றுவிட்டு, பத்துகேவ்ஸ் பக்கம் உறவினர் வீட்டில் சில மாதங்களாகத் தங்கியிருந்தார். அண்ணனின் மரணத்திற்கு வந்துபோனவர் திடீரென்று வந்திருந்தார். மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
நான் கோடரியை உயர்த்தியபோது, அருகில் வந்த அப்பா கையால் என்னைத் தடுத்தார். நான் அதைப் பொருட்படுத்தவில்லை. எப்பொழுதும் அவரோடு என் உரையாடல்கள் சுருக்கமாகவே இருக்கும்.
என்னைக் கூர்ந்து நோக்கினார். ஆழமான பார்வை. அப்படி அவர் என்னை நெருக்கமாக நின்று இதயம் துழாவும் பார்வையால் பார்த்ததே இல்லை. கண்கள் ஒடுங்கி, ஆழமான சோகம் இழையோடிய பார்வை. ஒரு கணம் அவர் பார்வையை எதிர்கொண்டேன். மறுகணம் என் கவனம் விறகில் பதிந்தது.
“நீ படிடா. நான் படிக்க வைக்கிறேன். நீ ஏன் வீணா கவலப்படுற? அண்ண இல்லாட்டி என்ன? நான் இருக்கேன் இல்ல” நான் மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. நின்று பார்த்தார்.
வீட்டிற்குள் போனார். என் அக்காள் குழந்தைகள் வாணி - சிவா இருவரோடும் கொஞ்சிப் பேசினார். அம்மா சமைத்த மதிய உணவைச் சாப்பிட்டார். குழந்தைகள் கைகளில் பணத்தைத் தந்தார். நான் ஒரு பக்கமாக அமர்ந்து அதைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அவரிடம் பேசுவதற்கு நான் சொற்களை இழந்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் புறப்பட்டு விட்டார். அவர் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
மூன்று நாள்கள் கழித்து இரவில் பத்துகேவ்ஸிலிருந்து உறவினர்கள் அப்பாவைத் தேடிக்கொண்டு வந்தபோது பயம் எனக்குள் பரவத் தொடங்கியது. இரண்டு நாள்களாக அப்பாவைக் காணவில்லை என்பதால் தேடி வந்ததாகக் கூறினர்.
தெரிந்த இடங்களிலெல்லாம் தேடினோம். இறுதியாக கோலாலம்பூர் பெரிய மருத்துவம¨னையின் சவக்கிடங்கிற்கு என்னை அழைத்துச் சென்று ஒவ்வொரு பிணமாகக் காட்டி அடையாளம் காணச் சொன்னார்கள். நான் பயத்தில் உறைந்து வெளியே வந்துவிட்டேன்.
பிரசவத்திற்காக மருத்துவனையில் இருந்த பெரியப்பா மகளைப் பார்க்க பெக்கிலிலிங் சாலையோரம் நடந்துபோகையில் வாகனத்தால் மோதப்பட்டு மருத்துவமனையில் மரணமடைந்த அப்பாவை உறவினர்கள் அடையாளம் காட்டினார்கள்.
மரணம் 3 - மாணவனின் மரணம்
1998ஆம் ஆண்டு முதுகலைபட்ட ஆய்வுக்காக கணினியில் மூழ்கியிருந்த தருணம். பிற்பகல் ஒரு மணி. ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் தமிழ் வகுப்பு நடத்தும் செமினி உங்கு ஹ¤சேன் இடைநிலைப் பள்ளியின் நான்காம் படிவ மாணவன் சந்திரபாபுதான் அழைத்திருந்தான்.
“சார், இப்ப நான் தமிழ்மொழிக் கழகத்துக்கு தலைவரா இருக்கேன். சில திட்டங்கள செயல்படுத்தலாம்ணு இருக்கேன். உங்ககிட்ட பேசணும் சார்.” அவன் குரலில் ஆர்வம் பொங்கியது. கவிதை, கதைகளில் ஈடுபாடு உள்ளவன் சந்திரபாபு. அவன் அப்பா தமிழ்ப்பள்ளி ஆசிரியர். என்னோடு நெருக்கமாக இருப்பவன். எனக்கு நியமனம் பெறாத உதவியாளனாகச் செயல்படும் பணிவுள்ள மாணவன்.
“அப்படியா, மகிழ்ச்சி சந்திரபாபு. இந்த வாரம் வகுப்புக்கு வரும்போது பேசுவோம். நான் சில ஆலோசனை சொல்றேன்”
“சார், உங்க கிட்ட பேசணும். நீங்க ஐடியா கொடுங்க சார். போன வருசத்தவிட இந்த முறை நல்ல திட்டமா இருக்கணும். உங்க உதவியெல்லாம் வேணும் சார்’
“சரி, அதற்கென்ன பேசுவோம். இந்த வாரம்தான் பார்ப்போமே” உரையாடலைத் துண்டித்தேன். மீண்டும் ஆய்வில் மூழ்கிப்போனேன். உங்ககிட்ட பேசணும்னு எத்தனை முறைதான் சொல்வான்.
மணி ஆறு இருக்கும். சந்திரபாபுவின் அப்பா அழைத்தார். குரலில் பதற்றம் தெரிந்தது. “சார், என் மகன் சந்திரபாபு ரெண்டு மணிக்கு மோட்டார் சைக்கிள்ல போனான். செமினி ரோட்டுல லோரி மோதி செத்துட்டான் சார்” நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். ஒரு மணிக்கு என்னோடு பேசியவன் இரண்டு மணிக்கு இல்லாமல் போய்விட்டானா? என்னோடு பேச வேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொன்னானே!
இன்னும் சில மரணங்கள்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள், படிவம் ஒன்று மாணவர்களுக்கு வகுப்பில் வரலாற்றுப் பாடம் நடத்திக்கொண்டிருந்தேன். அவசர அழைப்புகள் வந்தால் தேவையென்பதால் வழக்கம்போல் கைப்பேசியை உடன் வைத்திருந்தேன்.
அதுவரை கைப்பேசியினால் மாணவரை வகுப்பில் படமெடுத்ததில்லை. ஆனால், அன்று என்ன நினைத்தேனோ தெரியவில்லை. ஒரு மலாய்க்கார மாணவனைக் கைப்பேசியால் படமெடுத்தேன். அவனும் சிரித்துக்கொண்டே எனக்கு முகம் காட்டினான்.
மறுநாள், மாலை வகுப்பு மாணவர்களின் சபை ஒன்றுகூடலில் ஆசிரியர் ஒருவர் முக்கிய அறிவிப்பினைச் செய்தார். எங்கள் பள்ளி மாணவன் ஒருவன், அன்று காலை இன்னொரு
பள்ளி மாணவனோடு பயணம் செய்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி இறந்துவிட்ட சோகச் செய்தியே அது. ஆயிரம் மாணவர்களில் அந்த மாணவன் யார் என ஆசிரியர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கும் அவன் யார் எனத் தெரியவில்லை.
அப்பொழுது, ஒரு மலாய் மாணவி என்னிடம் வந்து, “நேற்று அவனை நீங்கள் படம் பிடித்தீர்களே! இன்னும் அந்தப் படம் இருக்கிறதா?” எனக் கேட்டாள். நான் அதிர்ந்து போனேன். அவன்தானா? கைப்பேசியில் புகைப்படக் கோப்பைத் திறந்து பார்த்தேன். அங்கே என்னை நோக்கிச் சிரித்தவாறு அதே மாணவன். ஆசிரியர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன், தமிழக எழுத்தாளர் மாலனின் கட்டுரை, சிறுகதை நூல்கள் கோலாலம்பூரில் வெளியீடு கண்டன. அவற்றை வாங்கி வந்த நான், ஒரு நாள் இரவு மணி 11.30 ஆகியும் தூக்கம் வராமல் எதையாவது படிக்கலாமே என மாலனின் கட்டுரை நூலைப் பிரித்தேன். ஐந்தாவது கட்டுரை ‘வீரப்பனை ஏன் போலீசாரால் பிடிக்க முடியவில்லை?’ கண்ணில் பட்டது. ஆர்வத்தோடு படித்தேன்.
மறுநாள் காலை பள்ளிக்குத் தயாராகிக் காரில் அமர்ந்து வானொலியைத் திறந்து தமிழ்ச்செய்தியைக் கேட்டேன். தலைப்புச் செய்தியாக என் காதில் விழுந்தது “நேற்று இரவு சந்தனக் கடத்தல் வீரப்பன் போலீசாரல் சுட்டுக் கொல்லப்பட்டான்”.
பள்ளித் தேர்வில் எல்லாக் கேள்விகளுக்கும் விடைகள் இருக்கும். ஆனால், வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு விடைகள் கிடைப்பதில்லை. மரணம் குறித்த கேள்விகளையும் நான் அப்படித்தான் எதிர்கொள்கிறேன். மரணம் விட்டுச் சென்ற அண்ணனின் கடைசிச் சொற்கள், அப்பாவின் ஆழமான பார்வை, மாணவன் சந்திரபாபுவின் கடைசிக் குரல் இன்னமும் தீராத உணர்வலைகளை என்னுள் எழுப்புகின்றன.
ந.பச்சைபாலன்
(Thangameen.com) Okt 2011
No comments:
Post a Comment