நம் குரல்

Monday, November 14, 2011

ஒட்டப்பட்ட மீசைகள்


கீழே கிடந்தது என் மீசை
எப்படிக் கீழே?
காற்றடித்து விழுந்ததா?
கழற்றி யாரும் எறிந்ததா?

காண்ணாடி பார்க்கிறேன் சகிக்கவில்லை
மீசையில்லா முகம்
இவ்வளவு அசிங்கமா?

“டேய் ஊருக்கு முகவரி ஆறுடா
நெத்திக்கு முகவரி நீறுடா
நம்ம முகத்துக்கும் இனத்துக்கும்
முகவரி மீசைடா!”

மீசை முறுக்கி தாத்தா சொன்னது
இன்னும் நினைவில்....

கண்ணாடிப் பிரேமில்
அடர்த்தியான மீசையில்
கம்பீரமாகச் சிரிக்கும் அப்பா...

பாட்டி சொன்ன கதைகளில்
இன்னும் பரவசப்படுத்தும்
இராஜகுமாரன்
உருவிய வாளும்
முறுக்கிய மீசையுமாய்...

நான் மட்டும் எப்படி
மீசையில்லாமல்?

உடனே எடுத்து
உதட்டில் ஒட்டினேன்
யாருக்கும் தெரியாமல்

எதிரில் வந்த நண்பர் சிலரின்
மீசையை இழுத்துப் பார்த்தேன்
கையோடு வந்துவிட்டது

அப்படியானால் எல்லாருக்குமா..?


No comments:

Post a Comment