ஒரே கிரகத்தில் வாழும் சலிப்பா
ஒரே வட்டத்தில் வலம்வரும் அலுப்பா
புதுமைக்கு அலையும் அதீத ஆசையா
சவால்களைச் சந்திக்க விழையும் மனமா
தினவெடுத்த மூளைக்குள் தாளாத தகிப்பா
இறக்கைகளை மாட்டிக்கொண்டு
தொலைதூரத்தில் பறந்து திரிந்து
மீண்டும் திரும்ப
முப்பொழுதும் என்றில்லாமல்
நினைக்கும் போதெல்லாம்
யாருக்கும் சாத்தியமாகிறது
பால்வீதியில் பகற்பொழுதிலும்
அலைந்து திரிந்து
ஒளிச்சிதறல்களை ரசிக்க
அடர்ந்த கானகத்தில்
ராட்சச மிருகங்களோடு மோதி
மல்லுக்கட்டி ஜெயிக்க
வேற்றுக் கிரகவாசிகளை
நவீன ஆயுதங்களால்
மண்ணைக் கவ்வச்செய்ய
புழுதி கிளப்பி விரையும்
குதிரைகளின் மீதேறி பறக்க
கடலுக்குள் இறங்கி
பெயர் அறியா கடல்வாசிகளோடு
சுற்றித் திரிய
யாருக்கும் சாத்தியமாகிறது
ஒவ்வொரு பயணமும்
தனித்தனியே..
அவரவர்க்கும் தனி உலகம்
குறைந்த செலவில்
கிரகம் விட்டுக் கிரகம் பயணம்
காலக் குடுவையில்
நுண்மணற் துகள்களாய்
மணித்துளிகள்
விரைந்து கரைந்து
மறைவதையறியாது..
விளையாட்டில் சலியாத மனங்கள்
கைகளில் கருவிகளோடு
தனி அறைகளில்
கணினித் திரைகளில் நுழைந்து
கனவுலகை நோக்கிப் புறப்படுகின்றன
மெய்நிகர் உலகுக்குள் நுழைந்து
சுற்றித்திரிபவர் கண்ணுக்கு
பூமியில் நடமாடும் மனிதர்கள்
தெரிகிறார்கள்
வேற்றுக் கிரகவாசிகளாக..
அச்சிட்ட அழகான நூல்கள்
தெரிகின்றன
வெறும் காகிதக் குப்பைகளாக..
அருமை
ReplyDelete