நம் குரல்

Saturday, October 20, 2012

இறந்தவனோடு ஒரு கோப்பைத் தேநீர்



ஆள்நடமாட்டம் குறைவான
பெயர் தெரியாத பறவைகள் கீச்சிடும்
மரங்கள் நிறைந்த இடத்தில்தான்
அவனுடனான சந்திப்பு நிகழ்ந்தது
உடல் தழுவிக் குளிர்காற்று
வீசத்தொடங்கியிருந்த நேரம்

ஆவி பறக்கும் தேநீரோடு
எங்களின் உரையாடல் தொடங்கியது
எனக்கு நெருக்கமாக அமர்ந்து
முகத்தை உற்றுநோக்கியவாறு
பேசத் தொடங்கினான்

இறந்தததுக்கான அடையாளம் ஏதுமின்றி
நெடுநாள் பிரிந்த நண்பனின் வருகைபோல்
இயல்பாய் இருந்ததவன் பேச்சு

தான் இறந்தது பற்றியெல்லாம்
கவலையின்றிப் பேசிக்கொண்டிருந்தான்
தன் கனவுகளைப் பற்றி
தன் பலவீனங்களைப் பற்றி
தன் மாமிசம் அறுத்துச் சுவைத்தவர் பற்றி
தன்னைக் கொன்று புதைத்தவர் பற்றி
தன் தவறுகள் பற்றி
தன்னால் கொல்லப்பட்டவர் பற்றி
எதையும் ஒளிவு மறைவின்றி


அவன் வாயிலிருந்து கசியும்
ஒவ்வொரு சொல்லும்
என் மேல் ஊர்ந்து உடல் புகுந்து
உணர்வலையாய் ஆரவாரித்தது
ஒவ்வொன்றும் திட்டமிட்டதாக
நேர்த்தியாக இருந்தது

பேசிக்கொண்டே
மெல்ல நடுங்கும்
என் கைகளைப் பற்றிக்கொண்டான்
என ஆறாத காயங்களில்
கண்கள் படர
தன்னால் உதவமுடியுமென்றான்
கண்களில் துளிர்த்த நீர்மணிகளை
எப்படியோ பார்த்துவிட்டு
பரிவோடு துடைத்து விட்டான்
நானறியாமலே அவன் கைகள் ஆதரவாய்
என் தோளைத் தழுவியிருந்தன

பேசுவதெல்லாம் உண்மையா என்றேன்
தயக்கத்தோடு
உண்மை தவிர வேறு பேச
தனக்கு அவசியம் இல்லை என்றான்

வேகமாய் வீசிய காற்றுக்கு
பக்கத்து மரத்திலிருந்து
சில காய்ந்த இலைகளும்
மஞ்சள் பூக்களும்
உதிர்ந்துகொண்டிருந்தன

இருப்பு பற்றி விசாரித்தேன்
மெல்ல புன்னகைத்தவாறு
மூடியிருந்த கைகளை விரித்து
ஒன்றுமில்லை என்றான்

வாழ்வுக்கும் மரணத்திற்கும் தூரமா?
ஆர்வமாய்க் கேட்டேன்
இடையே மெல்லிய கோடுதான் என்றான்

என்னை நெருங்கி வந்த மரணம் பற்றி
சொல்லிச் சென்ற மரணங்கள் பற்றி
சொல்லிக்கொண்டிருந்தேன்
சுவாரசியமின்றிக் கேட்டுக்கொண்டிருந்தான்

மரணம்தான் முடிவா?
அது முற்றுப்புள்ளியாகலாம்
முடியாத புள்ளிகளாகவும்
தொடரலாம் என்றான் புதிராய்

உரையாடலில் சொற்கள் தீர்ந்த
ஒரு கணத்தில் எழுந்து கொண்டான்
கைகுலுக்கினான்
இருள் பரவத் தொடங்கிய பாதையில்
கவனம் என்றான்

அவன் போனபின்
அவன் அமர்ந்த இடத்திலிருந்த
புத்தகத்தின் பக்கங்களோடு
காற்று பேசிக்கொண்டிருந்தது

No comments:

Post a Comment