நம் குரல்

Tuesday, January 14, 2014

நீர்ப்பரப்பின் ஆரவாரம்



நாணத்தோடு நடைபயிலும் நதி
அதன் இடுப்பில் இளைப்பாறி
நீரில் கால்களை நனைத்தவாறு
கவிதை குறித்துப் பேசினோம்
நீயும் நானும்

எது கவிதை என்பதில்
முரண்பாடு நம்மிடையே
முண்டாசு தட்டியது
நீ ஓசை ஒழுங்கு என்றாய்
நான் உயிர்தொடும்
சொற்கூட்டம் என்றேன்
வாய் வலிக்கப் பேசினோம்
நேரம் கரைய..கரைய..

புரிந்த கவிதை, புரியாத கவிதை
புரட்டிப் பார்த்தோம்
படைப்பாளனின்
அந்தரங்க மன அறைக்குள்
அத்துமீறல் அநியாயம் என்றாய்
அதையும் ஆராய்ந்தோம்

காப்பிக் கவிதைகளை
நீ காறியுமிழ்ந்தாய்
உன் நக்கீரத்தனம்
என்னைப் பூரிக்க வைத்தது

அப்போது நீர்ப்பரப்பில்
கற்களை வீசி விளையாடிய
சிறார்களின் ஆரவாரத்தை
ரசிக்கத் தொடங்கினோம்

ஆரவாரத்திற்குக் கீழே
நீரின் அமைதியை, ஆழத்தை
இருவரும் மறந்துபோனோம்

அப்போது
நதியோரத்தில் நுரையாய்
ஒதுங்கிக் கிடந்தது
நம் கவிதைத் தேடல்

No comments:

Post a Comment