இலக்கியம் நேசிக்கும் இனிய இதயங்களே,
ஒரு கவிதைத் தொடரோடு உங்கள் இதய வாசல் நாடி வருகிறேன்.
ஆதி.குமணனின் ‘வானம்பாடி’யில் பிள்ளையார் சுழியிட்டுத் தொடங்கியது என் கவிதைப் பயணம். கவிதையில் புதிய முயற்சிகளுக்கு அவர் ஏடுகளின் கதவுகளை அகலத் திறந்துவிட்டபொழுது உள்ளே நுழைந்தவர்களில் நானும் ஒருவன். இடையறாத வாழ்க்கைப் பயணத்தில் இளைப்பாற எனக்கு உற்ற துணையாய் இருப்பது கவிதைதான். அதன் கையைப் பிடித்துக்கொண்டு பயணப்பட்டாலே மனமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கின்றன.
பொருளியல் தேவைக்காகத் தன் போக்கில் இழுத்துக்கொண்டோடும் சூழலில் இருந்து என்னை மீட்டெடுக்கும் முயற்சியே இலக்கியமும் கவிதையும் அவை குறித்த அவதானிப்பும். நான் எழுதத் தொடங்கிய 1970களின் இறுதியில் இருந்த கவிதைமொழியும் இன்று நான் எதிர்நோக்கும் கவிதைமொழியும் வெவ்வேறானவை. கவிதையின் அகமும் முகமும் இன்று வெகுவாக மாறிவிட்டன.
மொழியின் வசீகரத்தில் என்னை இழந்து, அடுக்கு மொழியில் அழகழகாய்ச் சொல்வதே கவிதை என்ற புரிதலோடு சமகாலக் கவிஞர்களை முன் மாதிரியாகக் கொண்டு கவிதைப் பந்தி படைத்ததை இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். பழைய ஆல்பத்தைப் புரட்டிப் பால்ய காலப் படங்களை ஆசையோடு பார்க்கிற மனநிலையே எனக்குள் எழுகிறது.
காலந்தோறும் கவிதைமொழி மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு காலக்கட்டத்தில் எழுதப்படும் கவிதைமொழி போன்று இன்னொரு காலக்கட்டத்திலும் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. கவிதை எழுதவரும் புதிய படைப்பாளிகள் தாம் வாழும் காலத்தின் கவிதை மொழியை உள்வாங்கிக்கொண்டு அதே பாணியில் எழுதத் தொடங்குகிறார்கள். பலர் அந்தக் கவிதை மொழியின் பிடியில் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தேங்கிவிடுகிறார்கள். சிலரே, அதிலிருந்து விடுபட்டுத் தங்களுக்கான கவிதை மொழியைக் கண்டடைகிறார்கள்; அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள்.
மனித மனம் எப்பொழுதும் புதுமையை நாடும் இயல்புடையது. அதற்கேற்ப மனிதனின் கவிதைமொழியும் அதற்கான வடிவமும் மாறுவது இயற்கையானது. மரபிலிருந்து முரண்பட்டு வந்த புதிய கவிதையும் பல்வேறு மாற்றங்களைக் கடந்து இன்று நவீன கவிதையாக நம்மிடம் மாறுபட்ட மொழியில் பேசுகிறது. புதுக்கவிதையில் ‘புது’ என்ற சொல் உதிர்ந்ததுபோல, ‘நவீன’ என்ற சொல்லும் நிலைக்காது. காலப்போக்கில் அதுவும் உதிர்ந்துபோகும். கவிதைக்கான மொழி புதிய தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கும்.
புதிய கவிதைமொழி என்பது வெறும் வடிவம் சார்ந்தது மட்டுமல்ல. உள்ளடக்கத்திலும் சொல்லின் சூட்சுமம் அறிந்து அவற்றைப் பயன்படுத்துவதிலும் கவிதையின் புதுமையைத் தரிசிக்க முடியும்.
இன்றைய நவீன கவிதை பழைய பிரச்சார பாணியை விடுத்து, அழகியல் கூறுகளைப் புறமொதுக்கி, சொல் விளையாட்டுகளை விலக்கி, அலங்காரங்கள் இல்லாமல் உரைநடைத் தன்மையிலேயே வாசகனை நெருங்கி வருகிறது. இன்றைய கவிதை இதுவரை சொல்லாத வாழ்வின் கணங்களைப் பதிவு செய்கிறது; எந்தத் கருத்தாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது; மதிப்பீடுகளைக் கலைத்துப் போடுகிறது; எழுதியெழுதிச் சலித்துப்போன வழக்கமான சொல்லாடல்களை விலக்குகிறது; மனத்தின் ஆழத்தைத் திறந்து காட்டுகிறது. மொத்தத்தில் படைப்பாளிகள் தொடர்ந்து தங்களைப் புதுப்பித்துக்கொள்ள நெகிழ்ந்து கொடுக்கிறது.
கவிதையில் ‘சொல்லுதலை’விட ‘உணர்த்துதல்’ முக்கியக் கூறாக மாறிவருகிறது. இதனால்தான் கவிதைகளைப் புறவயமாக மட்டுமல்லாமல் அகவயமாகவும் நெருங்கும் சூழல் வாசகனுக்கு நேர்ந்திருக்கிறது. இதற்குப் பல வருட கவிதை வாசிப்பு அனுபவம் மட்டும் போதாது. கவிதையின் குவிமையம் நோக்கி உள்வெளிப்பயணம் மேற்கொள்ளும் முயற்சி தேவை.
கவிதை பற்றிய புரிதல் ஒவ்வொரு படைப்பாளிக்கும் மாறுபடுகிறது. எது கவிதை என்ற கேள்வியை நீட்டினால் ஒவ்வொரு படைப்பாளியும் தரும் பதிலே இந்த உண்மையை உறுதிப்படுத்தும். கவிதை பற்றிய என் புரிதலை என் கவிதைகளே பேசும்.
இன்றைய இளம் தலைமுறை இயற்கையிலிருந்தும் இலக்கியத்திலிருந்தும் விலகி நிற்கும் ஒரு தலைமுறை. மெய்நிகர் உலகில் தலைசாய்த்துக் கனவுகளில் சஞ்சரிக்கும் தலைமுறை. எதையும் கண்டு, கேட்டு, உற்றறிந்து, வாசிப்பைப் புறமொதுக்கும் தலைமுறை. இன்று மோசமான சூழலெனினும் கவிதைக்கான தேவை முற்றும் தீர்ந்துவிடவில்லை என்ற நம்பிக்கையோடு கவிதைமொழி பேச வருகிறேன்.
ஒவ்வொருவர் மனத்துக்குள்ளும் வெளியே தெரியாமல் எத்தனையோ எண்ணங்கள் மலர்ந்து வாடி உதிர்கின்றன. என் மனத்திலும் எத்தனையோ கற்பனைகள் முகங்காட்டி என்னை அலைக்கழிக்கின்றன. என் மனவெளியெங்கும் மண்டிக்கிடக்கும் கற்பனைகள், விரக்திகள், வேதனைகள், கோபங்கள், முரண்கள், இனிக்கும் நினைவுகள் இவற்றைக் கவிதையாக நிறமாற்றும் முயற்சியே இந்தத் தொடர். கை நிறைய கனவுகளாய் அவற்றை அள்ளி வருகிறேன். நம் நாடு நாளேட்டில் இந்தக் கவிதைப் பயணத்திற்கு வழியமைத்த இனிய நண்பர் வித்தியாசகருக்கு என் இதய நன்றி. என் கவிதைப்பயணத்தில் சக பயணிகளாக உடன் வரும் உங்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
நம்பிக்கையுடன்,
ந.பச்சைபாலன்
No comments:
Post a Comment