நம் குரல்

Tuesday, February 3, 2015

நம்மூர் சார்லி சப்லின்கள்

                 


சிரிக்கக்கூடாதென நாம் உறுதியாயிருந்தும்
நமக்குச் சிரிப்பு மூட்டூகிறார்கள்
நம்மூர் சார்லி சப்லின்கள்
வேடிக்கை காட்டாமலே வகைவகையாய்ச் சிரிக்க
தொடர்ந்து வற்புறுத்துகிறார்கள்

நம்மிடமிருந்து அடிக்கடி எழுகிறது
ஒரு குபீர் சிரிப்பு
ஒரு வெடிச் சிரிப்பு
ஓர்  ஏளனச் சிரிப்பு
ஓர் அசட்டுச் சிரிப்பு
ஒரு புன்சிரிப்பு

கிச்சுமுச்சு மூட்டாமல்
உம்மனாமூஞ்சி காட்டுகிறார்கள்
தாடியைத் தடவியவாறு
தலையைச் சொறிந்தவாறு
மௌனத்தில் உறைந்த முகங்களோடு
எப்பொழுதும் யோசித்தவாறு நடமாடி
சிரிப்பு மூட்டுகிறார்கள்

மேடையில் பேசத் தயங்குகிறார்கள்
குறைவாகப் பேசுகிறார்கள்
தப்புத் தப்பாகப் பேசுகிறார்கள்
குழப்பமாகப் பேசுகிறார்கள்
பேச்சுக்கிடையே  வாய்விட்டுச் சிரிக்க
நமக்கு வாய்ப்பளிக்கிறார்கள்

பிரச்சினைப் புழுதியைக் கூட்டி
கம்பளத்திற்கு அடியில் தள்ளிவிட்டு
கைகளைத் துடைத்தவாறு
ஒண்ணும் இல்லிங்க.. எல்லாம் சரியாப் போகும்
பார்ப்போம்..சும்மா பேசுறாங்க
எனச் சமாளிக்கிறார்கள்

சிரிக்கும் நம்மைப் பார்த்து
அவர்களின் ஆதரவாளர்கள் முறைக்கிறார்கள்
சிரிக்கக்கூடாது எனக் கட்டளையிடுகிறார்கள்
சிரமப்பட்டுச் சிரிப்பை அடக்கிக்கொண்டு
நமக்குள் சிரிக்கிறோம்

சிரிக்கும் நம்மை
வெளியிலிருந்து யாரோ எட்டிப்பார்க்க
எங்கும் கேட்கிறது
ஒரு நையாண்டிச் சிரிப்பு
ஒரு கேவலச் சிரிப்பு
ஒரு நமட்டுச் சிரிப்பு


No comments:

Post a Comment