‘பள்ளிக்குச் சென்ற ஐந்தாம் படிவத் தமிழ் மாணவன் கண்ணன் காணாமல் போனான்’
தமிழ் நாளிதழில் முதல் பக்கச் செய்தியாக
இதனைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். கண்ணனுக்கு என்ன ஆனது என அறிந்துகொள்ளும்
ஆர்வம் அனைவருக்கும் எழும். இந்தச் செய்தியால் சமூகத்தில் ஒரு பரபரப்புக்
காய்ச்சலே பரவும். இப்படியொரு செய்திக்காகக் காத்திருக்கும் அறிக்கை மன்னர்கள்
பற்றிச் சொல்லவே வேண்டாம். ‘பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு
இல்லையா? கல்வி அமைச்சு விரைந்து செயல்பட்டு கண்ணனைக் கண்டுபிடிக்க வேண்டும். பள்ளி
நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு வேண்டாம்’. இப்படியெல்லாம் அறிக்கைகள்
ஏடுகளை அலங்கரிக்கும்.
மேற்குறிப்பிட்ட செய்தி கற்பனைச்
செய்தியன்று. ஒவ்வோர் ஆண்டும் கண்ணனைப்போன்று பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள்
இடைநிலைப்பள்ளிகளில் காணாமல் போகும் அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் தமிழைத் தேர்வுப் பாடமாகப் பயின்ற மாணவர்கள், இடைநிலைப்பள்ளிகளுக்குச்
சென்ற பிறகு,
பி.எம்.ஆர். தேர்விலும் எஸ்.பி.எம். தேர்விலும் தமிழைப்
புறக்கணிக்கும் நிலை முப்பது விழுக்காட்டை நெருங்கிவிட்டது.
கீழ்க்காணும் மாதிரி அட்டவணை, யூ.பி.எஸ்.ஆர்
தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை இடைநிலைப்பள்ளி சென்ற பிறகு படிப்படியாகச்
சரிந்து போவதைக் காட்டுகிறது.
தேர்வு
|
மாணவர் எண்ணிக்கை
|
காணாமல் போன மாணவர்கள்
|
விழுக்காடு
|
யூ.பி.எஸ்.ஆர்.
|
14 471
|
||
பி.எம்.ஆர்.
|
12 306
|
2 165
|
14.96%
|
எஸ்.பி.எம்.
|
10 657
|
3 814
|
26.36%
|
இது பற்றித் தமிழ்ச்சமூகம் எந்தவிதமான
சலனமுமின்றித் தாமுண்டு தமக்கே உரிய மற்ற சிக்கல்களுமுண்டு என அவற்றிலே
உழன்றுகொண்டிருக்கிறது. வழங்கப்பட்ட உரிமைகளையும் புறந்தள்ளிவிட்டுப் பிறப்புப்
பத்திரங்களுக்கும்,
அடையாள அட்டைகளுக்கும் இப்பொழுது அலைந்துகொண்டிருக்கிறது.
தமிழ்ப்பள்ளி,
தமிழ்க்கல்வி என்றால் உரத்தக் குரல் கொடுப்பவர்களும் இது பற்றிக்
கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக்கொள்ள, இந்நாட்டில் தமிழ்க் கல்வியின்
வளர்ச்சியே கேள்விக்குறியாகி வருகிறது.
இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் ஏன்
காணாமல் போகிறார்கள்?
அவர்களுக்கும் தமிழுக்கும் ஏன் இடைவெளி கூடி வருகிறது? இவை
பற்றி எண்ணிப்பார்த்தேன். எண்ணிப் பார்த்ததை உங்களின் பார்வைக்குக் கொண்டு
வருகிறேன்.
இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மாணவர்கள்
தமிழைவிட்டு விலகிப் போவதற்குப் பல காரணங்கள் உண்டு. தமிழ்ப்பள்ளிகளில் ஆறு ஆண்டுகள் தமிழ்
படித்தும் ஒரு பகுதி மாணவர்கள் தமிழ் மொழியிலும் பிற மொழிகளிலும் வாசிப்பு, எழுத்து போன்ற அடிப்படைத் திறன்களை
அடையாமல் இடைநிலைப்பள்ளிக்கு வருகிறார்கள். தமிழ்ப்பள்ளியோடு தமிழுக்கு முழுக்குப்
போட்டுவிட்டு இனி தமிழோடு உறவே வேண்டாம் என ஒதுங்குகிறார்கள்.
பள்ளியில் கால அட்டவணையில் தமிழ்
சேர்க்கப்பட்டுச் சொல்லித் தரப்பட்டாலும் தமிழ் வேண்டாம் என முடிவெடுக்கிறார்கள்.
தமிழில் தங்களால் தேர்ச்சி அடைய முடியாது என்ற அவநம்பிக்கைக்கு ஆளாகிறார்கள்.
யூ.பி.எஸ்.ஆர். தேர்வின் தோல்வி அல்லது குறைந்த தேர்ச்சி பெற்ற அனுபவம் அவர்களைப்
பயமுறுத்துகிறது.
இவர்களில் சிலர், படிவம்
ஒன்றிலும், படிவம் இரண்டிலும் தமிழ் படிப்பதாகப் பாவனை செய்தாலும் படிவம் மூன்று
வந்தவுடன் பி.எம்.ஆர். தேர்வில் தமிழோடு தங்கள் உறவை முறித்துக் கொள்ளும் முடிவை
எடுக்கிறார்கள். தமிழ் வகுப்பில், தேசிய, சீனப் பள்ளிகளில் படித்த தமிழறியாத மாணவர்கள் தமிழ் படிக்காமல் அமர்ந்து
இருப்பதைப் பார்த்து அவர்களுடன் இணைந்துகொள்கிறார்கள். பள்ளி நேரத்திற்குப்
பிந்திய தமிழ் வகுப்புகள் நடைபெறும் பள்ளிகளில் தமிழ் வகுப்புக்கு மட்டம் போடும்
மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
பெரும்பாலும் போக்குவரத்துச் சிக்கலைக் காரணம் காட்டி வகுப்புகளைப்
புறக்கணிக்கிறார்கள்.
மாணவர்கள் தமிழ் வேண்டாம் என்று
ஒதுங்கும் நிலைக்குப் பெற்றோர்களும் காரணமாகிறார்கள். தமிழ்ப்பள்ளியில் பயின்றவரை
தம் பிள்ளைகளின் கல்வியில் ஓரளவு அக்கறை செலுத்திவரும் அவர்கள், இடைநிலைப்பள்ளியில் பிள்ளைகள் தொடர்ந்து தமிழைப் படிக்கிறார்களா என்று
கவனிக்கத் தவறுகின்றனர். இதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு தமிழுக்கு
முழுக்குப் போடுகிறார்கள். “பாடங்கள் கூடிவிட்டன.
அவற்றோடு சிரமமாக இருக்கும் தமிழையும் பிள்ளைகள் சுமக்கவேண்டாமே” என்று
பெருமனத்தோடு பெற்றோரே முடிவுக்கு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பி.எம்.ஆர்.
தேர்வுக்குப் பிறகு,
படிவம் நான்கில் பாடங்கள் கூடுகின்றன. இதன் காரணமாக ஒவ்வோர்
ஆண்டும் படிவம் நான்கில் தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் சரிகிறது.
“என் மகனுக்குத் தமிழ் படிக்க விருப்பமில்லை. எனவே, தமிழ்
வகுப்பில் என் மகனைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று
பெற்றோரே எழுதிய கடிதங்களைப் பெற்ற ஆசிரியர்கள் உண்டு. தமிழில் குறைவான
புள்ளிகளைப் பெறுவதால் ஒட்டுமொத்தத் தேர்ச்சியும் வீழ்ச்சியடைவதும் இதற்குக்
காரணமாகிறது.
இதனை ஆழ்ந்து நோக்கினால், பெற்றோர்
- மாணவர் மனநிலைக்கு இன்னொரு காரணமும் மறைவாக இருப்பதை உணரலாம். “தமிழ்க்கல்வி
தமிழ்ப்பள்ளியோடு போதும். மருத்துவம், பொறியியல், கணினி, போன்ற
உயர்கல்விக்குத் தமிழ் பயன்படாது. எனவே, இடைநிலைப்பள்ளியில் தமிழ்
வேண்டாம்” என்ற எண்ணம் அவர்களை ஆட்டிப்படைக்கிறது. வயிற்றுக்காக எந்த மொழியையும் எந்தப்
பாடங்களையும் படிக்கலாம். ஆனால், வாழ்க்கை மொழியாக தமிழ் இருக்க வேண்டும்
என்ற ஆழமான தமிழ் உணர்வு பெற்றோருக்கும் மாணவருக்கும் இருந்தால்தான் தமிழ்
புறக்கணிப்புக் கதையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.
யூ.பி.எஸ்.ஆர். தேர்வுக்குப் பிறகு, தமிழ்
ஆசிரியர் இல்லாத,
தமிழ் வகுப்புகள் நடைபெறாத இடைநிலைப்பள்ளிகளுக்குச்
செல்லும் மாணவர்கள் நிலையோ இன்னும் மோசமானது. யூ.பி.எஸ்.ஆர். தேர்வில்
தமிழ்மொழியில் சிறந்த தேர்ச்சி இருந்தும் தொடர்ந்து தமிழைப் படிக்கமுடியாத
நிலையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களை அங்கு இழந்து வருகிறோம்.
உணர்வுள்ள பெற்றோர்கள் மட்டும்
விடாப்பிடியாக வெளியில் எங்காவது தமிழ், தமிழ் இலக்கிய கூடுதல்
வகுப்புகளுக்குப் பிள்ளைகளை அனுப்பித் தமிழ் மாணவர்களைக் காப்பாற்றி வருகிறார்கள்.
தாய்மொழி வகுப்புகள் நடைபெற வேண்டுமானால்
பள்ளியில் குறைந்தது 15 மாணவர்கள் இருக்க வேண்டும் என்ற கல்விச் சட்டமும் சில வேளைகளின் சிக்கலை
ஏற்படுத்துகிறது. 15 மாணவர்களுக்கும் குறைவாக இருந்தால் எவ்வளவு போராடினாலும் தமிழ் வகுப்புகள்
தொடங்குவது சிரமம்தான்.
மேற்கூறிய காரணங்களைத் தவிர்த்து, இடைநிலைப்பள்ளிகளில்
தமிழ் ஆசிரியர்களே தமிழ் மாணவர்கள் எண்ணிக்கைச் சரிவுக்குக் காரணமாவது உண்டு. தமிழ்மொழியில் பின் தங்கிய மாணவர்கள்
தேர்வுக்கு அமர்ந்தால் தமிழ்மொழித் தேர்ச்சி வீழ்ச்சியடையும் என்பதால் அவர்களிடம்
தேர்வைத் தவிர்க்குமாறு ஆலோசனை கூறும் நிலை உள்ளது. பி.எம்.ஆர். தேர்வில் விடுபடும்
மாணவர்கள் அதன் பிறகு,
படிவம் நான்கில் தமிழ் வகுப்பில் வெறும் பார்வையாளர்களாக
அமர்ந்திருப்பர். பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி விழுக்காடு அப்பள்ளியின் தன்மானப் பிரச்சினையாக மாறிவருவதால்
தேர்ச்சிபெற வாய்ப்புள்ள மாணவரை மட்டும் தேர்வுக்கு அனுப்பும் சூழலில் தமிழ்
மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிவைக் காணும் என்பது திண்ணம்.
எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் இலக்கியப்
பாடத்தைத் தேர்வு செய்யும் மாணவர்கள் எண்ணிக்கையும் கவலையளிப்பதாக உள்ளது. பல
தரப்பினரின் தீவிர முயற்சிகளுக்குப் பின்னரும் அந்த எண்ணிக்கை 20.45 விழுக்காடாக இருப்பது (தேர்வெழுதிய 14 471 யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களில்)
ஏமாற்றத்தைத் தருகிறது. அறிவியல் துறைசார்ந்த உயர்கல்வியில் முனைப்பு காட்டினாலும்
தமிழ் இலக்கியத்தின் பயன் அறிந்து அதைப் படித்துச் சுவைக்க மாணவர்களை
ஆற்றுப்படுத்தவேண்டிய கடமை ஆசிரியர், பெற்றோர் ஆகிய இரு
தரப்பினருக்கும் உண்டு. கீழ்க்காணும் பட்டியல் தமிழ் இலக்கியத்தின் நிலையைக்
காட்டுகிறது.
தேர்வு
|
மாணவர் எண்ணிக்கை
|
வேறுபாடு
|
விழுக்காடு
|
யூ.பி.எஸ்.ஆர்
|
14 471
|
||
எஸ்.பி.எம்.தமிழ் இலக்கியம்
|
2 960
(20.45%)
|
11 511
|
79.55%
|
நம் சமூகத்தின் இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் ஒட்டு
மொத்தக் கவனமும் தமிழ்ப்பள்ளிகளைச் சுற்றியே வருகிறது. தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பவேண்டும்
என்ற உணர்வு பெற்றோர்களிடையே மேலோங்கி உள்ளது. அதோடு, தங்களின்
தமிழ்க்கடமை முடிந்துபோனதாக அவர்கள் நினைக்கிறார்கள். தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள்
எண்ணிக்கையை உயர்த்தவேண்டும் என்ற முனைப்பும் உழைப்பும் இடைநிலைப்பள்ளிகளில்
நீர்த்துப்போவதை எப்பொழுது உணரப்போகிறோம்?
தமிழ்க்கல்வி குறித்து நாம் ஆயிரம்
ஆராய்ச்சி மாநாடுகளையும்,
கருத்தரங்குகளையும் பயிற்சிப் பட்டறைகளையும் தொடர்ந்து
நடத்தலாம். ஆனால்,
யாரை மையமிட்டு அவற்றை நடத்துகிறோமோ அவர்களே காணாமல்
போகிறார்கள் என்னும்போது நம் முயற்சிகளால் என்ன பயன் விளையப்போகிறது?
‘தமிழ் எங்கள் உயிர்’
என்று தமிழவேள் கோ.சாரங்கபாணி சமூகப் போராட்டத்தைத் தொடங்கி
நிதி திரட்டி மலாயாப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுமொழியாகத் தமிழை நிலைநிறுத்தினார்.
இன்றைய சூழலில்,
‘இடைநிலைப்பள்ளியில் தமிழைக் காப்போம்’ என்னும்
அறப்போராட்டத்தைச் சமூக இயக்கங்கள் தொடங்கிக் கடுமையாகப் போராடினால் ஒழிய
இச்சிக்கலுக்குத் தீர்வு பிறக்காது.
‘தமிழ் மாணவரே! தமிழ்
மாணவரே
தமிழைப்
படிக்கத் தயங்கு கின்றேரே!
தமிழைத்
தமிழ் மாணவர் படிக்காமல்
இமிழ்கடல்
உலகில் எவர் படிப்பாரே’
நம் கவிஞர் பொன்முடி பாடிய இந்தக்
கவிதையை இன்னும் எத்தனை காலத்திற்குப் பாடிக்கொண்டிருப்பது?
பெற்றோர்களின் தவறு...
ReplyDeleteதமிழா! நீ பேசுவது தமிழா? உனக்குத் தாய்மொழி தெரியாது எனும் சொல்வதில் தான் பெருமையா? வெட்கமும் மானமும் விட்ட நிலை அல்லவா அது.ஒரு மனிதனின் முகவர் அவனது தாய்மொழியே! தாய்மொழியைப்புறக்கணிப்பவன் தாயையும் புறக்கணிப்பான். அறிவின் வளர்ச்சிக்கு அவரவர் தாய்மொழியே வழி வகுக்கும். மொழிவழிச் சிந்தனையே மனிதனின் முன்னேற்றத்திற்குக் காரணம் ஆகும். வாழ்க தமிழ்!எனப்பாடுவதை விட ஒருவன் தன் தாய்மொழிவழியே பேச, எழுத வேண்டும் என முனைப்போடு வாழ்தல் வேண்டும். உணவில் கலப்படம் எனில் நுகர்வோர் மன்றம் செல்கிறோமே! உடல் ஒருநாள் அழியத்தானே போகிறது. உயிர் போன்றது தாய்மொழி. மொழியில் கலப்படம் எனில் உயிருக்கு அல்லவா கேடு!
ReplyDelete