நம் குரல்

Monday, March 16, 2015

எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம்: தொடரும் இடர்கள்     பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள் என்ற பரப்புரையின் விளைவாகத் தமிழ்ப்பள்ளிகளில் இந்த ஆண்டு ஒன்றாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. தமிழ்க்கல்வி மீது அக்கறையுள்ள அனைவருக்கும் மகிழ்வைத் தரும் செய்தி இது. ஆனால், இதே மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் கல்வி முடித்து இடைநிலைப்பள்ளிகளுக்குப் போகும்போது அவர்களில் ஒரு பகுதியினர் தமிழோடு தங்கள் தொடர்பைத் துண்டித்துக்கொள்கின்றனர். ஒன்றாம் ஆண்டில் பயிலும் சுமார் 16 000 மாணவர்களில் 12 000 மாணவர்கள்தாம் பின்னர் எஸ்.பி.எம், தேர்வில் தமிழ்ப் பாடத்திற்கு அமர்கின்றனர். இந்நிலைக்குப் பல காரணங்கள் உள்ளன. இது பற்றித் தனி ஆய்வுக்கட்டுரையே எழுதலாம். தமிழ் இலக்கியத் தேர்வுக்கு அமர்வோரின் எண்ணிக்கை இன்னும் வேதனைக்குரியது. ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 3000க்கும் குறைவான மாணவர்கள்தாம் இலக்கியப்  பாடத்தைத் தேர்வு செய்கின்றனர்.

      அண்மையில், எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 11ஏ+ பெற்று தேசிய அளவில்  மிகச் சிறந்த தேர்ச்சியைப் பதிவு செய்த பல மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் தமிழோடு தமிழ் இலக்கியத்தையும் தேர்வு செய்தவர்கள். காஜாங் சந்தியா, காஜாங் பவித்ரா, சிரம்பான் அஸ்வினி, பினாங்கு ஸ்ரீதரன் போன்ற மாணவர்களின் சிறந்த தேர்ச்சி மற்ற மாணவர்களுக்கு நம்பிக்கையளிக்கிறது. மலாய் இலக்கியப் பாடம், கலைத்துறையில் பயிலும் மலாய் மாணவர்களுக்கு உரிய பாடமாக இருக்கும் நிலையில், தமிழ் இலக்கியமோ அறிவியல் துறையில் பயிலும் நம் மாணவர்களின் தேர்வாக அமைந்துள்ளது. எனவே, அறிவியல், கணிதப் பாடங்களில் திறம்மிகுந்த மாணவர்கள் மொழி, இலக்கியப் பாடங்களில் எளிதாகச் சாதிக்கிறார்கள்.

      ஆயினும், இலக்கியம் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 3000ஐக்கூட எட்டாத நிலை வருத்தமளிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், 10 பாடங்கள் மட்டும்தாம் தேர்வுக்கு எடுக்க முடியும் என்ற கல்வி அமைச்சின் முடிவுக்கு எதிராகக் கடும் எதிர்ப்பு எழுந்ததால் அது 12 பாடங்கள் என்று நிலைநிறுத்தப்பட்டது. தமிழும் தமிழ் இலக்கியமும் எஸ்.பி.எம்.தேர்வுக்குப் பிந்திய உயர்கல்விக்குக் கணக்கில் கொள்ளப்படுமா என்ற சந்தேகத்தைப் பலர் எழுப்பினார்கள். இன்றோ, அந்தச் சந்தேகமும் அகன்று, எந்தப் பாடமாக இருந்தாலும் சிறந்த தேர்ச்சியே முக்கியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தும், தமிழ் இலக்கியத்தைப் பயில மாணவர்கள் தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

      இந்நாட்டில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, படிவம் ஐந்தில் ஒரு தேர்வுப் பாடமாகத் தமிழ் இலக்கியம் இடம்பெற்று வருகிறது. ஆனால், பல மாணவர்கள் தமிழ்மொழியே போதும் என ஒதுங்கிக் கொள்கின்றனர். இந்த நிலைக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. சில

பள்ளிகளைத் தவிர்த்து, பெரும்பாலும் இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் இலக்கியப் பாடம் கற்பிக்கப்படுவதில்லை. மாணவர்கள் படிக்க ஆசைப்பட்டாலும் பள்ளியில் அதற்கு வாய்ப்பு இல்லாத நிலையென்றால் அவர்கள் என்ன செய்வார்கள்? எனவே, தமிழே போதும் என மனநிறைவு கொள்கின்றனர். சில பள்ளிகளில், தமிழ் இலக்கியப் பாடத்தால் பள்ளியின் தேர்ச்சி விகிதம் சரிவைக் காண நேரும் என்ற அச்சத்தால் இந்தப் பாடத்திற்குக் கதவடைப்பு செய்யும் நிலையும் உண்டு.


     
மேலும், பள்ளிப்பாடங்களுக்கே நேரம் சரியாக இருக்கிறது. இதனால், அட்டவணையில் தமிழும் இலக்கியமும் இடம்பெற முடிவதில்லை. பள்ளி நேரத்திற்குப் பின்புதான் தமிழ் வகுப்பும் இலக்கிய வகுப்பும் நடக்கின்றன. அவற்றில் அக்கறையோடு கலந்துகொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதில் வியப்பில்லை. தமிழ்ப்பாட வேளையில் இலக்கியத்தையும் கற்பிப்பது ஆசிரியர்களுக்குச் சிரமமான பணியாகும். அந்தப் பணிச்சுமையையும் தங்கள் இலக்கியக் கடமையாய் ஏற்றுக்கொண்டு தமிழ் உணர்வுமிக்க பல ஆசிரியர்கள் இலக்கியம் கற்பித்து வருகின்றனர் நாடு முழுதும் இலைமறைகாயாய் செயல்படும் இத்தகைய ஆசிரியர்களால்தான் எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம் இன்னும் உயிர்வாழ்ந்து வருகிறது.

      இலக்கியம் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாத நிலைமையும் உண்டு. எனவே, ஆர்வமுள்ள மாணவர்கள் சுய முயற்சியில் பள்ளிக்கு வெளியே ஆசிரியரைத் தேடிப் பயில்கின்றனர். அவர்களின் ஆர்வத்துக்கும் முயற்சிக்கும் பெற்றோர்கள் துணை நிற்கின்றனர்.  தமிழாசிரியர்கள், சமூக இயக்கங்கள் இலக்கியப் பாடம் தொடர்ந்து நிலைத்திருக்கத் தங்களின் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.


      தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர் எண்ணிக்கை 1990களில் மிகவும் குறைந்து, இந்தப் பாடம் தேர்வுப்பாடப் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. அப்பொழுது, மலேசியத் தேர்வு வாரியத்தின் தமிழ்மொழிப் பிரிவின் துணை இயக்குநராகப் பணியாற்றிய  பி.எம்.மூர்த்தி, தமிழ் உணர்வுமிக்க ஆசிரியர்களை ஒருங்கிணைத்து எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய நடவடிக்கைக்குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சிகளில் இறங்கினார். பரப்புரையாலும் ஊடகங்களின் ஒத்துழைப்பாலும் தமிழ் இலக்கிய மாணவர் எண்ணிக்கை உயர்ந்தது. இந்த அமைப்பே பின்னர், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் (இலக்கியகம்) என்று பதிவுபெற்ற இயக்கமாக மாறியது.

      இலக்கிய ஆசிரியர்களுக்குப் பயிற்சி, கருத்தரங்கம், வழிகாட்டி நூல்கள் வெளியிடுதல், மாணவர்களுக்குத் தேர்வுக் கருத்தரங்கம், அரசின் நிதி உதவி பெற்று மாணவர்களுக்கு இலக்கிய பாடநூல்களை இரவல் முறையில் வழங்குவது எனத் திட்டமிட்ட பல நடவடிக்கைகளை இலக்கியகம் மேற்கொண்டு வருகிறது.


      இலக்கியப் பாடம் நோக்கி மாணவரை எப்படி ஈர்ப்பது என்று பலரும் சிந்திக்கும் வேளையில், அண்மையில் தேர்வு வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கை இலக்கிய ஆசிரியர்கள் எதிர்பாராத ஒன்றாகும். பள்ளி தவணை தொடங்கி, இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இவ்வாண்டு நான்காம் படிவ மாணவர்கள் புதிய பாடநூல்களைப் பயில வேண்டும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் இந்த அறிவிப்பு வந்திருந்தால் பெற்றோர்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் அதனை ஏற்றுத் தங்களைத் தயார்ப்படுத்தியிருப்பார்கள். மாற்றம் உள்ளதா இல்லையா என அறிந்துகொள்ளத் தவித்த ஆசிரியர்கள், ஒரு பதிலும் கிடைக்காத சூழலில் நடப்பிலுள்ள இலக்கிய நூல்களையும் வழிகாட்டி நூல்களையும் வாங்கித்தந்து இலக்கிய வகுப்புகளைத் தொடங்கிவிட்ட பிறகு புதிய மாற்றம் என்ற செய்தி சொல்லிமாளா இடர்களைத் தந்துள்ளது. முதல் தேர்வுக்குப் பெரும்பாலான பள்ளிகள் தயார் நிலையில் இருக்கும் சூழலில் இதோ புதிய நூல்கள், படியுங்கள் என்று புதிய பட்டியலை நீட்டினால் எப்படி? இனிமேல்தான் புதிய பாட நூல்களைத் தேடி வாங்கி வகுப்பை நடத்த வேண்டும். களத்திலே நின்று போராடும் ஆசிரியர்களின் சிரமத்தை பலரும் உணர்வதில்லை.

      புதிய இலக்கிய நூல்களாக, கு.அழகிரிசாமியின் கவிச்சக்கரவர்த்தி நாடகமும் டாக்டர் மு.வரதராசனின் அகல் விளக்கு நாவலும் தேர்வாகியுள்ளன. இவை இரண்டுமே சிறந்த படைப்புகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மண்ணின் மணம் கமழும் மலேசியப் படைப்புகள் தேர்வுக்கான பாட நூல்களாக வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டு கோரிக்கைக்குப் பிறகு, 2013 – 2015 தவணைக்கான பாட நூலாக ஐ.இளவழகின் இலட்சியப் பயணம் தேர்வானது. இனி,  ஐந்து ஆண்டுகளுக்கு மலேசிய நாவலுக்கு வாய்ப்பில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.


      
இந்தோனேசிய நாவல்களை நம்பியிருந்த இந்நாட்டு மலாய் இலக்கிய  உலகம், என்றோ அதிலிருந்து மீண்டு, உள்நாட்டு நூல்களையே பாட நூல்களாக ஏற்றுக்கொண்டுள்ளது. எஸ்.டிபி.எம். தேர்வுக்கு ரெ.கார்த்திகேசுவின் அந்திம காலம் நாவல் ஏற்றுக்கொள்ளப்படும்போது எஸ்.பி.எம் தேர்வுக்கு அத்தகைய  வாய்ப்பினை வழங்கினால் என்ன? மலேசியத் தமிழ் இலக்கியம் 140 ஆண்டுகால வரலாற்றைக்கொண்டது என்று பெருமை பேசுகிறோம். உண்மையில் நம் இலக்கியத்தில் இளையோருக்கு ஒன்றும் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. 

      புதிய பாடத் திட்டத்தில் கவிதைப் பிரிவில், 12 மரபுக் கவிதைகள் தேர்வாகியுள்ளன. ஆனால், நிகழ்கால கவிதை மொழி என்பது மரபுக்கவிதை மட்டுமல்ல. அதோடு, புதுக்கவிதை, நவீன கவிதை எனப் புதிய பரிணாமம் நோக்கி கவிதைமொழி நகர்ந்துகொண்டிருக்கிறது. இளைய நெஞ்சங்களை இலக்கியம் நோக்கி ஈர்க்க, மரபோடு புதியனவற்றையும் இணைத்து வழங்கவேண்டும். கவிதைத்துறையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களையும் வளர்ச்சியையும் மூடிமறைத்துவிட்டு ஒரு பகுதியை மட்டும் காட்டி, இதுதான் கவிதையின் முகம் என்று சொல்லி மாணவ இதயங்களை நம்பவைக்க வேண்டுமா? படிவம் ஒன்று முதல் ஐந்துவரை மலாய் இலக்கிய நூல்களில் மரபுக்கவிதைகளையும் புதுக்கவிதைகளையும் வாசிக்கும் மாணவர்கள், தமிழ் இலக்கியப் பாடத்தில் ஏன் இல்லை எனக் கேள்வி எழுப்புகிறார்கள். சிங்கப்பூரில் ஏ லெவல் தமிழ்ப்பாடத் திட்டத்தில் மரபுக்கவிதைகளும் புதுக்கவிதைகளும் ஐக்கூ கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் மலேசியப் படைப்புகளும் உள்ளன. நம் படைப்புகளுக்கான அங்கீகாரம் அக்கரையில்தான் கிடைக்கும் போலிருக்கிறது. இக்கரையில் என்றும் இல்லை என்பதுதான் இன்றுவரை பதிலாக உள்ளது.      

இப்படிப் பல்வேறு இடர்களுக்கு இடையே, ஆசிரியர்களும், இயக்கங்களும் எஸ்.பி.எம். தமிழ் இலக்கியப் பாடத்தை நிலைநிறுத்த தொடர்ந்து போராடி வருகின்றனர். அண்மையில், தமிழ்ப்பள்ளி மாணவர் உதவி நிதி வாரியம் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் செந்தூல் தமிழ்ப்பள்ளியில் இலவச இலக்கிய வகுப்பினைத் தொடங்கியுள்ளது. மாணவர்களுக்கு இலக்கிய நூல்களையும் இலவசமாக வழங்கியுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற வகுப்புகளை நடத்தவும் இவ்வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் வே.விவேகானந்தன் அறிவித்துள்ளார். இதுபோன்ற முயற்சிகள்தாம் தொடர்ந்து இந்தப் பாடத்தை நிலைபெறச் செய்யும் அரிய பணியாகும்.

தம் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பிய பல பெற்றோர்களிடம் “உங்கள் பிள்ளைகள் இலக்கியப் பாடம் பயிலவில்லையா?” என்று கேட்டால், “இலக்கியப் பாடம் அவசியமா?” என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு இந்தக் கவிதையே பதிலாக அமைகிறது:

            இலக்கியம் பயின்றால் இளகிடும் உள்ளம்
            இளமையின் துடிப்பிலும் இதம்குடி கொள்ளும்
            கலக்கிடும் வன்முறைக் காயங்கள் மாறிக்
            காய்மனம் கனிவுறும்! காயங்கள் ஆறும்!
     
            நல்லது அல்லதும் தெள்ளெனத் தோன்றும்
            நலிந்தவர் நெஞ்சிலும் நம்பிக்கை ஊன்றும்
            சொல்லிலும் செயலிலும் சுடர்திறம் பாய்ந்து
            செல்லிடம் யாவிலும் சிறப்புகள் ஒங்கும்!
-    சீனி நைனா முகம்மது
  

2 comments:

 1. வணக்கம்
  ஐயா.

  தரவுகளை அடிப்படையாக வைத்து பதிவை மிக நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள் தங்களைப்போன்ற நல்ல உள்ளங்களை் இருக்கும் வரை மலேசியா மண்ணில் தமிழ் மங்காது வாழும்... மேலும் மாணவர்கள் மத்தியில் தமிழ் வாழ்கிறது என்றால் கொஞ்சம் பெருமிதம்.... பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி ரூபன். தமிழ் இலக்கியப் பாடத்தை மாணவருக்குப் பயிற்றுவிக்கும் பணி, ஆசிரியர்களுக்குப் பெரும் சவால். பல தரப்பின் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை!

   Delete