எஸ்.பி.எம்.
தமிழ் இலக்கியம்
இடைநிலைப்பள்ளியில் தமிழ் இலக்கியம் தனிப் பாடமாக உள்ளதா?
ஆமாம். கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக,
எஸ்.பி.எம்.தேர்வில் தமிழ் இலக்கியம் தேர்வுப் பாடமாக இடம் பெற்று வருகிறது. தமிழ்ப்பள்ளியில்
ஆறு ஆண்டுகள் பயின்று தமிழ்க்கல்வி பெற்ற மாணவர்கள் இடைநிலைப்பள்ளியில் தமிழோடு
தமிழ் இலக்கியத்தையும் பயிலும் வாய்ப்பினைப் பெறுகின்றனர். ஆயினும், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள்தாம் தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்து
பயில்கின்றனர். எஸ்.பி.எம் தேர்வில் தமிழோடு இலக்கியத்திலும் சிறப்புத்
தேர்ச்சியடையும் வாய்ப்பினைப் பெற்றும் பல மாணவர்கள் தமிழ்மொழியே போதும் என
ஒதுங்கிக் கொள்கின்றனர்.
யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முடித்து ஆண்டுதோறும் சுமார் 16 000 மாணவர்கள்
இடைநிலைப்பள்ளிக்குப் போகிறார்கள். அவர்கள் அனைவரும் தமிழும் இலக்கியமும்
பயில்வதில்லையா?
இல்லை என்பதே கசப்பான உண்மை. 16 000 என்ற எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து எஸ்.பி.எம்.
தேர்வில் ஏறக்குறைய 12 000 மாணவர்கள் மட்டும் தமிழ் மொழித் தேர்வுக்கு
அமர்கின்றனர். இலக்கியம் பயிலும் மாணவர்
எண்ணிக்கை அதைக் காட்டிலும் மிகவும் குறைவு. ஒரு கால கட்டத்தில் தமிழ் இலக்கிய
மாணவர்கள் 500 பேர் என்ற நிலை இருந்தது.
மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் (இலக்கியகம்),
தன்னார்வமுள்ள தமிழாசிரியர்கள், பொது அமைப்புகள், தகவல் ஊடகங்கள் எனப் பல தரப்பினரின் முயற்சியினால் 2007இல் 4700க்கும்
அதிகமான மாணவர்கள் தமிழ் இலக்கியத்தைத் தேர்வில் ஒரு பாடமாக எடுக்கும் நிலை ஏற்பட்டது.
ஆனால், தற்பொழுது மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோராண்டும்
குறைந்துகொண்டே வருவது வருத்தமளிக்கிறது. தமிழிலக்கிய மாணவர் எண்ணிக்கையை
ஐயாயிரமாக அதிகரிக்க வேண்டுமென்பதே இலக்காகும். இவ்விலக்கை அடைய தமிழ் மாணவர்களும்
தமிழாசிரியர்களும் பெற்றோர்களும் பொது அமைப்புகளும் துணைநிற்க வேண்டும்.
தமிழ் இலக்கிய மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தால் என்ன
ஆகும்?
நம் மாணவர்கள் தமிழும் இலக்கியமும் பயில்வதற்கான உரிமையைப்
பெற்றுள்ளார்கள். அதன்வழி எஸ்.பி.எம்.தேர்வில் சிறந்த தேர்ச்சியைப் பெற்று
வருகின்றனர். ஆனால், தேர்வெழுதும் மாணவர் எண்ணிக்கை சரிந்து ஐந்நூறுக்கும் குறைவு என்ற
நிலையெனில் இப்பாடம் தேர்வுப் பாடப் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அபாயம் உள்ளது.
இருக்கும் உரிமையை இழந்துவிட்டால் மீண்டும் அதைப் பெறுவதென்பது எளிதல்ல. மூன்றாம்
படிவத்தில் தேர்வுப்பாடமாக இருந்த தெலுங்கு மொழி நீக்கப்பட்டு இன்றும் மீண்டுவர
போராடி வருவதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இலக்கியப் பாட
நூல்கள்
மாணவர்கள் ஏன் தமிழ் இலக்கியம் பயிலத் தயங்குகின்றனர்?
இந்த நிலைக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. படிவம் 4 அல்லது 5இல் கால அட்டவணையில் தமிழும் இலக்கியமும் இடம்
பெறுவதில்லை. பள்ளி நேரத்திற்குப் பிறகு
பிற்பகலில் இந்த வகுப்புகள் நடைபெறும். போக்குவரத்தைக் காரணம் காட்டி இந்த
வகுப்புகளைத் தவிர்க்கும் மாணவர்கள்
உண்டு.
சில பள்ளிகளைத் தவிர்த்து, பெரும்பாலும் இடைநிலைப்பள்ளிகளில்
தமிழ் இலக்கியப் பாடம் கற்பிக்கப்படுவதில்லை. அதைக் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாத
நிலைமையும் உண்டு. எனவே, ஆர்வமுள்ள மாணவர்கள் சுய
முயற்சியில் பள்ளிக்கு வெளியே ஆசிரியரைத் தேடிப் பயில்கின்றனர். அவர்களின்
ஆர்வத்துக்கும் முயற்சிக்கும் பெற்றோர்கள் துணை நிற்கின்றனர். தமிழ் இலக்கியம் பயிலச் சிரமம் என்ற தவறான
மனப்போக்கும் மாணவரிடையே உண்டு. தம்
பிள்ளைகள் அதிகமான பாடங்கள் பயிலும் சூழலில் தமிழ் இலக்கியமும் தேவையா எனக் கேள்வி
கேட்கும் பெற்றோரும் உள்ளனர்.
தற்போதைய தமிழ் இலக்கியப் பாடத்திட்டத்தில் என்னென்ன நூல்கள்
இடம்பெற்றுள்ளன?
கவிதை, நாடகம், நாவல் என மூன்று இலக்கிய வகைகளில் மூன்று
நூல்கள் இடம்பெற்றுள்ளன. மலேசியத் தேர்வு வாரியம் தேர்வு செய்த 12 கவிதைகள், கு.அழகிரிசாமி எழுதிய கவிச்சக்கரவர்த்தி (நாடகம்),
டாக்டர் மு.வரதராசன் எழுதிய அகல் விளக்கு (நாவல்) ஆகியனவே அந்நூல்கள். படிவம் 4, 5 ஆகிய ஈராண்டுகளிலும் இவை மட்டுமே பாட நூல்கள். மாணவர்க்கு உதவும்
நோக்கில் குறைந்த அளவில் பாட நூல்கள் உள்ளன.
பாட நூல்கள் மாணவர்களுக்கு இரவலாகத் தரப்படுகின்றனவா?
ஆமாம். இலக்கியகம் முயற்சியில் ம.இ.கா. மூலம் முந்தைய அரசு
4500 பாட நூல்களைப் பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது. இரவல் முறையில் 2016 முதல் 2020
வரை இந்நூல்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், பொது
இயக்கங்களும் பாடநூல்களை வழங்கித் தம் பங்கினை ஆற்றி வருகின்றன.
வழிகாட்டி நூல்கள்
இந்தப் பாட நூல்களுக்கு வழிகாட்டி நூல்கள் உள்ளனவா?
ஒரு காலகட்டத்தில் வழிகாட்டி நூல்கள் இல்லாத நிலையில்
ஆயிரக்கணக்கில் மாணவர்கள் தமிழ் இலக்கியம் பயின்றார்கள். இன்று அந்தக் குறை
இல்லை. மாணவர்களின் கைபிடித்து அழைத்துச்
சென்று வழிகாட்டும் வகையில் வழிகாட்டி நூல்கள் பயன்பாட்டில் உள்ளன. இதன்வழி
மாணவர்கள் நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்கின்றனர். கற்றல் கற்பித்தல்
நடவடிக்கைகளுக்கும் இந்நூல்கள் துணைபுரிகின்றன.
தமிழ் இலக்கியத் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற முடியுமா?
குறைவான பாட நூல்கள், நிறைவான வழிகாட்டி நூல்கள், வழிகாட்டும் ஆசிரியர்கள், தேர்வுக்குத் தயார்செய்ய
தேர்வுக் கருத்தரங்குகள், ஏடுகளில் வழிகாட்டிக் கட்டுரைகள் என
யாவும் மாணவர்களின் சிறந்த தேர்ச்சிக்கு வழியமைத்து வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும்
எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் இலக்கியத் தேர்வின் தேர்ச்சி விழுக்காடு உயர்ந்து
வருகிறது. பல மாணவர்கள் சிறந்த தேர்வு முடிவைப் பெற்று வருகின்றனர்.
தமிழ் இலக்கியம் பயில பள்ளியில் வாய்ப்பு மறுக்கப்பட்டால் என்ன
செய்வது?
மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வில் 12 பாடங்கள் வரை பதிந்துகொள்ள
முடியும். பள்ளியில் பயில வாய்ப்பில்லாத பாடங்களை வெளியில் வேறு ஆசிரியரிடம் படித்துத்
தேர்வுக்குத் தயாராகலாம். ஆனால், நான்காம்
படிவம் முதலே அப்பாடங்களைப் படித்துவர வேண்டும்.
தாம் படிக்கும் ஆசிரியரிடம் கடிதத்தைப் பெற்றுப் பள்ளியில் தருவதோடு
அரையாண்டுத் தேர்வு, இறுதியாண்டுத் தேர்வு போன்றவற்றுக்கும்
அமர வேண்டும். மற்றப் பள்ளி இலக்கிய ஆசிரியர்கள் பள்ளிக்குத் தேர்வுத் தாள் அனுப்பி
இதற்கு உதவுவார்கள்.
நான்காம் படிவத்தில் இலக்கிய வகுப்புகளில் கலந்துகொள்ளாமல்
ஐந்தாம் படிவத்தில் தேர்வுக்குப் பதிந்துகொள்ள முயன்றால் பள்ளியில் அனுமதி
தரமாட்டார்கள். பள்ளியின் தேர்ச்சி நிலை பாதிக்கப்படாமல் இருக்க பள்ளி நிர்வாகம்
இதுபோன்ற ‘வரும்முன் காப்போன்’ நடவடிக்கை மேற்கொள்ளும்.
எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் இலக்கியப் பாடத்திற்குப்
பதிந்துகொண்டு தேர்வுக்கு அமர்வது மாணவரின் உரிமை. தங்கள் பள்ளியில் சிக்கலை எதிர்நோக்கும்
மாணவர்கள் / பெற்றோர்கள் தங்கள் மாநில கல்வி இலாகாவின் தமிழ் மொழிப் பிரிவின் இணை இயக்குநரிடம்
தொடர்பு கொண்டு தக்க ஆலோசனை பெறலாம்.
தமிழ் இலக்கியம் பயில்வதால் தமிழ் மொழித் தேர்விலும் சிறந்த
தேர்ச்சி பெற முடியும் என்று கூறப்படுவது உண்மையா?
உண்மைதான். தமிழ் இலக்கியப் பாடத்தில் மாணவர்கள் பெறும்
வாசிப்பு அனுபவம், எழுத்துப் பயிற்சி, அவர்களின் சொற்களஞ்சியம்
பெருக்கி, மொழி ஆற்றலை மேம்படுத்தும். இதன்வழி தமிழ்மொழித்
தாளிலும் சிறந்த தேர்ச்சிக்கு வழிவகுக்கும்.
இலக்கியம் பயில்வதால் மாணவர்களுக்கு என்ன பயன்?
இலக்கியம் பயில்வதால் மாணவர்களுக்கு நிறைய பயன்கள் விளைகின்றன. இலக்கியத்தின்
நோக்கம் மனித மனங்களை இன்புறுத்துவதும் பண்படுத்துவதுமாகும். இலக்கியம் பயில்வதால்
அவர்கள் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெறலாம். உயர்கல்வி தொடர அது துணையாய்
இருக்கும். அதன் வழி நல்ல வேலை வாய்ப்பினைப் பெறலாம். இலக்கியம் பயில்வது
மனமகிழ்வூட்டும் சிறந்தபொழுதுபோக்கு. இலக்கியம் பயில்வதால் இளைய தலைமுறை சமூகச்
சீர்கேடுகளில் ஈடுபடமாட்டார்கள்.
இலக்கியம்வழி இனத்தின் பண்பாட்டினையும் வரலாற்றையும் அறியலாம். இலக்கியம்
பயில்வதால் மாணவர்களும் படைப்பிலக்கியத்தில் ஈடுபடுவர். இப்படிப் பல நன்மைகள் உள்ளன.
மொழியைச் சீர்செய்துகொண்டு பிழையற எழுதவும் பேசவும் தமிழ்மொழிப்
பாடம் உதவுகிறது. சிந்தனையைச் சீர்செய்துகொண்டு மனத்தை உயர்த்தி மனித வாழ்வு
பற்றிய பார்வையை விரிவாக்கிப் பயன்மிகு வாழ்வு வாழ இலக்கியம் வழிகாட்டுகிறது. வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் எதிர்கொள்ளவும் அதன் சிக்கல்களை ஆராயவும் இலக்கியம் துணை
வருகிறது. இலக்கியத்திற்காக நாள்தோறும் லட்சக்கணக்கான பக்கங்கள் உலகில் நூல்களாக
அச்சிடப்படுகின்றன. பல நாட்டு அரசுகள் இலக்கியத்திற்காக கோடிக்கணக்கில் பணத்தைச்
செலவு செய்கின்றன. நம் மலேசிய அரசு, மலாய்மொழி,
இலக்கிய வளர்ச்சிக்கு டேவான் டான் புஸ்தாகா எனும் அமைப்பிற்கு ஆண்டுதோறும்
பெருந்தொகையை ஒதுக்கீடு செய்கிறது.
இலக்கியம் வழிதான் தமிழ்மொழியின் அழகையும் அதன் ஆழத்தையும் உணர
முடியும். நம் முன்னோர்களின், சமகாலப் படைப்பாளிகளின் சிந்தனைச் சேமிப்பை
நாம் பெற முடியும். இலக்கியம் நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது. இலக்கியம்
இல்லாமல் வெறும் பொருளியல் இலாபத்தையே நாடிச் செல்லும் வாழ்வு உண்மையில் பொருளற்ற
வாழ்வு.
இலக்கியப் பாடம் குறித்த சிக்கலுக்கும் உதவிக்கும் யாரை நாடுவது?
மாநிலந்தோறும் மாணவர்களுக்கு உதவ தமிழாசிரியர்கள்
காத்திருக்கிறார்கள். அவர்களைத் தொடர்பு கொண்டால் ஆங்காங்கே நடக்கும் தமிழ்
இலக்கிய வகுப்புகள் குறித்த தகவல்களைப் பெறலாம். மேலும், தேர்வு
வழிகாட்டிக் கருத்தரங்குகள் பற்றிய விபரம் அறிந்து அவற்றில் கலந்துகொண்டு
பயன்பெறலாம்.
No comments:
Post a Comment