நம் குரல்

Wednesday, January 16, 2019

பெண்மை போற்றுதும்

குளத்தில் கல்லெறிந்தால் சிறுசிறு அலைகள் எழுமே. அதுபோல, அண்மையில் என் பார்வைக்கு வந்த சில ஓவியங்கள் என மனக்குளத்தில் கல்லெறிந்து கற்பனை அலைகளை எழுப்பி விட்டன. இந்தியாவில் மகராஸ்ட்ரா மாநில ஓவியர் சசிகாந்த், தமிழக ஓவியர் இளையராஜா ஆகிய இருவரின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் அவை. அனைத்தும் பெண் ஓவியங்கள். காண்பாரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும்  அற்புத ஓவியங்கள்.

வற்றைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தாலே யாருக்கும் கவிதை உணர்வுகள் பூக்கும். எனக்கும் அதே நிலைதான். மிக அரிதாகவே என் கவிதைகளில் பெண்கள் பாடுபொருளாகியிருக்கிறார்கள். பெண்கள் பற்றிச் சிந்திக்கவும் அவர்களில் உலகத்தில் நுழைந்து மன உணர்வுகளை ஆராயவும் இது வாய்ப்பாக அமைந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து, இந்த ஓவியங்களில் மூழ்கியபோது கவிதைப் பித்துத் தலைக்கேறி நாள் முழுக்க என்னைப் பாடாய்ப் படுத்தியது. இதோ, நான் உற்ற உணர்வுகளைச் சேமித்து உங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன். முதலில் சசிகாந்த் வரைந்த எட்டு ஓவியங்கள். 


                                                               சசிகாந்த்

பெண் புதிரானவள்; எளிதில் புரிந்துகொள்ள முடியாதவள். யாரும் அறியாதபடி அவளுக்குள் இரகசியங்கள் உண்டு. அவள் நமக்குக் காட்டும் முகத்தைக் கொண்டு அவளைப் பற்றி ஒரு முடிவுக்கு வருகிறோம். ஆயினும், நாமறியாத வேறு முகத்தை அவள் தனக்குள் வைத்திருக்கிறாள். எதுதான் அவளின் உண்மை முகம்?



 வேறொரு முகம்

ஒவ்வொரு நாளும்
அலுவலகக் கோப்புகளில்
மூழ்கியெழும் அவள்
தானே காட்டும் முகத்திலிருந்து
அவளின் அழகை
அன்பை கரிசனையை
புன்சிரிப்பை
கவலைகளற்ற உற்சாகத்தை
கலகலப்பான பேச்சை
இயல்பான கேலியை
அவரவரும் எடுத்துக்கொண்டு
அவளைத் தங்களுள்
உருவகித்துக்கொள்ள...

அவளுக்கு வேறொரு முகம் இருந்தது
யாரிடமும் காட்டாமல்
தனக்குள் வைத்துக்கொண்ட
முகம்




வீட்டை விட்டு வெளிவரும் பெண்கள் பெரும்பாலும் அலங்கார அணிவகுப்போடுதான் நம் கண்களுக்குக் காட்சி தருகிறார்கள். அழகாயிருக்கும் பெண்கள் எல்லாம் மிகுந்த மகிழ்ச்சியோடும் வாழ்க்கை வாரி வழங்கியிருக்கும் வசதிகளையும் சுகபோகங்களையும் அனுபவிக்கக் கொடுத்து வைத்தவர்கள் என்று நாம் நினைக்கிறோம். அந்த அழகு முகங்களுக்குப் பின்னால் நம் கண்ணுக்குத் தெரியாமல் இழையோடும் சோகத்தை  நம்மில் எத்தனை பேர்  உணர முடியும்?

அழகு முகம்

எப்போதும் முகம் பார்த்து
அலங்காரம் செய்துகொள்ளும்
கண்ணாடிதான்

இன்று உற்றுப் பார்க்க
கண்ணீர்க் குளத்தில்
ததும்புகின்றன கண்கள்
கண்களின் கீழே கோலமிடும்
கருவளையங்கள்
எதையோ சொல்லத்
துடிக்கின்றன உதடுகள்
பொலிவை இழந்தன
போதையூட்டும் கன்னங்கள்
மிகையாய்த் தெரியும் சுருள் கேசங்கள்
நெற்றியில் சிறிதும்
பெரிதுமாய் உருமாறும் திலகம்

சட்டென்று யாரோ அழைக்க
காட்சி மறைய
மீண்டும் கண்ணாடியில்
அழகு முகம் தெரிகிறது





















வாழ்க்கை நெடுக  நாம் பல வேளைகளில் யார் யாருக்கோ காத்திருக்கிறோம். மனத்திற்குப் பிடித்த ஒருவன் மணாளனாக வரவேண்டும் எனப் பெண்களும் காத்திருக்கிறார்கள். அந்தக் காத்திருப்பின் அவஸ்தைகளை அவர்கள் மட்டுமே உணர முடியும். தன்னைக்  கடந்துபோகும் ஆண்களில் யார் தனக்கானவன் என்பதை அறிந்துகொள்ள அளவிறந்த ஆவல் மனத்தில் நிறைந்திருக்கிறது. ஆனால், பல வேளைகளில்  தங்கள் ஆசைகளைப் புதைத்துக்கொண்டு சூழலுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து இசைந்துபோவதைத் தவிர அவர்கள் என்ன செய்ய முடியும்?



காத்திருப்பு

ஆசையாசையாய்ச் செய்த
அலங்காரம் முடிந்துவிட்டது

இனி அழைப்பு வரும்வரை
காத்திருக்க வேண்டும்

இடைவெளியில்
எங்கெங்கோ போய்வர முடிந்தது

ஆறாம் வகுப்பில் கடிதம் தந்த கேசவன்
இடைநிலைப்பள்ளியில்
விடாமல் நச்சரித்த பாலு
கல்லூரியில் நெருங்கி வந்த சந்திரன்
அலுவலகத்தில் வழிந்துபேசும் ஆண்கள்
ஏக்கமாய்ப் பார்க்கும்
எதிர்வீட்டுக் கோபால்
பேருந்துப் பயணத்தில்
உரசிப் போவோர்
தெருவில் எதையோ கேட்டுப்
பேச முயன்றவர்கள்
இரண்டு முறை வீடுவரை வந்து
விசாரித்துப் போனவர்கள்

இன்னும் அழைப்பு வரவில்லை
காத்திருப்பின் நேரம் நீளுகையில்

அவன் நினைவில் வந்தான்
தான் விரும்பிச்சென்று பேசியும்
விலகிப் போனவன்






















ந்த நவீன வாழ்வில், ஆண்களைப் போலவே பெண்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கலாம். அதற்குத் தடையேதும் இல்லை என்றுதான் நினைக்கிறோம். ஆனால், தம் விருப்பம்போல் அவள் செயல்பட முடியாது என்பதுதான் யதார்த்த வாழ்வின் உண்மையாக இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத கட்டுப்பாடுகள் அவளைச் சுற்றி எந்நேரமும் கண்காணிக்கின்றன. குடும்ப- சமுதாய மரபுகள், சம்பிரதாயங்கள் இவற்றைப் பின்னிப் பின்னி அவளுக்குப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதில்தான் அவர்கள் பயணிக்க வேண்டும். அவற்றை மீற முடியுமா?


மீனைப்போலவே

கண்ணாடிக் குடுவைக்குள்
நிரம்பிய  நீரைத்
தன்   உலகம் என்றெண்ணி
அங்குமிங்கும்
நீந்திக் களிக்கும்
மீனைப் போலவே
அவளும்

சுற்றிலும்
எல்லைகளற்ற பெருவெளியென
மயக்கும் கண்ணாடிகளும்
நீச்சலைக் கட்டுப்படுத்தும்
எல்லைகளும்






















பெண்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. அவிழ்க்க அவிழ்க்கச் சிக்கலாகும் நூல்கண்டைப்போல அவர்களும். பெண்களைப் பற்றி ஆண்கள் போடும் கணக்குகள் பெரும்பாலும் தப்பாகி விடும். பூமியின் பருவநிலை மாற்றங்களையும்கூட சரியாகக் கணித்து விடலாம். ஆனால், பெண்களின் மன உணர்வுகளும் எண்ணங்களும் எப்பொழுது நிறம் மாறும் என்பதை அறுதியிட்டுக் கூறவே முடியாது. இந்தப் புதிர்த்தன்மையே அவளைச் சுவாரசியம் நிறைந்தவளாக மாற்றுகிறது. நாவலின் இறுதிப் பக்கம் வரை வாசகனைப் பரபரப்பான உணர்வலையில் சிக்க வைக்கும் எழுத்தாளன்போல் பெண்களும்.  பெண் எனும் புதிரை யாரால் அவிழ்க்க முடியும்?

புதிர்

அவளுக்குக் கோபம்
எப்பொழுது வரும்
எப்படி வரும்
ஏன் வரும்
தகவலேதும் யாருக்கும் தெரியாமல்
கோபத்தோடு அடிக்கடி
ஒன்றிப்போய் விடுவாள்

அவள் கோபத்திற்குப்
பல நிறங்களுண்டு

ஆதங்கக் கோபம்
திடீர்க் கோபம்
நியாயக் கோபம்
பழைய கோபம்
உப்புச்சப்பற்ற கோபம்
காரியக் கோபம்

எந்த நிறக் கோபமாயினும்
அவள் இன்னும் அழகாய்த் தெரிவது

பொய்க் கோபத்தில்தான்

1 comment: