பத்திரிகை அலுவலகம் பரபரப்பாயிருந்தது. சங்கச் செய்திகளை வட்டார நிருபர்கள் அனுப்பத்
தொடங்கி விட்டார்கள். ஆறு மணிக்குள் தலையங்கத்தைத் தயார் செய்ய வேண்டும். ஏழு
மணிக்குள் முன்பக்கச் செய்திகளை உறுதி செய்ய வேண்டும். துணையாசிரியரான நான் பக்க
வடிவமைப்புப் பணியையும் மேற்பார்வையிட வேண்டும். கொஞ்சம் தாமதமானால் ஆசிரியர்
பொறுக்க மாட்டார். நான் வழக்கம்போல் இயந்திர கதியில் இயங்கினேன்.
இரண்டாவது மாடியில் என் இருக்கைக்கு எதிரே கண்ணாடிவழி வெளியே
பார்த்தேன். வானம் இருண்டிருந்தது. இரண்டு வாரமாய்க் கொளுத்திய வெயிலின் வெக்கை
இன்னும் தணியவில்லை. இன்று மழை வந்தால் ஆசையாய்க் கொஞ்சம் நனைய வேண்டும். கடைசியாக
மழையில் எப்பொழுது நனைந்தேன்?
வழக்கமாக ஐந்து மணிக்குத் தேநீர் வரும். வந்தது. எங்கள் அலுவலகத்தில்
அனைவருக்கும் தேநீர் வழங்கும் மாலினி மேக்கப் கலையாமல் புன்சிரிப்போடு
வந்தாள். தேநீர் சுவையாக இருப்பதற்குத் தேநீர்தான் காரணமா? அல்லது
மாலினி கனிவாய் திறந்து கனிவாய்ப் பேசுவது காரணமா?
தெரியவில்லை. கண்டுபிடிக்க வேண்டும்.
ஞாயிறு மலர் பொறுப்பாசிரியர் சின்னராசு அழைத்தார். தேநீர்
கப்போடு அவரிடத்திற்குப் போனேன். ‘அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம்
தேவையா?’ தனக்குள் பாடலை முணுமுணுத்துக்கொண்டிருந்தார்.
பழம்பாடல் பிரியர். அவர் வாய் திறந்தாலும் பழைய படங்களின் தகவல்தான்.
“பாலன், இந்த வாரம் வாசகர்கள் உருகுகிற மாதிரி நீங்க ஒரு காதல் கதை எழுதுறீங்க”
“நானா? காதல் கதையா? ஆள விடுங்க. வேண்டாமே இந்த விஷப்
பரீட்ச”
“போன வாரம் பேய் கதை எழுதினீங்க. நல்லா இருந்துச்சுன்னு
வாசகர்கள் சொல்றாங்க. இங்க பாருங்க. கெப்போங்கிலிருந்து வீர.சுந்தரேசன் அனுப்பிய
வாசகர் கடிதம்”
வாங்கிப் படித்தேன்.
‘கவிதை உலகத்துக்குள் உழன்று கொண்டிருப்பவர் எழுத்தாளர் ந.பச்சைபாலன் என்று
எண்ணியிருந்தேன். சிறுகதையிலும் சிங்கார நடை போடுவார் என்பதைக் கடந்த வாரம் ஞாயிறு
மலரில் பிரசுரமான ‘கல்லறையின் கூச்சல்’
சிறுகதையைப் படித்து அறிந்தேன். எழுத்தாளர் பேய் கதை மட்டும்தான் எழுதுவாரா? சிருங்கார கதைகள் எழுதமாட்டாரா?’ வீர.சுந்தரேசன், கெப்போங்.
இதென்ன வம்பு? ஞாயிறு மலருக்கு அவ்வப்போது கவிதைகள், ஆய்வுக்கட்டுரைகள் எழுதித் தருவேன். போன வாரம்தான் வழக்கத்தை மறுதலித்து
ஒரு பேய்க்கதை எழுதினேன். இன்னொரு பேய்க்கதையும் கைவசம் இருக்கிறது. அதை எழுதலாம்.
காதல் கதையா? எனக்கு வராதே. இவருக்கு எப்படிப் புரிய வைப்பது?
“இல்ல சார். காதல்.. கொஞ்சம் சிரமம்தான். எனக்கு வராது” தவிர்க்க
முயன்றேன்.
“காதலா? காதல் கதையா? இங்க பாருங்க பாலன். இது உங்களுக்கு
வைக்கப்பட்ட சவால். நீங்க எவ்வளவோ படைப்புகள் எழுதி நம்ம பத்திரிகையில
வந்திருக்கு. உங்களுக்குக் காதல் கதை எழுத வரலன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.
உங்களுக்கு காதல் அனுபவம் இருக்குமே. அதுல்ல கற்பனையை கலந்து எழுதுங்க” மனம் வைத்துவிட்டால் விட மாட்டார்.
எப்படியாவது படைப்பை வாங்கி விடுவார். அது கைவந்த கலை அவருக்கு.
“பார்க்கலாம் சார். முயற்சி செய்யுறேன்... எழுதுற மனநிலை
வரணும். அப்பத்தான் மனம் ஒன்றி ஒரு படைப்பை உருவாக்க முடியும்” அந்தச் சூழலில்
சமாளிக்க இப்படித்தான் சொல்ல முடிந்தது.
“வேணும்னா ஒரு மர்மக் கதை எழுதட்டா?” பேச்சைத்
திசை திருப்பினேன்.
“மர்மப் படம் நிறைய பார்க்கிறீங்கன்னு நினைக்கிறேன். ரெண்டு
மூனு காதல் படம் பாருங்க. மூடு வந்திடும். வசந்த மாளிகையில சிவாஜியும்
வாணிஸ்ரீயும் காதல வெளிப்படுத்துற பாங்கு இருக்கே அடடா..நான் படத்த ஏழெட்டு முறை
பார்த்திருக்கேன்”
நான் இன்னொரு கப் தேநீரோடு என் மேசைக்கு வந்தேன். கண்ணாடிவழி
பார்த்தேன். வானம் சிணுங்கத் தொடங்கியது. சிறு தூறலாய் ஆரம்பித்த மழை கண்ணாடியை
நனைத்து நீர்க்கோலமிட்டுக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் சுருதி கூட்டிப்
பெருங்குரலெடுத்தது.
கண்ணாடிச் சன்னலைத் திறந்து மழைக்குக் கைகளை நீட்டி அதன்
குளுமையை அனுபவித்தேன். ஆகா.. என்ன இன்பம். மழையின் மாயக்கரம் பட்டவுடன் மனம்
எனையறியாமல் அவிழ்ந்து கொண்டது. ‘எழுத்தாளனின் பலமும் பலவீனமும் மழை’ என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. மழை எனக்குப் பலமா? பலவீனமா? தெரியவில்லை.
தூரத்தில் துன் இஸ்மாயில் சாலையில் வாகனங்கள் இருபுறமும் நீரை
வாரி இறைத்தவாறு விரைந்தன. குடை இல்லாமல்
ஒருவர் மழைக்குத் தன்னை முழுமையாய் ஒப்படைத்துவிட்டு நனைந்தவாறு சாலையைக்
கடந்தார். இளம் ஜோடி ஒன்று நெருக்கமாக குடை பிடித்தவாறு வாகனங்களின் சாலை நீர்
அபிசேகத்தை ஏற்றுக்கொண்டு நடந்தது.
மழை உடலை மட்டுமா நனைக்கிறது? மனத்தையும் ஊடுருவி குளுமையைப்
பரவச் செய்கிறது. இறுக்கமான எண்ணங்கள் நெகிழ, மனம்
மென்மையாகிறது. ஈரமான மண்ணில் செடியின் வேர் எளிதில் இறங்குவதுபோல் மென்மையான
மனத்தில் அன்பும் கருணையும் காதலும் உயிர் இரக்கமும் வேர் கொள்கின்றன.
வேலை முடிந்து, பக்கத்தில் இருந்த உணவகத்தில் இரவு உணவுக்குப்
போனேன். மழை நிற்காமல் நீர்த் தாரைகளைப் பூமிக்கு அனுப்பிக்கொண்டிருந்தது. உடன்
வந்த நிருபர் வேதா மழையைத் திட்டித் தீர்த்தார். “வீணா போன மழை. இப்படி அழுவுதே.
இதுக்கு நேர காலம் தெரியாது. ரெண்டு வாரமா எங்க போய் தொலைஞ்சதுன்னு தெரியல்ல. இன்னைக்கு
பார்த்து குடை கொண்டு வரல்ல” எப்பொழுதும் யாரையும் குறைசொல்வதும் நொந்துகொள்வதும்
அவரின்
இயல்பு. தலைநிறைய சிக்கல்களைச் சுமந்துகொண்டு திரிவார். இன்று
மழை அவரிடம் மாட்டிக்கொண்டது.
கொஞ்ச நேரத்தில் மழையின் வேகம் குறைந்தது. வேதா பழைய நாளிதழை
மடித்துத் தலையை மறைத்தவாறு பேருந்து நிலையம் நோக்கி விரைந்தார். எனக்கு மழையில்
நனைய வேண்டும் போலிருந்தது. உணவகத்தை விட்டு வெளியே வந்தேன்.
சாலையிலும் கடை வீதியிலும் ஒளிவெள்ளம் பரவியிருந்தது. குளிர்க்காற்று
உடலைத் தீண்டியது. சற்றுத் தூரத்தில் என் கார் நிறுத்தப்பட்டிருந்த இடம்வரை
நனைந்துகொண்டே நடந்தேன். மழையில் நனைவது தனி இன்பம். வாழ்வின் எத்தனையோ
தருணங்களில் மழையில் நனைந்திருக்கிறேன்.
மழையில் நனையும்போதெல்லாம் பூரணியை நினைக்காமல் இருக்க முடியுமா? மழைநீர்
பட்டு மண் வாசம் எழுவதுபோல் பூரணியின் நினைவுகள் மனத்தில் நிறைந்தன.
*
* * * * *
ஊடகத் துறையில் படித்து எப்படியாவது ஒரு பத்திரிகையின்
ஆசிரியராக வர வேண்டும் என்ற என் ஆசையை வேலு மாமாதான் புரிந்துகொண்டு அதற்கு
ஏற்பாடு செய்தார். வீட்டில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் துளியும் விருப்பமில்லை. வீட்டில்
ஏதும் சிக்கலென்றால் அம்மா தன் தம்பியை அழைத்து விடுவார்.
“இவன் தாத்தாதான் பத்திரிகை, எழுத்துன்னு காலத்த
வீணாக்கிட்டாரு. இவனுமா? கவர்மெண்டு வேலைன்னா பரவாயில்ல.
இவனுக்கு எங்க புரியபோவுது. எங்க காலம்தான் இப்படி கித்தா மரத்தோட போராடியே
கரைஞ்சு போச்சு” அப்பா கையில் காய்ந்து
பிசுபிசுத்த ரப்பர் பாலைத் தேய்த்தவாறு மாமாவிடம் கூறினார்.
“விடுங்க. இவனுக்கு அதிலெல்லாம் விருப்பமில்ல. நமக்குப்
பிடிச்சா போதாது. இவனுக்குப் பிடிக்கனுமே” மாமாதான் தக்க சமயத்தில் என்னைக்
காப்பாற்றினார். சைபர் ஜெயாவிலுள்ள
தனியார் கல்லூரிக்கு என்னைக் கையோடு அழைத்துப் போய் சேர்த்து விட்டார்.
மழை பெய்து ஓய்ந்துபோன ஒரு காலைப் பொழுதில், கல்லூரி
வளாகம் முழுவதும் ஈரத்தில் நனைந்த நாளில் நான் உள்ளே நுழைந்தேன். மழைக்குப்
பிந்திய தூறலால் எங்கும் குடைகள் காளான்களாய் விரிந்து மலர்ந்திருந்தன. மரங்களிலும்
செடிகளிலும் நீர்த்துளிகள் சொட்டிக்கொண்டிருந்தன.
முதல் நாள் பதிவு நடைபெற்றதால் கல்லூரியில் பெருந்திரளாக
மாணவர்கள் கூடியிருந்தோம். பதிவுக்குப் பின் மண்டபத்தில் பாடவாரியாக
விரிவுரையாளர்கள் விளக்கம் தந்தார்கள். இடைவேளையில் உணவுக்காக கெண்டீனுக்குப்
போனபோது உடன் படிக்கப்போகும் மாணவர்களின்
அறிமுகம் கிடைத்தது. அனுஷா, சந்திரன், ரமேஷ், பூரணி, ராகவன் எனச் சிலர்தான் தமிழ் மாணவர்கள்.
நம்மவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் இடங்களில் நமக்குள்
ஒரு பிணைப்பும் நட்பும் அதிகமாக இருக்கும். அப்படித்தான் நாங்கள் நட்பில்
இணைந்தோம். அவர்களில் பூரணி தனித்துத் தெரிந்தாள். ஜோகூர் ஸ்கூடாயில் வசதி படைத்த
குடும்பம். ஆனாலும் அந்தப் பந்தா அறவே இல்லாமல் பூரணியால் பழக முடிந்தது. அவள்
பெயரே என்னை முதலில் ஈர்த்தது.
“நீங்க நா.பார்த்தசாரதியோட குறிஞ்சி மலர் நாவல்
படிச்சிருக்கீங்களா?” நூலகத்தில் ஒரு நாள் சந்தித்தபோது
கேட்டேன்.
“இல்லையே பாலன். ஏன்?”
“அருமையான நாவல். அது உங்களைப் பற்றியது”
“என்னைப் பற்றியதா? புரியலையே. எப்படி?” பூரணி முகத்தில் கேள்விக்குறிகள்.
“பூரணிதான் நாவலின் முக்கியப் பாத்திரம். தியாகத்தின் உருவமா
நா.பார்த்தசாரதி பூரணியை படைச்சிருக்கார். அவளுக்குத் துணையா அரவிந்தன். நீங்க கட்டாயம்
படிக்கனும். நான் அத படிச்சு அழுதிருக்கேன்.கொஞ்ச நாளா மனசும் சரியில்ல”
“அத நான் படிக்கணுமே. எனக்குக் கிடைக்குமா?” பூரணி
ஆர்வம் பொங்கக் கேட்டாள்.
குறிஞ்சி மலர் நாவல்தான் எங்கள் இருவரையும் நெருக்கமாக்கியது. இருவரும் தமிழ்ப்பள்ளியில் படித்தவர்கள்
என்பதால் நாவல் பற்றிப் பேசினோம். குறிஞ்சி மலர் பூரணி விதவைக் கோலத்தில் வந்தபோது
கண்களில் நீரை வரவழைத்து விட்டது என்றாள். நா.பா.வின் வசீகரமான மொழி அவளையும்
மயக்கி விட்டது என்றாள். பூரணி பேசும் அழகை நாள் முழுக்க பார்த்துக்கொண்டிருக்க
வேண்டும் போலிருந்தது எனக்கு.
கல்லூரியில் தீபாவளியையொட்டி தமிழ் மாணவர்கள் படைக்கும் கலை
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் இடம்பெற்ற குழு நடனத்தில் நானும்
பூரணியும் சேர்ந்து ஆடினோம். கைகளைப்
பற்றி ஆடுவதில் முதலில் எனக்குத் தயக்கம் இருந்தது. ஏதோ ஒரு புள்ளியில் நட்பு
எனும் நிலையிலிருந்து நான் விலகி பூரணியை நெருங்கி வருவதை உணர்ந்தேன்.
பூரணிக்கும் அந்த நிலைதானோ? அவள் எதையும் வெளிக்காட்டிக்
கொள்ளவில்லை. வழக்கம்போலவே கலகலப்பாகப் பேசிச் சிரித்தாள். முகத்தில் மிகையான அலங்காரப்
பூச்சு இல்லாமல் இயற்கை அழகோடு மிளிரும் அவளின் அழகு தனி அழகுதான். கல்லூரியில்
இடுபணி தரும்போதெல்லாம் நாங்கள் இருவரும் ஒரே குழுவில் இருப்போம்.
இரண்டு நாள் கடுமையான காய்ச்சலால் நான் கல்லூரிக்கு போகாத
நாளில், விடுதியில் என்னுடன் தங்கும் ராகவனிடம் பூரணி என்னைப் பற்றிக் கவலையோடு
விசாரித்ததாக அவன் வந்து சொன்னான்.
“பூரணிக்கு உன் மேலே அவ்வளவு அக்கறை. என்னமோ இருக்கு பாலன். ஐ
திங்க் ஷி லைக் யு” பார்த்துப்பா. காதல்ல மாட்டிக்காதே” ராகவனுக்கு என்னைச்
சீண்டுவதில் இன்பம்.
இரண்டரை வருட கல்லூரி நாள்கள் ஓடி மறைந்ததே தெரியவில்லை. இதோ, இன்னும் ஒரு வாரம். இறுதித் தேர்வு
முடிந்து எல்லாரும் விடைபெறும் காலம் நெருங்கி விட்டது. அன்று, மாலையில் கல்லூரிக்கு முன்னால் இருக்கும் பூங்காவின் சிமெண்டு பெஞ்சில்
நானும் பூரணியும் அமர்ந்திருந்தோம். வானத்தை நோக்கினேன். அங்குச் சூரியனை
மறைத்துக் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன.
என்றுமில்லாமல் பூரணியின் முகம் வாடியிருந்தது. கண்கள்
கலங்கியிருந்தன. எதையோ சொல்ல வாய் துடித்தது. வரப்போகும் பிரிவை நினைந்து
வருந்துகிறாளோ?
“என்னாச்சு பூரணி? ஏன் ஒரு மாதிரி இருக்கிறே? வெளிநாட்டுல தொடர்ந்து ஜெனர்லிசம் படிக்கப் போறதா சொன்னியே...”
“நியூயோர்க் டைம்ஸ்ல என் சித்தப்பா வேல செய்யுறாருன்னு
சொன்னேன்ல. அங்கே அனுப்பி வைக்க எங்க வீட்டுல ஏற்பாடு செய்யுறாங்க. எனக்கு அங்க
போறதுக்கு விருப்பம் இல்ல. அங்க படிச்சிட்டு நியூயோர்க் டைம்ஸ்ல வேலைக்கு ஏற்பாடு
செய்யலாம்னு சித்தப்பா சொல்றாரு. எனக்கு நம்ம நாட்டுல படிச்சு வேல செய்யத்தான்
ஆசை. ஆனா..”
“நல்ல வாய்ப்புதான் பூரணி. இது எல்லாருக்கும் கிடைக்காது. இனி, உன்னை
பார்க்க முடியாதுன்னு நெனச்சா எனக்கு வருத்தமா இருக்கு..” என்னால்
ஏமாற்றத்தை மறைக்க முடியவில்லை.
“நாம பழகுறது எப்படியோ வீட்டுல தெரிஞ்சியிருக்கு பாலன். பேசிப்
பார்த்தேன். தகுதி, தராதரம்ன்னு அப்பா கடுமையா பேசுறாரு. இப்படி அப்பா எங்கிட்ட கோபமா
பேசியதே இல்ல. அப்பா அம்மா விருப்பத்த
மீறி இதுவரைக்கும் நானும் நடந்தது இல்ல. முன்னமே என்னை அமெரிக்காவுக்குப் படிக்க
அனுப்பியிருக்கனும்னு சொல்றாங்க. எனக்கு என்ன செய்யறதின்னு தெரியல...” கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
என் தகுதிக்கு மீறி எதற்கும் நான் ஆசைப்பட்டது இல்லை. பூரணி
வாழ்க்கையின் இடையில் நுழைந்து ஊறு செய்து அவளின் நல்ல வாய்ப்பைக் கெடுப்பதா? தகுதி, தராதரம் என்ற சொற்கள் என் தன்மானத்தை உரசிப் பார்த்தன. நான் செய்வதறியாது
தவித்தேன். மனம் கனத்தது.
மழையின் தூறல் தொடங்கி எங்களை நனைக்கத் தொடங்கியது. பூரணி
கையில் குடை இருந்தது. அதை விரிக்காமல் மௌனமாக இருந்தாள். மழைக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்து விட்டதுபோல்
அப்படியே இருந்தோம்.
‘தண்ணீரில் மீன் அழுதால் தரைக்கு ஒரு தகவலும் வருவதில்லை’ என்று கவிஞன் பாடியதற்குச் சான்றாக இருவரும் அன்று அமர்ந்திருந்தோம். யாருக்கு
யார் ஆறுதல் சொல்வது? இருவர் கண்களிலும் அரும்பிய நீர் மழை
நீரோடு கலந்தது.
“குறிஞ்சி மலர் போலத்தான் வாழ்க்கையும். அரவிந்தன் பாதியிலேயே இறந்துபோவான்னு பூரணி எதிர்பார்த்தாளா
என்ன? இரண்டு பேரும் சேர்ந்து வாழனும்னுதான் வாசகர்களும்
எதிர்பார்த்திருப்பாங்க. ஆனா, இரண்டு பேரும் பிரிஞ்சாதான்
நாவல் சுவையா இருக்கும்னு நா.பார்த்தசாரதி முடிவு செய்திட்டாரு”
“நம்ம வாழ்க்கையும் அப்படித்தானா?” முகத்தில் வழிந்த மழை நீரை
துடைத்தவாறு பூரணி கேட்டாள்.
“நம்ம வாழ்க்கை மட்டுமல்ல. மனிதர் வாழ்க்கையே இப்படித்தான்.
திருப்பங்கள் நிறைஞ்சது. யாரும் எதிர்பாராதது. நாம போடற கணக்குக்கெல்லாம் விடை வேற
மாதிரி வரும். அதை ஏற்பதை தவிர நமக்கு வேற வழி இல்ல” தத்துவார்த்தமாக எதையோ சொல்லி
பூரணியை ஆறுதல் படுத்தினாலும் ஆழ்மனத்தில் நான் உடைந்து போயிருந்தேன்.
அருகே குடை பிடித்துப் போனவர்கள் நாங்கள் மழையில் நனைந்தவாறு
அமர்ந்திருந்ததை வியப்பாகப் பார்த்தார்கள். சந்திரனும் ரமேஷும் எங்களைப் பார்த்துக்
கைநீட்டி வேடிக்கையாகச் சிரிப்பது தூரத்தில் தெரிந்தது.
இதோ, இந்த மழையும் அழுகிறது. எங்கள் சோகத்தில் அதுவும் பங்கு கொள்கிறது. மழை
ஏதோ இராகத்தில் குரலெடுத்துப் பாடுகிறது. அதன் சங்கீதம் ரசிக்க இங்கே யாருக்கும்
நேரமில்லை. அன்று வானம் அழுது தீர்க்கும்வரை நாங்கள் இருவரும் அங்கு
அமர்ந்திருந்தோம்.
* * * * * *
பூரணியை மட்டுமா? இந்த மழை நந்தினியின் நினைவுகளையும் அல்லவா என்னுள்
கிளறிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.
அப்பொழுது, பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில்
இளங்கலை படித்துக்கொண்டிருந்தேன். இடையில் மூன்று மாத பயிற்சிக்காக ‘மக்கள் குரல்’ பத்திரிகையில் சேர்ந்தேன். அதன்
ஆசிரியர் குருநாதன், வேலு மாமாவின் நீண்ட நாள் நண்பர். பத்திரிகைத்
துறையில் பழுத்த அனுபவம் நிறைந்தவர்.
அவர் என்னை அன்பாக அரவணைத்துக் கொண்டார்.
“பாலன், சரியான துறையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கீங்க. இது சவால்மிக்க துறை.
கடுமையான உழைப்பு தேவை. இங்க ஆபிஸ்ல மட்டும் இருந்தா எதையும் கத்துக்க முடியாது.
பத்திரிகையாளர் சந்திப்புக்கு வெளியே
போங்க. ஒரு செய்தியை வித்தியாசமா, மாறுபட்ட கோணத்துல அணுகத்
தெரியணும். சும்மா பக்கத்த நிரப்பறது மட்டும் நம்ம வேல இல்ல. வாசகர்களை சுண்டி
இழுக்கும் வித்தையை கத்துக்கணும். ஆல் தெ பெஸ்ட்”. கைகுலுக்கினார்.
அவர் சொன்னபடியே அடிக்கடி சக நிருபர்களோடு பத்திரிகையாளர்
சந்திப்புக்கு வெளியே சென்று செய்தி சேகரித்தேன்.
அப்படிப் போன போதுதான் நந்தினியின் அறிமுகம் கிடைத்தது. அதுவும் ஒரு மழை
நாளில். அன்று காலையிலிருந்து மழை விடாமல் தூறலாக மூக்கைச் சிந்திப் பூமியை
நனைத்துக் கொண்டிருந்தது.
புத்ரா ஜெயாவில் உள்ள கல்வி அமைச்சில் நடந்த பத்திரிகையாளர்
சந்திப்பில் செய்தி சேகரித்துக்கொண்டு வெளியே வந்தபோது, மழை
தீவிரமாகி வழி மறித்தது. நல்ல வேளை. நந்தினி கையில் குடையோடு வந்தாள். ஆங்கிலப்
பத்திரிகையில் நிருபராக அன்றுதான் அவளைப் பார்த்தேன்.
“இந்த மழை நிக்காது. காருக்குத்தானே போகணும்? வாங்க
போகலாம்” மிக இயல்பாக அழைத்தாள். எனக்குத்தான் தயக்கமாக இருந்தது. தொலைவில் இருந்த
காருக்குப் போவதற்குள் இந்த மழை தெப்பமாக நனைத்துவிடும். வேறு வழியில்லை. குடையை
வாங்கிக்கொண்டு அவளோடு சேர்ந்து நடந்தேன்.
மழையின் சாரல் இருவரையும் கொஞ்சம் நனைக்க பேசியவாறு நடந்தோம். செந்தூல்
பகுதியில் வசிக்கும் நந்தினிக்கும் பத்திரிகைத் துறையில்தான் ஆர்வமாம். வேலையில்
சேர்ந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறதாம். எந்தத் தயக்கமும் இன்றிக் கலகலப்பாக,
வெளிப்படையாக பேசும் அவளின் இயல்பு என்னைக் கவர்ந்தது.
அன்றைய நாளைப் பின்னாளில் நினைவுகூர்ந்தபோது எழுதிய கவிதைதான்
இது:
நன்றி மழையே
குடைக்குள் எங்களின்
முதல் சந்திப்பு
பத்திரிகையாளர் சந்திப்பு இருக்கும்போதெல்லாம் சந்தித்துக்கொள்வோம்; பேசுவோம்.
இருவருக்கும் பகிர்ந்துகொள்ள நிறைய இருப்பதாக உணர்ந்தோம். பத்திரிகையாளர்
சந்திப்பு இல்லாதபோது உணவகம் சென்றோம். திரையரங்கம் போனோம். ஆசைதீர பேசித்
தீர்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது அவளின் எழில் முகம்.
குழிவிழும் கன்னங்களும் சுருள் கேசமும் என்னை மாயவலையாய் வளைத்தன. என் தேடல்
முடிந்தது. இனி அவளோடுதான் எஞ்சிய காலம் என நினைத்திருந்தபோது அது நிகழ்ந்தது.
அன்று தன் தோழி ஜூலியின் பிறந்தநாளைக் கொண்டாட வருமாறு நந்தினி
அழைத்தாள். அவள் அழைத்த இடம் ஓர் இரவுநேர கேளிக்கை விடுதி என்றபோது மனம்
துணுக்குற்றது. அம்மாதிரி இடங்களுக்கு
நான் போவதில்லை. இருந்தும் போனேன்.
கேக் வெட்டிக் கொண்டாடுவார்கள் என்று எண்ணினேன். அதற்குப் பிறகு
அங்கு அரங்கேறிய காட்சிகள் என்னை நிலைகுலையச் செய்தன. ஆண்களும் பெண்களும்
மதுவருந்திவிட்டு மிக நெருக்கமாக நடனமாடத் தொடங்கினர். “வாங்க பாலன். டைம் டு
எஞ்ஜோய். வாழ்க்கையை அனுபவிக்கனும். வேடிக்கை பார்க்கக் கூடாது. கம் ஓன்...” வாய்
குழறியபடி நந்தினி என்னை அழைத்தாள். மற்றவர்களும் என்னையும் மதுவருந்த
வற்புறுத்தினர்; மறுத்துவிட்டேன். காது பிளக்கும் இசையை என்னால் தாங்க முடியவில்லை.
சுவைபானத்தைப் பருகியவாறு
ஒளிமங்கிய இருளில் அவர்களைக் கவனித்தேன். நந்தினி போதையில் தள்ளாடியபடியே
ஒருவனோடு நெருக்கமாக ஆடினாள். நான் அதிர்ந்துபோனேன். இவள் நானறிந்த நந்தினி
இல்லையே! இவளுக்கு இப்படியொரு மறுபக்கமா?
கோலாலம்பூரின் இரவு வாழ்க்கைக்கு தங்களை ஒப்புக்கொடுத்துவிட்டு இரையாகும்
மனிதர்களா இவர்கள்?
எல்லாவற்றையும் உதறிவிட்டு அப்பொழுதே அங்கிருந்து கிளம்பினேன்.
* * * * * * *
இந்த மழை பூரணி, நந்தினி நினைவுகளைத் திரும்பத்
திரும்ப ஞாபகமூட்டிக் கொண்டே இருக்கிறது. அவற்றிலிருந்து மீளும் வழி தெரியாமல்
தவித்தேன்.
இவற்றில் கொஞ்சம் கற்பனையைக் கலந்தால் சுவையான சிறுகதைகளாக
மாற்றி வாசகர்களுக்கு விருந்தாக்கலாம். அதைத்தான் ஞாயிறு மலர் பொறுப்பாசிரியரும்
எதிர்பார்க்கிறார். ஆனால், ரணமூட்டும்
இந்த அனுபவங்களில் மீண்டும் மூழ்கியெழ மனம் முரண்டு பிடித்தது.
மனம் நிம்மதியை இழந்து தவிக்கும் தருணங்களில் எழுத்துதான்
மருந்தாகி மனத்தை இலேசாக்கும். இன்றைய இரவும் அப்படித்தான். எதையாவது எழுதினால்
மனத்தை அழுத்தும் பாரத்திலிருந்து விடுபடலாம். கணினித் திரை ஒளிரத் தொடங்கியது.
நான் கற்பனை உலகில் நுழைந்தேன்.
*
* * * * * *
மறுநாள் சின்னராசுவிடம் என் படைப்பை நீட்டினேன்.
“பொன் ஒன்று கண்டேன். பெண் அங்கு இல்லை. என்னென்று நான்
சொல்லலாகுமோ..” பாடலை முணுமுணுத்தவர் நிமிர்ந்து என்னைக் கவனித்தார். முகம்
மலர்ந்தது. ஆசையாய் வாங்கினார்.
“வெரிகுட் பாலன். சொன்னபடியே எழுதிட்டீங்களே. காதல் கதைதானே? எனக்குத்
தெரியும் உங்களால அருமையான காதல் கதை எழுத முடியும்னு? என்ன
தலைப்பு?”
“ஆதலினால் கொலை செய்வீர்”
“என்ன பாலன், தலைப்பு பயங்கரமா இருக்கு. அப்ப இது காதல் கதை
இல்லையா?” அவர் முகத்தில் ஏமாற்றம் பரவியது.
“இல்ல சார். இது திகில் கதை. வாசகர்கள் இதை ரொம்ப ரசிச்சு
படிப்பாங்க. நீங்களே படிச்சுப் பாருங்களேன். உங்களுக்கும் பிடிக்கும்”
“அப்ப காதல் கதை?”
“அடுத்து காதல் கதைதான். உங்களையே மயக்குற மாதிரி ஒரு
சிருங்காரக் கதை”
அவர் சந்தேகம் தோய்ந்த முகத்தோடு என்னைப் பார்த்தார். என்
இடத்திற்கு வந்து மாலினி தந்த சுவையான தேநீரைச் சுவைத்தவாறு கண்ணாடிவழி வெளியே பார்த்தேன். மேகங்கள்
இல்லாமல் வானம் தெளிவாய் இருந்தது. இன்று மழை வராது என்றே தோன்றியது.
No comments:
Post a Comment