நம் குரல்

Friday, July 12, 2019

நினைவுக் கட்டுரை


இலக்கியத் தேனீ
பேராசிரியர் இரா.மோகன் 


டாக்டர் மு.வ. நூற்றாண்டு மலர் வெளியீடு

மதுரையில் பேராசிரியர் இரா.மோகன் இயற்கை எய்தினார் என்ற செய்தி அண்மையில் எனக்கு அதிர்ச்சியையும் பெருந்துயரத்தையும் ஏற்படுத்தியது. நமக்கு அறிமுகமானவர்களும் அன்பினால் நெருங்கியவர்களும் நம்மைவிட்டு நிரந்தமாய்ப் பிரியும்போது இந்தப் பாழும் மனம் அதை எளிதில் ஏற்பதில்லை. அவர்கள் நம்மோடு பழகிய கணங்களும் சந்தித்துப் பேசியவையும் மனக்கண்ணில் மீண்டும் தோன்றி மறையும். அப்படித்தான் பேராசிரியர் இரா.மோகன் அவர்களுடனான  நினைவுகளை என் மனம் அசைபோட்டுப் பார்க்கிறது.

2004ஆம் ஆண்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழகத்திற்கு மேற்கொண்ட இலக்கியப் பயணத்தின்போது மதுரையில் அவரைச் சந்தித்தேன். உலகத் திருக்குறள் பேரவையின் தலைவர் மணிமொழியன் ஏற்பாடு செய்த இலக்கியச் சந்திப்பில், மலேசிய இலக்கியம்: ஓர் அறிமுகம் எனும் நூலை வெளியிட்டுப் பேராசிரியர் இரா.மோகன் உரையாற்றினார். கேட்பாரைப் பிணிக்கும் நகைச்சுவை கலந்த அவரின் உரை அனைவரையும் ஈர்த்தது. புதுக்கவிதை, ஹைக்கூ கவிதைகளில் மிகுந்த ஈடுபாடுகொண்ட அவர் அவை குறித்தும் பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய முனைவர் ரெ.கார்த்திகேசு, “சாகித்ய அகாடமி வெளியிடத் திட்டமிட்டுள்ள தமிழ் இலக்கிய வரலாற்றில் மலேசிய இலக்கிய வரலாறும் இடம்பெற வேண்டும் என்ற என் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இன்னும் அனுமதிக் கடிதம் கிடைக்கவில்லையே” என்ற மனக்குறையை முன் வைத்தார். பேராசிரியர் இரா.மோகன் உடனே எழுந்தார். “நீங்கள் மதுரையை விட்டுப் போவதற்குள் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு கண்டு விடுகிறேன்” என்று அவர் கூறிய சொற்களில் உறுதி தெரிந்தது. அஃது உண்மை என்பது அன்றிரவே உறுதியானது. அன்று நள்ளிரவில், மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரனைக் கைப்பேசியில் அழைத்து, “முனைவர் ரெ.கா.வுக்கான கடிதம் சென்னையில் சாகித்ய அகடாமி அலுவலகத்தில் தயாராக இருக்கும். சென்னைக்குப் போகும்போது நேரில் பெற்றுக்கொள்ளலாம்” என்ற இனிப்பான தகவலைக் கூறினார். ஒரு செயலை விரைந்து முடிக்கும் அவரின் செயல்திறம் என்னை வியப்பிலாழ்த்தியது.

அந்த நிகழ்ச்சியில் தாம் எழுதிய நூல்களை எங்களுக்கு வழங்கினார். அதன் பின்னரே அவரைப் பற்றி ஆழமாக அறியும் வாய்ப்பு ஏற்பட்டது. மு.வ.வின் செல்லப் பிள்ளை எனத் தமிழ்கூறு நல்லுலகத்தில் அழைக்கப்பெறும் இவர், கு.ப.இராஜகோபாலன் சிறுகதைகள் எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். 1972இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் சேர்ந்து, விரிவுரையாளர், இணைப்பேராசிரியர், திட்ட ஒருங்கிணைப்பாளர், ஒப்பிலக்கியத்துறைத் தலைவர், புல ஒருங்கிணைப்பாளர், மூத்த பேராசிரியர், ஆட்சிக்குழு உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளில் 34 ஆண்டுக்காலம் பணியாற்றியுள்ளார். இவர்தம் நெறிகாட்டுதலில் 24 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். சோர்விலாமல் கடும் உழைப்பில் வாழ்வின் உயர்வை அடைந்தவர் என்பதை இதன்வழி அறிய முடிகிறது.


                            மகள் மருமகனோடு  இரா.மோகன் – நிர்மலா இணையர்

2009இல் மீண்டும்  மதுரைக்குப் பயணம் மேற்கொண்டோம். இம்முறை மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகமும் ம.த.எழுத்தாளர் சங்கமும் இணைந்து, 33 தமிழாசிரியர்களுக்குக் காமராசர் பல்கலைக்கழகத்தில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தன. அதைப் பேராசிரியர் இரா.மோகன் முன்னின்று சிறப்பாக ஒருங்கிணைத்தார்; அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்று விருந்தோம்பல் செய்தார்; பேருந்துப் பயணத்தில் பட்டிமன்றம் நடத்திக் கலகலப்பூட்டினார்; கோயில்களுக்கும் இலக்கியச் சந்திப்புகளுக்கும் உடன்வந்து துணைநின்றார்; நாடு திரும்பும்வரை சோர்விலாமல் அனைத்துத் தேவைகளையும் சேவகன்போல்  நிறைவுசெய்தார். எங்கள் பயணம் வெற்றிப் பயணமாக அமைய அவர் முக்கியப் பங்காற்றினார்.

ஒரு நாள் அனைவரையும் மதுரையில் தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அலங்காரப் பொருள்கள் இல்லை. வரவேற்பறை தொடங்கி உணவருந்தும் இடம்வரை எங்கும் நூல்களே நீக்கமற நிறைந்திருந்தன. இல்லத்தில் நூல்களா? நூல்களுக்குள் இல்லமா?’ என அவற்றை வியந்து பார்த்தோம். அவரின் துணைவி முனைவர் நிர்மலாவும் அன்புடன் வரவேற்று உபசரித்தார். அவர்களின் ஒரே அன்பு மகள் மணமாகி அமெரிக்காவில் வசிக்கிறார். பூமியில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பதைவிட எத்தனை நூல்கள் வாசித்தோம் என்பதுதான் முக்கியம் என்று அறிஞர் கூறிய அமுதமொழிதான் அப்பொழுது நினைவுக்கு வந்தது.

அங்குதான் அவர், தாம் எழுதிய 80 நூல்கள்கொண்ட நிலைப்பேழையைக் காட்டினார். இன்று அந்த எண்ணிக்கை நூறைத் தாண்டிவிட்டது. வாழ்நாளெல்லாம் வாசிப்பு, எழுத்து, பட்டிமன்றம், இலக்கிய நிகழ்ச்சி, இலக்கியப் பயணம் எனச் சுறுசுறுப்பாக இயங்கிய இலக்கியத் தேனீதான் பேராசிரியர் இரா.மோகன். டாக்டர் மு.வ.வின் நாவல்கள் என்பது இவரின் முதல் நூல் (1972). மு.வ. மீது மிகுந்த பற்றுக்கொண்ட மாணவராக அவர் திகழ்ந்ததின் சான்றாக  அவரைப் பற்றி ஆறு நூல்கள் எழுதியுள்ளார். 



மலேசியத் தமிழ் இலக்கியத்தின் மீது அக்கறை கொண்டவராகவும் மதுரை மண்ணில் அதற்கான அங்கீகாரத்தை வழங்குவதிலும் ஈடுபாடு காட்டினார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க அழைப்பினை ஏற்றுச் சிறுகதைக் கருத்தரங்கம், புதுக்கவிதைக் கருத்தரங்கம், டாக்டர் மு.வ. நூற்றாண்டு விழா, இலக்கியச் சந்திப்பு, நூல் வெளியீடு எனப் பல நிகழ்ச்சிகளில் பங்குபெற பலமுறை மலேசியாவுக்கு வந்துள்ளார். ஒருமுறை சிறுகதைக் கருத்தரங்கில், தேர்வுபெற்ற  இருபது சிறுகதைகளைப் பற்றி கருத்துரை வழங்கினார். கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல் எல்லாக் கதைகளையும் அலசி ஆராய்ந்து இவர் பேசினார். இவரின் நினைவாற்றல் கண்டு  அனைவரும் வியந்தோம்.

சிறுகதைக் கருத்தரங்கம் முடிந்த மறுநாள், கெந்திங் மலைக்குச் செல்ல வேண்டும் என்று தம் விருப்பத்தைத் தெரிவித்தார். டாக்டர் மு.வ.வின் மாணவருக்கு ஒருநாள் சாரதியாக உடன் இருந்து உதவும் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியதற்காக மகிழ்ந்தேன். பத்துமலையில் முருகனைத் தரிசித்துவிட்டுக் கெந்திங் புறப்பட்டோம்.   மலையை அடையும் வரை வழிநெடுக உற்சாகமாகப் பேசியபடி வந்தார். மலையைச் சூழ்ந்த பசுமை அழகையும் அதன் உச்சியில் அமைந்த கட்டட நேர்த்தியையும் ரசித்தார்.

மாலை திரும்புகையில் டாக்டர் மு.வ. வோடு பழகிய அவரின் அனுபவம் பற்றி நான் ஆர்வத்தோடு கேட்க அவற்றை ஆசையாய்க் கூறினார். தம் காதல் வாழ்விலும் மு.வ.தான் துணை வந்ததாகக் கூறினார். எப்படி என்றேன். தம்முடன் முதுகலை பயின்ற  மாணவியிடம் ஒரு நாள் கையில் வைத்திருந்த நூலை நீட்டி “நல்வாழ்வு வேண்டுகிறேன்” என்றாராம். அதை வாங்கிய மாணவிக்கோ குழப்பம். நூலைப் பார்த்தார். நூலின் தலைப்பு நல்வாழ்வு’. அது டாக்டர் மு.வ.வின் நூல். ஒரு நூலைக் கொடுத்துத் தம் காதலை அழகாகச் சொன்ன விதம்  வியப்பாக இருந்தது. அந்த மாணவிதான் அவரின் துணைவியார் முனைவர் நிர்மலா அவர்கள். திருமணத்திற்கு முன்னால் இவர் தம் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, அன்புள்ள நிலாவுக்கு என்ற நூல் வெளிவந்துள்ளது.



                      மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி

ஸ்ரீகோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் திரு. கந்தசாமி அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள அழைத்தபோது மறுக்காமல் மலேசியா வந்தார். செர்டாங் நண்பர் இராஜேந்திரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற அவ்விழாவில் நானும் இணைந்துகொண்டேன். எழுத்தாளர்களின் நூல் முயற்சிகளுக்கு அணிந்துரை வழங்கி ஒல்லும்வகையெல்லாம் துணைநின்றுள்ளார். அவை தொகுக்கப்பட்டு, இலக்கியக் கோலங்கள்’, முன்னுரை நாற்பது என இரு நூல்கள் வெளிவந்துள்ளன.

2015இல் 9ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு இங்குத் துணைவியாரோடு வந்தபோது, அவர்கள் தனித்தனியே தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இவருக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் துணைவியிடம் இருந்ததால் ஒன்றாகத் தங்கும் வசதியைக் கேட்டிருக்கிறார். முடியாது என்று ஏற்பாட்டுக் குழுவினர் மறுத்துவிட்டனர். உடனே, உதவிக்கு வந்த நண்பர் ஹில்டன் தங்கும் விடுதிக்கு இருவரையும் அழைத்துப் போனார். ஏற்பாட்டுக் குழுவினரை நண்பர் கடுமையாகத் திட்ட, “வேண்டாம் ஐயா. அவர்களைத் திட்டாதீர்கள். அவர்கள் நிலை அப்படி. நாம்தான் பொறுத்துப் போக வேண்டும்” என்று அந்தச் சூழலிலும் அமைதி காத்தார் பேராசிரியர் இரா.மோகன்.

நுண்மாண் நுழைபுலம்மிக்க பேராசிரியராய், இலக்கிய இதயங்களில் நீங்காமல் வீற்றிருக்கும் இலக்கியவாதியாய், எப்பொழுதும் புன்னகை பூத்த முகத்தினராய், நகைச்சுவைப் பேச்சில் பழகுவோரை எளிதில் ஈர்ப்பவராய், மற்றவரைக் கடிந்து பேச அறியாதவராய், இம்மண்ணில் 69 ஆண்டுகள் வாழ்ந்த பேராசிரியர் இரா. மோகன் அவர்களின் மறைவு இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு. குறையொன்றும் இல்லை, மறைமூர்த்தி கண்ணா’, இது அவரின் கைப்பேசியின் அழைப்பொலி. வாழ்வில் குறை மறந்து நிறை மட்டும் காணும் உயர்ந்த உள்ளம் அவருடையது.


                                    என் நூலைப் பெறுகிறார் இரா.மோகன்

டாக்டர் மு.வ. அவர்களுக்கு மாணவர்கள் பலருண்டு. ஆனால், இவர் தம் சொல்லால், செயலால், எழுத்தால், மு.வ.வைத் தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார். இலக்கியத்தில் பழைமையும் புதுமையும் போற்றும் பண்பாளராக மிளிர்ந்தார். முதல் நாள் கம்பன் பட்டிமன்றத்தில் பேசுவார். மறுநாள் புதுக்கவிதை நூலுக்கு அணிந்துரை எழுதுவார்.

ஒரு மரணத்தில் என்ற கவிதையில் கடைசி வரிகளாய் நான் எழுதியவை நினைவுக்கு வருகின்றன.
                                                தன் குறிப்பேட்டில்
                                                ஒரு பெயரைக்
                                                குறித்துக்கொண்டோ
                                                அழித்துவிட்டோ
                                                காலம் மௌனமாய்க்
                                                கடந்து போகிறது

தமிழ்கூறு நல்லுலகப் பேரேட்டில் பேராசிரியர் இரா.மோகனின் பெயர் என்றும் நிலைபெற்று வாழும் என்பது உறுதி. இறந்தாலும் தொடர்ந்து வாழ்விக்கும் அரிய கலைதான் எழுத்து என்பதை மறுப்பார் யாருமுண்டா?




                 இரா.மோகன் மலேசிய நூலை வெளியிட தமிழண்ணல் பெறுகிறார்



                                                      (மயில் இதழ் - ஜூலை 2019)

No comments:

Post a Comment