மலேசியாவில்
மோனா லிசா
மோனா லீசா மலேசியாவுக்கு
வந்துள்ளார் என்ற தகவல் புலனம்வழி கிடைத்தபொழுது தாமதிக்காமல் கோலாலம்பூரில்
அமைந்துள்ள தேசிய கலைக் காட்சியகத்திற்குச் (National Art
Gallery) சென்றேன். இதுவரை
பார்த்ததெல்லாம் நகல்தானே. இதுதான் உண்மையானது என்ற எண்ணமே என்னை அங்கு உந்தித்
தள்ளியது. நான் சென்ற நாளில் மட்டும்
நான்காயிரம் வருகையாளர்கள் என அங்குப் பணியிலிருந்த பொறுப்பாளர் சொன்னார். மோனா
லீசாவுக்கு இவ்வளவு இரசிகர்களா என வியந்தேன்.
தம் மந்திரப்
புன்னகையால் உலக மக்களின் இதயங்களைக்
கொள்ளை கொண்டவர் மோனா லீசா. காண்பார் கண்களையும் கைது செய்யும் இந்த ஓவியப்
பெண்ணுக்கு உயிரூட்டியவர் இத்தாலியின் புகழ்பெற்ற ஓவியர் லியொனார்டோ டாவின்சி (1452
– 1519). மோனா லீசாவோடு அவரின் மற்ற 16 அரிய ஓவியங்களைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு
மலேசிய ஓவியக் காதலர்களை நாடி வந்துள்ளது. இவை அவரின் உண்மை ஓவியங்கள் அல்ல.
உண்மைக்கு மிக நெருக்கமான, உயர்தர இலக்க மறுஉருவாக்கம் (high definition digital
reproduction) மூலம் உயிர்பெற்ற ஓவியங்கள் என்பதை அங்குச் சென்ற
பின்னரே அறிந்தேன்.
லியொனார்டோ டாவின்சி புகழ்பெற்ற இத்தாலிய
மறுமலர்ச்சிக் கட்டடக் கலைஞர், புதுமைப் புனைவாளர்,
பொறியியலாளர், சிற்பி, ஓவியர் எனப்
பல்துறை மேதையாக விளங்கியவர். அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல், குடிசார் பொறியியல் ஆகிய
துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். இவர் தணியாத ஆர்வம்
கொண்டவராகவும் தீவிர கற்பனை வளம் கொண்டவராகவும் இருந்துள்ளார்.
உலகில் இதுவரை வாழ்ந்த சிறந்த ஓவியர்களுள் ஒருவராகவும், பன்முக ஆற்றல்
கொண்டவராகவும் இருந்துள்ளார். மண்ணில் இவர்போல் மனிதரும்
உண்டோ என வியந்து போற்றப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான
ஓவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். கடைசி விருந்து (The Last Supper), மோனா லீசா (Mona Lisa) போன்ற
ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.
உலகில் அனைத்தையும் புரிந்துகொள்ள வேண்டும், அதன் ஆழ்ந்த
இரகசியங்களை அறிய வேண்டும் என்ற தீவிர வேட்கை வாழ்நாள் முழுவதும் இவரை ஆட்டிப்
படைத்திருக்கிறது. இதனால் பல துறைகளில் ஈடுபட்டு அவற்றை முடிக்காமல் விட்டுச்
சென்றுள்ளார். இவர் வாழ்ந்ததோ போர்க் காலச் சூழல். எனவே, வெனிஸ், நேப்பில்ஸ், மிலன், பாரிஸ் என இடம் மாறிக்கொண்டே இருந்ததால் பலதுறை ஆய்வுகளில் ஈடுபட்டும்
அவற்றை முடிக்க முடியவில்லை.
லியொனார்டோ டாவின்சி, வழக்குரைஞர் ஒருவருக்கும் குடியானவப்
பெண்ணுக்கும் தாம்பத்திய உறவுக்கு வெளியே பிறந்தவர். அப்பாவுக்குத் தன் மகனும் வழக்குரைஞராக
வேண்டும் என விருப்பம். ஆனால், டாவின்சிக்கோ நாட்டம் வேறு.
தான் வரைந்த ஓர் ஓவியத்தைக் காட்டி அப்பாவிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். 18ஆவது
வயதில் புகழ்பெற்ற ஓவியர், சிற்பி,
கட்டடக் கலைஞர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட ஆண்ட்ரீ தெல் வெரோசியாவிடம் பயிற்சி
பெற்றார். ஆண்ட்ரீயின் அறிவியல், கலை ஈடுபாடு டாவின்சியை
முழுமையாய் ஆக்கிரமித்தது.
மேலும் அக்காலத்து இயற்கைவாதியும், தத்துவவாதியும், கணித மேதையுமான டோஸ்கனெல்லியின் ஆற்றலும் இவரைப் பாதித்தது.
பாரதியைப்போல் இவருக்கும் சமுதாயத்தின்
புறக்கணிப்பு நேர்ந்தது. இதனால், தம் கவனத்தையும் ஆற்றலையும்
அறிவுத்தேடலுக்கு முழுமையாகப் பயன்படுத்தினார்.
டாவின்சி பற்றிய சுவைத் தகவலை இணையத்தில் கண்டேன். இவர்
வாழ்நாள் முழுவதும் சைவ உணவு உண்பவராக இருந்துள்ளார். உயிர்களிடத்தில் அன்பு
காட்டும் மனிதரான இவர், கூண்டுகளுக்குள் விற்கப்படும் பறவைகளை வாங்கி வந்து அவற்றை விடுவித்து
விடுவாராம். வாடிய பறவையைக் கண்டபோதெல்லாம் வாடிய இவரின் உயிர் இரக்கப் பண்பு
போற்றத்தக்கது.
டாவின்சி பற்றி உளநோய் மருத்துவரான சிக்மண்ட் பிராய்ட் ஆய்வு செய்து கட்டுரை எழுதியுள்ளார். அதில் மோனா லீசா
ஓவியத்திலுள்ள பெண்ணின் புன்னகை யாருடையதென்ற புதிரை அவிழ்க்கிறார்.
டாவின்சிக்குக் காதலி கிடையாது. இதே புன்னகையை டாவின்சியின் மற்ற இரு
ஓவியங்களிலும் காண முடிகிறது. டாவின்சி களிமண்ணில் சிரிக்கும் பெண்களின் தலைகளைத் தொடக்கத்தில்
செய்துள்ளார். இந்தச் சிரிக்கும் பெண்கள் டாவின்சியின் தாய் கெதரினாவின் புன்னகையை
நினைவுபடுத்தியே உருவாக்கப்பட்டவை எனச் சிக்மண்ட் பிராய்ட் முடிவுக்கு வருகிறார்.
மோனா லீசாவின் புன்னகை, எந்த உணர்வையும்
வெளிப்படுத்தாதது. ஆனால் காண்பாரை மயக்குவதாக
உள்ளது. டாவின்சியின் மன ஆழத்தில் நிலையாய்ப் பதிந்துபோன தாயின் புன்னகைதான் அது
என்று அறிந்துகொண்டு மோனா லீசா ஓவியத்தை கூர்ந்து நோக்கினேன். அந்தப் புன்னகையின் அழகும் ஆழமும் இதயத்தைக் கைது செய்தன.
இதயத்தைக் களவு செய்யும் மோனா லீசா ஓவியம்
களவாடப்பட்ட சுவையான சம்பவமும் உண்டு. 21.8.1911
ஆம் நாள் பாரீசில் உள்ள அருங்காட்சியகத்தில் இது கயவர்கள் சிலரால் களவாடப்பட்டது. மறுநாள், ஓவியர் லுயி பிரவுட் என்பவர்
மோனலிசா ஓவியத்தைக் காண்பதற்காகச் சென்றார். அங்கு மோனலிசா ஓவியத்திற்குப் பதில்,
நான்கு இரும்பினாலான முறுக்காணிகளைக் கண்டு திடுக்கிட்டார். பின்னர்
அங்கிருக்கும் காவல் அதகாரிகளிடம் அணுகி, வியாபாரத்திற்காக ஓவியத்தைப்
புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும்படி கூறினார். சில
மணிநேரங்களிலேயே, ஓவியத்தைப் புகைப்படக்காரர்கள்
எடுக்கவில்லை என நிரூபணமாயிற்று. அந்த வாரம் முழுக்க, திருடுபோனதற்கான
விசாரணைக்காக அருங்காட்சியகம் மூடப்பட்டது
ஓவியம் இனி நமக்குக் கிடைக்காது என்ற நிலையில், அதைத் திருடிய கயவன்
இரண்டாண்டுகளுக்குப் பின்னர் பிடிபட்டான். அருங்காட்சியகத்தில் துப்புரவுத்
தொழிலாளியான வின்சென்சோ பெருங்கையா என்பவர்தான் களவாடினார் என்பது தெரிந்தது. இத்தாலி
நாட்டைச் சேர்ந்த பெருங்கையா, லியொனார்டோவின் ஓவியம், இத்தாலிக்கே திரும்ப வேண்டும் என எண்ணி
நிகழ்த்திய சதியே இதுவாகும்.
மேலும், திருடிய ஓவியத்தை ஏலத்திற்கு விட்டால் இலாபம்
கிடைக்குமென பெருங்கையாவின் நண்பன் ஆசையைக் காட்டினான். பின்னர், எடுவார்டோ டி வால்பியர்னோ என்பவர், இந்த ஓவியத்தை
ஆறு நகல்கள் எடுத்து, ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு விற்றார்.
இரண்டாண்டுகளில் பொறுமையிழந்த பெருங்கையா, பிளாரன்சிலுள்ள ஒரு
காட்சியகத்தில் ஓவியத்தை விற்கும் பொழுது, கையும் களவுமாக
மாட்டிக் கொண்டார். இத்தாலியின் அனைத்து இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு,
1913ம் ஆண்டு மீண்டும் லாவ்ரேவிற்குத் திரும்பியது, மோனா லீசா ஓவியம். களவாடிய குற்றத்திற்காக,
பெருங்கையாவிற்கு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனையளிக்கப்பட்டது.
எப்படியோ டாவின்சியின் கனவு ஓவியம் மீட்கப்பட்டது.
டாவின்சியின் உண்மையான ஓவியங்கள் எட்டு நாடுகளில் உள்ளன.
அவை மறுஉருவாக்கம் பெற்று ஒருசேர ஒரே இடத்தில் காணக்கூடிய வாய்ப்பாக இஃது
அமைகிறது. இந்த ஓவியக் கண்காட்சி இத்தாலியில் தொடங்கி உலகம் முழுவதும் பயணிக்க
உள்ளது. ஜோர்ஜியா, வார்ஷோ, போலந்து, சீனா ஆகிய நாடுகளில் முடிந்து
இப்பொழுது இந்தக் கண்காட்சி மலேசியாவை
அடைந்துள்ளது. இதற்குப் பிறகு, பேங்கோக், மியன்மார் நோக்கிப் பயணப்படும். இவ்வாண்டு உலகிலுள்ள
அருங்காட்சியகங்கள் லியொனார்டோ டா வின்சியின் 500ஆம் ஆண்டின் நினைவுநாளைக் கொண்டாடி
வருகின்றன. அதன் முத்தாய்ப்புக் கொண்டாட்டம் இவ்வாண்டு அக்டோபர் 24இல்
பாரீசில் நடைபெறவுள்ளது.
டாவின்சி கலையும் அறிவியலும் பொறியியலும் கலந்து செய்த கலவையோ
என வியக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு இவரின் கலைப்பணியைவிட அறிவியல், பொறியியல்
ஆய்வுகள் குறிப்புகளாகவும் படங்களாகவும் ஏறக்குறைய 13 000 பக்கங்களில், குறிப்புப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேசிய கலைக்
காட்சியகத்தில் அவரின் கையெழுத்தில் அமைந்த குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. 15 / 16
ஆம் நூற்றாண்டில் இவர் வரைந்துள்ள மனித உடல் வரைபடம்,
பறக்கும் எந்திர வடிவமைப்பு, மனித மூளை, மண்டையோட்டின்
வரைபடம், கையின் உடற்கூற்றியியல் ஆய்வுப் படம் என அனைத்தும்
இவர் இறைஞானம் பெற்ற அதிசயப் பிறப்போ என வியக்க வைக்கிறது.
மலேசியாவுக்கான இத்தாலியத் தூதர் கிரிஸ்தியானோ மெகிபிந்தோ ஓர்
ஓவியர். அவர் கூறும் கருத்து நம் கவனத்தை
ஈர்க்கிறது. ‘ஓவியம் என்பது உணர்வைவிட கண்ணுக்கு விருந்தாகும் படைப்பு. கவிதையோ கண்களைவிட உணர்வுக்கு விருந்தாகும் படைப்பு. கோலாலம்பூரில் தேசிய கலைக்
காட்சியகத்திற்கு வருபவர்கள் லியொனார்டோ டாவின்சி ஓவியங்களில் இழையோடும் கவிதையை
ரசித்து அனுபவிப்பார்கள்’.
டாவின்சியின் பின்புலம் அறிந்துகொண்டு அவரின் ஓவியங்களைக்
காணும்போது அவை இன்னும் பொருள் செறிந்தவையாகத் தெரிந்தன. வருகையாளர்கள்
திறன்பேசிகளில் ஓவியங்களைச் சிறைப்பிடிக்க அலைமோதுகிறார்கள். அதீத கனவுகளோடு வாழ்ந்த
ஆளுமையின் நினைவுகளில் மூழ்கியெழ, அவரின் கலைப்படைப்புகளைத் தரிசிக்க இஃது அரிய
வாய்ப்பு. அங்கிருந்து விடைபெறும்பொழுது சொல்ல முடியாத சோகம் இழையோடும் மோனா
லீசாவின் புன்னகை முகமே மனத்தில் நிறைந்திருந்தது
டாவின்சியின் ஓவியக் கண்காட்சி கோலாலம்பூரில் தேசிய கலைக்
காட்சியகத்தில் (National Art Gallery) 15 ஜூலை முதல் 15 ஆகஸ்ட் வரை நடைபெறுகிறது.
லியொனார்டோ டாவின்சியின் ஓவியங்களை ரசித்து மகிழப் போய்
வாருங்களேன். உங்களுக்காகத் தேசிய கலைக் காட்சியகம் திங்கள் முதல்
ஞாயிறுவரை காலை மணி 10 முதல் மாலை மணி 6 வரை திறந்திருக்கிறது.
No comments:
Post a Comment