கவிஞரின் மகள்
'பாரதிதாசன் நூற்றாண்டு விழா' வெள்ளைத் துணியில் மின்னிய
அந்தப் பொன்னிற எழுத்துகளைத் தன் தூரிகையால் மெருகூட்டும் பணியில்
மூழ்கியிருந்தான் அமுதன்.
விடிந்தால்
விழா. மண்டபம் கடைசி நேர ஏற்பாடுகளில் பரபரப்பாயிருந்தது. ஆருயிர்க் காதலியைத்
தரிசிக்கும் ஆவல்போல, அமுதன் அந்த விழாவிற்காக ஆர்வம் சொட்டச்
சொட்டக் காத்திருந்தான். அதற்குக் காரணம் இல்லாமலா?
பள்ளி
நாள்களிலிருந்தே தமிழின் கட்டுக்குலையாத அழகில் தன்வயமிழந்து அதனை அணுஅணுவாகச்
சுவைத்துச் சுகங்கண்டு வந்தவன் அவன். அவனின் தினவுக்குத் தீனி போடுவதுபோல்
அமைந்தது அந்த விழா.
விழா
ஏற்பாடுகளைப் பம்பரமாய்ச் சுழன்றுச் சுழன்று செய்தனர் இளைஞர் குழுவினர். அவன்
ஒல்லும் வகையெலாம் அவர்களுக்கு வலியச் சென்று உதவினான்.
காலையில்
பாவரங்கம், பட்டி மன்றம். மாலையில் ஆய்வரங்கம். இரவில்
இலக்கியச் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி என மிக நேர்த்தியாய்
நிகழ்ச்சிகள் அணி வகுத்து நின்றன.
"முந்நூறு நாற்காலிகள் போதாது. எப்படியும் ஐந்நூறாவது வேண்டும். முத்து,
கண்ணன், மாறன் நீங்க போய் அந்த ஏற்பாட்டைக்
கவனிங்க, போங்க...''
விழாக்குழுத் தலைவர் கவிஞர் பூவண்ணன் இளைஞர்களின்
சுறுசுறுப்புக்குச் சுருதியேற்றிக் கொண்டிருந்தார்.
அமுதனின்
மனமெங்கும் ஆனந்த கங்கையே அலைமோதியது. மூடப்பழக்கங்களில் முடங்கிக் கிடந்த
தமிழினத்தைத் தட்டி எழுப்ப,
புயலெனப் புறப்பட்ட புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் என்றாலே
அவனுள் புத்துணர்ச்சி பொங்கி நிற்கும்.
செக்குமாடாய்
உழன்ற சமுதாயத்தில்,
அக்கினிக் கவிதைகளைத் தீக்குச்சிகளாய்க் கிழித்துப்
போட்டவனின் மனத்திண்மையை ஆராயும்போதெலாம் அவன் உணர்ச்சிகளின் குவியலாகிவிடுவான்.
அந்த
அளவிற்குப் பாவேந்தன் அவனுள் பாதிப்பை விதைத்திருந்தான். தமிழாசிரியரான அவன் இடம்
மாற்றலாகி ரவாங் நகருக்கு வந்து ஒரு மாதமே ஆகியிருந்தது. அதற்குள், பாவேந்தருக்கு
விழா என்ற இனிப்புச் செய்தி செவிப்பறையில் வந்து விழுந்தபோது அவனுள் பிரவகித்த
ஆர்வ அலைகளுக்கு அளவேயில்லை.
"உங்கள் கைவண்ணம் அருமையாயிருக்கிறது, அமுதன். எடுப்பான எழுத்துகள்.
ஆமாம்... நாளை பாவரங்கத்தில் நீங்களும் கலந்து கொள்வதாகச் சொன்னீர்கள். முடிவில் மாற்றமில்லையே?" தயாரான பதாகையை மேடையில் மாட்டிக்கொண்டிருந்த அமுதனிடம் வந்து வினவினார்
பூவண்ணான்.
"ஐயா, மரபில் எனக்குப் பயிற்சி போதாது. அதனால் புதுக்கவிதையொன்று புனைந்துள்ளேன்.''
|"அதனாலென்ன?
கவிதை என்றும் கவிதைதான். மரபென்றும் புதிதென்றும்
கவிதையிலும் பிரிவினை பேசுவது பிழை. தயங்காமல் கலந்து கொள்ளுங்கள். இதோ, வாழைமரங்கள்
வந்துவிட்டன வாருங்கள்..." பூவண்ணன் பேசிக்கொண்டே மண்டப வாயிலுக்கு
விரைந்தார்.
விழா
ஏற்பாட்டுப் பணிகள் முடிந்து அன்றிரவு வீடு திரும்பு 'கையில்
அவர் உதிர்த்த தெம்பூட்டும் சொற்களையே அவன் மனம் அசை போட்டது. 'கவிதையிலும்
பிரிவினை பேசுவது பிழை'
என்ற கூற்றின் அர்த்தத்தின் அடர்த்தி எதையோ புலப்படுத்த
முயன்றது.
* * * *
பாவரங்கம்
களை கட்டியது. ஒவ்வொரு கவிஞரும் பாவேந்தரின் சிந்தனைகளைத் தங்கள் மனக்கேமராவால் பல
கோணங்களில் படம் பிடித்து,
அழகு தமிழில் அவற்றைக் குழைத்துப் பந்தி வைக்க முயல...
வருகையாளர்கள்
மனத்தில் தமிழ் இன்ப நதி,
அருவியாக மாறி ஆரவாரிக்கத் தொடங்கியது.
இறுதியாக
அமுதனை அழைத்தார் தலைமைக் கவிஞர். அவன் ஆர்வம் ததும்ப ஒலிபெருக்கியின் முன்
வந்தான். 'புதுக்கவிதை புலம்பலா?'
என மரபுக் கவிஞர்கள் முகஞ்சுழிக்க, அனைவரின்
கண்களும் நம் அவனை மொய்க்க,
'பாவேந்தரெனும் புரட்சிப் போர்வாள்' எனும்
தலைப்பில் அவன் கவிதை புறப்பட்டு வந்தது.
மூடப்
பழக்கங்களிலும் சாதிப் பிரிவினையிலும் மூழ்கி மூச்சுத் திணறிய தமிழினத்தில், பாரதிதாசன்
வடித்த கண்ணீரின் கனத்தைச் சுமந்துகொண்டு வாலிப வரிகள் வலம் வந்தன.
சாதிச் சனியனின்
மென்னியைப் பிடிக்க
அன்றுனது கைகள்
ஆவேசமாய் உயர்ந்தன
இன்றெங்கள் கைகளும்
சமுதாய அரிசியில்
சாதிக் கல்லைக் களைய
வீராப்பாய் உயர்கின்றன
ஆனால்
கல்லெடுக்க வந்த
கைகளே கல்லைக் கலக்கும்
அநியாயம் இங்கு தான்
அரங்கேறுகிறது.
என்று
இடையே வந்த சில வரிகளைக் கூறி நிறுத்தி, மண்டபத்தை
நோக்க அங்கே கவிஞர் பூவண்ணன் பார்வையாலேயே தன் பாராட்டு மடலை வாசித்துக்
கொண்டிருந்தார்.
பாவரங்கில்
அமுதனின் கவிதை அழுத்தமான முற்றுப்புள்ளியாக அமைந்தது. கைதட்டிக் களிக்கும்
கூட்டம் வழக்கம் போலவே இயங்கியது. அழுத்தமான சில சிந்தனைகளை அவர்களுக்குப் பந்திவைத்த
பரவசம் அவனுள் பரவ, பூவண்ணன் எழுந்து வந்து அவனை ஆரத்தழுவிக்
கொண்டார்.
வெறும்
கற்பனையின் கட்டாயத்தால் விளைந்ததல்ல அவன் கவிதை. அவன் குடும்பத்தில் பதிந்துபோன
சில அனுபவச் சுவடுகளே அவற்றுக்கு ஆதார சுருதிகள்.
பூவண்ணனின்
சிந்தனைகளும் தன்னைப்போலவே என்பதை, அன்றிரவு
நிகழ்ந்த இலக்கியச் சொற்பொழிவு.
அவனுக்கு அடையாளம் காட்டியது. மூவர் நிகழ்த்திய உரைகளில் அவரே தனித்து நின்று
கவர்ந்தார்.
"சாதிப் பிரிவினைகள் புதை மணலாக இருந்து தமிழினத்தை முன்னேறவிடாமல் அழிவு
நோக்கி இழுக்கின்றன. பகையின் ஈட்டியாய்ப் பாயும் சாதியை முறித்தெறிந்தால் நம்மைப்
பீடிக்கும் இழிவுகள் அனைத்தும் நீங்கும். நாம் நல்வாழ்வடைவோம். சாதிகள் பேசிடும் சழக்கரின்
நாக்கினைத் தேதித்தாள்போல் தினமும் கிழித்தெறிந்தானே பாவேந்தன். அவனை நெஞ்சில்
நிறுத்துவோம். நிறுத்திச் செயலில் காட்டுவோம்.''
பூவண்ணனின்
ஆழமான கருத்துகள் அமுதனை நெகிழச் செய்தன. எவ்வளவு அழுத்தந் திருத்தமான பேச்சு!
இத்தகைய சிந்தனைகளை விதைத்து வந்தால் இளம் தலைமுறையாவது கடைத்தேறும் இல்லையா? அமுதனின் மதிப்பீடுகளில் பூவண்ணன் உயர்ந்து கொண்டே போனார்.
மறு
நாள் காலை.
விழாவின்
நிகழ்வுகளை மனத்தில் பதியம் போட்டுக்கொண்டே பள்ளிக்குப் போனவனைத் தலைமையாசிரியர்
தங்கசாமி ஒரு மாதிரியாய் ஏற இறங்கப் பார்த்தார்.
"வாங்க அமுதன். நேத்து விழாவிலே சாதியைத் தாறுமாறா தாக்கி கவிதை படிச்சங்களாம்.
அந்தச் சனியன விடக் கூடாது - கழுத்த நெறிச்சு கொல்லணும்னு ஒரே போடா போட்டு விலாசினிங்களாம்"
குரலில் ஏளனம் தொனித்தது.
"ஆமாம் சார். புதிதாக ஒன்னும் சொல்லல. பாரதியாரும் பாரதிதாசனும் சொன்ன
கருத்துதான். இன்னும் பயன்படுமேன்னு சொல்லி அவர்களுக்கு ஞாபகப்படுத்தினேன்."
"என்னதான் நீங்களும் நம்ம தெய்வப்புலவர் பூவண்ணனும் கத்தினாலும் ஒன்னும்
ஆகப்போவது இல்ல, நேத்து இன்னிக்கு வந்ததில்ல இந்தச் சாதி.
அதனால, காத்தோட கைநீட்டி சண்டை போடாம், வேற முன்னேற்ற பாதையில் அவங்கள திசை திருப்புங்க"
பக்கத்துத்
தோட்டத்தில் - தமிழாசிரியராய்ப் பணிபுரியும் பூவண்ணன்மேல், அவருக்கு வண்டிக்கணக்கில் மண்டிக்கிடந்த அழுக்காறு அவிழத் தொடங்கி யது.
பள்ளிக்கு
வந்த முதல் வாரத்தில், ''உங்களுக்கு இந்தியாவுல எந்த ஊரு?"
எனக் கேட்டு அவன் சாதி பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினாரே. அப்பொழுதே
அவரின் மீதான அவனின் மதிப்பீடுகள் பொல பொலவென உதிரத் தொடங்கின.
மறுமாதம்
- பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டுக் கூட்டத்தில், "தமிழ்ப்பள்ளி
மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது மிகவும் வருத்தமான செய்தி. பெற்றோர்கள்
தயங்காது தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பவேண்டும்" என ஏதோ ஞாபகத்தில்
அவர் கூறப் போக,
"நாங்க அனுப்புவது இருகட்டும் சார். வாய்கிழிய கத்துற, நீங்க எங்க அனுப்புறீங்க? சொல்லுங்க! நீங்க அனுப்பி
இல்ல எங்களுக்குப் புத்தி சொல்ல வரணும்.?” சம்மட்டி அடியாய்
விழுந்தது கூட்டத்தில் ஒருவரின் கேள்வி.
கிஞ்சிற்றும்
தமிழ் உணர்வில்லாத அரிதாரம் பூசாத அருமையான
நடிகரான அவரின் வாய்மொழிகளை அமுதன் அன்றிலிருந்து பொருட்படுத்துவதே இல்லை .பள்ளி
மணியோசை அவனை வகுப்புக்கு அழைத்தது.
* * * * *
பூமி
மேனியெங்கும் இளம் மஞ்சளைப் பூசிக்கொண்ட ஒரு பொன்னிற மாலையில் -
பூவண்ணனின்
வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருந்த அமுதன் கண்களைச் சுழல விட்டான். திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழறிஞர்கள் படங்களே
வீட்டை அலங்கரித்தன.
பழைய
தமிழ் இதழ்கள் அடங்கிய கட்டுகளைத் தூசி தட்டிவிட்டு, அமுதனிடம்
கொண்டு வந்து நீட்டினார் பூவண்ணன். அவற்றை, வறிய புலவனொருவன்
வள்ளலிடம் கையேந்திப் பெறும் பொற்கிழியைப் போன்று இதயப்பணிவோடு பெற்றுக்கொண்டான்
அமுதன்.
"தமிழர் நலங்குறித்து இதுகாறும் யான் வடித்துள்ள கதை, கட்டுரை, கவிதை யாவும் இதிலுள்ளன அமுதன். இப்படி
இந்தச் சமுதாயத்திற்குச் சிந்திப்பதிலும் எழுதுவதிலும் அடியேனுக்கு அலாதி இன்பம்.
படித்துப் பாருங்கள்."
நாடறிந்த
நல்ல கவிஞர் வண்ணனின் படைப்புகளைத் தமிழ் இதழ்களில், அவ்வப்போது
படித்து வந்தாலும் இடம் மாற்றலாகி வந்து, அவரோடு நெருங்கிப்
பழக முடிந்த வாய்ப்புக்காக அவன் மனம் பூரித்தது.
"விழா திட்டமிட்டபடி நடந்தது நமக்கு முழு வெற்றி. உங்கள் கவிதையும்
அருமை."
"உங்கள் சொற்பொழிவும் கருத்தாழம் மிக்கதாய் அமைந்து அனைவரையும் சிந்திக்க
வைத்தது. தயங்காமல், துணிவோடு சொற்பெருக்காற்றிய விதம் என்னைக்
கவர்ந்தது ஐயா" அமுதனின் மனந்திறந்த பாராட்டு அது.
"தயக்கம் கொள்ளுதல் தவறு அமுதன். தூவென்று சாதியைக் காறி உமிழ்ந்தானே
பாவேந்தன், அவன் தயங்கவில்லையே. நம் தமிழினம் முன்னேற
வேண்டுமானால் இனமொழிப் பற்று பெருகவேண்டும். சாதிப் பிரிவும் மூடப்பழக்கங்களும்
ஒழிய வேண்டும்."
அப்போது, தேநீர்த் தட்டோடு அழகு மங்கையொருத்தி அங்கே நடந்து வர...
"இவர் தானம்மா ... நான் சொன்னேனே... அமுதன். இவள் என் மகள்
தமிழினியாள்."
இருவரும்
இளம் புன்முறுவலைப் பரிமாறிக் கொண்டனர்.
* * * * *
எதிர்பாராத
வகையில் நடக்கும் விபத்து அமுதனையும் விட்டு வைக்கவில்லை. இது வாகனங்கள்
மோதிக்கொள்ளும் சாலை விபத்தில்லை. இதயங்கள் மோதி நெஞ்சுக்குள் இனிப்பை இறக்குமதி
செய்யும் இன்ப விபத்து. காதல் என்பது ஒரு பருவ மழையாயிற்றே! அது பெய்யாமல் போகுமா?
தமிழினியாள்
என்கிற பெயரே அவனுள் ஓர் உற்சாக கங்கையை உற்பத்தி செய்தது. பூவண்ணனைக் காணச்
செல்லும் போதெல்லாம் அந்த சன்னல் மின்னல் அடிக்கடி தோன்றி மறையும். இதயத்தில்
விழுந்த காதல் விதை முளைத்து வேர் விட்டது. அந்தக் காதற்கிளிகள் எத்தனை நாள்களுத்தான்
பார்வையாலேயே தங்கள் எண்ணங்களைப் பறிமாறிக் கொள்வது?
அந்தக்
கொய்யாக்கனி நிகர்த்த கோலமேனியாள் அடிக்கடி வந்து அவன் தூக்கத்தைத் துண்டித்தாள்.
பூவண்ணனிடம் ஒருநாள் தன் எண்ணத்தை வெளியிடக் காத்திருந்தவனிடம், அவரே வந்து மகளின் விருப்பத்தைச் சொல்லி முடித்தார்.
தமிழினியாளை
அடைய தன் அம்மாவின் பலத்த கோட்டைக் கதவுகளை எப்படிக் கடப்பது? சிக்கலின் முடிச்சுகளை அவிழ்க்கும் வழிகள் பற்றி ஆராயத் தொடங்கினான் அமுதன்.
* * * * *
இடி
வந்து குடும்பத்தில் இறங்கி விட்டதுபோல் அம்மா அப்படிக் கலவரப்பட்டுப் போனார்.
"அடிக்கடி அவங்க வீட்டுக்கு போகும்போதே பயந்தேன், இப்படி ஏதாவது நடந்திடுமோன்னு. ஏண்டா, அவங்க குலம்
என்ன, கோத்திரம் என்ன யோசிச்சி பார்த்தியாடா?"
அப்படி
யோசித்து நான்கு பேர்களை விசாரித்துப் போதுமான தகவலை அம்மா திரட்டியிருப்பது
அமுதனுக்குப் புரிந்தது.
"அம்மா, நான் ஆண் சாதி. நான் கட்டிக்கப்போற பெண்,
பெண் சாதி. ஆக உலகத்துல இரண்டு சாதிதான் இருக்கு."
"இந்தத் தத்துவமெல்லாம் வாழ்க்கைக்கு உதவுமாடா? உன்
தங்கச்சியும் இதே மாதிரி பண்ணிட்டு நம்ம எல்லாம் ஏமாத்திட்டு போனத மறந்திட்டியா?"
அம்மா அழுது புலம்பினார்.
சாதியைக்
காரணங்காட்டித் தங்கையின் காதலுக்கு அம்மா போர்க்கொடி தூக்கியபோது, அவள் இந்தச் சமூகத்தின் பெண்களைப் போலவே விசத்தை நாடி... அந்தப் பழைய
கண்ணீர் நாள்கள் நினைவில் புரண்டன.
அவனுக்கு
ஆதரவாக அப்பா தான் வந்தார்.
"உங்க அம்மா இப்படியே சாதியை கட்டிக்கிட்டு அழட்டும். நான் சொல்றேன். நீ
படிச்சவன். உலகம் புரிஞ்சவன். மனுசனுக்கு
மனுசன் எல்லாம் சமம்தான். ஆகவேண்டியத பாரு" தங்கையின் மரணத்திற்குப் பின்
மூலையில் முடங்கிப்போன அப்பாவின் குரல் ஓங்கி ஒலித்தது.
பெண்
பார்க்கும் படலம் தொடங்கியது. அம்மா அரை மனத்தோடுதான் வந்தார்.
பூவண்ணன்
தன் மனைவியுடன் அனைவரையும் உவந்து வரவேற்றார். நல்ல பண்புகள் நிறைந்த அமுதனே
தங்கள் மகளுக்கு மணாளனாக வருகிறான் என்பதில் அவர்கள் மகிழ்வுக்கு கேட்கவா
வேண்டும்.
"அமுதன் மாதிரி இருந்திட்டா... அப்புறம் அவன் ஒசத்தி, இவன் தாழ்த்தின்னு இல்லாம, நம்ம சமூகம் ரொம்ப
ஒத்துமையாயிடும்"
"இல்லையா பின்ன, நம்ம இளைஞர்களுக்கு அமுதன் மாதிரி
சிந்தனைத் தெளிவு வந்திட்டா போதும்" கூட்டத்தில் இருவர் காதைக் கடித்தார்கள்.
பெண்ணை
அழைத்து வந்தார்கள். அவள் பேசிக் கேட்டிராத அமுதன் அவளின் குரல் இனிமையைப் பருகத்
துடித்தான். "மாப்பிள்ள விருப்பப்படுறாரு. பெண்ணை பாடச் சொல்லுங்கோ"
குறும்புக்கார இளைஞர்கள் சிலர் ஒத்து ஊதினார்கள்.
தமிழினியாள்
சங்கடத்தில் நெளிந்தாள். தோழிகள் ஊக்க மூட்ட, 'பித்தா பிறை
சூடி பெருமானே' சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரப்பாடல் அவள்
வாய் இதழ்கள் அசைய, ஒலிக்கத் தொடங்கியது.
'வைத்தாய் பெண்ணை டின் பால் வெண்ணெய்...' காது மடல்களில்
வந்து இறங்கிய இவ்வரிகள் ஆர்வத்துடன் காத்திருந்த அமுதனை அதிர்ச்சி வலையில் தள்ளி
விட்டன. டின் பாலா? அது தென் பாலாயிற்றே !
அடுத்து
ஒலித்த 'தோடுடைய செவியன்' பாடலிலும்
அழகுத் தமிழ் அலங்கோலமானது. அவள் கடித்து, மென்று, துப்பிய சொற்கள் 'தூ' வென்று
காறி உமிழப்பட்ட வெற்றிலைச் சாறாய் அவனுக்குப் பட, கைக்குட்டையால்
முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டான்.
அவள்
வாயசைத்து ஓய்ந்ததும், எழுந்து சென்று கையிலிருந்த புத்தகத்தை
வாங்கினான். எல்லாம் ஆங்கில எழுத்துகள்! இப்போது இடி வந்து இறங்கியது அவனுக்குள்தான்!
அப்படி யானால் இவள் தமிழினியாள் இல்லையா? தமிழ்ப்பிணியாளா?
"தமிழ் தெரியாதா?"
"தமிழ்ப்பள்ளிக்குப் போகவில்லை . அதனால்... ஆனாலும் ஓரளவுக்குத் தெரியும்..."
சொற்களை மென்று விழுங்கினார் பூவண்ணன். அவர் முகத்தில் கலவர ரேகைகள் படர்ந்தன.
''திருத்திச் சொல்லுங்கள்! நீங்கள் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பவில்லை"
திமிறி வந்த ஆவேசச் சொற்களை அவனால் அடக்க முடியவில்லை .
தமிழ், தமிழினம் என வாயினிக்கப் பேசும் தமிழாசிரியர்கள், எழுத்தாளர்கள்,
தலைவர்கள் பலர்போல் பூவண்ணனும் ஒரு வேடதாரிதானா? போலி இனப்பற்றாளரா? தங்கசாமி மாதிரி அரிதாரம் பூணாத
அருமையான நடிகரா? - சீரணிக்கவே சிரமமாக இருந்தது அமுதனுக்கு.
காதலில்
சாதிகள் அழிந்திட வேண்டும். ஆனால், தமிழ் வீழ்ந்திடலாமோ?
சுட்டெரிக்கும்
பார்வையோடு பூவண்ணனை நோக்கினான். நெஞ்சமெலாம் நிறைந்து இருந்த பாவேந்தரின் நேர்கொண்ட
பார்வை நினைவில் இடறியது.
'மாதொருத்தி வேண்டும் எனக்கும் - தமிழ் மகளாயிருந்தால்தான் இனிக்கும்.'
எனச் சூளுரையாக மொழிந்துவிட்டு வெளியேறினான்.
மற்றோர்
திகைப்பின் வசம் சிறையானார்கள்.
அமுதனைப்
போன்ற இளைஞர்கள் இனிச் சமுதாயத்தில் பெருகி வந்தால்... அழுத்தமான பயமொன்று
பூவண்ணனின் இதயத்தைக் கௌவிப் பிடித்துப் பிறாண்டத் தொடங்கியது.
No comments:
Post a Comment