நம் குரல்

Saturday, August 10, 2019

சிறுகதை


பயணங்கள் பாதியிலே


காலைக் கருக்கலில், காண்டா வாளியோடு உராய வந்து வழிநெடுகிலும் தொணதொணவென மன சந்தோசத்தோடு எதை எதையோ ஒப்புவித்துத் தான் வெட்டும் நிரை வந்ததும் வரட்டுமா மல்லி என அரை மனத்தோடு பிரிந்துகொண்டவன், காலை பத்து மணிக்கெல்லாம் எல்லா மரங்களையும் சீவிவிட்டு வாளி வைக்கும் இடத்தில் அமர்ந்து கையோடு கொண்டு வந்திருந்த புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டி அதில் எதையோடு தேடுவது மல்லிகாவுக்குத் தன் வெட்டு நிரையில் நின்று பார்க்கையில் நன்றாகத் தெரிந்தது. 

கண்ணன் வழக்கமாக ஒத்தாசையாய் வந்து சீவிவிடும் மரங்களையும் தானே சீவிவிட்டு, கையில் பிசுபிசுத்துக் கொண்டிருந்த கித்தாபாலைத் தேய்த்தவாறே மல்லிகா வாளி வைக்கும் இடத்திற்கு வந்தாள். அவளைத் தலைநிமிர்ந்து பார்த்தவன் சட்டென தலைதாழ்த்தி மீண்டும் கண்களை புத்தகத்தில் மேய விட்டான்.

என்ன வந்தது இவருக்கு?’ மல்லிகா சலித்தவாறு அவனுக்கு எதிரே அமர்ந்து தன் பல்வரிசைகளைப் பளிச்சிட்டாள்.

“என்ன கண்ணன். கப்பலே கவிழ்ந்த மாதிரி உம்முன்னு இருக்கீங்க?”

ஆமா, மல்லி. அமைதியா பயணம் போற கப்பல புயல் வந்து அலைக்கழிச்சி நீரில் மூழ்கடிச்சா அநியாயம் இல்லையா? ஆசையா நட்ட மரங்கள புயல் வந்து வேரோடு பிடுங்கிச் சாய்ச்சா மனம் என்ன பாடுபடும்?” கண்ணனின் சொற்களில் இருந்த அழுத்தம் கைகளுக்கும் பரவ, புத்தகத்தை மூடி கீழே வைத்தான்.

முகத்தில் அரும்பியிருந்த வியர்வை முத்துகளை அழுந்த துடைத்துக்கொண்டு, “என்ன கண்ணன் சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலையே. கப்பல் புயல்னு புதிர் போடாம தெளிவாக சொல்லுங்க” மல்லிகாவின் வாய்நழுவிய சொற்கள் அவளின் பயத்தை முழுமையாய்க் காட்டியது.

அவன் எழுந்துகொண்டு அவளுக்கு முதுகுகாட்டி நின்று, அருகே சலசலத்து ஓடும் குளிர்ந்த நீரோடையை நோக்கியவாறு பேசினான். “மல்லி, உனக்கு தெரியும். அரசியல்னாவே எனக்கு அறவே பிடிக்காதுன்னு. அது ஆழ்கடலுக்கு ஒப்பானது. அதில் நீந்தத் தெரிந்தவர்கள் மட்டும் அதில் மூழ்க முயற்சிக்க வேண்டும். இதனால நம்ம தோட்டத்தில எவ்வளவு அடிதடி, பிரச்சினைகள் அப்பப்பா....எங்கப்பா நம்ம தோட்டத்து கிளையில தலைவரா இருக்காரு. அவரோட கொள்கை வேற, என் கொள்கை வேற. காலம் காலமா தலைவரா இருக்கிற அவர எதிர்த்து இந்த வருசம் உங்கப்பா தேர்தல நிற்கிறாராம். காலையில வெட்டுக்கு வந்த மணியம் கங்காணி சொன்னாரு. உங்கப்பா எதிர்த்து நின்னு, நம்ம இரு குடும்பத்திடையே பகை உண்டாகிட்டா அப்புறம் நம்ம காதல், கடல்ல மூழ்கிய கப்பல் மாதிரி ஆகாதுன்னு என்ன நிச்சயம்?” மூச்சு இரைக்க உணர்ச்சிவயப்பட்டுப் பேசினான்.

“அரசியலுக்கும் காதலுக்கும் பாலம் போடுறீங்களே கண்ணன்” அவளின் முகம் மலர்ந்தது. மெல்லியதாய் ஓசையிட்டுக் கிளம்பியது ஒரு களுக் சிரிப்பு. அவன் கூறிய விஷயம் அபபடி ஒன்றும் ஓவென்று ஒப்பாரிவைத்து மூக்கைச் சிந்துகிற அளவுக்கு ஆபத்தானது அன்று என்பதே அவள் முடிவு.

கண்ணன் அவளருகே வந்தான். அவளின் தளிர்க்கரங்களைப் பற்றி “மல்லி, உன்ன என் உயிருக்கு உயிரா நேசிக்கிறேன். எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் உன்ன நிச்சயம் கைபிடிப்பேன். கித்தா மரத்துல காயம்பட்டா மனசு கஷ்டப்படும்ல, அது மாதிரி நம்ம காதலுக்கு அரசியல் குறுக்கே வந்திடுமோன்னு பயப்படுறேன்” மல்லிகாவின் மேல் அவன் கொண்டுள்ள மாசற்ற அன்பைத் தெளிவாய்ப் பொருள் பிரித்துக் காட்டினான்.

மல்லிகாவுக்கு என்ன வந்தது? அவளின் விழியோரங்களில் நீர்த்துளிகள் பனிப்பூக்களாய்ப் பூத்து இப்போதோ அப்போதோ எனக் கோடிட்டு வழிய தவமிருந்தன. இருவரும் பிறகு எதும் பேசவில்லை. மனங்கள் சங்கமமான பிறகு சொற்களுக்கு வாய்ப்பு ஏது? வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவை இருவரும் அமைதியாய்ச் சாப்பிட்டுப் பாலெடுக்கக் கிளம்பினர்.

வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா அப்பாகிட்ட பேசணும். தலைவர் பதவிக்கு நிற்கிற யோசனையைக் கைவிடச் சொல்லணும். நான் சொன்னா அப்பா கேட்பாரு. அவளது எண்ணங்கள் அதைச் சுற்றிச் சுற்றி வட்டமிட, வேகமாகப் பாலெடுக்கத் தொடங்கினாள் மல்லிகா.

*             *            *              *  

பாலை நிறுத்து ஸ்டோரில் டாங்க்கில் ஊற்றி, வாளிகளைப் பாசாவில் கழுவிவிட்டு வீட்டிற்கு வந்தபோது மல்லிகாவின் தந்தை சதாசிவம், அவளுக்கு முன்பாக வீடு வந்து வெளிப் பிராஞ்சாவில் அமர்ந்து அன்றைய நாளிதழைப் புரட்டி நாட்டு நடப்புகளை அலசிக்கொண்டிருந்தார்.

வந்த கையோடு வாளியில் தண்ணீரை நிரப்பி அம்மாவோடு சேர்ந்து பாத்திரங்களைக் கழுவினாள். துணி துவைத்த கையோடு குளித்துவிட்டு வயிற்றில் நாலு பருக்கைகளைப் போட்டுக்கொண்டு அப்பாவிடம் வந்தவளை எதிர்பார்த்தவர்போல், “அம்மா மல்லிகா, இப்ப அவசரமா மண்டபத்துல ஒரு கூட்டத்துக்குப் போறேன். அப்புறம் மணி அஞ்சுபோல ரெண்டு மூனு அறிக்க எழுதணும். கொல்ல கொத்த போறேன்னு உங்க அம்மாவோட வெளியே போயிடாதம்மா.”

இதுதான் சமயம். விடக்கூடாது. எப்படியாவது அப்பாவை மடக்கவேண்டும் என்று நினைத்தவளாய், “அப்பா” என்றாள்.

“என்னம்மா” மகளை ஏறிட்டார் சதாசிவம்.

“இந்த வருசம் தேர்தல்ல ராஜப்பாவை எதிர்த்து நீங்க நிற்கப்போறதா மணியம் கங்காணி சொன்னாரு. நான் நம்பவே இல்லப்பா”

சதாசிவம் கொஞ்சம் நிதானித்தபடி கண்ணாடியைக் கழற்றித் துடைத்து மீண்டும் அதை மாட்டிக்கொண்டு கொஞ்ச நாழிகைக்கு முன்பிருந்த அவசரங்களை ஒதுக்கிவைத்து விட்டு நாற்காலியில் சரிந்தார்.

“ஆமாம்மா.. உண்மைதான். நாமாவது இனி இந்த தோட்டத்து ஜனங்களுக்கு உருப்படியா எதையாவது செய்யலாம்னு முடிவு எடுத்துட்டேன். நான் உன்ன எழுதச் சொன்னதுகூட அது சம்பந்தமான அறிக்கைதான்.”

அவர் பேசி முடித்ததும் வெட்டிலிருந்து வரும்போதே மனத்தில் பதியம் ஆகியிருந்ததைக் கடகடவென ஒப்புவித்தாள் மல்லிகா. “அப்பா, அரசியல் பத்திதான் உங்களுக்கு நல்லா தெரியுமே...” என்று தொடங்கி, அதன் அட்டூழியங்களை, அதனால் வரப்போகும் பின்விளைவுகளை, அடிதடி, சண்டை, தகராறு என ஒன்றுவிடாமல் ஆனமட்டும் கூறினாள். அப்பாவின் முகத்தைப் பார்த்தாள்.  எந்த எதிர்வினையையும் அவர் முகம் காட்டவில்லை.

“அம்மா மல்லிகா, எவ்வளவு காலம்தான் பொறுத்துப் போறது? ராஜப்பா தலைவரா இருக்கிற இந்த அஞ்சு வருசத்தில ஏதாவது உருப்படியா செய்தாரா? எல்லாரும் காத்திருந்து ஏமாந்து போனதுதான் மிச்சம். இனியும் எனக்கு நம்பிக்கை இல்லை” என்று தொடங்கி,

அந்தத் தோட்ட மக்களுக்கு, விவசாயம் செய்ய அரசாங்கம் முந்நூறு ஏக்கர் நிலத்தைக் கொடுக்க முன்வந்து எழுத்துப் பத்திர வேலைகள் எல்லாம் முடிந்து, இதோ முடிச்சிடறேன் என மார்தட்டி நின்ற ராஜப்பா கடைசியில் எதையுமே சாதிக்காமல் இருக்கும் கையாலாகத்தனத்தை,

மல்லிகாவே தலைவியாய் இருக்கும் மாதர் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நான்கு தையல் மிசின்களை கொடுக்கச் சம்மதித்தைக் கண்டும் காணாது அவற்றைப் பெற்றுத் தர திராணியற்ற நிலையை,

சிமிண்டெல்லாம் சேதமாகி, உடைந்துவிழ இப்போதோ அப்போதோ எனக் காத்திருக்கும் பொது மண்டபத்தைச் சீர்படுத்த வக்கில்லாமல், இதை விடபோறதில்ல, தேசிய ரீதிவரைக்கும்  இதைக் கொண்டுபோயி பேசி நல்ல முடிவு எடுக்கப் போறேன் என வாய்ப்பந்தல் போடுவதை,   

இப்படி ஒவ்வொன்றாக விளக்க, கண்ணுக்குப் புலப்படாத ஒன்று பூதாகரமாய் எழுந்து கண்முன்னே நிற்பதுபோன்ற நிலையில் சற்று அதிர்ந்து போனாள் மல்லிகா. என்ன சொல்வது என்று தெரியவில்லை. கண்ணன் நினைவில் எட்டிப் பார்த்து, புயல்காத்துல கப்பல் கடல்ல மூழ்க வேண்டியதுதானா?’ எனக் கேட்டான்.

சதாசிவம் தொடர்ந்தார். “பதவிக்கு வர்றவங்க பெரிய பொருளாதார மேதையா இருக்கணும்னு நான் சொல்ல வரலம்மா. அரசாங்கமே கொடுக்கிற மானியமும் பிற உதவிகளும் மக்களுக்கு வந்து கிடைச்சி அதனால பயனடைஞ்சு முன்னேறதுக்கு வாய்ப்பா இருக்கணும்னுதான் சொல்ல வரேன். இப்ப சொல்லும்மா. நான் எடுத்த முடிவு சரிதானே?”

மல்லிகா எதைச் சொல்லுவாள்? மெல்லவும் முடியாமல் விழுங்கமும் முடியாமல் தொண்டைக்குள் ஏதோ சிக்கியது போலாயிற்று. சமுதாய உணர்வுகள் அவளுள் பொங்கி எழுந்தன. மனத்தைப் பிடித்து அழுத்திய கழுகுப் பிறாண்டல்கள் மெல்ல விலகிட மனம் தெளிவானது. கண்ணனிடம் பேசினால் தீர்வு பிறக்கும் என நம்பிக்கை தோன்றியது.

“சீக்கிரமா போயிட்டு வாங்கப்பா. நான் அஞ்சு மணிக்கு ரெடியா இருக்கேன்” மல்லிகாதான் கூறினாள்.

“என் பொண்ணு படிச்ச பொண்ணு. பொது வாழ்க்கையை நல்லா புரிஞ்சவன்னு நான் போட்ட கணக்கு தப்பா போகுலம்மா

சதாசிவம் கூட்டத்துக்குக் கிளம்பி விட்டார்.

*             *            *              *  

ராஜப்பாவை எதிர்த்து சதாசிவம் போட்டியிடுவது உறுதியானபிறகுதோட்ட மக்களிடம் இருந்து பலதரப்பட்ட ஊகங்கள்விமர்சனங்கள்கடைசிநேர கணிப்புகள் சூடுபரந்தன.. கொஞ்ச காலத்திற்கு எல்லார் வாயிலும் இதுவே அவலாக மெல்லப்பட்டது.

பால் நிறுக்கும் ஸ்டோர்காலைப் பிரட்டுமலைக்காடு, முச்சந்திக் கடைகள், பொது மண்டபம் இப்படி ஒரு இடம் மீதமில்லாமல் இந்த விசயமே அலை மோதியது. மாலை நேரங்களில் பந்தடிக்கும் திடலில்கூட இளைஞர்கள் கும்பலாக கூடி இதையே கதைத்தார்கள்.

ராஜப்பாவுக்கு இரத்தம் சூடேறியது. ஆங்காரமாய்பூதாகாரமாய் பொங்கி எழுந்து துடித்தார். அவருடைய முரட்டு மீசையும் துடித்தது. 'அஞ்சு வருச சாதனையை முறியடிக்க இந்த ஒரு சாதாரண சதாசிவமா பாத்திடுவோம்என எக்காளமிட்டார்.

அதனோடு வழக்கமான தனது 'ஸ்டண்டுவேலைகளையும் ஆரம்பித்தார். தனக்கு வேண்டியவர்களை பின் தேதியிட்டு அங்கத்தினர்களாகப் பதிவதும் சதாசிவத்தைப்பற்றி ஆயிரம் அவதூறுக் கதைகள் சொல்லுவதும் கையெழுத்து இடாத மொட்டை அறிக்கைகளை வெளியிடுவதும்தான் அவருக்குக் கைவந்த கலையாயிற்றே!

சதாசிவத்தின் அறிக்கையோ ரத்தினச் சுருக்கமாக இருந்தது. அறிக்கையில் வளமான எதிர்காலம்', ‘வலுவான திட்டம்என ஆங்காங்கே தனித்து நின்ற வார்த்தைகள் மல்லிகாவின் கைவண்ணத்தைத் தெள்ளெனக் காட்டின.

தேர்தல் நாளன்று (தோட்டமே அல்லோல கல்லோலப் பட்டது. ராஜப்பாவுக்குத்தான் வெற்றிமாலை என உறுதியான நிலையில் தேர்தல் முடிவுகள் தெரியவந்தபோது ராஜப்பா பேயறைந்தவர்போல் ஆனார்.

யார் எதிர்பார்த்தார்கள் சதாசிவம் ஜெயிப்பார் என்றுஇனி எவ்வளவு நாளைக்குத்தான் நாங்கள் வாய்மூடி மௌனிகளாய் இருப்போம்என உண்மை நிலையை எல்லாரும் உணர்ந்துவிட்டார்களா அவமானம் தாளாமல் ராஜப்பா மண்டபத்து பின் வழியே நடையைக் கட்டஇடையில் மாட்டிக் கொண்டது கண்ணன்தான். உங்கப்பனின் முகமூடி கிழிந்ததா என தூவென்று அவனது முகத்தில் காறித்துப்பாத குறையாய். நேற்றுவரை நண்பர்களாய் இருந்தவர் கள் கும்பலாய் கூடி நின்று எள்ளி நகையாடியது அவனது இளகிய மனத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பை இறக்குவதாய் இருந்தது.

அவமானத்தால் அப்படியே கூனிக்குறுகிப் போனான் கண்ணன். அன்பொழுகச் சிரித்துப் பேசும் தோட்டத்துக் கருப்பையா ஆசிரியரும்டிரசரும்கூட பரிகாசமாய்அற்பப் பொருள் ஒன்றை பார்ப்பதைப்போல் தன்னைப் பார்த்து விலகிச் செல்லுகையில் அவன் துடிதுடித்துப் போனான். தோட்டத்தில் உள்ளவர்கள் இப்போது அப்பாவையும் தன்னையும் சேர்த்து ஒரேயடியாய் வெறுத்து ஒதுக்குவதை அவனால் முழுசாய் உணரமுடிந்தது.

நடைப்பிணமாய் வீட்டிற்கு வந்தவனை அவனது அப்பாவும் அம்மாவும் வேறு பிடித்துக் கொண்டு வந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினர். “மல்லிகாவைப் பார்க்கக் கூடாதுஅவகூடபேசக் கூடாது” எனக் கண்டிக்கத் தொடங்கினர்.

மல்லிகாவை மறப்பதா?... அவளுக்குக் கொடுத்த வாக்குறுதி.  அவளில்லாமல் எனக்கொரு வாழ்க்கையா என மண்டையைக் குழப்பிக்கொண்டு இரவு வெகுநேரம்வரை தூக்கமில்லாமல்யோசித்து யோசித்துப் பார்த்து தலையணையை நனைத்தவாறேகடைசியில் ஏதோ ஒரு திடமான முடிவோடு அதிகாலை நேரத்தில் களைத்துத் தூங்கிப் போனான் கண்ணன்.

தேர்தலுக்குப் பிறகு இரண்டு நாளாய் பலத்த மழை பெய்துமூன்றாம் நாள் வேலைக்குப் போன மல்லிகா காலைப் பிரட்டில் கண்ணனைப் பார்க்கவில்லை மரம் சீவிய பின் கண்ணனைப் பார்த்து நிறைய பேசவேண்டும் என்று எண்ணியவளாய் வேக வேகமாக மரங்களைச் சீவினாள். புதிய உற்சாகம் கரை புரண்டோட ஏதோ ஓர் பாடலை முணுமுணுத்தவாறே தெம்போடு மரங்களைச் சீவலானாள்.


தேர்தல் முடிவுகள் கண்ணனை எவ்வகையில் பாதித்திருந்தாலும்தனது இனிய பழகும் சுபாவத்தால்அப்பழுக்கற்ற அன்பால் அவனை தன்பால் கவர்ந்துதங்களின் காதல் பயணம் இல்லறப் பயணமாய் தொடரும் என்ற திண்ணமான எண்ணங்கள் அவள் மனத்தில் ஊற்றாய் பெருகியது.

எல்லாரும் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு இலட்சியத் தம்பதிகளாய் தோட்டத்தில் வலம் வரவேண்டும். சிதறிய முத்துக்களாய் இருக்கும் தோட்டத்து இளைஞர்களையும் பெண்களையும் ஒன்று திரட்டி மேம்பாட்டுத் திட்டங்களில் ஈடுபட தானும் கண்ணனும் முன்னின்று செயல்பட வேண்டும் என எண்ணங்கள் கிளை பிரித்துச் செல்ல வாளி வைக்கும் இடத்திற்கு வந்தவள் அப்படியே திகைத்து நின்றுவிட்டாள்.

என்ன முத்தண்ணே ! கண்ணன் இன்னைக்கு திட்டியா?”

இன்னக்கி மட்டும் இல்லம்மா! தம்பி ஒரேயடியா திட்டி போட்டுருச்சு. ஆமாம்மா. இனி இந்த எஸ்டேட்டுல வேலையே வேணாம்னு. நேத்து சாயங்காலமே பெரிய கிராணிகிட்ட சொல்லிட்டு டவுனுக்கு பஸ்சு ஏறி போயிடுச்சே! உனக்குத் தெரியாதாபாவம்மா தம்பிரொம்ப மனம் நொந்து போச்சு. எல்லாம் பாழாப்போன அரசியல்தான் காரணம்மா.  நல்ல பால்வடியும் வெட்டு கிடைத்த மகிழ்ச்சியில் வெற்றிலைக் கறை ஏறிய பற்கள் தெரியச் சிரித்துக்கொண்டு மரம் சீவலானார் முத்தண்ணன்.

மல்லிகா கல்லாய்ச் சமைந்து நின்றாள்! நின்றாளாவதுபக்கத்தில் இருந்த மரமல்லவா அவளைத் தாங்கிக் கொண்டது! தான் கட்டி வந்த கோட்டை வெறும் மணற்கோட்டைதான் என்று உணர்ந்த கணத்தில் அவள் ஆற்றாமை தாளாமல் கித்தா மரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு விசும்பத் தொடங்கினாள்.

கைவிடவே மாட்டேன்னு இருந்தவர இந்த அளவுக்கு கொண்டு போச்சே... ஐயையோ.. மனத்தின் அடித்தளத்தில் இருந்து ஏக்க உணர்வுகள்ஏமாற்றம் தாளாது கொப்பளிக்க குபு குபுவெனக் கன்னங்களில் கண்ணீர் கோடிட்டு வழிந்தன. இனம்புரியாத ஏதோ ஒன்று அவளைப் பிடித்துக் குலுக்கநெஞ்செல்லாம் உலர்ந்துபோன நிலையில் 'திக்பிரமை பிடித்து நின்றாள் அவள்.

வாழ்க்கைப் பயணங்கள் தொடராமல் இப்படி பாதியிலேயே நின்றுஏமாற்றமே மிஞ்சி நிற் பதுதான் வாழ்க்கையின்நியதியோயதார்த்த வாழ்வின் கனவுகளும் கற்பனைகளும் மின்னி மறைந்து அவை இருந்த தடயங்கள் அழிந்துப் போனபின் மிஞ்சி இருப்பதும் அதே ஏமாற்றம் தானே? கண்ணன் பயந்தபடியே அமைதியாய் பயணம் போன அவர்களின் காதல் கப்பல் ரொம்பவும் அநியாயமாய் ஆழ்கடலுக்குள் இப்படி மூழ்கடிக்கப் பட்டுவிட்டதே. ஓ... இறைவாஉன் முடிவும் இதுவோ!


(தினமணி 14.12.1982)

No comments:

Post a Comment