நம் குரல்

Sunday, June 26, 2022

 

படிவம் 4 & 5 - தமிழ் இலக்கியம்

தேர்வுக் களம்


இடைநிலைப்பள்ளியில் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்குப் புதிய பாடநூல்கள் இவ்வாண்டு முதல் (படிவம் 4)  அறிமுகமாகியுள்ளன. டாக்டர் மு.வரதராசனின் வாடா மலர்’, பாரதிதாசனின் பிசிராந்தையார் நாடகம், ‘கவிதைப் பொழில் (12 கவிதைகள்) ஆகியன அவையாகும். இவ்வாண்டு படிவம் நான்கில் பயிலும் மாணவர்களுக்கு  உதவும் நோக்கில் புதிய பாடநூல்களுக்கான வழிகாட்டி நூலாகத் தேர்வுக் களம் வெளிவந்துள்ளது.

இலக்கியம் கற்பதிலும் கற்பித்தலிலும் உள்ள சிரமத்தைக் கருத்திற்கொண்டு ஆசிரியருக்கும் மாணவருக்கும் உதவும் நோக்கில் இந்த இலக்கிய வழிகாட்டி நூல் தயாராகியுள்ளது. இந்நூலை இலக்கிய ஆசிரியர் .பச்சைபாலன் எழுதியுள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரை என இலக்கியப் பரப்பில் தம் பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் .பச்சைபாலன், எஸ்.பி.எம். மாணவர்களுக்காக ஏடுகளில் இலக்கியப் பாடத்திற்கான கட்டுரைகளைப் படைத்து வருகிறார். படிவம் 4 & 5 மாணவர்களுக்கு இணையம்வழி தமிழ்மொழி, இலக்கிய வகுப்புகளை நடத்தி வருகிறார்.

ஆசிரியர் இன்றிப் பயிலும் மாணவர்களுக்கும் பயன்படும் நோக்கில் கவிதை, நாடகம், நாவல் ஆகிய மூன்று பகுதிகளுக்கும் விரிவான விளக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. புதிய தேர்வுத்தாள் அமைப்பு பற்றிய விளக்கமும் உள்ளது. மேலும், நூறு பக்கங்களில் மாதிரிக் கேள்விகளும் அவற்றுக்கு முழுமையான விடைகளும் சுயமுயற்சிக்கான பயிற்சிகளும் உள்ளதால் அவை சிறந்த பயனைத் தரும்.

தேர்வுக்குத் தேவையான அனைத்துக் கூறுகளும் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் மாணவரையும் ஆசிரியரையும் கவரும் என்பதில் ஐயமில்லை. 2024வரை உள்ள புதிய இலக்கியப் பாட நூல்களையொட்டிய இந்த வழிகாட்டி நூலைத் தற்போது படிவம் இரண்டு முதல் நான்குவரை பயிலும் மாணவர்கள் பெற்றுப் பயன்பெறலாம்.

இந்நாட்டில்  அரை ஆண்டுகளுக்கும் மேலாக, படிவம் ஐந்தில் ஒரு தேர்வுப் பாடமாகத் தமிழ் இலக்கியம் இடம்பெற்று வருகிறது. தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் இடைநிலைப்பள்ளியில் தமிழோடு தமிழ் இலக்கியத்தையும் பயிலும் வாய்ப்பினைப் பெறுகின்றனர்.

 கடந்த ஆண்டு, தமிழ் இலக்கியத் தேர்வு எழுதிய மாணவர்கள் சிறந்த தேர்ச்சியை (94.1%) அடைந்துள்ளனர். அவர்களுள் 46.4%  மாணவர்கள் A+, A, A- தேர்ச்சி நிலையைப் பெற்றுள்ளனர். தமிழோடு தமிழ் இலக்கியமும் சிறந்த தேர்ச்சிக்குத் துணைபுரியும் என்பதால் தமிழ் மாணவர்கள் இலக்கியமும் பயில்வதைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும்.

 352 பக்கங்களில் அழகிய வடிவமைப்பில், வெளிவந்துள்ள இந்நூலைப் பெற விழைவோர் 0126025450 (.பச்சைபாலன்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 


No comments:

Post a Comment