நம் குரல்

Friday, January 7, 2011

அல்வா காலம்


இது அல்வா காலம்
அங்கிங்கெனாதபடி எங்கும்
கணக்கு வழக்கில்லாமல்
அல்வா விநியோகிப்படுகிறது

பசியென்று யாரும்
வாயைத்திறந்தால் போதும்
இந்தா புசி என்று வாயில்
அல்வா திணிக்கப்படுகிறது

எல்லாருக்கும் அல்வா பிடிக்கும்
அதிலும்
நமக்கு அதிகம் பிடிக்கும் என்பதால்
அள்ளியள்ளிப் பரிமாறப்படுகிறது

அல்வா பரிமாறல் பற்றி
அறிவிப்பு வந்ததும்
அதைப் பெறுவதற்கான கூட்டம்
கூடிக்கொண்டே போகிறது

வயிற்றுக்கு உணவு இல்லார்க்கு
அல்வா ஈயப்படும் என்பதால்
பரவாயில்லை என்றே
பலருக்கும் படுகிறது

நாளைகளைப் பற்றி
பலருக்கும் கவலைகள் கிடையாது
சுடச் சுட அல்வா
உடனே கிடைத்தால்
போதுமேன்றே கூட்டம் புறப்படுகிறது

அல்வாவோடு வருவோர்க்குத் தெரியும்
வயிற்றுக்கும் இதயத்துக்கும்
தூரம் அதிகம் இல்லை என்பது

வயிறு நிறைந்தால்
இதயம் குளிரும்
இதயம் குளிர்ந்தால்
அல்வா அள்ளித் தந்த கைகளை
இதயம் கொண்டாடும் என்பது


பொய் சொல்லாமல் சொல்லுங்கள்
உங்கள் வீட்டுக்கு
அல்லது உங்கள் வீடமைப்புப் பகுதிக்கு/
தாமானுக்கு
அல்லது உங்கள் ஊருக்கு
அல்வா கிடைத்ததுதானே?

எத்தனை காலத்துக்கு
அல்வாவைத் தின்றே
நாம் காலத்தைக் கழிப்பது?
இனிப்பு நோய் வந்து
ஆயுளைக் குறைக்காதா?





Thursday, January 6, 2011

அன்புமகள் கனிமொழிக்கு...


காலச்செடியில்
மீண்டுமொரு மலர் பூக்கிறது
உன் பிறந்தநாளின் நினைவுகளை
உடன் அழைத்து வருகிறது

நினைவுகளூடே
நீ இந்த பூமிக்கு வந்த
அந்த ஞாயிற்றுக்கிழமையின் குதூகலம்
அடி மனத்தில் ஆழத்தில்
இன்னும் அப்படியே..

முதல் முத்தம்
முதல் காதல்போல
முதல் குழந்தை வருகையும்
எப்பொழுது நினைத்தாலும்
மனக்குளத்தில் கல்லெறிந்து
அலைகளாய் விரிகின்றது...

கல்விச் சாலையில்
நீ ஒவ்வோர் இலக்கிலும்
வெற்றிமாலை சூடி
பயணத்தைத் தொடர்ந்தபோது
சகபயணியாக
உன் வெற்றியைக் கொண்டாடினோம்

இன்னும் உன் பயணம்
தொடர்கிறது...
எதிலும் நீ வெற்றிகானம் மீட்ட
மனம் எப்பொழுதும்
வாழ்த்துத் தந்தி அனுப்பி மகிழ்கிறது

சொத்துகள் சேர்ப்பதிலே
எப்போதும் ஆர்வம்
இருந்ததில்லை எனக்கு
பிள்ளைகளாய் உன்னோடு
இன்னும் இருவரை
ஆசைச் சொத்தாய் அடைந்த பிறகு..

கவிஞனாய் இதுவரையில்
எதையெதையோ பாடினேன்
ஒரு கவிதையான
உன்னைப் பாடாத
குறையின்று தீர்த்தேன்

21 ஆண்டுகளுக்கு முன்பு
உன் முதல் பிறந்தநாளில்
மனத்தில் எழுதிப்பார்த்த வரிகளை
மீண்டும் நினைவுச் சரத்தில் கோர்க்கிறேன்:

‘என்றுமுள தென்தமிழாய்
நன்று புகழ் நீ பெறவும்
குன்றா நலனில்
என்றும் நிறையவும்
இன்று உன்றன் பிறந்தநாளில்
அப்பா நான்
ஆசையாய் வாழ்த்துகிறேன்!’

(8.1.2011 அன்று 22ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் அன்புமகள்
கனிமொழியாளுக்கு என் வாழ்த்துக்கவிதை)





Wednesday, January 5, 2011

சீ.முத்துசாமியின் ‘மண்புழுக்கள்’ நாவல் - ஒரு பருந்துப் பார்வை



மலேசிய எழுத்தாளர்களில் சீ.முத்துசாமி முற்றிலும் மாறுபட்ட படைப்பாளி. வழக்கமான கதை சொல்லும் பாணியிலிருந்து விலகிக்கொண்டு தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அதிலே பயணிப்பவர். நான் படிவம் ஐந்தில் படித்த காலத்தில் (1978) தமிழ் நேசன் நாளிதழ் நடத்திய போட்டியில் முதல் பரிசுபெற்ற அவரின் ‘சிறகுகள் முறியும் மானுடக் கனவுகள்’ குறுநாவல் அந்நாளிதழில் தொடராக வெளிவந்தபோது படித்தேன். நான் வாழும் தோட்டப்புறச் சூழலை மையமிட்ட நாவல் என்பதால் என்னை அது மிகவும் கவர்ந்தது. வாசிப்பின் ருசியை நான் உணரத் தொடங்கிய காலக் கட்டம் அது.

பின்னர், அவரின் சில சிறுகதைகளையும் நாளிதழில் வாசித்தேன். கல்லூரியில் பயின்ற காலத்தில் அவரின் ‘விதைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை’ நாவலை ஆவலோடு வாசித்தேன். 22 வயதில் என்னை ஆழமாகப் பாதித்த, உணர்வுகளை உலுக்கிய, தீவிர வாசிப்புக்குள் தள்ளிய நாவல் இதுவாகத்தான் இருக்கும். கல்லூரி இதழில் இந்த நாவல் குறித்த என் விமர்சனத்தை ஆசையாய் எழுதியது இன்னும் நினைவில் உள்ளது. சிதையும் ஒரு குடும்பத்தின் சோகத்தை நனவோடை உத்தியில் அகநோக்கு நிலையில் கதைப்பாத்திரங்கள் பேசுவதாக அமைந்த நாவல் இது.

இதோ, சீ.முத்துசாமியின் மூன்றாவது படைப்பான மண்புழுக்கள் நாவலை, இடையிலே கிடைத்த மருத்துவ விடுப்பில் ஒரே மூச்சில் வாசித்துவிட்டு என் எண்ணங்களை இங்கே பதிவு செய்ய வருகிறேன். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சி நிறுவனம், தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய மூன்றும் இணைந்து நடத்திய போட்டியில் இது முதல் பரிசு பெற்ற நாவல்.

இதுவும் சீ.முத்துசாமியின் நெஞ்சுக்கு நெருக்கமான தோட்டப்புறப் பாட்டாளிகளின் வாழ்க்கைச் சுவடுகளின் சோகத்தைப் பதிவுசெய்யும் முயற்சியாக அமைந்துள்ளது. சுதந்திரத்திற்கு முற்பட்ட காலக்கட்டத்தில் தோட்டப் பட்டாளிகளின் போராட்ட வாழ்க்கையைக் கதைக்களனாகக் கொண்டு நாவலைப் புனைந்துள்ளார். மண்புழுக்களாகத் தோட்ட மண்ணை நம்பித் தங்களின் வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் நிலையை ஓர் ஆவணச் சித்திரமாக நம் கண் முன்னே நிறுத்துகிறார்.

இந்நாவலில் குறிப்பிடத்தக்க அம்சம், தோட்டப்புற வாழ்வின் மிக நுணுக்கமான விவரிப்பும் தகவலின் தொகுப்புமாகும். மலேசியாவில், இதுவரை வெளிவந்த நாவல்களில் இந்த அளவுக்கு தோட்ட வாழ்க்கையை ஆழமாக, நுணுக்கமாக பதிவுசெய்த படைப்பு இல்லை என அறுதியிட்டுக் கூறலாம். தோட்ட வாழ்க்கையைக் கடந்து வந்த வாசகர்கள் இதன் ஊடாகப் பயணப்படும்போது நிச்சயம் உணர்வார்கள். எழுத்தாளரின் கடுமையான உழைப்பை இது தெளிவாக்குகிறது.

வைரமுத்துவின் ‘கருவாச்சி காவியம்’ போல் இதுவும் பேச்சு நடையில் அமைந்துள்ளதால் நாவலை யார் வாசித்தாலும் அதனோடு ஒன்றித்துவிடும் நிலையை நாவல் ஏற்படுத்துகிறது. நாவல் உயிர்ப்போடு திகழ இது முக்கியப் பங்காற்றுகிறது. தோட்டப்புற மக்கள் தங்கள் சோகத்தையும் பாடுகளையும் தங்கள் மொழியிலேயே பேசுவது சுவையாக இருக்கிறது. ‘நம்ம பாடு எவனுக்கு தெரியுது?.. பொண கனத்துல, ஏணிய துக்கி தோள்ள போட்டுக்கிட்டு, அந்த மீனா பூண்டு காட்டுல லோலோன்னு ஓடி, பதினோரு மணிக்கு நானூறு மரத்த, ஏணில ஏறி, அண்ணாந்து பாத்து, மேலே போய்விட்ட வெட்டுக் கோட்டுல கத்தி போட்டு, தடிச்சு காஞ்சு கெடந்த மொரட்டு பட்டங்களோடு வரட்டு வரட்டுனு ஓரியாடி, முடிச்சுட்டு, வாளிக் கடக்கு வர்றதுக்குள்ள பாதி உசுரு போயிரும்’. இப்படி உரையாடல் மட்டுமல்லாமல் நாவல் முழுமையும் பேச்சு நடையே நிறைந்திருக்கிறது. நவீனமாகிவரும் நம் வாழ்க்கைச் சூழலில் தோட்டப்புற மொழி இப்பொழுதே கரைந்து காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. அதை ஒரு பொறுப்புள்ள படைப்பாளியாக அடுத்த தலைமுறைக்கு இந்நாவலில் பதிவு செய்திருக்கிறார் சீ.முத்துசாமி.

நாம் பேச்சுநடையில் தவிர்க்கும் அசூசையான சொற்கள் இந்நாவலில் ஆங்காங்கே கலந்திருப்பது சில வாசகர்களுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தலாம். தணிக்கை இல்லாத தோட்டப்புற மக்களின் வாழ்க்கைப் பதிவு என்பதால் ‘உள்ளதை உள்ளவாறு உரைத்தல்’ என்ற நிலையில் எழுத்தாளர் இத்தகைய எழுத்து நடையைக் கையாண்டிருப்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

மண்புழுக்கள் நாவலின் கதை என்ன? கதையின் சுவைக்காக மட்டும் இந்நாவலை அணுகுவோர் நிச்சயம் ஏமாற்றமடைவர். முதல் அத்தியாயத்தை வாசித்த என் மகள் கேட்டாள். “எங்கப்பா கதையைக் காணோம்?” பலருக்கும் இத்தகைய எண்ணம் தோன்றலாம். நம் புனைவு இலக்கியத்தில் நிகழ்ச்சிகளும் சம்பவங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால், இந்நாவலில் கதையென்பது ஒரு மெல்லிய இழையாக ஊடாடிவர தோட்டப் பாட்டாளிகளின் போராட்ட வாழ்க்கையின் பதிவே முக்கியக் களமாக அமைந்துள்ளது. கதை சொல்லும் முறையில் ஒரு கட்டுடைப்பை நிகழ்த்தியிருக்கிறார் சீ.முத்துசாமி.

வழக்கமாக நாவலில் குறிப்பிட்ட சில கதைப்பாத்திரங்களை ஒட்டியே கதை நகர்த்தப்படும். இங்கே, ஆட்டுக்கார சின்னக்கருப்பன், அவன் மகள் சின்னபுள்ள, மனைவி பெரியதாயி, சாலபலத்தான், முத்துவேலு, கசியடி முனியப்பன், கண்ணுசாமி, தண்டல் பொன்னுசாமி, தொரசாமி, கடைக்காரர் திக்குவாயர், தண்ணிமலை கவுண்டர், புட்டுகாரர், ஓடும்பிள்ளை, மேனேஜர் மேனன், பெரிய கிராணி சுப்பையா இப்படிக் கதைப்பாத்திரங்களின் பட்டியல் நீளுகிறது.

ஆயினும், ஆட்டுக்கார சின்னக்கருப்பனின் வாழ்க்கை மையமாக இருக்க, அவனைச் சுற்றி நிகழும் பல்வேறு கிளைக்கதைகளும் நினைவுகளும் நாவலில் வந்து போகின்றன. ஆட்டுக்கார சின்னக்கருப்பனின் மகள் சின்னப்புள்ளையைக் கசியடி முனியப்பன் பால்மரக்காட்டில் கற்பழித்துக் கொலை செய்துவிட, போலீசாரால் கைது செய்யப்படுகிறான். சயாம் மரண ரயில் பாதை அமைக்கும் வேலையில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் ஜப்பானியரிடம் பட்ட துன்பக் கதைகளும் நாவலில் இடம்பெறுகின்றன. ஜப்பானிய காலனித்துவ ஆட்சிக்குப் பிறகு, நாட்டைப் பிடிக்கக் கம்யூனிஸ்ட்டுகள் முயற்சியில் இறங்குகிறார்கள். அவர்கள் கூட்டத்தில் சேர்ந்துவிடும் கசியடி முனியப்பன் மீண்டும் தோட்டத்திற்கே வந்து தன்னை முன்பு அடித்து உதைத்த டன்லப் துரையைச் சுட்டுக்கொன்று விடுகிறான். காலில் முள் குத்திப் புண்ணாகிக் ஒரு காலை இழந்துவிடும் ஆட்டுக்காரன், மனைவியின் உதாசினத்திற்கு ஆளாகிறான். அவனின் மகள் பழனியம்மா எதிர்த்த வீட்டுப் பையைனோடு ஓடிவிட, வேதனை தாங்காது அவன் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவோடு கையில் கயிற்றோடு மரத்தடியில் அமர்ந்திருப்பதாக நாவல் முடிகிறது.

சீ.முத்துசாமியின் மூன்று நாவல்களிலும் ஒரு ஒற்றுமையை என்னால் காண முடிகிறது. கதையின் போக்கில் வாசகர் மனங்களில் சோக இராகங்களை எழுப்பி அவர்களைக் கதையோடு ஒன்றித்துவிடச் செய்வதில் இவரின் எழுதுகோல் முனைப்பு காட்டுகிறது. இவரின் முன்னைய இரண்டு நாவல்களின் தலைப்புகளே (சிறகுகள் முறியும் மானுடக் கனவுகள், விதைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை) இதனை உறுதிப்படுத்துகின்றன.

‘மண்புழுக்கள்’ நாவல் மலேசியத் தமிழ் இலக்கிய நாவல் உலகில் முக்கியமான படைப்பாகும். சஞ்சிக் கூலிகளாக மலையகம் வந்து காட்டையும் மேட்டையும் திருத்தித் தோட்டக்காடுகளின் லயங்களில் முடங்கிப்போனவர்களின் கதையை, நம் முன்னோர்களின் வேர்களின் விலாசங்களை ஆவணமாக்கியிருக்கும் சீ.முத்துசாமியின் முயற்சி பாராட்டுக்குரியது.

இருபது ஆண்டுகள் எழுத்து வனவாசத்திற்குப் பிறகு இத்தகைய படைப்பை இவரால் தரமுடியுமென்றால் தொடர்ச்சியான எழுத்துத் தவம் மேற்கொண்டால் இன்னும் சில இலக்குகளை இவரால் அடையமுடியுமென்று உறுதியாய்த் தெரிகிறது.

ந.பச்சைபாலன், மலேசியா


Tuesday, January 4, 2011

வட்டாரங்கள் வாழ்க


கட்சிக்குள் பயங்கர குழப்பம்
உறுப்பினர்களிடையே கடும் அதிருப்தி
இதனால் கட்சிக்கு இனி பாதிப்புதான் என
அந்த வட்டாரம் அறிவித்தது

அவரைத் தொடர்ந்து
கட்சியை விட்டு ஆயிரக்கணக்கில்
உறுப்பினர்கள் வெளியேறுவர் என
நம்பப்படுகிறது

இது குறித்து
தலைவருக்கும் துணைத்தலைவருக்கும்
மனக்கசப்பு தோன்றி
இடியப்பச் சிக்கலாக மாறியிருப்பதாக
கூறப்படுகிறது

....இப்படியெல்லாம் நிலைமை
கட்டுக்கடங்காமல் போய்விட்டதாகச்
சொல்லப்படுகிறது

...மேலும் உடனடி நடவடிக்கை
இல்லாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என
அறியப்படுகிறது

.... நிலைமை இப்படியே போனால்
எல்லாரையும் ஒன்றுபடுத்துவது சிரமம் என்று
பேசப்படுகிறது

எல்லாரும் செய்திகள் படித்துப்
பேசிச் சிரித்து
உணர்ச்சியில் பொங்கி
பொழுதுகள்போக்கி
இன்புற்றிருக்கச் செய்வதன்றி
வேறொன்றும் அறியார் பராபரமே!

Monday, January 3, 2011

நோயெனப்படுவது யாதெனின்



வேகம் காட்டிய காலம்
சுவர்க் கடிகாரத்தின் முட்களில் மாட்டி
நகர முரண்டு பிடித்த அதிசயம்

வாசிப்பின் ருசி தேடி
மனசின் நாக்கு அலைய
மேசையில் நிறைந்த நூல்கள்
ஆசையாய் உள்ளிழுத்தன

இயந்திர கதியில் சிதறிய கவனம்
குவிமையமாய்
உடலின் மீது பரவியது

உறவுப் பறவைகளின்
அன்பில் அரவணைப்பில்
கசிந்த சொற்கள்
சிறகுகோதி மனம் வருடின

நான்கு சுவர்களுக்குள் அடைந்தாலும்
கற்பனையின் குதிரை ஏறியதில்
அடிக்கடி வெளிப்பயணம் சாத்தியமாயிற்று

முன்னிலும் தீவிரமாய்
தூக்கத்தின் மர்மக் கைகள்
தாவிப் பிடித்து அணைத்தன

சுற்றியிருந்த உதடுகள்
ஓயாமல் உச்சரித்ததில்
கடவுளின் நாமம்
உணர்வை நனைத்து
உதடுகளில் உறவாடத் தொடங்கியது

மரணத்தின் கோர முகம்
முதன்முறையாய் தலைக்கு மேலே
தொங்கி உற்றுப் பார்த்தது

‘நோயில் இருந்த நாட்கள்
கணக்கில் இறந்த நாட்கள்’
நாட்குறிப்பின் வாசகத்தைக்
கிழித்து வீசினேன்

Wednesday, December 22, 2010

சிந்திக்கிடக்கிறோம்



தெருவில் அவிழ்க்கப்பட்ட
நெல்லிக்கனி மூட்டையாய்
சிந்திக்கிடக்கிறோம்
சந்தி சிரிக்கிறது
நம்மில் இதனைச்
சிந்திப்பார் யாருமில்லையா?

ஓரணியில் நின்றபோது
உரக்கக் குரல் கொடுத்தோம்
அதிகாரத்தின் காதுகளில்
நாரசாரமாய் ஒலித்தது

இறுகிக் கிடந்த
தாழ்ப்பாள் நெகிழ்ந்தது
அவ்வப்போது அவசர உதவிகள்
எட்டிப் பார்த்தன

பசித்த வயிற்றுக்குக்
கொஞ்சம் உணவும்
பாராட்டு மடலும் கிடைத்தது

கைகோர்த்துக் களித்தோம்
திருவிழாவாய்த் திரண்டோம்
சின்னச் சின்ன இன்னலுக்கும்
காயங்களுக்கும்
கடைக்கண் பார்வை கிட்டியது

இன்றோ
உடைந்து கிடக்கிறோம்
எட்டாய்..
ஒன்பதாய்..

நாளை
இன்னும் உடைவோம்
நம்மைச் சில்லறையாய் மாற்ற
யார் யாரோ காத்திருக்கிறார்கள்

எழுதுகோல்கள் ஏடுகளில்
தாறுமாறாய் விளையாடின
இன்னும் உடைபடுவதற்கான
வியூகங்களை வகுத்தன

அறிக்கை மன்னர்கள்
எங்கெங்கும் முளைத்தார்கள்
ஏடுகளில் திருமுகம் காட்டித்
திட்டித் தீர்த்தார்கள்

கலகச் செய்திகள்
ஏடுகளில் கற்கண்டுச் செய்திகளாய்
இனிப்பு காட்டின

இனி,
கூவிக் கூவி
குரல் கொடுத்தாலும்
எந்தக் கொம்பனுக்காவது எட்டுமா
நம் சந்தைக் குரல்?

இரைச்சலில் இன்னும்
இழந்துகொண்டிருக்கிறோம்
நம் சுயத்தை

கட்டியிருந்த கயிறுகளைக்
கழற்றுவதாக நினைத்து
அணிந்திருந்த ஆடைகளை
அவிழ்த்த அநியாயத்தை
எங்குபோய் அறிவிப்பது?

மக்கள் சந்தையில்
நெல்லிக்காயாய் உருள்கிறோம்
கால்மிதியில் நசுங்காமல்
நம்மைக் காப்பதெப்படி?


இன்னும்...



இன்னும் கசிகிறது
காது மடல்களில்
இன ஒற்றுமைக்காய் ஒலித்த
துங்குவின் பேச்சு

இன்னும் தெரிகிறது
மங்கலாய்
பட்டொளி வீசிப் பறந்த
அன்றைய கூட்டணிக் கொடி

இன்னும் நிழலாடுகின்றன
அன்றைய பல்லினத் தலைவர்களின்
கைகோர்த்த காட்சிகள்

இன்னும் ஒலிக்கிறது
அன்றைய வானொலிகளின்
உற்சாக எழுச்சி உரைகள்

இன்னும் கேட்கிறது
சயாம் மரண இரயிலின்
தண்டவாள இடுக்குகளில்
சமாதியான உறவுகளின் ஓலம்

இன்னும் பிழிகிறது
நாட்டுக்காய் உயிரிழந்த
இராணுவ வீரர்களின் தியாகம்

இன்னும் மணக்கிறது
கைகளில்
வேறுபாடு மறந்து ஒன்றாய்க்கூடிச்
சுவைத்த உணவுகள்

இன்னும் சுவைக்கின்றன
அன்றைய ஏடுகளில்
நிரம்பி வழிந்து உணர்வூட்டிய
அருமைப் படைப்புகள்

இன்னும் ஓடுகின்றன
நம் வீறுகண்டு பின்வாங்கிய
காலனித்துவ கால்கள்

இன்னும் நனைக்கிறது
இனவுணர்ச்சி கலவாத
தலைவர்களின் அன்புரைகள்

இன்னும் எரிகிறது
மூவினமும் சேர்ந்து மூட்டிய
சுதந்திரத் தீபம்

இன்னும் உயருகின்றன
மூவின மக்களின்
உழைக்கும் கரங்கள்

இப்படி இன்னும் இன்னும்
விரிந்துகொண்டே இருக்கின்றன
நிறம் வெளுக்காத
பழைய காட்சிகள்

எண்ணி எண்ணிப் பார்க்கும்
எந்த நெஞ்சிலும்
உணர்வுப்பூக்கள் மொட்டவிழும்

எந்தச் சூழலிலும்
நம் ஒற்றுமைத் தூண்கள்
உறுதிபெறும்

எந்த இடர்களையும்
நம் இணைந்த கைகள்
இடுப்பு முறிக்கும்

எந்த இன்னலிலும்
எல்லா இனக் கைகளும்
ஆதரவாய் முன்னே நீளும்

எந்த வெற்றியையும்
தம் வெற்றியாய்
உள்ளங்கள் ஏந்திக்கொள்ளும்

எந்த நிலையிலும்
தேசியத்தைச் சுவாசமாய்
இதயங்கள் நிரப்பிக்கொள்ளும்