அரிதாய்க் கிடைத்த விடுப்பில்
அத்தையைப் பார்க்கச் சென்றிருந்தேன்
எப்போது போனாலும் அதே சிரிப்பு
இப்பொழுதெல்லாம் பொக்கை வாயோடு
என்னைப் பார்த்ததும் பாசம் நிறையும்
பார்வை நலம் விசாரித்தது
எழுபதாண்டு முதுமை ஆனமட்டும்
அவரை உருக்குலைத்திருந்தது
தோல்களின் சுருக்கம்
கூன்விழுந்த உடல்
வெளுத்துவிட்ட கேசம்
தடுமாறும் சொற்கள்
மங்கிய பார்வை
அந்திம காலத்தின் நெருக்கத்தில்
அத்தை இருந்தார்
அத்தையின் இழப்புகள் எத்தனை?
எண்ணிப் பார்த்தேன்
புற்றுநோய்க்கு மாமா
சாலை விபத்துக்கு மூத்தவன்
போலீஸ் தடுப்புக்காவலுக்கு இளையவன்
ஒவ்வொருவராக விடைபெற்றுப்போய்
தனித்து நின்றும்
சோகத்தின் சாயல் படியாத முகத்தைப்
கண்களுக்குள் படமெடுத்க்து வந்தேன்
திரும்பும் வழியில் பார்த்தேன்
எல்லாம் உதிர்ந்தும்
வெறும் கைகளைப் பரப்பி
அழகாய் நின்றது மரம்
அத்தையைப்போலவே
இறுதிப் பயணத்தில் இருக்கும் என் பாட்டியைப் பார்த்துவிட்டு இப்போது தான் வந்தேன். இந்தக் கவிதையின் கருத்துக்குள் என்னுள்ளும் ஓடிக் கொண்டிருந்தன.
ReplyDeleteஎன் மன ஓட்டத்தை பிரதிபலித்தது கவிதை.