பாறையின் இடுக்கில்
தவறிய விதைகள்
நீர்குடித்துப் போராடி
முட்டி முளைப்பதுபோல்
உணவைத் தேடி உயரப் பறந்து
சோர்வுறும் சிறகு சுமந்து
கண்டங்கள் தாண்டும்
பறவைகள்போல்
பின்னிய வலைகள்
அறுந்து வீழ்ந்தும்
எச்சிலால் மீண்டும்
பின்னலைத் தொடரும்
சிலந்தியைப்போல்
கூட்டுப் புழுவாய்
சிறைக்குள் ஒடுங்கியும்
ஓட்டை உடைத்துப் பறக்கும்
பட்டாம்பூச்சிபோல்
நீரில்லாப் பாலையில்
கனல் கக்கும் வெம்மையில்
பொதிசுமந்து கடமையாற்றும்
ஒட்டகம்போல்
கைத்தடியால் தரைதடவி
கைப்பொருள் தனைவிற்று
தன்னுழைப்பால் நிமிரும்
கண்ணில்லா மனிதர்போல்
பொய்க்காலைப் பொருத்தி
பயிற்சியிலே தேர்ந்து
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும்
காலில்லா மனிதர்போல்
விளக்கில்லா வீட்டில்
மெழுகுவர்த்தி எரியவிட்டு
நூல்களைப் புரட்டும்
பிடிவாத மாணவனைப்போல்
பனிக்காலம் முழுதும்
வெண்போர்வை போர்த்தி
பொய்யுறக்கம் பூண்டு
வசந்தத்தில் கண்விழிக்கும்
பூமரங்கள்போல்
உன்னைச் சுற்றியும்
வாய்ப்புகள் பறிபோகும்
பள்ளங்கள் தோன்றும்
இடர்கள் இடைமறிக்கும்
சொந்தங்கள் பகையாகும்
முயற்சிகள் முடமாகும்
வழிப்பாதை களவுபோகும்
அவற்றைப்போல்
அவர்களைப்போல்
நீயும் மீண்டு வருவாய்!
மீண்டும் வருவாய்!
நல்ல தன்னூக்கக் கவிதை பச்சைபாலன். பொய்யுறக்கம்
ReplyDeleteபூணும் பூமரங்கள் பற்றி எப்படித்தெரிந்துகொண்டீர்கள்?
என் அகப்பக்கத்தில் முகம் காட்டியதற்கு நன்றி சார்.
ReplyDeleteகடுமையான பனிப்பொழிவில் காணாமல் போய்
மீண்டும் வசந்தத்தில் கண்திறக்கும் மரங்களைத்
தொலைக்காட்சியில் பார்த்ததுண்டு. அதைத்தான்
கவிதையில் பதிவு செய்தேன். ஆமாம், அம்மாதிரியான பனிப்பொழிவில்
பத்து நாட்களைக் கழித்தவராயிற்றே நீங்கள்!