நடந்து முடிந்த தேர்தலில்
யார் வெற்றியாளர் என அறிந்துகொள்ள
பரபரப்புக் காய்ச்சல் எல்லார்
மனங்களிலும்
பரவியிருந்தது
பக்கம் பக்கமாக எழுதிய எழுத்துகள்
பலரின் மனத்தை வளைத்திருக்கலாம்
நம்பிக்கை விதைகள் இதய இடுக்களில்
தவறியாவது விழுந்திருக்கலாம்
விடியலின் கீற்றுகள் நுழைய
கதவுகள் திறக்கலாம்
பலரின் எண்ணங்களில்
எதிர்பார்ப்பு இழைகள்
பின்னத் தொடங்கின
பல்முனைத் தாக்குதல்களுக்கும்
மௌனமொழியால் உரக்கப் பேசி
நிராயுதபாணியாய்
மார்பு காட்டி நின்றவர்கள்
நம்பிக்கைத் தோணியைப் பற்றியவாறு
ஆயுதங்களை நம்பாமல்
மனங்களோடு பேசிப்பேசி
வியூகங்களை வகுக்க
பலரின் எண்ணங்களில்
எட்டிப்பார்க்கவேயில்லை
புயல் பற்றிய கவலைகள்
தேர்தலின் முடிவு எந்நேரத்திலும்
வந்துவிடும் என அறிவிப்பு வந்தது
காத்திருந்த
அந்த நெருப்பு நிமிடங்களில்தான்
அதுவரை பெயரறிந்து முகமறியாதவர்களோடு
கைகுலுக்கிக் கொள்ள முடிந்தது
எழுதிக்குவித்த விரல்களைப் பற்றி
அவற்றின் ஸ்பரிசம் உணர்ந்து
பழைய படைப்புகளின் மீது
பயணிக்க முடிந்தது
முதுமையெனும் முரடனிடம்
வண்ணம் இழந்தாலும்
நம்பிக்கையிழக்காத உள்ளங்களோடு
உறவாட முடிந்தது.
எழுதியெழுதி ஓய்ந்து கிடந்தவர்கள்
எழுந்து வந்திருந்தார்கள்
நீங்களா அவர்?
எனப் புருவ விளிம்புகள்
ஆங்காங்கே உயர்ந்தன
எதிர்பார்த்த தருணம் வந்தது
பதிந்துகொண்டவர்களைவிட
பதிவான மொத்த வாக்குகளில்
ஒன்று கூடுதலாக கணக்கில் வந்ததால்
யாரும் வெற்றிபெறவில்லை என்று
அறிவித்தார்கள்
No comments:
Post a Comment