எல்லாவற்றையும் நனைத்துவிடும் தீரத்தோடு
வானிலிருந்து விடைகொண்டு
பூமிநோக்கி விரைகின்றன
மழைத்தாரைகள்
சிறுமி ஒருத்தி கைகளை உயர்த்தி
மழையின் குளிர்ச்சியை உணர்ந்தவாறு
மழையோடு உரையாடுகிறாள்
அவள் கால்கள்
மழைநீரில் கோலங்கள் வரைய
குதூகலத்தில் நிறைகிறாள்
மழைத்துளிகள் சொட்ட சொட்ட
இறுகியிருக்கும் சிலரின் மனத்தாழ்ப்பாள்
நெகிழ்கிறது
மழைச்சாரல் உடல் நனைத்து
இருமனங்களின் இடைவெளி குறைத்து
அன்புத்தூறலைத் தொடக்கி
வைக்கிறது
மழையின் கோரத்தாண்டவம்
நினைவுப் பள்ளத்தில்
தீராத மோகத்தை நிரப்பியவாறு
அலைக்கழிக்கிறது
ஒரு மழைநாள்
நினைவூஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும்
இன்னொரு மறக்கவியலா மழைநாளை
அழைத்து வருகிறது
ஒவ்வொரு மழைத்துளியிலும்
கலந்து கரைகிறது
வெம்மையின் பெருமூச்சு
ஒவ்வொரு மழைத்துளியிலும்
எப்படியோ கலந்து விடுகிறது
மண்ணின் மணம்
மழைக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது
உடலை மட்டுமின்றி
உயிரையும் நனைக்கும் மாயம்
மழையில் நனைந்து மழையொடு
கலந்து கரையும் சிறுமி
தான் தாயான காலத்தில்
கவனமாயிருக்கிறாள்
சன்னலின் வழியே
மழைபார்த்து ரசிக்க
சிறுமியான தன் மகளை அனுமதிக்கிறாள்
வணக்கம்
ReplyDeleteஐயா
கவிதையை படித்த போது நானும் மழையில் நனைந்தால் போல் நினைவு அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன். மழையில் என்னோடு சேர்ந்து நனைந்ததற்கு நன்றி
Delete