கே: இலக்கியத் துறைக்கு உங்களை இழுத்து வந்த சக்தி எது?
பதில்:
இலக்கியத்தோடு எனக்குக் காதல் அரும்பத் தொடங்கிய கணங்கள் அலாதியானவை; என் நெஞ்சுக்கு நெருக்கமானவை. நான் பிறந்து வளர்ந்த ரவாங், சுங்கை சோ தோட்டத்தின் பசுமை படர்ந்த அழகு,
இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொடுத்தது. சின்ன வயதிலிருந்து பார்த்த, கேட்ட தமிழ்த் திரைப்பட வசனங்கள் தமிழின் கட்டுக்குலையாத அழகை எனக்குப்
பரிமாறித் தமிழின்மீது பித்துக்கொள்ளச் செய்தன. என் அண்ணன் ந.பச்சையப்பன் எழுதிய
சிறுகதைகளும் அவர் சேகரித்த நூல்களும் வாசிப்பின் ருசியை எனக்கு ஊட்டின.
நாளிதழ்களில்
‘உங்கள் கடிதம்’ எழுதும் வாசகனாக என் எழுத்து முயற்சியைத் தொடங்கினேன். பின்னர், சிறுகதைச் சாலையில் கால்பதித்தேன். 1978ஆம்
ஆண்டில் படிவம் ஐந்தில் பயின்றபோது ஆதி.குமணனின் ‘வானம்பாடி’ வார இதழ், எனக்குள் துயில் கொண்டிருந்த கவிதை உணர்வுகளை எழுப்பி விட்டது.
மரபுக்கவிதை கோலோச்சிய மலேசிய இலக்கிய வானில் வானம்பாடியின் சுதந்திரச் சிறகசைப்பு, புதிய பாணியிலான புதுக்கவிதைகளை எழுதவேண்டும் என்ற வேட்கையை எனக்குள்
விதைத்தது.
இப்படித்தான், அடர்ந்த ரப்பர் காட்டுக்குள் மங்கு
துடைத்துக்கொண்டு, ஆடு மாடுகளோடு அலைந்து திரிந்தவன்
இலக்கியச் சாலைக்கு வந்து சேர்ந்தேன். ரப்பர் தோட்டம் என்ற சிறு எல்லை கடந்து, பரந்து விரிந்த கற்பனை உலகில் பயணிக்கும் அனுபவம் என்னைத் தொடர்ந்து
எழுதத் தூண்டியது. வாசிப்பின் ருசி உணரும் பலருக்கும் இது சாத்தியம் என்றே
நம்புகிறேன்.
கே: நீங்கள் சாதுவான மனிதர் என்பது எனக்குத் தெரியும்.
உங்களின் படைப்புகள் உங்களின் போக்கைப் பிரதிபலிக்கிறதா?
பதில்:
இலக்கியம் மனத்தைப் பண்படுத்துகிறது; மென்மையாக்குகிறது. முன்கோபியான என்னை ஆற்றுப்படுத்தி அமைதியான, பரபரப்பில்லா வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது. எனவே, ஆரவாரம்
விடுத்து, அமைதியான போக்கை எனக்கான அணியாகக் கொள்கிறேன்.
ஆனால், சமூகத்தில் அவலங்கள் தலைதூக்கும்போது, மானுடம் நசுக்கப்படும்போது, மனிதாபிமானம்
மிதிக்கப்படும்போது நான் ஒரு படைப்பாளியாக என் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். பலர்
மௌனப் பார்வையாளர்களாய் அவலங்களைக் கடந்து போய்விடும்போது படைப்பாளிக்கு அது புதிய
படைப்பிற்கான எரிசக்தியாகி விடுகிறது. இதோ, மாதிரிக்கு ஒன்று.
ஹிண்ட்ராஃப் போராட்டத்திற்குச் சில ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய ‘இல்லாதவர் குரல்’ கவிதையின் ஒரு பகுதி:
சுதந்திர தேவி
சொப்பன ராணி
இக்கணமே எனக்கு நீ
சொல்லடி நீதி!
என்னருந் தமிழர்
இன்னலில் வீழ்ந்து
இம்மண்ணில் எந்நாளும்
இளைப்பதா நீதி?
அணிமணிகளோடு நீ
அழகாய் இருக்கிறாய்
அன்றாடங்
காய்ச்சிகளாய்
எந்தமிழர் தவிக்கிறார்
செல்வச் செழிப்பில்
சீர்மிகு வளர்ச்சியில்
உலகை எல்லாம்
உடனே கவர்கிறாய்
உனதிரு மைந்தன்
உனக்காய் உழைத்தோன்
உருக்குலைந்து இங்கே
ஓடாய் நிற்கிறான்
உலகக் குறைகளை
உடனே சுட்டுகிறாய்
அதற்கான வழிகளை
அழகாய்க் காட்டுகிறாய்
அருகினில் இங்கே
அரைகுறையாக
நாங்கள் தவிப்பது
உனக்குப் புரியலையா?..
கே: காலந்தோறும் கவிதையில் ஏற்படும்
மாற்றங்களுக்கு ஏற்ப உங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள முடிகிறதா?
பதில்: அதற்கான முயற்சியில் தொடர்ந்து
ஈடுபடுகிறேன். கவிதை பற்றிய புரிதல் ஒவ்வொரு படைப்பாளிக்கும் மாறுபடுகிறது. எது
கவிதை என்ற கேள்வியை நீட்டினால் ஒவ்வொரு படைப்பாளியும் தரும் பதிலே இந்த உண்மையை
உறுதிப்படுத்தும். காலந்தோறும் கவிதைமொழி மாறிக்கொண்டிருக்கிறது. அதற்கேற்ப கவிதை
பற்றிய புரிதலும் மாறுவது இயற்கை. நான் எழுதத் தொடங்கிய காலத்தில் மரபின் தாக்கமே
என்னை அதிகம் ஈர்த்தது. பாரதியும், பாரதிதாசனும் என்னை ஈர்த்த
ஆளுமைகள். நான் அதிகம் வாசித்தது மரபுக்கவிதைகளைத்தான். மொழியின் வசீகரத்தில்
என்னை இழந்து ஓசை ஒழுங்கோடு அடுக்கு மொழியில் ஆழகழகாய்ச் சொல்வதே கவிதை என்ற
புரிதலோடு சமகாலக் கவிஞர்களை முன் மாதிரியாகக் கொண்டு கவிதைப் பந்தி படைத்தேன்.
‘வானம்பாடி’ வார இதழின் வருகை, கவிதை பற்றிய என் புரிதலை
மடைமாற்றிவிட்டது. சின்னச் சின்ன சொல் ஊர்வலங்களில்,
வாழ்க்கையின் மர்மங்களைத் திடீரெனத் திரைவிலக்கிக் காட்டும் கனமான, ஆழமான வரிகளில் அமைந்ததே கவிதை என்ற புரிதலோடு எழுதத் தொடங்கினேன்.
அப்போதும், மரபிலிருந்து முற்றாக விலகிவிடாமல் மரபும் புதிதும்
கைகுலுக்கும் படைப்புகளையே என்னால் தரமுடிந்தது.
முப்பது ஆண்டு காலம் இத்தகைய புரிதலோடு என்
கவிதை மொழி ஒரே பாணியில் தேங்கியிருந்தது.
நவீனக் கவிதைகளில் தாக்கத்தினால் என் கவிதைகளின் நிறம் மாறத் தொடங்கியது.
புதிய கவிதைமொழி என்பது வெறும் வடிவம் சார்ந்தது மட்டுமன்று. உள்ளடகத்திலும்
சொல்லின் சூட்சுமம் அறிந்து பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனையில் என் கவனம்
குவியத் தொடங்கியது. இன்றைய என் கவிதைகளில் பழைய பிரச்சார பாணியை விடுத்து, அழகியற்
கூறுகளைப் புறமொதுக்கி, சொல் விளையாட்டுகளை விலக்கி, அலங்காரங்கள் இல்லாமல் உரைநடைத் தன்மையிலேயே வாசகனை நெருங்கி வருகிறேன்.
இதுவரை சொல்லாத வாழ்வின் கணங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்புடன்
எழுதுகிறேன். கவிதையில் ‘சொல்வதை’ விட ‘உணர்த்துதல்’ முக்கியக் கூறாக மாறிவரும் சூழலில்
கவிதையின் குவிமையம் நோக்கி வாசகனை ஆற்றுப்படுத்தும் முயற்சியை மேற்கொள்கிறேன்.
கவிதையென்பது என்னைப் பொறுத்தமட்டில்
கடந்துபோன கணங்களைச் சொற்களால் சிறைபிடிக்கும் முயற்சி. என்
வாழ்பனுவங்களை வாசகர்களுக்குள் கடத்தி அவர்களின் அனுபவங்களாக மாற்றும் முயற்சி.
என்னுள் முகங்காட்டும் சிந்தனைகளை வாசகர்களுக்குப் பரிமாறி அவர்களும் என்
உணர்வுப் பந்தியில் கலந்துகொள்ளத் தூண்டும் முயற்சி.
கே: கவிதையிலிருந்து ஹைக்கூக்குத் தாவிய தருணம் பற்றி...
1990ஆம் ஆண்டில்தான் ஹைக்கூ
கவிதையின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. கவிக்கோ அப்துல் ரகுமான் மொழிபெயர்த்த சில
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை வாசித்தேன். அவற்றின் இறுக்கம்,
சொற்களின் சுருக்கம், அர்த்தத்தின் பெருக்கம் என்னை ஒரு
கவிதானுபவத்தில் மூழ்க வைத்தது. அவற்றில் ஒன்று. சொந்தக் கிணறு இருந்தும் அதில்
நீர் எடுக்காமல் அண்டை வீட்டில் போய் நின்றுகொண்டு ஒருத்தி இப்படிக் குரல்
கொடுக்கிறாள்.
யாராவது எனக்கு நீர்
கொடுங்களேன்
என் கிணற்றைப்
பிடித்துக்கொண்டது
பூத்த இளங்கொடி
-
சியோனி
முல்லைக் கொடிக்குத் தன்
தேரையே தந்து மகிழ்ந்தான் பாரி வள்ளல்.
இவளோ, கிணற்றில் படர்ந்துள்ள பூப்பூத்த கொடியைப்
பிடுங்கி எறிய மனமின்றித் தன் கிணற்றையே தந்து விடுகிறாள். மூன்று வரிகளுக்குள்
மறைந்திருந்து கண்சிமிட்டும் நுட்பமான உணர்வுகளை உங்களால் உணர முடிகிறதா?
கடுகு சிறுத்தாலும் காரம்
போகாது என்பார்கள். சின்னஞ் சிறிய மூன்று அடிகளால் அமைந்து நமக்குள் ஆச்சரியங்களை
அள்ளி இறைக்கும் ஹைக்கூ கவிதையைப் படித்தபோது இந்தப் பழமொழிதான் நெஞ்சில்
இனித்தது. மூன்று வரிகளில் வாழ்க்கையின் பல்வேறு காட்சிகளை அழுத்தமாய், தெளிவாய், ஆர்வமாய்க்
கோடிட்டுக் காட்டும் தன்மையுடையது ஹைக்கூ. ஹைக்கூவைப் பாரதியார்தான் தமிழில்
அறிமுகப்படுத்தினார். இயற்கைக்கு மீளல், எளிய உயிர்க்கு
இரங்கல் என்ற இரண்டை அடிப்படையாகக் கொண்டது ஹைக்கூ. ஹைக்கூ பற்றி மயில் இதழிலும்
நாளேடுகளில் விரிவாக எழுதி இக்கவிதை வடிவத்தை இங்கு அறிமுகம் செய்தேன். என்
முதுகலைப் பட்ட ஆய்வேடும் ஹைக்கூ பற்றியதுதான்.
சென்னையில், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க
ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கியக் கருத்தரங்கில் ஹைக்கூவை எனக்கு அறிமுகப்படுத்திய
கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில் ஹைக்கூ பற்றிக் கட்டுரை படைத்த தருணம் மறக்க
முடியாதது.
கே: கவிதைக்கும்
ஹைக்கூவுக்கும் இடையே நீங்கள் காணும் வேறுபாடு பற்றிக் கூற முடியுமா?
பதில்: நீண்ட பாரம்பரியத்தை
உடைய தமிழ்க் கவிதை மரபிலிருந்து மாறுபட்டது ஹைக்கூ. அணிகளால் கவிதையை அழகு
செய்வது நம் கவிதை மரபு. கவிதைக்குப் பொய் (கற்பனை) அழகு என்றால் ஹைக்கூவுக்கு மெய் அழகாக
இருக்கிறது. உள்ளதை உள்ளவாறு உரைத்தல் ஹைக்கூவின் தனித்தன்மையாகும். ஹைக்கூ
கவிஞர்கள் உவமை, உருவகம், குறியீடு, இருண்மைப்
பண்பு இவற்றில் எதனையும் பயன்படுத்துவதில்லை.
உணர்வு வெளிப்பாட்டையும் மிகைபடக்
கூறுதலையும் கருத்து விளக்கங்களையும் ஹைக்கூ கவிதை வடிவம் ஏற்றுக்கொள்வதில்லை. ஹைக்கூ
வடிவத்தைப் புரிந்து கொண்டவர்கள் தங்கள் எண்ணத்தைச் சுற்றி வளைக்காமல் நேரடியாக, சுருக்கமாக வெளியிட முயலுவார்கள்.
ஹைக்கூவுக்கு மெய்யழகு
என்பதைப் புரிந்துகொள்ளாததால் மரபு மீறிய ஹைக்கூக்கள் எழுதப்படுகின்றன.
கல்லறைக்கும்
உணர்ச்சிகளா?
மேலே
சிலிர்க்கும்
புற்கள்
- இதயகீதா
கல்லறையில் முளைத்திருக்கும்
புற்களைக் கவிஞர் காண்கிறார். இந்தக்
காட்சியை ஹைக்கூ வடிவத்தில் பதிவுசெய்ய
முனைகிறார். தான் கண்ட காட்சியோடு கற்பனையையும் கலக்கிறார். புற்கள் கல்லறையின்
உணர்ச்சிகளாகத் தெரிகின்றன. கவிஞரின் தலையீடு இந்த ஹைக்கூவைச் சிதைத்துவிட்டது. இதனை இப்படி
மாற்றி எழுதலாம்.
கல்லறையின்
மேல்
தலைநீட்டும்
புற்கள்
முதல் ஹைக்கூவில் கவிஞரின்
சிந்தனை,
கற்பனை, ஒரு
காட்சி குறித்த அவரின் பார்வை எல்லாம் பதிவாகியுள்ளன. வாசகனுக்கு ஏதும் மிச்சம்
வைக்காமல் எல்லாவற்றையும் கவிஞர் கூறிவிட்டார்.
இரண்டாம் ஹைக்கூவில் எதுவும்
சொல்லப்படவில்லை. வாசகனின் வாசிப்புத் தட்டில் ஒரு காட்சி மட்டும்
பரிமாறப்படுகிறது. இதைப் படித்து அவரவர் தங்கள் அனுபவங்களுக்கு ஏற்ப புரிந்துகொள்ள
வாய்ப்பு உள்ளது.
‘கருவறையில் தொடங்கும் மனித
வாழ்வு கல்லறையில் முடிகிறது. இடையே ஓயாத
போராட்டங்கள், பிணக்குகள், சண்டைகள், இன்னல்கள்.
கடைசியில் என்ன சாதித்தோம்? புதைத்த
இடத்தில் வெறும் புற்கள் முளைக்கின்றன. இந்தக் கல்லறை ஞானத்தை யாரும்
கண்டுகொள்வதாகத் தெரியவில்லையே’ என்று வாசகன் தன் மனத்தில் எண்ண அலைகளை எழுப்பிக்கொள்ள முடியும்.
‘ஒரு முடிவுரை இன்னொன்றின்
முன்னுரையாகிறது. எதுவும் முற்றாக முடிந்து போவது கிடையாது. ஒரு முடிவில்
கண்ணுக்குத் தெரியாத தொடர்ச்சி இந்த உலகில் தொடர்ந்துகொண்டே இருக்கும். இதோ, இந்தக் கல்லறையில்
நம்பிக்கையோடு தலைநீட்டும் புற்கள் அதற்குச் சாட்சியாகின்றன’ என்று வேறுவிதமாகவும்
அர்த்தங்களை வாரி இறைத்துக்கொள்ள முடியும்.
ஹைக்கூ வெறும் பொன்மொழியோ
பழமொழியோ அல்ல. முதல் இரண்டு வரிகளில் ஒரு புதிரைப்போட்டு மூன்றாம் வரியில்
விடையைக்கூறும் விடுகதையுமல்ல. இந்த
அடிப்படையைப் புரிந்துகொள்ள பலரும் சிரமப்படுகிறர்கள்.
கே: இலக்கியத்தில் இயங்கிக்
கொண்டிருக்கும் பொழுது சோர்ந்துபோன தருணங்கள் அதிகமா? உற்சாகம் பெற்ற அனுபவம் அதிகமா?
பதில்: ஓர் இலக்கியப் படைப்பு
கொண்டாடப்படும்பொழுது உற்சாகம் கொள்வதும் அது புறக்கணிப்புக்கு ஆளாகும்பொழுது சோர்ந்துபோவதும் படைப்பாளிக்கு
இயல்புதான். எனக்கும் அது நேர்ந்துள்ளது. முகமறியா ஒருவர் என்னைச் சந்திக்கும்போது
என்றோ நான் எழுதிய படைப்பை நினைவுகூரும்போது
படைப்பு மனித மனங்களில் ஏற்படுத்தும் உணர்வு அதிர்வுகள் வியக்க வைக்கின்றன.
ஓர் படைப்பு கொண்டாடப்படவும்
புறக்கணிப்புக்கு ஆளாகவும் அந்த படைப்பு மட்டும் காரணமல்ல. அதை எதிர்கொள்ளும்
மனிதர்களின் வாழ்பனுவங்களும் இலக்கியக் கொள்கைகளும் மனப்போக்கும் வாழ்வு குறித்த
பார்வைகளும் விருப்பு வெறுப்பும் இன்னபிற காரணங்களும் இணைந்தே வருகின்றன.
எனவே, படைப்பு குறித்த எதிர்வினைகளைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து படைப்பது
மட்டுமே என் கவனமாயிருக்கிறது. ‘கவிதைச் சமையல்’ என்ற
கவிதையில் நான் எழுதியது இங்கே நினைவுக்கு வருகிறது.
சமையலை
மிகையாய்ப் புகழ்வாரின்
மயக்குமொழியில் சிக்கிவிடக்கூடாது
உணவின் ருசியறியாது
அவசர கதியில் அள்ளிக்கொட்டியவாறு
பலரும்
நகர்ந்துகொண்டிருப்பார்கள்
அதைப் பொருட்படுத்தாமல்
அடுத்த சமையலுக்கு ஆயத்தமாக வேண்டும்
கே: உங்களை அடையாளப்படுத்திக்கொள்ள நீங்கள்
தேர்வு செய்யும் துறை கல்வியா? இலக்கியமா?
பதில்: கல்வித் துறையை நான் தேர்வு செய்தேன்.
இலக்கியம் என்னைத் தேர்வு செய்தது. இரண்டையும் என் இரு கண்களெனப் போற்றுகிறேன். யுனைடெட்
ஏசியன் வங்கியில் பணியாற்றிய என் அண்ணன் அகால மரணம் அடைந்தபோது என்னை அழைத்து அதே
வங்கியில் வேலை தந்தார்கள். வாழ்நாள் முழுவதும் அலுவலக அறையின் நான்கு
சுவர்களுக்குள் அடைந்து கிடக்கும் நிலையை என் படைப்பு மனம் ஏற்க மறுத்தது.
வேலையிலிருந்து விலகி ஆசிரியர் பணியில் இணைந்தேன். தமிழும் இலக்கியமும்
கற்பிக்கும் பணி. பணி அழுத்தம் கூடிவரும் சூழலெனினும் மாணவர் சமுதாயத்தோடு
இணைந்திருப்பது மனத்திற்கு நிறைவைத் தருகிறது. இரண்டு துறையிலும் சாதிக்கத்
துடித்த அண்ணனின் கனவுகளை என் மனம் ஏந்திக்கொண்டது. இரண்டிலும் சில எல்லைகளைத்
தொட்டுள்ளேன் என நம்புகிறேன்.
இதுவரை, மாணவருக்கு ஐந்து இலக்கிய வழிகாட்டி
நூல்கள். கவிதை, கட்டுரை சிறுகதை என இலக்கியத்திலும் ஐந்து
நூல்கள்.
கே:
எழுதியது போதும் என்ற சலிப்பு ஏற்பட்டுள்ளதா? கவிதைக்கான வாசகர்கள்
வரவேற்பு எப்படி?
பதில்: எழுத எழுத என்றும் தீர்ந்து போகாமல்
கவிதை மீதான காதல் வளர்ந்துகொண்டே இருக்கிறது. பள்ளிப் பருவத்தில் அரும்பிய இந்தக்
காதல் இன்னும் என்னைவிட்டு விலகாமல் ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. கற்பனாதேவியின்
மாயக்கரங்களுக்கு என்னை முழுமையாய் ஒப்புக்கொடுத்துவிட்டு அவள் போக்கில்
பயணப்பட்டுக் கவிதைக்கான தருணங்களை ஆராதிக்கிறேன்.
கண்ணில் விழும் ஒரு காட்சி, காதில் விழும் ஒரு சொல், உரை நடுவே உதிரும் ஒரு
சிந்தனை, வாசிப்பில் கவனத்தை ஈர்க்கும் ஒரு சொல் கவிதைக்கான
கணங்களை எனக்குள் உற்பத்தி செய்கின்றன. அந்தக் கணங்களைக் கைது செய்து வாசகர்
பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன்.
பள்ளியிலும் பள்ளிக்கு வெளியிலும் கவிதை என்றாலே
ஒதுங்கிப் போகும் மனங்களைக் காண்கிறேன். கவிதை பேசும் சாடைமொழி பலருக்குச்
சலிப்பூட்டுகிறது. கவிதை உணர்த்தும் கருத்தை உள்வாங்கவும் வாசகனுக்குப் பயிற்சி
தேவைப்படுகிறது. எதையும் வெளிப்படையாய்ப் பேசும் உரைநடையோடு மட்டும் கைகுலுக்க
விரும்புகிறார்கள். மொழியின் அழகியலை அள்ளிப் பருகும் இலக்கிய மனம் இன்றைய
தலைமுறையில் வெகுவாகக் குறைந்துவிட்டதை அனைவரும் ஒப்புக்கொள்வோம். கவிதை நூலை
நீட்டினால், “கதை நூலிருந்தால் தாருங்கள்” என்று சிலர்
சொல்வது இதை மெய்ப்பிக்கிறது. அதனால், கவிதை எழுதுவது மீன் விற்கும் சந்தையில் விண்மீன் விற்கும் முயற்சியாக
இருக்கிறது.
கே: நீங்கள் பார்த்து வியக்கும் உலக
இலக்கியவாதி? ஏன்?
பதில்: இன்று தீவிரமாக எழுதிக் குவிக்கும்
ஜெயமோகன்தான். முழுநேர எழுத்தாளரான இவரின் அசுரத்தனமான உழைப்பு வியக்க வைக்கிறது.
மகாபாரதக் கதையை நாவல் வடிவில் மிக விரிவாக ‘வெண்முரசு’ எனும் தலைப்பில் எழுதி வருகிறார். இதுவரை 12
நாவல்கள் வெளிவந்துள்ளன. ஐம்பது நாவல்கள் கொண்ட பெருந்தொகுதியாக உருவாகி
வருகிறது. உலகப் பெரும் இலக்கியங்களில்
இடம்பிடிக்கும் வகையில் அஃது அமையும் என ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.
நம் இலக்கிய முன்னோடிகளையும் ஆளுமைகளையும்
கொண்டாடி அவர்களை அறிமுகப்படுத்துகிறார். மற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிக்
காய்தல் உவத்திலின்றி விமர்சனங்களை முன் வைக்கிறார். உலகம் முழுவதும் பயணம்
மேற்கொண்டு இளம் படைப்பாளிகளுக்கு
இலக்கியப் பயிற்சிகளை நடத்துகிறார். பெரும் தொகையோடு கூடிய இந்தியாவின் உயரிய
இலக்கிய விருது தம் கொள்கைக்கு மாறாக இருந்ததால் வேண்டாம் என மறுத்தவர்.
அண்மையில் மலேசியா வந்திருந்தபோது கூலிம்
தியான ஆசிரமத்தில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றி அத்துறையிலும் தம் ஈடுபாட்டினை உறுதிப்படுத்தினார். கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல் பல்வேறு
தலைப்புகளில் தொடர்ந்து சில நாட்களாக உரையாற்றி அனைவரையும் வியப்பிலாழ்த்தினார்.
இடையிடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தம் அறைக்குச் சென்று கணினியில் வெண்முரசு
நாவல் எழுதும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டார். திரைத்துறையிலும் தம் பங்களிப்பை
வழங்கி வருகிறார். சிறந்த படைப்பாளிகளை அடையாளம் கண்டு ஆண்டுதோறும் ‘விஷ்ணுபுரம்’ விருது வழங்கிச் சிறப்பிக்கிறார். இந்த ஆண்டு,
டிசம்பர் 16ஆம் திகதி நம் மலேசியப் படைப்பாளி சீ.முத்துசாமி தமிழகத்தில் இந்த
விருதினைப் பெறுகிறார்.
இங்கு நாங்கள்தாம் நவீன இலக்கியத்தை அறிமுகம்
செய்தோம் எனச் சிலர் சொல்லும் சூழலில், 1970களில் எழுதத் தொடங்கிய
சீ.முத்துசாமி படைப்புகளின்வழி நவீனம் இங்கே தோன்றிவிட்டது என்ற கருத்தைக் கூலிம்
இலக்கியப் பயிலரங்கில் தெளிவாக முன் வைத்தார் ஜெயமோகன். எழுத்தை ஓர் இயக்கமாக
ஆக்கும் சக்தி இவரிடம் இருக்கிறது.
கே: உள்ளூரில் நீங்கள் ரசித்து வாசிக்கும்
படைப்பு யாருடையது?
பதில்: நான் வாசிக்கத் தொடங்கிப்
படைப்பிலக்கியத்தில் ஈடுபடத்தொடங்கிய காலத்தில் என்னை ஈர்த்த, பாதித்த
எழுத்தாளர்கள், கவிஞர்களின் பட்டியல் நீளமானது. சீ.முத்துசாமி,
எம்.ஏ.இளஞ்செல்வன், எல்.முத்து, ரெ.கார்த்திகேசு, ஆறு நாகப்பன், பி.கோவிந்தசாமி, மு.அன்புச்செல்வன், காரைக்கிழார், வீரமான், கரு.திருவரசு, பொன்முடி, தீப்பொறி
பொன்னுசாமி போன்றோரின் படைப்புகளைக் கண்டால் மறவாமல் வாசித்து மகிழ்வேன்.
அவர்களின் படைப்பின் தாக்கம் என் சிறுகதைகளிலும் கவிதைகளிலும் இருந்துள்ளதை
மறுப்பதற்கில்லை.
தொடர்ந்து, ம.அ.சந்திரன், நிலாவண்ணன், கோ.புண்ணியவான்,
கே.பாலமுருகன், ஏ.தேவராஜன், வாணிஜெயம், சுதந்திரன்
போன்றோரின் படைப்புகளையும் வாசிக்கிறேன். இன்றைய இளம் படைப்பாளர்களில் யாராவது
தனித்தன்மை காட்டினால் அவர்களையும் பின் தொடர்கிறேன். ஆனால்,
அந்த எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.
கே:
இளைய தலைமுறை இலக்கியத்தின்பால் ஈடுபாடின்றி இருப்பதாக நீங்கள்
நினைக்கிறீர்களா? ஆம் என்றால் அதற்கு எது காரணம்?
பதில்: உண்மைதான். இன்றைய இளைய தலைமுறைக்குத்
தமிழ்மொழியிலும் இலக்கியத்திலும் ஈடுபாடு குறைந்து வருகிறது. தேர்வை இலக்காகக்
கொண்ட பயணத்தில் இவை தேவையில்லை என்ற மனநிலை மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும்
மேலோங்கி உள்ளது. தேர்வு வழிகாட்டிப் பயிலரங்கு நடத்த பல இடங்களுக்கும் போகும்
சூழலில் ஒவ்வொரு முறையும் நான் தவறாது மாணவர்களிடம்
கேட்கும் கேள்வி “யார் வீட்டில் தமிழ்
நாளிதழ் வாங்குகிறீர்கள்?” 50 பேர் உள்ள அரங்கில் 10க்கும் குறைவான பேர்தான் கையை உயர்த்துவார்கள்.
மொழியை நேசிக்காத, வாசிக்காத தலைமுறை அம்மொழியைக் கைவரப் பெற
முடியுமா? அதன் தொடர்ச்சியாக இலக்கியத்தில் ஈடுபட முடியுமா?
இன்றைய இளம் தலைமுறை இயற்கையிலிருந்தும்
இலக்கியத்திலிருந்தும் விலகி நிற்கும் ஒரு தலைமுறை. மெய்நிகர் உலகில்
தலைசாய்த்துக் கனவுகளில் சஞ்சரிக்கும் தலைமுறை. எதையும் கண்டு கேட்டு உற்றறிந்து
வாசிப்பைப் புறமொதுக்கும் தலைமுறை.
கே: பயிற்சி கொடுத்து எழுத்தாளர்களை உருவாக்கி
விட முடியுமா?
பதில்: முடியும் என்றே நம்புகிறேன். வாசிப்பின்
ருசியைக் காட்டித் தூண்டினால் ஒருவர் படைப்பில் ஈடுபடவேண்டும் என்ற உந்துதல்
இயல்பாய்த் தோன்றும். இலக்கியத்தின் சுவைஞர்களாக மாறி படைப்புகளை உள்வாங்கி
அவற்றோடு மனம் ஒன்றிக் குறை நிறைகளை ஆராய வேண்டும். ‘அழுக்குச்
சேர்ந்தால் உடல் அரிக்கும். அனுதினம் படித்தால் மனம்
அரிக்கும்’ என்று ஒரு முறை எழுதினேன். எழுத வேண்டும் என்ற
முனைப்பும் முயற்சியும் இருப்போரிடம் இது
சாத்தியம்.
சிறந்த படைப்புகள் பற்றிய அறிமுகம், ஒரு
படைப்பை எப்படி அணுக வேண்டும் என்ற வழிகாட்டல், மொழியைச்
செம்மை செய்யும் பயிற்சிகள், நிகழ்காலச் சமூகச் சிக்கல்களைப்
புரிந்துகொள்ளல் போன்றவை எழுதும் களத்துக்கு ஒருவரை விரைந்து அழைத்துச் செல்லும். இதன்வழி, கால விரயத்தைத் தவிர்க்கலாம். அதன் பிறகு அவர்தான் வாள் சுழற்ற வேண்டும்.
பசித்தால்தான் உணவின் ருசி தெரியும்.
பசிக்காதவர்க்கு உணவைத் திணித்தால் செரிமானம் ஆகாமல் அவதிப்பட நேரிடும். பசியை
ஏற்படுத்தும் முயற்சிதான் வாசிப்பும் அது குறித்த உரையாடலும். குதிரையை
மல்லுக்கட்டி ஆற்றுக்கு இழுத்துப் போகலாம். தாகத்திற்கு அதுவாகத்தான் நீர் அருந்தவேண்டும்.
வழிகாட்டலும் தொடர் உரையாடலும் பல எழுத்தாளர்களை
உருவாக்கியிருக்கிறது.
கே: மாணவர் சமுதாயத்திலிருந்து எழுத்தாளர்களை
உருவாக்க வேண்டுமானால் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்? அத்தகைய
திட்டங்களில் ஈடுபட்ட அனுபவம் உண்டா?
பதில்:
மாணவர்களிடையே எழுத்தாளர்களை உருவாக்கும் நோக்கத்தில்தான் தமிழ்ப்பள்ளியில்
ஆறாம் ஆண்டு தொடங்கி, படிவம்
மூன்று, படிவம் ஐந்துவரை தமிழ்மொழித் தேர்வில் கதை எழுதும்
கேள்விகள் இடம்பெறுகின்றன. ஆசிரியர்களின் வழிகாட்டலும் ஊக்குவிப்பும் இருந்தால்
இளம்தலைமுறையினர் படைப்பிலக்கியத்தில் ஈடுபடுவார்கள். தேர்வுக்குப் பயிற்சி
நூல்களை வாங்கித் தரும் பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு கதை நூல்களையும் வாங்கித் தந்தால் அவர்கள் வாசிப்பின் சுவை
உணர்வார்கள்.
எஸ்.பி.எம். தமிழ் இலக்கியத் தேர்வில்
நாவலும் மரபுக்கவிதையும் நாடகமும் பாடநூல்களாக உள்ளன. ஆனால், புதுக்கவிதையும் சிறுகதையும் தொடர்ந்து
புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது. இதனால்
தேர்வுக்காக இலக்கியம் படிக்கும் மாணவர்கள், பள்ளி
வாழ்க்கைக்குப் பிறகு படைப்பிலக்கியத்தின் பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை. தேர்வுக்காக இலக்கியம் என்ற நிலையோடு இளையோரின் நெஞ்சுக்கு
நெருக்கமான இலக்கிய வடிவம் என்ற நிலையும் சேர்ந்தால்தான் புதிய படைப்பாளிகள்
தோன்றுவார்கள். எஸ்.பி.எம். மலாய் இலக்கியத் தேர்வில் எல்லா
இலக்கிய வடிவங்களையும் அரவணைக்கும் போக்கு உள்ளது.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மாணவர்களிடையே எழுத்தாற்றலை வளர்க்கும் நோக்கில் கோலசிலாங்கூர், இரவாங், மலாயாப் பல்கலைக்கழகம் போன்ற இடங்களில்
சிறுகதை / கவிதை எழுதும் பட்டறையை நடத்தியபோது
என் பங்களிப்பை வழங்கினேன். மாணவர்கள் எழுதும் படைப்புகளைத் திருத்தி ஏடுகளுக்கு
அனுப்பி அவர்களுக்கு உற்சாகம் ஊட்டி வருகிறேன். உள்ளூர் படைப்பாளர்களின் நூல்களைக்
குறைந்த விலையில் பெற்று அவர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறேன். அந்த வரிசையில்
எம்.ஆர்.தனசேகரன், மு.மணிவண்ணன்,
கோ.புண்ணியவான், அ.கந்தன், சுதந்திரன்
போன்றோரின் நூல்களை
அறிமுகப்படுத்தியுள்ளேன்.
கே: மலேசியத் தமிழ் இலக்கியப் போக்கின் நிலை மனநிறைவளிக்கிறதா?
பதில்: மலேசிய அரசின் அங்கீகாரம் இன்னும்
தமிழ்மொழிப் படைப்புகளுக்கு எட்டாக் கனியாக இருப்பதுதான் வேதனைக்குரியதாக உள்ளது.
மலாய் மொழியில் எழுதினால்தான் அரசின் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நிலை இருந்தாலும்
இந்நாட்டின் மற்ற மொழி இலக்கியங்களையும் அரவணைத்து அங்கீகரிக்கும் (இந்தியா,
சிங்கப்பூர்போல்) நிலை இங்கு உருவாக வேண்டும். அதற்கான முயற்சிகள் இதுவரை இங்கு
மேற்கொள்ளப்படவில்லை என்பது உண்மை.
கே: நீங்கள் எழுதிய ஹைக்கூ கவிதைகளில்
உங்களைக் கவர்ந்தவை?
வண்ண
வண்ண மலர்கள்
அடுக்கி
அழகு பார்த்தேன்
அப்பா
கல்லறை
வாடகை
வீடு மாறும் நாளில்
நான்
நட்ட செடியில்
சில
பூக்கள்
சோம்பல்
மாணவன்
அழைத்துக்
காட்டினேன்
பாறை
இடுக்கில் செடி
பெய்யத்
தொடங்கியது மழை
நல்ல
வேளை
குடை
இல்லை
முறிந்த மரக்கிளை
எதையோ தேடும்
தாய்க்குருவி
No comments:
Post a Comment