காட்டுக் கோழியைத் துரத்தி வந்த
பூனை திகைக்க
வழித்தடம் மறிபட்டு
யானை ஒதுங்க
வலசை கிளம்பிய
கதிர்க்குருவி தடுமாற
காட்டின் நெஞ்சைக் கீறிக் கீறி
எழுகிறது ஒரு தார்ச்சாலை
காடுகளே எனக்கு உலகம் என ஆண்டின் பாதி
நாள்களைக் காட்டிலும் காட்டு விலங்குகளுடனும் கழிப்பவர் கவிஞர் அவைநாயகன். அவரின் ‘காடுறை உலகம்’ கவிதை நூலில் இக்கவிதை இடம்பெற்றுள்ளது. காடுகள் மீது தீராக் காதல்
கொண்டதனால் காடுகள் அழிப்புப் பற்றி இக்கவிதையில் தம் கவலையைப் பதிவு செய்கிறார்.
காடு எண்ணிலா உயிர்களின் உறைவிடமாகத்
திகழ்கிறது. பூமியின் உடலில் பச்சை ரத்தம் பாயும் இந்தப் பகுதியால்தான் மற்றவை
இன்னும் ஈரம் காய்ந்து போகாமல் உயிர்ப்போடு உள்ளன. மனிதன் இன்னும் அவிழ்க்காத
எத்தனையோ ரகசியங்கள், மர்மங்கள் அடர்ந்த காடுகளுக்குள்
மறைந்திருக்கின்றன.
சிறுவயது முதலே காடுகளோடு எனக்குப்
பழக்கம் உண்டு. அடர்ந்த ரப்பர் காட்டுக்கு நடுவில்தான் தோட்ட லயன் வீடுகள்.
வீட்டுக்கு வெளியே வந்து நின்று முன்னே பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம்வரை
எங்கும் நேர்த்தியாய் வரிசை பிடித்து நிற்கும் மரங்கள். காற்றுக்கு இசைவாய்த் தலை
அசைக்கும் மரங்கள். வகிடெடுத்துத் தலை வாரியதுபோன்று திருத்தப்பட்ட காடுகள்தான் என்றாலும் பெரிய
காட்டின் பிரம்மாண்டத்தை அவை எனக்குள் உருவாக்கியிருந்தன. அதிகாலைக்
கும்மிருட்டில் பால்வாளிகள் உரச அம்மா சக
தொழிலாளர்களோடு மலைக்காட்டில் நடக்கும்போது, காட்டு மரங்கள் சூழ்ந்த குறிப்பிட்ட ஓரிடத்தில்
பேய்கள் இருப்பதாய் ஏனோ கற்பிதம் செய்துகொண்டு பயந்து நடுங்கி அவர்களுக்கு நடுவில்
நடந்த நாள்கள், நினைவுகளின் பிடியில் இன்னும் பத்திரமாய்
இருக்கின்றன.
அண்மையில் விடுமுறையைக் கழிக்க, குடும்பத்தோடு கூச்சிங் நகர் போயிருந்தபோது, அந்நகருக்கு
வடக்கே இருக்கும் பாக்கோ தேசியப் பூங்காவின் அடர்ந்த காட்டுக்குள் உலாப் போகும்
வாய்ப்புக் கிடைத்தது. அரை மணி நேரப் படகுப் பயணத்தில் பாறைகள் சூழ்ந்த
கடற்கரையில் இறங்கி நடந்தால் நம்மைப்
பொருட்படுத்தால் தன் போக்கில் அங்கு மேயும் காட்டுப் பன்றிகளைக் காண முடிந்தது. எண்ணி
மாளாத வகையில் தாவரங்களும் உயிரினங்களும் அங்கிருப்பதாக
ஆய்வுகள் காட்டுகின்றன. நான் அந்தக் காட்டுக்குள்
கண்டெடுத்தவற்றை உங்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன்.
காட்டுக்குள் நடப்பதற்காக
அமைக்கப்பட்டுள்ள சிறு பாதையில் நடந்தால் வழியெங்கும் மேடு பள்ளங்கள். பூச்சிகள்
எழுப்பும் ஒலிகள். மண் மூடிக் கிடக்கும் இலைகள். ஒன்றோடொன்று தழுவிக் கிடக்கும்
வேர்கள். பாதையில் கொஞ்சம் கவனம் குறைந்தாலும் அவ்வளவுதான். நான் சில முறை தடுக்கி
விழப் பார்த்தேன்.
வேர்கள்
பாறைகள் மேடுபள்ளம்
நிறைந்த காட்டில்
தடுக்கி விழப்போன
என்னைப் பார்த்து
மகன் பதறினான்
"அப்பா, வேர
பிடிச்சிக்குங்க
விழ மாட்டீங்க"
பல முறை வேர்தான் என்னைக் கீழே விழாமல்
தடுத்துக் காத்தது. எண்ணிப் பார்த்தேன்
காட்டுக்குள் மட்டுமல்ல. நாட்டுக்குள்ளும் நாம் தடுக்கி விழாமல் இருக்க வேர்கள்தான்
நமக்குத் துணை. நம் இனத்தின் வேர்களாக இருக்கும் மொழியை, பண்பாட்டை, கலையை உறுதியாகப் பிடித்துக்கொண்டால்
நாம் ஏன் கீழே விழுந்து துன்பப்படப்
போகிறோம்?
வழியில் எத்தனையோ
வேர்களைத் தாண்டிக் காட்டின் அடர்த்தியை விசாரித்துக்கொண்டு முன்னே போனாலும் ஒரு வேரைத் தாண்ட முனைந்தபோது மின்னல்
கீற்றாய்ப் பழைய நினைவுகள் தோன்றி மறைந்தன. பல மணிநேர உழைப்பைக் கீழே கொட்டிவிட்டு
அப்பா, அம்மாவிடம் திட்டு வாங்கிய பழைய நாள்களை
எப்படி மறக்க முடியும்?
இடறல்
வேர் தடுக்கி
இடறிவிழப் போகையில்
நினைவில் இடறும்
பால்வாளியோடு
வேர்தடுக்கி விழுந்து
பாலில் நனைந்த கணங்கள்
காடு எப்பொழுதும் மௌன
மொழியைத்தான் பேசுவதாக நினைக்கிறோம். ஆனால், வெளியே இருப்போர் அறியாத எத்தனையோ ஓசைகள், அசைவுகள் உள்ளே நிறைந்திருக்கின்றன. காதோடு சேர்த்து மனம் கொடுத்துக்
கேட்டால்தான் அவை நமக்குப் புலப்படும்.
அதனை ஆண் மனத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தேன்.
ஆண் மனம்
ஆண் மனம்போல காடும்
எத்தனையோ ஒலிகள்
இரைச்சல் ஓசைகள்
முனகல்கள் யாருமறியாமல்
இரகசியங்களாய்...
நினைவுப் பள்ளங்களில்
தேங்கிவிட்ட சில காட்சிகளை நம்மால் எப்பொழுதும் நீக்க முடிவதில்லை. புதிய அனுபவங்களும் காட்சிகளும் அதன் மேல்
ஒட்டப்பட்டாலும் மனத்தின் அறைகளில் பழைய காட்சிகள் சகாவரம் பெற்று நிலைத்து
விடுகின்றன. எந்தக் காட்டுக்குள் நுழைந்தாலும் எனக்குப் பழக்கமான இன்னொரு காட்டுக்குள் நுழைவதுபோன்ற உணர்வு எழுவதைத்
தவிர்க்க முடியவில்லை.
இன்னொரு காடு
அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து
அதன் காட்சிகளை
கண்கள் விழுங்க
உள்ளே நடக்கும்போது
இன்னொரு காட்டுக்குள்ளும்
நுழைகிறேன்
ரப்பர் மரங்கள் சூழ் காடு
காடு உலாப் போகையில் தூறலாக இருந்த மழை
வலுக்கத் தொடங்கியது. தலை நனைந்த காடு நீர்த்துளிகளை இலைகளில் வழியாய் மண்ணுக்கு
அனுப்பியதை ரசித்தேன். அந்த இலைத்துளிகள் உடலை மட்டுமா நனைத்தன? உணர்வையும் நனைத்துப் புதுப்பித்ததைப் பதிவு செய்தேன்.
துளித்துளியாய்
இலைகளிலிலிருந்து
நீர்த்துளிகள்
என்மேல் விழுந்து
நனைக்கையில்
என்னிலிலிருந்து
துளித்துளியாய்
கவிதை
பாக்கோ தேசியப்
பூங்காவில், கூர்மையான மூக்கு,
நீண்ட வால் இவற்றோடு பெரிய வயிறுகொண்ட வித்தியாசமான ஓர் ஆண் குரங்கினைப்
பார்த்தோம். அங்கிருந்த வழிகாட்டி அது புரோபோஸ்சிஸ் (proboscis) வகை குரங்கு என்றும் உலகில் அழிந்துவரும் இனமென்றும் குறிப்பிட்டார்.
எங்களை ஏறெடுத்தும் பாராமல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டது. அதன் கதையை
அவர் விளக்கியபோது அதன் மீது கருணை எழுந்தது.
தனிமை
காடு உலா முடிந்தபோது
தனியே மரத்திலொரு
குரங்கு பார்த்தோம்
வீரியம் குறைந்து
தகுதி இழந்ததால்
இன விலக்குக்கு
ஆளானதென்றார்
உடன் வந்த வழிகாட்டி
வேறு பக்கம் முகந்திருப்பிய
அதன் பார்வையில் கசிந்தது
சோகமா வெறுப்பா
கேமராவால்
பதிவு செய்ய முடியவில்லை
எந்தப் பயணத்திலும் எண்ணிய இலக்கைத் தொடுவதுதான்
முக்கியமானது. ஒரு நாவலில் உச்சம்போல. ஒரு
பெண்ணின் மனத்தை வெல்ல முனைவதுபோல. அதுவரை மனங்கொள்ளும் ஆர்வம், எதிர்பார்ப்பு அளவிடற்கரியது. இலக்கை அடைந்துவிட்டால் எல்லாம் இறங்குமுகம்தான்.
தீர்ந்துபோய்...
காடு
உலா தொடக்கத்தில்
இருந்த
வேகம்
துடிதுடிப்பு
ஆர்வம்
பரபரப்பு
எல்லாம்
தீர்ந்துபோயிருந்தன
எல்லையைத்
தொட்டுத்
திரும்புகையில்
நாம் வாழும் சூழலில்
காணும் அனைத்தும், கடந்துபோகும் கணங்களும் நம் கண்களுக்குச் சாதாரணமாகத் தெரியும். அதன்
தனித்துவத்தை நாம் உணர்வதில்லை. வேறு சூழலில் மூழ்கி எழுந்துவிட்டு வெளியே
வந்தால்தான் நம் பார்வையின் கோளாறு நீங்கிச் சுற்றியிருப்பதை ஆழ்ந்து நோக்குவோம்.
ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுவோம்.
புதிதாய்
இரண்டு மணிநேரம்
காடு உலா முடித்து
வெளியே வந்தபோது
கடற்கரை, வீடுகள்,
வான்வெளி, மனிதர்கள்
எல்லாம் புதிதாய்...
அங்கிருந்து திரும்புவது பெரும்
சிக்கலாகிவிட்டது. கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாகிப் படகில் ஏறிப் பயணிப்பதே
ஆபத்தானது என்பதால் காடு உலா வந்த பலரோடு காத்திருந்தோம். மழையும் வலுக்கத்
தொடங்கியது. வேறு வழியின்றிக் காட்டில் அரைமணி நேரம் நடந்து வேறு பகுதிக்கு வந்து
படகு ஏறினோம். நாங்கள் காட்டில் எத்தனையோ எறும்புக் கூட்டங்களை, சிற்றுயிர்களைப் பார்த்தோம். நீங்களும் பார்த்திருப்பீர்கள். நமக்குத்
தோன்றாத ஒன்றை அவைநாயகன் தன் நுட்பமான பார்வையில் பார்க்கிறார்.
தானாய் ஒரு
கல் பெயர்ந்தாலும்
வீடிழக்கும்
சிற்றுயிர்கள்
No comments:
Post a Comment