நம் குரல்

Friday, December 22, 2017

குருதி காய்ந்த மண்ணில்
ஆகஸ்டு மாதத்தில் ஒரு வார பள்ளி விடுமுறையின்போது, இலங்கைக்குப் பயணம் போய் வரலாம் என நண்பர் பலராமன் அழைத்தபோது முதலில் தயங்கினேன். நான் சுற்றிப் பார்க்க விரும்பிய நாடுகளில் இலங்கையும் ஒன்று. அங்கு விடுதலைப் போராட்டத்தின் தோல்வியும் இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் இழப்பும் பெரும் மனச்சோர்வை தந்ததால், இனி இலங்கை மண்ணில் கால் வைக்க வேண்டாம் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. ஆனால், நண்பர்களின் அழைப்பும் அன்பு மனைவியின் ஆலோசனையும் என மனத்தை மாற்றிவிட்டது. நண்பர்கள் எண்மராய் மேற்கொண்ட ஆறு நாள்கள் பயணம் மறக்க முடியாத இனிய பயணமாக அமைந்தது.

கொழும்புவில் தமிழ்

போர் ஓய்ந்த மண்ணில் எல்லாக் கெடுபிடிகளும் தளர்ந்து விட்டன. எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி எந்த இடத்திற்கும் பயணம் போய் வரலாம். போர் நடந்த தடயங்கள் முற்றாகத் துடைத்தெறியப்பட்டு விட்டன. சிங்களத்தோடு தமிழும் அதிகாரப்பூர்வ மொழி என்பதால் கொழும்புவில் சாலையின் பெயர் தொடங்கி எல்லா அரசு அலுவலகங்களின் முகப்பிலும் தமிழைத் தரிசிக்க முடிகிறது. தொழிற் பயிற்சி அதிகார சபை, வைத்தியசாலை, வைத்தியக்  கலாநிதி என இலங்கைத் தமிழ் நம்மை வரவேற்கிறது.

கொழும்புவிலிருந்து வடக்கு நோக்கித் தமிழர் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் போக எட்டு மணி நேரப் பயணம். விமானப் போக்குவரத்துக் கிடையாது. பேருந்து அல்லது இரயில் பயணம். நாங்கள் தொயோத்தா வாகனத்தில் இடையிடையே கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்று சேர பன்னிரண்டு மணி நேரம் ஆனது.
தமிழர்களின் அடையாளமாய், முக்கிய மையமாய் யாழ்ப்பாணம் காட்சி தருகிறது. மலாக்கா கோட்டைபோல போர்த்துகீசியர், டச்சுக்காரர் கட்டிய கோட்டை அங்கு உள்ளது. போரின்போது அநியாயமாய் எரியூட்டி அழிக்கப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகம் மீண்டும் பழைய தோற்றத்தோடு கம்பீரமாய் நிற்கிறது.  அங்குச் சென்று தலைமை நூலகரைச் சந்தித்து என் இரு கவிதை நூல்களின் மூன்று பிரதிகளை வழங்கினேன். அவற்றை மகிழ்வோடு பெற்றுக்கொண்டார். யாழ் நூலகத்தைப் பற்றி நான் எழுதிய கவிதை நூலில் இடம்பெற்றிருப்பதறிந்து மகிழ்ந்தார். நூலகத்தைச் சுற்றிப் பார்த்தோம். அரிய சுவடிகளும் நூல்களும் அழிக்கப்பட்ட சோகத்தைத் தன்னுள் புதைத்துக்கொண்டு கட்டடம் முழுக்க நூல்களால் நிரம்பி நிற்கிறது யாழ் நூலகம்.  

இலங்கையில் தமிழ் ஏடுகள்மலேசியாவை மிஞ்சும் வகையில் இலங்கையில் நிறைய தமிழ் நாள், வார, மாத இதழ்கள் வெளிவருகின்றன. வீரகேசரி, தினக்குரல், சுடர்ஒளி, தமிழ்த்தந்தி, தினகரன், தமிழ் mirror, வார மஞ்சரி, Daily மெட்ரோ News... என எண்ணிக்கை வியப்பூட்டுகிறது. பக்க அமைப்பும் உள்ளடக்க நேர்த்தியும் செய்தி விளக்கக் கட்டுரைகளும் வாசிப்போரை ஈர்க்கும் வண்ணம் உள்ளன. மக்களுக்கு வாசிப்புச் சுவையோடு நிகழ்காலச் சமூக, அரசியல் குறித்த தெளிவை ஏற்படுத்துவதில் இவை முக்கியப் பங்கினை ஆற்றி வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை ஏடுகளில்தான் எத்தனை எத்தனை இணைப்புகள்...படைப்புகள். நாட்டு நடப்பு, உலக நடப்பு பற்றி விரிவான அலசல்கள். இத்தனை கனமான ஏடுகளுக்குப் பின்னால் இருக்கும் பரந்த வாசகர் தளம் அவற்றுக்கு ஆதார சுருதியாக இருப்பதை உணர முடிகிறது.

இலங்கையில் கோயில்கள்


இலங்கையில் கோயில்களுக்குக் குறைவில்லை. எந்த ஊரிலும் நம்மை வரவேற்று அருள் வழங்க ஆலயங்கள் காத்திருக்கின்றன. பயணத்தின்போது ஆஞ்சநேயர் ஆலயம், முன்னேஸ்வரம் ஆலயம், நகுலேசுவரர் ஆலயம், கருமாரியம்மன் ஆலயம், சீதை ஆலயம், நல்லூர் கந்தசாமி ஆலயம், கண்டியில் புத்தர் கோயில் எனப் பல திருத்தலங்கள் சென்று வந்தோம். முன்னேஸ்வரம் சிவன் ஆலயத்தில் பூசைக்காகக் காணிக்கையோடு காத்திருந்த பக்தர்களில் பெரும் பகுதியினர் சிங்களவர்கள் என ஆலய குருக்கள் கூறினார். 
இக்கோயிலில் மக்கள் இனம், சமய, மொழி வேறுபாடின்றி வழிபடுவதைக் காண முடிகிறது.வடக்கில், தமிழர் வாழும் பகுதிகளில் உள்ள காலி நிலங்களில் வேலி அமைத்துத் பௌத்த விகாரைகளைக் கட்டுவதில் இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது. இந்தப் பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்பு இருந்தாலும் அரசு கண்டுகொள்ளவில்லை. வெற்று நிலங்களில் புத்தர் புன்னகை ததும்ப தனியே அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது.


போர் ஓய்ந்தும்..

போர் ஓய்ந்தும் சோகம் தீராமல் இன்னும் மிச்சமிருக்கிறது என்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. தமிழர்கள் முகங்களில் அமைதியும் இனம் புரியாத சோகமும் இழையோடுவதை உணர்ந்தோம். போரின்போது காணாமல்போன பல்லாயிரக்கணக்கானவர்கள் எங்கே எனக் கேட்டுக் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் இன்னும் தொடர்கின்றன. அரசியல் தீர்வை நோக்கிப் பேச்சு வார்த்தைகள் தொடர்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அரசியல் விழிப்பூட்ட வேண்டியதின் அவசியம் குறித்துத் தொடர்ந்து பேசுகிறார்.
போர் நடந்த பகுதிகள்

யாழ்ப்பாணத்திலிருந்து தெற்கு நோக்கிய பயணத்தில் போர் நடந்த பல இடங்களைக் கடந்து வந்தோம். ஆனையிறவு, கிளிநொச்சி, பரந்தன், வவுனியா என ஒவ்வோர் இடத்திலும் வாகனத்தை நிறுத்தி வரலாற்றில் கலந்து கரைந்துபோன போர்க்காட்சிகளை மனக்கண்ணில் நினைவு கூர்ந்தோம். ஆனையிறவு படைத்தளத்தைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகளிடமிருந்து அதனை மீட்ட இலங்கைப் படையினர் அங்கு வெற்றிச் சின்னத்தை நிறுவியுள்ளனர்.   ஈழ மண்ணில் நிகழ்ந்த ஆக்கிரமிப்பின் அடையாளத்தை காட்டித் தமிழர்களின் நெஞ்சில் மாபெரும் காயத்தை ஏற்படுத்தி நிற்கிறது ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுத் தூபி. ஆயினும், 1991 ஜீலை 13ஆம் திகதி இரவு ஆயிரக்கணக்கான வெடிபொருட்களைப் பொருத்தி இம்முகாமுக்கு அனுப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் புல்டோஸர் இன்னும் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது ஒருவகையில் அவர்களின் வீரத்தைப் பறைசாற்றுவதாகவே நாங்கள் உணர்ந்தோம். வழிநெடுக முக்கிய இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர் வாழும் பகுதிகள் இராணுவத்தின் முழுக்கட்டுப்பாட்டில் வந்து விட்டன.

சுற்றுலாத் தலங்கள்


இலங்கையின் மத்தியில் மலைப் பகுதியில் அமைந்துள்ள இரு முக்கியச் சுற்றுலாத் தலங்கள் கண்டியும் நுவரெலியாவும்தான். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் இங்கே குவிகிறார்கள். அதற்குக் காரணம் அதன் பசுமை போர்த்திய இயற்கை அழகும் உடலைத் தாலாட்டும் இதமான குளிரும்தான். கண்டியில் உள்ள புத்தமதக் கோயிலில் புத்தரின் பல் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்துத் தகவல் அறிய இணையத்தில் தேடினேன்; கிடைத்தது.
கி,மு. 500 ஆம் நூற்றாண்டில் புத்தர் இறந்தவுடன் அவரது சீடர்கள் புத்தரின் உடலை எரித்து விட்டார்கள். புத்தரின் பெண் சீடரான கீமா என்பவர் மட்டும் புத்தரின் நினைவாக ஒரே ஒரு பல்லை அப்போதைய கலிங்கத்து மன்னன் [ இப்போதைய ஒரிஸ்ஸா] பிரம்மதாத்திக்கு அன்புப் பரிசாகக் கொடுத்தார்.‘புத்தரின் பல் எந்த நாட்டில் இருக்கிறதோ, அங்கு மழை பெய்யும், செல்வம் கொழிக்கும், சுபிட்சம் வரும்...’ என்று செய்தி பரவ ஆரம்பித்தன. வறட்சியில் வாடும் பல நாட்டு அரசர்கள், புத்தரின் பல்லைக் குறி வைக்கிறார்கள். கலிங்கத்தின் மேல் போர் தொடுக்கிறார்கள். அமைதியை படிக்கச் சொன்ன புத்தரின் பல்லுக்காக பல்லாயிரம் உயிர்கள் மடிகின்றன. புத்தரின் பல் பல அரசுகளின் கைமாறிச் சென்று கொண்டே இருந்தது. புத்தர் இறந்து 800 ஆண்டுகள் கழித்து மீண்டும் கலிங்க நாட்டுக்கு வந்தது பல். அப்போது கலிங்கத்தின் அரசனாக இருந்தவர் குஹசீவா. இந்தப் பல்லால் தன் நாட்டில் பல அதிசயங்கள் நிகழ்வதாக நம்புகிறார் குஹசீவா. தகவல் வெளியே பரவி, மீண்டும் பல்லுக்காகப் பல போர்கள் ஆரம்பிக்கின்றன. பல்லைக் காப்பாற்ற குஹசீவா, தன்னுடைய மகள், மருமகனிடம் பல்லைக் கொடுத்து இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார். இலங்கை ராஜா குஹசீவாவின் குடும்பத்தை ராஜ மரியாதையோடு வரவேற்று, பல்லை வாங்கி கொள்கிறார்.. இன்றும் புத்தரின் பல் இலங்கை கண்டியில், உள்ள புத்த மதக் கோவிலில் பத்திரமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒரு பல்லுக்கு யுத்தமா? வரலாற்றுப் புனைவுகளை அசைபோட்டவாறு நுவரெலியாவுக்குப் பயணமானோம்.மலையகத் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி நெவரெலியா. உயரமான மலைகள், அருவிகள், ஏரி, பூங்கா, கோயில்கள், கடைத்தெருக்கள், தேயிலைத்தோட்டங்கள், வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் எனச் சுறுசுறுப்பாக இயங்குகிறது நுவரெலியா. ஒரு தேயிலைத் தோட்டத்திற்குள் வாகனத்தை விடச் சொன்னோம்.  ஆங்கிலேயருக்குப் பிறகு, இப்பொழுது சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் தேயிலைத் தோட்டங்கள் வந்து விட்டன.

தேயிலை பறித்துச் சுமந்து வந்த பெண்களிடம் பேச்சுக் கொடுத்தோம். “உங்கள் வீடுகள் எங்கே?” என்றேன். “எஸ்டேட்டு லயன் அந்தப் பக்கம் இருக்கு” என்று பதில் வந்தது. தையல்நாயகி, ஆறுமுகம், நித்யா, அமுதா.. எனப் பெயர்கள். தோட்டத்தில் கருமாரியம்மன் ஆலயம். மலேசியாவில் நம் ரப்பர் தோட்டத்தை நகல் எடுத்ததுபோல் அங்குத் தேயிலைத் தோட்ட வாழ்க்கை. வளமான வாழ்க்கை என்று சொல்ல முடியாது. ஏதோ வாழ்நாள்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். சிறுமியொருத்தியிடம் “அப்பா, அம்மா என்ன வேலை செய்றாங்க?” என்று கேட்டேன். “அம்மா எஸ்டேட்டுல வேல செய்றாங்க. அப்பா அத்த கூலெ என்றாள். எனக்குப் புரியவில்லை. “அத்த கூலேன்னா?” நண்பர் மணியம்தான் தெளிவுபடுத்தினார். “அற்றைக்கூலி பாலா”.தேயிலைத் தொழிற்சாலையொன்றுக்குச் சென்று தேயிலை தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தோம். நம் நாட்டில் கேமரன்மலையில் பார்த்ததுதான். ஆயினும், கமலேஸ்வரி எனும் வழிகாட்டி அழகு தமிழில் விளக்கிச் சொன்னதும் சூடான இலங்கைத் தேநீரை வழங்கி உபசரித்ததும் தனிச் சுவையாக இருந்தது.


அங்கிருந்து கொழும்பு திரும்பி, இலங்கை மண்ணுக்கு விடைசொல்லி விமானத்தில் பயணித்தபோது கலவையான உணர்வலைகள் எங்கள் மனமெங்கும் வியாபித்திருந்தன. உள்நாட்டுப் போரினால் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தமக்கான வாழ்வு தேடிப் போய்விட்டார்கள். மிஞ்சி இருப்பவர்கள் போருக்குப் பிந்திய இழப்புகளிலிருந்தும் இடர்பாடுகளிலிருந்தும் தம்மை மீட்டெடுக்கும் முயற்சியில் இன்னும் முயல்கிறார்கள். வாழ்வைச் சூழ்ந்துள்ள கருமேகங்கள் விலகும் என்ற நம்பிக்கையை மனத்தில்  வார்த்தவாறு பயணம் தொடர்கிறது.தமிழ் ஈழம் 200 என்று 200 ஹைகூக்கள் எழுதிய நான் இந்த இலங்கை பயணத்தையும் கவிதையில் பதிவு செய்ய நினைத்தேன். இதோ, அந்த மண்ணில் விளைந்த வரிகள்:

ஈழ மண்ணிலிருந்து..

எல்லாம் துடைத்துத்
தூய்மை செய்தாகிவிட்டது
குருதித் துளிகளை
இனி யாரும் காணமுடியாது

அழுகுரல்களுக்கு இனி
அவசியமில்லை
விரக்தி மீறிப் பூக்கின்றன
ஆங்காங்கே சில
புன்னகைப் பூக்கள்

கைவிடப்பட்ட நிலங்களில்
பாதுகாப்பாய்ச் சம்மணமிட்டு
அருளுரைகளை
வழங்கிக் கொண்டிருந்தார் புத்தர்

தொலைதூர தேசங்களிலிருந்து வரும்
ஏக்கம் சுமந்த கடிதங்களுக்குத்
தளர்ந்த விரல்கள்
மண்ணின் மணம் குழைத்துப்
பதில் வரைந்து கொண்டிருந்தன

கவன ஈர்ப்புப் போராட்டங்களில்
அழுது புலம்பும் மனங்களில்
மெல்ல மறைகின்றன
     காணாமல் போனவர்களின்
     முகங்கள்

கண்காணிப்புக் கேமராக்கள்
இனித் தேவையில்லை
     எங்கும் வேவுபார்க்கும்
     கண்கள்

திரைமறைவில் யார் யாரோ
மீண்டும் திருத்தி எழுத
தயாராகின்றன
புதிய ஏற்பாடுகள்         

                 ந.பச்சைபாலன் 

(நன்றி - www.kazhams.com)

No comments:

Post a Comment