புவி எங்கும் தமிழ்க்கவிதை
இன்று, தமிழ்ச் சமூகம் உலகெங்கும் பல திசைகளில் விரிந்து பரந்து
வாழும் சூழலைக் காண்கிறோம். சங்க காலம் தொடங்கி தமிழர்கள் தங்கள் தாய்
மண்ணிலிருந்து வெவ்வேறு திசைகளுக்குப் பயணித்ததைச் சங்க இலக்கியங்கள் சான்று
பகருகின்றன. ஐரோப்பியரின் காலனித்துவ ஆட்சியில் தமிழர்கள் தென்கிழக்காசிய
நாடுகளுக்கும் தென்ஆப்பிரிக்க நாடுகளுக்கும் உடலுழைப்புத் தொழிலாளர்களாகக் கொண்டு
செல்லப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர். ஈழப்போரின் விளைவால் கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தமிழர்களின்
புகலிடங்களாக மாறியுள்ளன. பொருளாதார தேவைகளுக்காகவும் தமிழர்கள் தங்கள்
வாழ்விடங்களை விட்டு வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்கிறார்கள். 21ஆம் நூற்றாண்டில்
உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் தமிழ்க்குரல் ஒலிக்கும் சூழலை நம்மால் உணர முடிகிறது.
உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் கவிதைக்
குரலைப் பதிவு செய்யும் நோக்கில் சாகித்திய அகாதெமி, எழுத்தாளர் மாலனின் முயற்சியில் ‘புவி எங்கும் தமிழ்க் கவிதை’ எனும் கவிதைத் தொகுப்பு
நூலை வெளியிட்டுள்ளது. இதன் தொகுப்பாசிரியர் மாலன் மூத்த எழுத்தாளர். கவிஞரும்
கூட. பரிசுகள் பல வென்ற படைப்பாளி. அயலகத் தமிழ்ப்
படைப்புகளில் ஆர்வம்கொண்ட இவர், சாகித்திய அகாதெமிக்காக
அயலகச் சிறுகதைத் தொகுப்பையும் உருவாக்கித் தந்துள்ளார். ‘திசைகள்’ என்ற இணையம் வழிச் சஞ்சிகையின் ஆசிரியர். புதிய
தலைமுறை என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
இதற்கு முன்பாக இந்தியா
டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம் ஆகிய முன்னணித் தமிழ் இதழ்களிலும், சன் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். மேலும், அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்றவர்.
‘தமிழ்க் கவிதை
என்னும் நெடுமரம் காலம் காலமாய் நம்மீது கவிதைகளைச் சொரிந்து கொண்டிருக்கிறது.
அந்தக் கவிதைகளில் சிலவற்றைக் காற்று உங்கள் கையில் உள்ள இந்தச் சிறு தடாகத்திலும்
கொணர்ந்து சேர்த்திருக்கிறது’ என்று மாலன் இந்நூலின்
முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
உலகெங்கும் வாழும்
தமிழ்க்கவிஞர்களிடமிருந்து கவிதைகளைத் திரட்டி இந்நூலை மாலன் உருவாகியுள்ளார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை,
ஐக்கிய அரபு அமீரக நாடுகளான அபுதாபி, கத்தார்,
துபாய், ஷார்ஜா இவற்றுடன் கனடா, சவுதி அரேபியா, சிங்கப்பூர், சீனம்,
ஹாங்காங், செஷல்ஸ், டென்மார்க்,
நார்வே, நெதர்லாந்து, பப்புவா,
நியூ கினி, பிரான்ஸ், மலேசியா,
மியான்மர், ஜெர்மனி என ஐந்து கண்டங்களில் உள்ள
22 வாழ்விடங்களிலிருந்து 58 கவிஞர்களிடமிருந்து திரட்டப்பட்ட
71 கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மூத்த கவிஞர்களும், பல்கலைக்கழக
இளம் நட்சத்திரங்களும் ஒரு சேர இடம்பெறுகிறார்கள். நிலம், காலம்,
வகை எனப் பல வகைகளில் விரிந்த தொகுதியாக இது திகழ்கிறது.
மாலன்
இந்நூலின் பாடுபொருள்கள் பன்முகம் கொண்டதாகவும் சமகாலக் கவிதைகளின்
பாடுபொருள்களை மையமிட்டதாகவும் உள்ளன. இது குறித்து மாலன் பின்வருமாறு
குறிப்பிடுகிறார். ‘தன்னிரக்கம், சுயவியப்பு, நினைவலைகள், அகமலர்ச்சி,
போரின் அதிர்வுகள், புலம்பெயர்தலின் இடர்கள்,
பிரிவாற்றாமை, புதிய நிலங்கள் அளிக்கும்
அகச்சிக்கல்கள், மொழியுடனான உறவு, கவிதையியல்
சார்ந்தெழும் கேள்விகள், இன்னதென விளக்க முடியா மனக்குமைவு
இவை எல்லாவற்றையும் இங்குள்ள கவிதைகளின் பாடுபொருளாகக் காணலாம். மரபான காதல்,
வீரம், இயற்கை வர்ணனை, கைக்கிளை
ஆகியவற்றிலிருந்து தமிழ்ச் சமூகம் நவீன உலகின் பல அடுக்குகள் கொண்ட சிக்கல்களை
எதிர்கொள்கின்றன என்பதற்கும் இந்தக் கவிதைகள் சான்றளிக்கும்’
71 கவிதைகளும் பல்வேறு
வகைப்பாடுகளைக் கொண்டுள்ளதை உணர முடிகிறது. பெண்ணியப் பார்வை கொண்டவை, இருண்மை நிறைந்தவை, குறீயீடுகள்
கொண்டவை, படிமங்களாக உணர்த்துபவை,
உள்ளொடுங்கிய தொனியில் அமைந்தவை, கதை சொல்லும் கவிதைகள், அங்கதக் குரலில் ஒலிப்பவை, யாப்பமைதி கொண்டவை என
அதன் வகைப்பாடுகளை மாலன் பட்டியலிடுகிறார்.
22 நாடுகள்
58 கவிஞர்கள்
|
தமிழ்க்கவிதை உலகில் தங்கள் கவிதைகளால் புகழின் சிகரங்களில் உலவும் மூத்த
கவிஞர்களான நுஃமான் (இலங்கை), க.து.மு. இக்பால் (சிங்கப்பூர்), சேரன் (கனடா), அம்பி (பப்புவா நுயூ கினியா) ஆகியோரின் கவிதைகளும் கவிதையுலகில்
புதியவர்களான இளையோரின் கவிதைகளும் இந்நூலுக்குச் சிறப்பைச் சேர்க்கின்றன.
நுஃமானின் ‘துப்பாக்கி பற்றிய கனவு’, நா.சபேசன் (இங்கிலாந்து)
எழுதிய "நான் காத்திருக்கிறேன்', அனார் (இலங்கை)எழுதிய
"இரண்டு பெண்கள்', கோகுலக் கண்ணனின் (அமெரிக்கா) ‘அகராதியில் விழுந்த குழந்தை’, ஐக்கிய அரபு அமீரகம்-
துபையில் வசிக்கும் அய்யனார் எழுதிய "முப்பத்தைந்து டிகிரி விடியல்', தீபச்செல்வனின் (இலங்கை) ‘ஒரு கொரிலாவின் இறுதிக் கணம்’, கனடாவில் வசிக்கும்
கவிஞர் வ.ந.கிரிதரன் எழுதிய "நவீன விக்ரமாதித்தனின் காலம்', ஜெஸிலா பானுவின் (துபை) எழுதிய ‘குறையேதுமில்லை’ என
இத்தொகுப்பில் காணும் ஒவ்வொரு கவிதையும்
நம் கவனத்தை ஈர்க்கின்றன.
மலேசியக் கவிஞர்கள் ஐவர்
|
இந்தக் கவிதைத் தொகுப்பில் மலேசியாவின் ஐந்து கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கோ.புண்ணியவான், ந.பச்சைபாலன், கே.பாலமுருகன், அகிலன், பூங்குழலி ஆகியோரே அவர்களாவர். கோ.புண்ணியவானின் ‘யாருமற்றவர்களின் மறைவு’, ‘தமிழன்’, ந.பச்சைபாலனின் ‘வீடு திரும்புதல்’, கே.பாலமுருகனின் ‘கடைசிப் பேருந்து’, அகிலனின் ‘பெருங்காதல்’, பூங்குழலியின் ‘இனியவளின் குறிப்பு’, நாயொன்று இறந்தது குறித்த கதை’ ஆகிய கவிதைகளே அவை.
கோ.புண்ணியவான்
கோ.புண்ணியவானின் ‘யாருமற்றவர்களின்
மறைவு’ தனிமையில் வாழ்ந்து இறந்துபோகும் மனிதனின் இறுதிநேர
கணங்களைப் பதிவு செய்கிறது. இறப்பை அறியாத
மற்றவர்களின் மனஓட்டத்தையும் இதனில் இணைத்துப் பார்க்கிறார் கவிஞர். அதில்
சில வரிகள்:
திரும்ப
அழைக்கக்கூடுமென்றே
நம்பித்
தொலைக்கிறது
பதிலற்ற
தொலைபேசி அழைப்புகள்
சேர்ந்தும்
சேராது
நிரம்பி
மினுக்கிட்டபடியே
காத்திருக்கின்றன
குறுந்தகவல்கள்
நடை
நண்பர்கள் அழைப்புகள்
நாளை அல்லது
நாளை மறுநாள்
வந்துவிடக்கூடுமென
நம்பிக்கையில்
நகர்கின்றது
வேலையிடத்தின்
பதிலற்ற அழைப்புகள்
பொறுப்பற்றவன்
என்ற
நிர்வாகக் கோபத்தில்
கனன்றுவிடுகிறது
ஆடிக்கொருமுறையான
பிள்ளைகளின் தொடர்புகள்
எரிச்சலூட்டி அடங்கும்போது
அப்பா எப்போதும் போலவே
வெளிநாடு சென்றிருக்கலாமென
தேற்றிக்கொள்கின்றனர்
பூங்குழலியின் ‘இனியவளின் குறிப்பு’ எனும் கவிதை, குழந்தைகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிச் சமாளிக்கும் சூழலில்
விளைந்ததாகும். குழந்தைகள் கேள்விகளால் பெரியவர்களைத் திணறடித்தாலும் அதைக்
கவிதையாக்கும் வித்தை தெரிந்தவர் பூங்குழலி.
மழை
எங்கிருந்து வருகிறது
என்ற
நச்சரிப்பில் என் காலைத் தூக்கம்
கலைந்து
போனது.
கண்களை அகல
விரித்தபடி வெளியே
மழை
பெய்வதாக சொன்னவள்
விளையாட
போகமுடியாத சோகத்தை மறைத்தபடி
மழை
வேடிக்கையில் திளைத்திருந்தாள்.
முகம் கழுவி
வந்த என்னை முன் கேட்ட கேள்வி துரத்தியது.
மழை
வானத்திலிருந்து வருகிறது என்றேன்.
அது எப்படி
வானத்திற்குப் போகிறது என்றாள்.
வெயிலில்
சூடாகி
நீர்
ஆவியாகி மேலே போய் மேகமாகி
பாரம்
தாங்காமல் மேகம்
மீண்டும்
மழையாகிறது என்றேன்.
ஏன்
மழைநீரில் வானவில் கரைந்து வருவதில்லை என்றபடி
எழுந்து
போகிறாள்.
அவளின் கால்
சுவடெங்கும் கரைந்து கரைந்து
பதிகிறது
வானவில் வண்ணங்கள்
வீட்டின்
தரையெங்கும்.
‘வீடு திரும்புதல்’ எனும் என் கவிதை, மக்கள் ஓசையில் வெளிவந்தது. ஈழப்
போருக்குப் பின் அகதி முகாமில் சிக்கித் தவிக்கும் மனிதர்களின் சோகத்தை மையமிட்டு
இதை எழுதினேன்.
தொலைவிலிருந்தும்
அருகிலிருந்தும்
திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்
அவரவரும்
தங்கள் வீடுகளுக்கு
கண்ணுக்குத்
தெரியாத
மாய
இழைகளால்
பின்னப்பட்டுள்ளார்கள்
அவரவரும்
தங்கள்
வீடுகளோடு
வீடுகளுக்கும்
பயணங்களுக்கும்
இடைவெளி
நீளுகையில்
பள்ளம்
நிரப்பும் நீராய்த் ததும்புகிறது
அன்பும்
தாபமும் துயரும் கண்ணீரும்
வாழ்ந்த
வீட்டை விலைபேசி விற்க
பழங்கதைகள்
நினைவிலாட
கனத்த
இதயத்தோடு திரும்பிய கால்கள்
எதையோ தேடி
ஓடிக் களைத்து
மீண்டும்
பழைய பாதைக்கே மீள
அகால
நேரத்தில் திரும்பிய கால்கள்
சிதலமாகிய
தோட்ட வீட்டைப்
பிள்ளைகளுக்குக்
காட்ட
புல்லும்
புதரும் மண்டிய பாதையில்
இதயத்
தவிப்போடு பயணப்பட்ட கால்கள்
இறப்புச்
செய்தி கேட்டு
பொங்கும்
குமுறலை அடக்கியவாறு
ஆறுதலற்ற
மனம் அலைமோத
விரையும்
கால்கள்
தொலைவிலிருந்தும்
அருகிலிருந்தும்
அவரவரும்
தங்கள்
வீடுகளுக்குத்
திரும்பிக்கொண்டிருக்க
வீடுகளுக்குத்
திரும்பும்
பாதைகள் எங்கே
என்று குழம்பியவாறு
தயங்கித்
தயங்கி நிற்கின்றன
அகதி
முகாமில் கால்கள்
கே.பாலமுருகனின் ‘கடைசிப் பேருந்து’ கவிதை, ஒரு பெருநகரை மிகவும் கவித்துவமாகக் காட்சிப்படுத்துகிறது. காட்சிகளின்
ஊடாக ஒரு பெருநகருக்கான வாழ்வனுபவத்தைக் கவிதை கடத்துகிறது.
கடைசிப்
பேருந்திற்காக
நின்றிருந்த
போது இரவு அடர்ந்து
வளர்ந்திருந்தது
மனித
இடைவெளி
விழுந்து
நகரம் இறந்திருந்தது
சாலையின்
பிரதான குப்பைத் தொட்டி
கிளர்ச்சியாளர்கள்
அப்பொழுதுதான்
தொடங்குகிறார்கள்
பேருந்தின்
காத்திருப்பு இருக்கையிலிருந்து
விழித்தெழுகிறான்
ஒருவன்
நகர
மனிதர்களின் சலனம்
காணாமல்
போயிருந்தது
விரைவு உணவுகளின்
மிச்சம்
மீதியில்
கைகள் படர்ந்து
மேய்ந்து கொண்டிருக்கின்றன
ஊடுருவி
ஊடுருவி
யார் யாரோ
திடீரென
நெருங்கிக்
கொண்டிருக்கிறார்கள்
கறுப்பு
மனிதர்களின்
நடமாட்டம்
பேருந்து
நிற்குமிடம் மட்டும்
குறைந்த
வெளிச்சத்தில்.....
ஒரு சிறுமி
சாலையைக்
கடந்து வெறுங்கால்களில்
இருண்டுவிட்ட
கடைவரிசைகளை நோக்கி
ஓடும்போதுதான்
கடைசிப்
பேருந்து வந்து சேர்ந்திருந்தது
இரு நகர
பயணிகள் மட்டும்
முன்
இருக்கையின் இரும்பு கம்பியில்
தலைகவிழ்த்து
உறங்கியிருக்க
அபார
வெளிச்சம்
கடைசி
பேருந்து கொஞ்சம் தாமதமாகவே
வந்திருக்கலாம்
அகிலனின் ‘பெருங்காதல்’ கவிதை அகம் சார்ந்த
தன்னுணர்வு அடையாளங்களைப் பற்றியது. தீராத அலைகளைப்போல தன் வாழ்வும் தீராமல்
அழைக்கழிப்புக்கு ஆளாகும் நிலையைக் கவிதையில் காட்டுகிறார்.
ஆர்வமாய்
நான் பதிக்கும்
அத்தனை
தடங்களையும்
அவசர
அவசரமாய் அள்ளிக் கொண்டு போகிறது
ஓயாமல்
இந்த அலை
எங்குக்
கொண்டு
சேர்த்து
வைக்கும்
எனது, அத்தனை தடங்களையும்?
அதற்குத்
தெரிந்த வழியில் என்னை நேசிக்கிறது
அடங்காத
பெருங்காதலில்
கடல்
அயராத
பயணமாய்
நான்
இக்கவிதை நூலை விரிவும் செறிவும் கொண்டதாக உருவாக்குவதில் மாலனின் உழைப்பை உணர முடிகிறது.
இன்றைய உலகத் தமிழ்க் கவிதைகளின் போக்கினை ஆராய விழைவோருக்கு இஃது அரிய ஆவணமாக
விளங்கும் என்பதில் ஐயமில்லை. நிறைவான தொகுப்பாக இதனை உருவாக்கினாலும் ‘உலகின் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒரு தமிழ்க் கவிதையையாவது
திரட்டித் தொகுப்பொன்றை உருவாக்கும் கனவு இன்னும் என்னுள் உறங்கிக்
கொண்டிருக்கிறது. என்றோ ஒரு நாள் அது கைகூடும்’ என்று மாலன் கூறுகிறார். உலகெங்கும் வாழும் தமிழ்க் கவிஞர்களை ஒரே
தளத்தில் நிறுத்தி அவர்களின் கவிதை மனங்களைப் பேசவைத்த தொகுப்பாளர் மாலன்
பாராட்டுக்குரியவர்.
பாராட்டுக்குரிய முயற்சி. இந்த அரிய தொகுப்பு எங்கே கிடைக்கும்?
ReplyDelete