நம் குரல்

Sunday, May 16, 2010

காலந்தோறும் கவிதைமொழி



‘மௌனம் 9’ இதழில் இடம்பெற்ற கவிதைகளும் பிற படைப்புகளும் எனக்குள் பல்வேறு சிந்தனைகளைக் கிளறிவிட்டன. எம்.ஜி. சுரேஸின் கவிதை குறித்த விமர்சனம் எளிமையான புரிதலுடன் அமைந்திருந்தது. கடவுள் குறித்த புண்ணியவான், கே. பாலமுருகன் கவிதைகளும் பா.அ.சிவம், அகிலன், மகேந்திரன், நவீன், சை பீர்முகம்மது போன்றோரின் படைப்புகளும் தனித்துத் தெரிந்தன. அவற்றைப் படித்து அசை போட்டதின் விளைவாகக கவிதை குறித்த என் பார்வையை உங்கள் பக்கம் திருப்புகிறேன்.

வாசகனுக்கும் படைப்பாளனுக்கும் எதுதான் கவிதை என்பது தெளிவாக வரையறுத்துக்கொள்ள முடியாத, எளிதில் புரிந்துகொள்ளமுடியாத, புதிரான நிலையே இன்னும் நிலவுகின்றது. யாப்பு இலக்கணத்தோடு மரபு மாறாமல் எழுதப்படுவதே கவிதை என்று ஒரு சாராரும் மரபு என்கிற சிறையிலிருந்து விடுபட்டுச் சொற்கள் கொண்டாடும் சுதந்திர விழாவே கவிதை என்று ஒரு சாராரும் முரண்படும் நிலை தமிழ்க் கவிதைச் சூழலில் இன்னும் காணக்கூடிய காட்சியாக உள்ளது.

மரபுக் கவிதையிலிருந்து விலகி, அலங்காரங்களை விடுத்துத் தனக்கென பாதையமைத்துக் கவிதை புறப்பட்டபோது அது புதுக்கவிதை என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் ‘புது’ என்ற சொல்லும் உதிர்ந்து இன்று கவிதை என்ற பெயரோடு ஏடுகளில் வலம் வருகின்றது.

மரபுக் கவிதை வடிவத்திற்கு எதிராகக் கலகக் குரலாக உருவெடுத்த கவிதை காலந்தோறும் தனக்கான மொழியை புனரமைக்கும் முயற்சியில் உள்ளது. 1970 அல்லது 1980களில் மலேசியாவில் எழுதப்பட்ட புதுக்கவிதைகளுக்கும் புத்தாயிரத்தில் எழுதப்படும் (நவீன) கவிதைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை ஆழ்ந்து நோக்கினால் இதனை உணர முடியும்.

ஒரு காலக்கட்டத்தில் எழுதப்படும் கவிதை போன்று இன்னொரு காலக்கட்டத்திலும் கவிதை இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. கவிதை எழுதவரும் புதிய படைப்பாளிகள் தாம் வாழும் காலத்தின் கவிதை மொழியை அவதானித்து உள்வாங்கிக்கொண்டு அதே பாணியில் எழுதத்தொடங்குகிறார்கள். பலர் அந்தக் கவிதை மொழியின் பிடியில் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தேங்கிவிடுகிறார்கள். ஒரு சிலரே, அதிலிருந்து விடுபட்டுத் தங்களுக்கான கவிதை மொழியைக் கண்டடைகிறார்கள்; அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள்.

மனித மனம் எப்பொழுதும் புதுமையை நாடும் இயல்புடையது. அதற்கேற்ப காலந்தோறும் மனிதனின் கவிதைக்கான மொழியும் மாறுவது இயற்கையானது. மரபிலிருந்து முரண்பட்டு வந்த புதிய கவிதையும் பல்வேறு மாற்றங்களைக் கடந்து இன்று நவீன கவிதையாக நம்மிடம் மாறுபட்ட மொழியில் பேசுகிறது. ‘நவீன’ என்ற சொல்லும் நிலைக்காது. அதுவும் காலப்போக்கில் உதிர்ந்துபோகும். கவிதைக்கான மொழி புதிய தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கும். ‘நாங்கள் நவீன கவிஞர்கள்’ என்று தங்களைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் படைப்பாளிகள் எவ்வளவு காலத்திற்கு இந்த அடைமொழியோடு வலம் வரமுடியும்?

ஒரு காலக்கட்டத்தில் கவிதை எழுதுகிற கவிஞர்கள் தங்களின் முந்தைய படைப்பாளிகளை நோக்கி, “நீங்கள் எழுதின யாவும் கவிதைகளல்ல. எல்லாம் குப்பைகள். உங்களைக் கவிஞர்களாக நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை” என்று சாணி வாரி வீசும் மனப்போக்கு அவர்களின் அறியாமையைத் தாங்களே அறிவிப்பதாக இருக்கிறது.

“நவீனத்துவம், பின்நவீனத்துவம் வெற்றி பெறுமா?” என சை. பீர்முகம்மது கேள்வி எழுப்புகிறார். கவிதையில் இந்த இலக்கியப் போக்குகள் வெற்றி பெறுமா என்பது முக்கியமல்ல. வடிவத்தில் மட்டுமல்ல. உள்ளடகத்திலும் சொல்லின் சூட்சமம் அறிந்து அவற்றைப் பயன்படுத்துவதிலும் இன்றைய கவிதை புதுமைக் கோலம் பூணுகிறது. கவிதையின் நிரந்திரமான கோரிக்கை நவீனமாக, புதுமையாக இருப்பது என கவிஞர் சுகுமாரன் கூறுவது இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

இன்றையை நவீன கவிதை பழைய பிரச்சார பாணியை விடுத்து, அழகியல் கூறுகளைப் புறமொதுக்கி, சொல் விளையாட்டுகளை விட்டு விலகி, அலங்காரங்கள் இல்லாமல் உரைநடைத் தன்மையிலேயே வாசகனை நெருங்கி வருகிறது. இன்றைய கவிதை இதுவரை சொல்லாத வாழ்வின் கணங்களைப் பதிவு செய்கிறது; எந்தக் கருத்தாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது; மதிப்பீடுகளைக் கலைத்துப் போடுகிறது; எழுதி எழுதி சலித்துப்போன வழக்கமான சொல்லாடல்களை விலக்குகிறது; மனத்தின் ஆழங்களை திறந்து காட்டுகிறது. மொத்தத்தில் படைப்பாளிகள் தங்களைப் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ள கவிதை மொழி நெகிழ்ந்து கொடுக்கிறது.

நவீன் கூற்றுப்படி இங்கு யாரும் எதையாவது கிறுக்கி ‘இது பின் நவீனத்துவக் கவிதை’ என்றெல்லாம் சேட்டைகள் செய்வதாக எனக்குத் தோன்றவில்லை. அவரவர் தமக்கான சேறும் சகதியும் நிறைந்த கவிதை வயலில் இறங்கி தம்மால் ஒல்லும் மட்டும் நாற்று நடும் பணியில் ஈடுபடுகிறார்கள். நல்ல விளைச்சலை நாடியே விவசாயம் நடக்கிறது. சில வேளைகளில் அல்லது பல வேளைகளில் வெறுங்கையோடு வரப்புகளில் அமர்ந்து விடுகிறார்கள். தொடர்ந்து, அடுத்த நாற்று நடும் வேளைக்குக் காத்திருக்கிறார்கள்.

எழுத வந்த உடனேயே, ஒரு படைப்பாளி நவீன குளத்தில் குதித்து நீச்சலடிக்க முடியும் என எதிர்ப்பார்க்க முடியாது. பரந்த வாசிப்பு அனுபவத்தின் மூலம் புதிய கவிதை மொழியின் தாக்கம் தொடர்ந்தால் எந்தப் படைப்பாளியும் நவீன கவிதைச் சாரலில் தலைநனைக்க முடியும்; உள்ளடக்கப் புதுமையான படைப்புகளை வழங்க முடியும்.

“கவிதையில்எல்லாம்அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
சந்தேகமின்றி, இந்த நிபந்தனையுடன்
வெற்றுத்தாளில் நீ முன்னேற வேண்டும்”
- லத்தீன் அமெரிக்கக் கவிஞர் நிக்கனார் பாரா

(ந. பச்சைபாலன், மௌனம் இதழ் 10,
ஏப்ரல் 2010)

Tuesday, May 11, 2010

விடைபெறும் நேரம்..




வந்துகொண்டிருக்கின்றன
எதிரெதிர் திசைகளில்
நாம் போக வேண்டிய ரயில்கள்

நம்மை உற்றுப் பார்த்தபடி
தன் தாயிடம் தாவிப் பதுங்கி
ஏதோ பேசுகிறது ஒரு குழந்தை

கட்டண கழிப்பிட வாசலில்
சில்லறைகளைச் சேகரித்தபடி
யாரிடமோ பேசுகிறாள்
அந்த மலாய்ப்பெண்

இருக்கையில் சாய்ந்தபடி
உரத்த குரலில் சிரிப்பினூடே
கைப்பேசியில் யாரையோ சீண்டும்
தலைநரைத்த முதியவர்

ஒவ்வொருவரும் தனியாகவோ
அருகில் இருப்பவரிடமோ
பேசியபடி இருக்கிறார்கள்

கழியும் காலத்தை அறிவித்தபடி
சுவரின் கடிகார முட்கள்
நகர்கின்றன

உன்னிடம் விடுபட்ட உரையாடலை
எங்கே தொடருவது?
எண்ணும் வேளையில்
நீயோ நானோ
போகவேண்டிய ரயிலின் சத்தம்
தொலைவில் கேட்கிறது

நிச்சயமில்லாத பொழுதுகளில்
ஏதாவது கணங்களில்
நிகழலாம்
நம் அடுத்த சந்திப்பு

Thursday, March 18, 2010

எல்லாம்..


கோயில் உபயத்தில்
எல்லாம் இருந்தன

தேங்காய், வாழைப்பழம், சூடம், சாம்பிராணி
கும்பம், பூ, ஊதுபத்தி, திருநீறு, குங்குமம்,

மந்திரம் சொல்லும் ஐயர்
உபயத்தில் கலந்துகொள்ள உறவினர்கள்
வழக்கமாய் வரும் பக்தர்கள்

கும்பாபிஷேகம் கண்டு
பொலிவாய் வண்ணத்தில் காட்சிதரும்
திருக்கோயில்

அதற்கும் மேலாய்
நான் வழிபடும் திருமுருகன்

எல்லாம் இருந்தன
என் உயிர்த்தமிழைத் தவிர

Sunday, March 14, 2010

வீடு



பாதை நெடுக புற்கள் மண்டி
சிமெண்டுத் தரை மண்ணிலில் புதைய
சாயம் வெளுத்த பலகை மக்கி
பச்சைத் தாவரம் எங்கும் பரவ
கலைந்து கிடந்த வீட்டின் முன்னே
நான் நின்றேன் தனியாக
மனைவி பிள்ளைகளோடு

என் முன்னே
இன்னும் நிறம் வெளுக்காத வீடு
படுத்துறங்கிய சிமெண்டுத் தரை
என் புத்தக அலமாரி
அழகான லயங்கள்
என்னோடு விளையாடும் தோழர்கள்
வாசலில் படுத்திருக்கும் நாய்
வீட்டுக்கு ஓடிவரும் செவல ஆட்டுக்குட்டி
சாயுங்கால பரபரப்பு மனிதர்கள்
இரவில் நிலா பார்க்கும் பிராஞ்சா
அப்பா, அண்ணனைக் கிடத்தி
கத்திக் கதறிய வாசல்..

என் கையைப் பிடித்து இழுத்து
மகள் கூறுகிறாள்:
“அப்பா, இந்த வீட்லயா இருந்தீங்க?
வாங்க போகலாம்”

கை நிறைய சாணி



அப்பெல்லாம்
ஒவ்வொரு நாளும் சாணி
எங்கையில

தோட்டப்பள்ளியில
மணி அடிச்சா
வீட்டுக்கு ஓடுவேன்
குசினிப் பானையில
ஆறிய பழச
அள்ளிக்கொட்டிக்கிட்டு
பட்டிக்கு ஓடுவேன்

போனா..
பத்து மாடும் போயிருக்கும்
மேச்சலுக்கு
பாத்தா..
பட்டி முழுக்க
ஒரே சாணியாயிருக்கும்

அள்ளுவேன்..
எல்லாத்தையும் அள்ளுவேன்
ரெண்டு கையால

எங்காவது கொல்லையில
வறட்டு கொய்யாக்கா கெடைக்கும்
கடிச்சிக்கிட்டே திரும்புவேன்

எப்படிக் கழுவினாலும் போவாது
நாள் முழுக்க மணக்கும்
கையில சாணி

சாணி, மாட்டுப்பட்டி, தோட்டம்
எல்லாம் விட்டு ரொம்ப நாளாச்சு

பின்னாடி, எங்காவது மாடுகள பாத்தா
பொசுக்கின்னு எட்டிப்பார்க்கும்
பழைய நெனப்பு
சாணி வாசம் மூக்கை தொளைக்கும்

இப்பெல்லாம் சாணி ஞாபகம்
கொஞ்சம் கொஞ்சமா குறையிது
கையை பாத்தா
சாணி இல்ல
வாசம் இல்ல

இப்ப என் எதிரிங்க கையில சாணி
எங்கையில
எழுதுகோல்

வெறுமை



வண்ணமும் வாசமும் இழந்தன
சோலைப் பூக்கள்

வெறுப்பைத் தந்தன
பூக்களில் அமரும் வண்டுகள்

என்னை ஏளனம் செய்தன
ஜோடிப் புறாக்கள்

வீசும் தென்றலில் இல்லை
எப்போதும் இருக்கும் இதம்

முகம் நிறைய கேள்விகள்
என்னைக் கடக்கும் தோட்டக்காரர்

இருக்கை விட்டு
நகர மறுத்தன கால்கள்

வேகமிழந்து நொண்டின
கடிகார முட்கள்

காற்று வெளிகளில்
நிறைந்து வழிந்தது வெறுமை

அவள் வராத நாள்

Tuesday, March 9, 2010

வீடு பற்றிய குறிப்புகள்



1
சாய்ந்துகொள்ளும் தோளாக இருந்த வீடு
என்னிலிருந்து விலகி நின்று
என்னை அந்நியனாகப் பார்த்தது

வெளியில் போய்விட்டு
திரும்பும் போதெல்லாம்
முன்புபோல் இருகை நீட்டி வரவேற்காமல்
என்னுடன் மௌனம் பேசியது

சேமித்து வைத்த சொற்களைச்
செலவளிக்கத் தெரியாமல்
வெறுமையாயிருந்தேன்

எனக்கும் அதற்கும் இடையே
மௌனத்தை நிரப்பிவிட்டு

என் உறவின் உணர்வுகளைத்
தனக்குள் இழுத்துக்கொண்டு
உரக்கப் பேசிக்கொண்டிருந்தது
தொலைக்காட்சி

2
நினைவின் நதியில்
நீந்தி நீந்திக்
கரையேறிக்கொண்டிருக்கிறது
பழைய வீடு

அதன் சன்னலோரத்தில்
மாலைநேரத் தேநீர்க் கோப்பையோடு
மகிழ்ச்சி பொங்கும்
என் முகத்தை மாட்டி வைத்திருக்கிறது

உள்ளேயிருந்து வெளியேறும்
எல்லா முகங்களும்
கரைந்து போகாமல் சேமிக்கிறது

உடைந்த பலகைகள்
உருக்குலைந்த சிமெண்டுத்தரை
இவற்றின் சித்திரத்தைத்
தன்மேல் வரைந்திருக்கிறது

கரையேறிய வீடு
என் வீட்டிற்குள் நுழைந்து
ஓவியமாய் நிற்கும்
அதன் படத்தில் நுழைந்து
என்னையும் உள்ளே இழுத்துக்கொண்டிருக்கிறது

3
வெளியில் பயணப்பட்ட
கால்களின் பாதைகள் எல்லாம்
தொடங்கிய இடம் தேடி வர
தன் கதவுகளைத் திறந்து
உள்ளிழுத்துக்கொள்கிறது வீடு

எல்லா அறைகளிலும்
இன்னும் சொல்லாத கதைகள்
புதைந்து கிடக்க
தன் இதழ்களில்
புன்னகையைப் படரவிடுகிறது

வீட்டிலிருந்து புறப்பட்ட
பல இரகசிய வழிகளில்
கசிந்துகொண்டிருக்கின்றன
குதூகலமும் கண்ணீரும்
கனவுகளும் கற்பனைகளும்

உள்ளே நுழையும்
ஒவ்வொருவரையும் படமெடுத்துக்கொண்டு
வெளியே செல்ல அனுமதிக்கிறது வீடு

4
மௌனம் பூசிய வீட்டின் சுவரில்
காது வைத்துக் கேட்டேன்
விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது
எனக்கு மட்டும் புரிந்த
அதன் முனகல் மொழி

கோபத்தின் உச்சியில்
வீசியெறிந்ததையும்
அன்பின் நெகிழ்ச்சியில்
கரைந்ததையும்
காதுகளில் ரகசியமாய்ப்
பரிமாறப்பட்டதையும்
கலவியில் மெதுவாய்க்
கசிந்ததையும்
ஒன்றுவிடாமல் தனக்குள் வாங்கிச்
சேமித்து வைத்திருக்கிறது

தனிமை என்னைத் தழுவும்போதெல்லாம்
சேமித்த மொழிகளை
என் முன்னே அவிழ்க்கத் தொடங்குகிறது
அவற்றோடு குரல்களும் முகங்களும்
சேர்ந்தே வருகின்றன

ஆண்டுக்கொருமுறை சாயம் பூசி
அதன் நிறத்தை மாற்றினாலும்
பழைய மொழிகளைச்
சுருதி மாறாமல்
ஒலிபரப்பிக்கொண்டிருக்கிறது

அதன் மேல் தலைநீட்டிப் பார்க்கும்
பல்லியைப்போல்
சேமித்த அதன் மொழிகளுக்குள் நுழைந்து
கரையேறிக்கொண்டிருக்கிறது மனது