என்னை எதிர்பார்க்கவில்லை
அப்புவின் கண்களில் மிரட்சியும் பயமும்
உள்நுழைந்த என்னை எதிர்கொண்டன
அவன் கைகளில்
பறந்துவிட்ட ஏதோ பறவையின்
மிருதுவான சிறகுகள் மிஞ்சியிருந்தன
பறிபோகுமோ என்ற பதட்டமோ
சிறகு இறுக்கிய கைகள்
பின்னால் பதுங்கின
அறை முழுதும்
சிறகசைத்த பறவைகளின் கீச்சொலியும்
அவற்றின் பிம்பங்களும் நிறைந்திருந்தன
நீட்டிய பொம்மையை நிராகரித்து
வேகமாய் ஓடிக் கட்டிலுக்கடியில் இருந்த
கரடியைத் தாவியணைத்தான்
அங்கே நிராதரவாய்
காயங்களோடு சில மிருகங்கள்
ஒதுங்கிக் கிடந்தன
சுவர்களில் அவன் புதைத்து வைத்த
மிருகங்கள் வெளியேறி ஓசையெழுப்பியதை
ஆசையாக ரசித்தான்
அறையின் மூலையில்
அவன் கிழித்து வீசியெறிந்திருந்த
படத்திலிருந்து வெளியேறிய கடவுள்
அழுதுகொண்டிருந்ததைக் கண்டான்
கைகளைத் தட்டிக் கொண்டாடினான்
அவன் கைகளில் சிக்கிப்
பொம்மையாகும் வழியறியாது
வெளியேறினேன்
(பாலமுருகன் எழுதிய அப்பு பற்றிய 3 கவிதைகளைப் படித்த
காரணத்தினால் என்னை மறந்த ஆழ்ந்த உறக்கத்திலும் அப்பு
என்னோடு இருந்ததை உணர்ந்தேன். அதைக் கவிதையாக எழுத
மனம் விழைந்தது. அதன் விளைவே இந்தப் படைப்பு.
பாலமுருகனுக்கு நன்றி)
பாலா,
ReplyDeleteவார்த்தைகள் புரிகின்றன.
படிமங்கள் காட்சிகளாக விழுகின்றன.
கவிதையின் பொருள் விளங்குவது போல் இருக்கிறது.ஆனால் விளங்கவில்லை. படைப்பாளனுக்கே உண்மையான நோக்கம் புரியும்.
கொஞ்சம் விளக்கம் தேவை.