நம் குரல்

Wednesday, March 16, 2011

நடுநிசி நாய்களும் எச்சரிக்கை மணியும்






இந்தத் திரைப்படத்தைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் முதலில் எனக்கு இல்லை. படத்திற்கு எதிர்ப்பு என்ற செய்தியும் படம் குறித்த விமர்சனமும் என் ஆர்வத்தைக் கிளறிவிட்டன. முகநூலில் கே.பாலமுருகனின் சுருக்கமான விமர்சனம் வேறு என் ஆர்வத்தை மேலும் தூண்டியது. கௌதம் மேனன் ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கையும் சேர செந்தூல் திரையரங்கிற்குப் போனேன். படம் பார்க்க மூன்று பேர்தான் இருந்தோம். ஐந்து பேர் இருந்தால்தான் படத்தை ஓட்டமுடியும் என்று டிக்கெட் முகப்பிடத்தில் கூறிவிட்டார்கள் (படம் இரண்டு வாரங்களாக ஓடுகிறது. எனவே ஆள்கள் குறைந்ததில் ஆச்சரியமில்லை). எப்படியோ 6 பேர் சேர்ந்தோம். படம் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றோம்.

எதிர்பார்த்தபடியே கௌதம் மேனன் ஏமாற்றவில்லை. ஆல்பெரெட் ஹிச்கோக்கின் ‘சைக்கோ’, மூடுபனி, சிவப்பு ரோஜாக்கள், மன்மதன் போன்ற படங்களின் சாயல் இருந்தாலும் நடுநிசி நாய்கள் தனித்து மனத்தில் பதிகிறது. சமுதாயத்தில் நல்லவர்களாக நடமாடும் மனிதர்களில் மனம் பிறழ்ந்தவர்களும் குரூர தன்மை உடையவர்களும் கலந்து கிடக்கும் நிலையை இந்தப் படம் எச்சரிக்கை மணியாய் ஒலிக்கிறது.

பம்பாயில் வசிக்கும் ஒரு சிறுவன் (சமர்) எட்டு வயதிலேயே தன் மோசமான தந்தையினால் பாலியல் களியாட்டங்களில் பங்குகொள்ள வற்புறுத்தப்படுகிறான். அவை அவனை ஆழமாகப் பாதிக்கின்றன; ஆறாத ரணமாகிப் பின்னர்க் கொடுங்கனவுளாகி அவனை இம்சிக்கின்றன. அவனின் நிலையறிந்த அண்டை வீட்டு நடுத்தர வயது மாது(மீனாட்சி), போலீஸ் துணையோடு அவனைக் காப்பாற்றுகிறார். அவனின் தந்தை தற்கொலை செய்துகொள்ள அவனை அந்த மாதே வளர்க்கிறார்.

பதின்ம வயதையடைந்திருந்தாலும் அவனால் மனத்தில் ஆழப் பதிந்த கொடுங்கனவிலிருந்து மீளமுடியவில்லை. தாயாகப் பேணிக்காக்கும் அவரையே நேசிக்கிறான்; பலாத்காரம் செய்கிறான். இந்தக் காட்சியும் படத்தில் அது நீண்டுபோனதும் பலத்த எதிர்ப்புக்குக் காரணமாகிவிட்டன. சிறுவயது பாதிப்புகள் எவ்வளவு ஆழமாய் ஒருவனைப் பாதிக்கும் என்பதைத்தான் கதைப்போக்கு உணர்த்துகிறது.

குற்ற உணர்விலிருந்து மீள மீனாட்சி திருமணம் செய்துகொள்கிறார். அவன் (சமர் வீரா என பெயர் மாறுகிறது) அதை ஏற்றுக்கொள்ள முடியாது மீனாட்சியின் கணவனைக் கொலை செய்கிறான். மீனாட்சி அப்போது ஏற்பட்ட தீவிபத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சில காலத்திற்குப் பிறகு காலமாகிறார். வீரா பம்பாயிலிருந்து சென்னை திரும்புகிறான். சென்னையில் பல பெண்களை ஏமாற்றித் தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோய் கொலை செய்கிறான்.

மீனாட்சி கோர முகத்தோடு மருத்துவமனையிலிருந்து நலமடைந்து வீராவுடன் சென்னை வீட்டில் வசிப்பதாகவும் அவன் செய்யும் கொலைகளுக்கு அவளே தூண்டுதலாகவும் இருப்பதாகவும் காட்டப்படுகிறது. ஆனால், அது அவனின் மனத்தின் பிறழ்ச்சியிலால் ஏற்பட்ட கோளாறு என முடிவில் நமக்குத் தெரியவருகிறது. சமர், மீனாட்சி, வீரா என மூவரின் ஆளுமையினால் ஒருவன் ஆட்டிப்படைக்கப்படுவதை கௌதம் நேர்த்தியாகப் படமாக்கியுள்ளார்.

படம் முழுதும் அடுத்து என்ன நடக்கும் என்ற திகில் பரவி நம்மை இருக்கையின் நுனிக்குத் தள்ளுகிறது. மனோஜ் பரமஹம்சாவின் கேமரா இரவின் இடுக்குகளையும் விட்டு வைக்காது தேடிப் பதிவுசெய்கிறது. குறிப்பாக ஒலிப்பதிவு திகிலுக்குச் சுதி சேர்க்கிறது. வழக்கமான தமிழ்ச்சினிமாவில் வரும் நகைச்சுவை, பாட்டுகள், என எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு திகிலில் சமைத்த உணவைப் பரிமாறியிருக்கிறார் கௌதம்.

படத்தில் நான்கு நாய்கள் வருகின்றன. அவைதான் நடுநிசி நாய்களா என நண்பர் ஒருவர் கேட்டார். உண்மையில் கௌதம் சொல்ல வரும் நாய்கள் வேறு. இன்றைய நவீன வாழ்க்கையில் இரவில் நடமாடுவது பலருக்கு இயல்பாகிவிட்டது. பலரும் பலரைச் சந்தித்துப் பேசுகிறார்கள்; பழகுகிறார்கள். ஆனால், மனிதர்களில் நல்லவர்களாக முகங்காட்டும் எல்லாரும் நாம் நினைப்பதுபோல நல்லவர்களா? அல்லது அவர்களில் சிறுவயது பாதிப்புகளினால் மனநோய்க்கு ஆளாகி, ஆனால் தங்களில் இன்னொரு முகத்தை மறைத்துக்கொண்டு வேறு முகத்தைக் காட்டி இயல்பாகப் பழகும் மனிதர்களா?

இது பெண்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை மணியாக எனக்குப் படுகிறது. சான்றுக்கு வேறு எங்கும் போகவேண்டாம். நம் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னால், பங்சாரில் ஒரு சீனப் பெண், பேரங்காடியின் கார் நிறுத்தும் இடத்திலிருந்து கடத்தப்பட்டு பல மணி நேரம் விடிய விடிய காரில் திகில் பயணத்தில் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் கொடுமைக்குப்பின் கொலை செய்யப்பட்டு தீமூட்டி எரிக்கப்பட்டதை நாம் செய்தியாகப் படிக்கவில்லையா?

‘நடுநிசி நாய்கள்’ எனக்கு அந்த சம்பவத்தைத்தான் நினைவூட்டியது. அதே போன்ற கடத்தல் சம்பவம் படத்திலும் வருகிறது. நடுநிசி நாய்கள் பசிவெறியோடு தம் கோர முகத்தை மறைத்துக்கொண்டு வாலாட்டிக்கொண்டு வழியில் போவோரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. பயணிக்கும் நாம்தான் கவனமாக இருக்கவேண்டும். அந்த அபாய எச்சரிக்கை மணியைத்தான் கௌதம் மேனன் அடித்திருக்கிறார்.

வழக்கத்தை மறுதலித்துவிட்டு புதிய திகில் அனுபவம் பெறவேண்டுமா? ‘நடுநிசி நாய்கள்’ நமக்காகக் காத்திருக்கின்றன.




No comments:

Post a Comment