நோயோ மூப்போ எதிர்பாரா நிகழ்வோ
ஒரு நாள் என்னையும் தீண்டும்
காலடி நசுங்கி மறையும் சிற்றெறும்பாய்
என்னைக் கழித்துவிட்டு
கடந்துபோகும் காலம்
கண்ணாடி பிரேமில் புகைப்படமாகி
வீட்டுக்கு வருவோரைப்
பழைய புன்னகையில் வரவேற்பேன்
சோகக் குளிரில் உள்ளொடுங்கிய
உறவுப் பறவைகள்
கொஞ்ச நாளில்
மீண்டும் சிறகசைக்கும்
என் தோழர்கள்
என்னை அருகில் அழைத்து
என் பழைய நாட்களில்
கொஞ்சம் வாழ்ந்து பார்ப்பார்கள்
எங்காவது ஓர் இலக்கிய நிகழ்வில்
ஒரு நிமிட மௌன அஞ்சலியாய்
நிகழ்ச்சி நிரலில் இடம்பெறுவேன்
என் கைவிரல் ஸ்பரிசத்தில் சிலிர்த்த
வீட்டின் பூச்செடிகள்
என் வருகைக்கு ஏங்கும்
நான் தமிழ் இதழ்கள் வாங்கிய
ஒட்டுக்கடை குப்புசாமி நினைவில்
எப்போதாவது வந்து போவேன்
என் கைரேகை பதிந்த நூல்கள்
நிலைப்பேழைக்குள் சிறையாகும்
என் பிரிவறியாத இடங்களிலிருந்து
என் பெயர் தாங்கி
கடிதங்கள் அழைப்புகள் வரும்
என் மாணவர்களின்
ஆசிரியர் தின நினைவுகளில்
எட்டிப் பார்ப்பேன்
மனித நினைவுகளின் பிடியிலிருந்து
கொஞ்சங் கொஞ்சமாக நழுவி
பிரபஞ்சப் புள்ளியாய்
தொலைவில் மறைவேன்
காலத்தின் பிடியில் சிக்காமல் தப்பித்த
என் கவிதைகள் நூலாகி
எங்காவது நூலகத்தின்
புத்தக அடுக்குகளில் காத்திருந்து...
உங்களில் யாராவது எடுத்துப்
பக்கங்களைப் புரட்டி
வாசிக்கத் தொடங்கினால்..
நான் விழித்துக்கொள்வேன்!
படிமங்களைக் காட்சிக்குள்ளாக்கும் நல்ல கவிதை இது பச்சை பாலன். மரணத்துக்குப்பிறகான விஷயங்களைப்பேசினாலும், எங்கேயும் சோகத்தின் சாயல் அழுந்தப் படியாமல் போகிறது. அப்துல் ரஹ்மான் ஒரு கவிதையில் சொல்வார் பிரேமுக்குள் இருக்கும் தன் நிழற்படத்தைப்பார்த்து, இதோ என் முன்னாலேயே என் பிணம் என்று. நாமெல்லாம் எழுதிப்பார்க்கலாம் நமக்கான இரங்கற் கவிதையை நாமே.பின்னால் அது பயன் படலாம் அல்லவா?
ReplyDeleteவழ்த்துகளுடன்,
கோ.புண்ணியவான்.
எத்தனையோ பாடுபொருளில் பாடிவிட்டேன். இன்னும் மரணத்தைப் பற்றி எழுதவில்லையே என்ற எண்ணம் எழுந்தபோது இப்படிச் சிந்தித்தேன். மரணம்
ReplyDeleteமுற்றுப்புள்ளியல்ல. அதற்குப் பிறகும் இருப்பதற்கு இங்கே இடமிருக்கிறது என்ற
உண்மையை நான் உணர்ந்த வேளையில் இந்தக் கவிதை உயிர்கொண்டது.
கவிதை நதிக்கரையோரம் என்னோடு பயணிக்கும் உங்களுக்கு நன்றி.
உங்களின் வாசித்தலில்தான் இந்தப் படைப்பு முழுமையடைகிறது.
பாலா, ஒவ்வொரு வரிகளும் எதிர்காலத்தில் நாம் காண முடியாத காட்சிகளாகக் கண்முன்னே விரிகின்றன. இது இறப்புப் பற்றியக் கவிதை. ஆனால் சோகத்தைப் பேசவில்லை. நடைமுறை வாழ்வின் இயல்பைப் பேசுகிறது. ஒவ்வொரு படைப்பாளியும் தன் இறப்புக்குப் பின் வாழ வழி சொல்லும் கவிதை இது. வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம், சேகர்.
ReplyDeleteபணி தொடர்பாக பினாங்கில் ஒரு வாரம்,
பள்ளியில் தேர்வு என வேலையில் மூழ்கி விட்டேன். அதனால்தான்
இந்தப் பக்கம் கொஞ்ச நாட்கள் தலைகாட்ட முடியவில்லை.
சரியாகச் சொன்னீர்கள். படைப்பாளி இறப்பிற்குப் பின்னும்
வாழ்வதற்கு வழி இருக்கிறது. பல படைப்பாளிகள்
தங்கள் படைப்புகளை கால நதியில் கலந்துவிட்டு
காற்றில் கரைந்துவிடுகிறார்கள். அவர்களின் சுவடுகள்
இல்லாமல் போய்விடுகின்றன.
வணக்கம் பாலா,
ReplyDeleteஉங்களின் தொலை தொடர்பு எண் கிடைக்குமா?
வணக்கம், சேகர்.
ReplyDeleteஇதோ : 012 6025450