நம் குரல்

Thursday, December 15, 2011

நினைவடுக்குகளில்



ஒன்றின்மேல் ஒன்றாய் அழுந்திக்கிடக்கும்
நினைவின் அடுக்குகளில்
ஏதேனும் ஒன்றை உருவினாலும்
பழைய முகத்தின் சாயல்
தூசி படிந்த கண்ணாடிக் காட்சியாய்
உயிர் பெறுகிறது

ஒவ்வொன்றிலும்
கடந்துபோன கணங்களின் துயரமோ
மகிழ்ச்சித் துளியோ
சொல்லமுடியாத உணர்வின் கசிவோ
ஏதோ ஒன்று ஒட்டியிருக்கிறது

ஒவ்வொன்றிலும்
யார் யாரோ உடன் வந்து
பெயர் சொல்லி
முகம் காட்டுகிறார்கள்
ஒவ்வொருவரும் இப்போதும்
ஏதோ சொல்ல நினைத்துத் தயங்குகிறார்கள்

ஒவ்வொன்றிலும்
எனை நோக்கிய
பாராட்டுகள், குற்றச்சாட்டுகள், கசப்புகள்
வேதனைகள், கடுஞ்சொற்கள், துரோகங்கள்
வாசிக்கப்படுகின்றன

ஒவ்வொன்றிலும்
எல்லாக் காட்சிகள் மறைந்தும்
ரசமிழந்த கண்ணாடியின் மேல்
காயாமல் எஞ்சியுள்ளன
சில கண்ணீர்த் துளிகள்

Friday, December 9, 2011

அவசரப் பிரிவில் அரைநாள்




யாரையோ தேடி
மருத்துவமனை வந்த நீங்கள்
இங்கே அவசரப் பிரிவில் நுழைந்தது
எதார்த்தமானது

உங்களைக் கடந்துபோகும்
மருந்துநெடிகளை
வெள்ளை ஆடைகளில் பரபரக்கும்
தாதிகளை மருத்துவர்களை
தரையில் சிந்தும் இரத்தத் துளிகளை
உறவினர்களின் கதறல்களை விசும்பல்களை
மூடிய கதவுக்கு முன்னால்
தவிக்கும் முகங்களை
வாசலில் தயார்நிலையில் நிற்கும் ஆம்புலன்ஸை

எதையும்
கடக்க முடியாமல் திகைத்து நிற்கும்
உங்களிடம் யாரோ ஒரு மூதாட்டி
தன் நெருங்கிய உறவுக்கு நேர்ந்த துயரம்பற்றி
அழுதுகொண்டே
பகிர்ந்துகொள்ள வருகிறார்

நீங்கள் அங்கிருந்து
வெளியேற மறந்து
அவரின் அருகிலமர்ந்து
துயரக்கதை கேட்கத் தயாரானது
அபூர்வமானது


முன்னெப்போதும் இல்லாமல்



முன்னெப்போதும் இல்லாமல்
வெயிலின் வெட்கை கூடிவிட்டது
மழையின் கோரத் தாண்டவம் நிகழ்கிறது
இயற்கை சீற்றம் அதிகமாகிவிட்டது
நிலம் அடிக்கடி நடுக்கம் காண்கிறது
கடல் பொங்கியெழுந்து நிலம் பார்க்கிறது

முன்னெப்போதும் இல்லாமல்
நாற்காலிகளுக்குப் போட்டி வலுக்கிறது
வார்த்தைகள் தடிக்கின்றன
இனத்துவேஷம் கட்டவிழ்க்கப்படுகிறது
திரைமறைவில் சதிகள் பின்னப்படுகின்றன

முன்னெப்போதும் இல்லாமல்
அன்பளிப்புகள் அதிகமாகிவிட்டன
கையேந்தும் காட்சிகள் கூடிவிட்டன
கருணைக் கைகள் நீளுகின்றன
ஆதரவுக் கரங்கள் தழுவுகின்றன
இதழ்கள் புன்னகை சிந்துகின்றன

முன்னெப்போதும் இல்லாமல்
ஒற்றுமை விரிவாகப் பேசப்படுகிறது
ஒன்றுகூடும் நிகழ்வுகள் ஏற்பாடாகின்றன
இனிப்பு அறிவிப்புகள் செய்திகளாகின்றன
வாக்குறுதிகள் அள்ளி வழங்கப்படுகின்றன


கிழிக்கப்பட்ட பக்கங்கள்


நானில்லா நேரத்தில் அறைக்குள் நுழைகிறீர்கள்
உங்களின் கைகளில் எப்படியோ
சிக்கிவிடுகிறது என் டைரி

இதழ்களில் வெற்றிப்புன்னகை தவழ
தவிப்போடு பக்கங்களைப் புரட்டி
என் தனிமைக்குள்
என் அந்தரங்கங்களுக்குள்
என் சொல்லாத கதைகளுக்குள்
என் சேமித்த சிந்தனைகளுக்குள்
என் இராத்திரி அறைகளுக்குள்
எனக்கு மட்டுமே புரியும் கிறுக்கல்களுக்குள்
என் இரகசியங்களுக்குள்
நுழைகிறீர்கள்

உங்களை
வன்மையாய்ப் பாதியில்
தடுத்துப் நிறுத்திவிடுகிறது
அதன் கிழிக்கப்பட்ட பக்கங்கள்


Thursday, December 8, 2011

புலம்பெயர்தலின் பேரின்பம்


குகை வாழ்க்கை சலித்து
ஆதிமனிதனின் கால்கள்
நதிக்கரை நோக்கிப் பயணித்தன

அரண்மனை வாழ்வை விடுத்து
விடைகளைத் தேடிப் புறப்பட்டார் சித்தார்த்தன்

ஹென்றி இளவரசரின் கட்டளை சுமந்து
பார்த்தலோமிய டயஸ், வாஸ்கோ டி காமா
புதிய பாதையில் பயணம் தொடங்கினர்

மக்காவின் உதாசீனங்களை உதறிவிட்டு
மதினாவில் வரவேற்கக் காத்திருக்கும்
கரங்களை நோக்கி விரைந்தார்
அண்ணல் நபி

வறுமையின் கோரப்பிடியில் சிக்கி
மண்ணுக்கு உரமாகாமல்
சேலத்திலிருந்து குடும்பத்தோடு
புறப்பட்டார் தாத்தா

புதிய வீடு வாங்க ஒப்பந்தம் செய்துவிட்டதாக
சிட்னியிலிருந்து மாமா கடிதம் அனுப்பினார்

அடுத்த மாதம் பாரிசில் நடக்கும்
தமிழ்ப்பண்பாட்டு நிகழ்வுக்கு வரும்படி
சிற்றப்பா மின்அஞ்சல் அனுப்பியிருந்தார்

கனடா தொரொந்தோ நகரில் வெளிவரும்
தமிழ் நாளிதழ்களை எனக்குத் தபாலில்
அனுப்பினார் அண்ணன்

கடைவாயில் வெற்றிலையை அதக்கிக்கொண்டே
பாட்டி சொன்னார்:
“நட்ட இடத்திலேயே நின்னா மரஞ்செடிக்கு அழகு
மனுசனுக்கு இல்லடா
கால்போன போக்குல போயித்தான் பாக்கணும்
கடிவாளம் கையில இருந்தா கவலையேன் படணும்”

கடைசியாய் நிலா பார்த்தது



மாணவர்கள் கடைசியாய் நிலா பார்த்த
தங்களின் அனுபவத்தைச் சொல்லத் தொடங்கினர்:

“சார், போன மாசம் இராத்திரியில..”
“தெய்வத்திருமகள் படத்தில விக்ரம் காட்டுவாரு”
“படத்துல பாட்டுக்காட்சியில நிறைய பார்த்திருக்கிறேன்”
“புத்தகத்துலதான் இருக்கே சார்”
“ஓவியத்துல”
“பேஸ்புக்ல அழகழகா நிறைய இருக்கு”
“போன வாரம் சாப்பிட வெளியே போனப்ப”
“ஞாபகம் இல்ல சார்”
“சின்னப் பிள்ளையில அம்மா சோறு ஊட்டும்போது”

நிலாவுக்கும் அவர்களுக்குமான இடைவெளி
கூடியிருப்பது தெரிந்தது

தூக்கம் வெறுத்த நேற்றைய இரவில்
சாலையில் தனியாய் நடக்கையில்
துணையாய் வந்த நிலாவைக் கவனித்தேன்
முன்னைவிட நிலா எல்லாரையும் விட்டு
தூரத்தில்போய் நின்று கண் சிமிட்டியது

Monday, December 5, 2011

பாறையின் இடுக்கில்



பாறையின் இடுக்கில்
தவறிய விதைகள்
நீர்குடித்துப் போராடி
முட்டி முளைப்பதுபோல்

உணவைத் தேடி உயரப் பறந்து
சோர்வுறும் சிறகு சுமந்து
கண்டங்கள் தாண்டும்
பறவைகள்போல்

பின்னிய வலைகள்
அறுந்து வீழ்ந்தும்
எச்சிலால் மீண்டும்
பின்னலைத் தொடரும்
சிலந்தியைப்போல்

கூட்டுப் புழுவாய்
சிறைக்குள் ஒடுங்கியும்
ஓட்டை உடைத்துப் பறக்கும்
பட்டாம்பூச்சிபோல்

நீரில்லாப் பாலையில்
கனல் கக்கும் வெம்மையில்
பொதிசுமந்து கடமையாற்றும்
ஒட்டகம்போல்

கைத்தடியால் தரைதடவி
கைப்பொருள் தனைவிற்று
தன்னுழைப்பால் நிமிரும்
கண்ணில்லா மனிதர்போல்

பொய்க்காலைப் பொருத்தி
பயிற்சியிலே தேர்ந்து
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும்
காலில்லா மனிதர்போல்

விளக்கில்லா வீட்டில்
மெழுகுவர்த்தி எரியவிட்டு
நூல்களைப் புரட்டும்
பிடிவாத மாணவனைப்போல்

பனிக்காலம் முழுதும்
வெண்போர்வை போர்த்தி
பொய்யுறக்கம் பூண்டு
வசந்தத்தில் கண்விழிக்கும்
பூமரங்கள்போல்

உன்னைச் சுற்றியும்
வாய்ப்புகள் பறிபோகும்
பள்ளங்கள் தோன்றும்
இடர்கள் இடைமறிக்கும்
சொந்தங்கள் பகையாகும்
முயற்சிகள் முடமாகும்
வழிப்பாதை களவுபோகும்

அவற்றைப்போல்
அவர்களைப்போல்
நீயும் மீண்டு வருவாய்!
மீண்டும் வருவாய்!