நம் குரல்

Tuesday, October 11, 2011

காணாமல் போகும் மாணவர்கள்

‘பள்ளிக்குச் சென்ற ஐந்தாம் படிவத் தமிழ் மாணவன் கண்ணன் காணாமல் போனான்’

தமிழ் நாளிதழில் முதல் பக்கச் செய்தியாக இதனைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். கண்ணனுக்கு என்ன ஆனது என அறிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் எழும். இந்தச் செய்தியால் சமூகத்தில் ஒரு பரபரப்புக் காய்ச்சலே பரவும். இப்படியொரு செய்திக்காகக் காத்திருக்கும் அறிக்கை மன்னர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். ‘பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? கல்வி அமைச்சு விரைந்து செயல்பட்டு கண்ணனைக் கண்டுபிடிக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு வேண்டாம்’. இப்படியெல்லாம் அறிக்கைகள் ஏடுகளை அலங்கரிக்கும்.

மேற்குறிப்பிட்ட செய்தி கற்பனைச் செய்தியன்று. ஒவ்வோர் ஆண்டும் கண்ணனைப்போன்று பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள் இடைநிலைப்பள்ளிகளில் காணாமல் போகும் அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் தமிழைத் தேர்வுப் பாடமாகப் பயின்ற மாணவர்கள், இடைநிலைப்பள்ளிகளுக்குச் சென்ற பிறகு, பி.எம்.ஆர். தேர்விலும் எஸ்.பி.எம். தேர்விலும் தமிழைப் புறக்கணிக்கும் நிலை ஐம்பது விழுக்காட்டை நெருங்கிவிட்டது.

கீழ்க்காணும் அட்டவணை, 2005ஆம் ஆண்டில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை இடைநிலைப்பள்ளி சென்ற பிறகு படிப்படியாகச் சரிந்து போனதைக் காட்டுகிறது.


§¾÷×

¬ñÎ

Á¡½Å÷ ±ñ½¢ì¨¸

¸¡½¡Áø§À¡É Á¡½Å÷¸û

Å¢Øì¸¡Î

ä.À¢.±Š.¬÷.

2005

14 471

À¢.±õ.¬÷.

2008

10 306

4 165

28.78%

±Š.À¢.±õ.

2010

7 657

6 814

47.09%

இது பற்றித் தமிழ்ச்சமூகம் எந்தவிதமான சலனமுமின்றித் தாமுண்டு தமக்கே உரிய மற்ற சிக்கல்களுமுண்டு என அவற்றிலே உழன்றுகொண்டிருக்கிறது. வழங்கப்பட்ட உரிமைகளையும் புறந்தள்ளிவிட்டுப் பிறப்புப் பத்திரங்களுக்கும், அடையாள அட்டைகளுக்கும் இப்பொழுது அலைந்துகொண்டிருக்கிறது. தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி என்றால் உரத்தக் குரல் கொடுப்பவர்களும் இது பற்றிக் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக்கொள்ள, இந்நாட்டில் தமிழ்க் கல்வியின் வளர்ச்சியே கேள்விக்குறியாகி வருகிறது.

இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் ஏன் காணாமல் போகிறார்கள்? அவர்களுக்கும் தமிழுக்கும் ஏன் இடைவெளி கூடி வருகிறது? இவைபற்றி எண்ணிப்பார்த்தேன். எண்ணிப் பார்த்ததை உங்களின் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.

இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் தமிழை விட்டு விலகிப் போவதற்குப் பல காரணங்கள் உண்டு. தமிழ்ப்பள்ளிகளில் ஆறு ஆண்டுகள் தமிழ் படித்தும் ஒரு பகுதி மாணவர்கள் தமிழ் மொழியிலும் பிற மொழிகளிலும் வாசிப்பு, எழுத்து போன்ற அடிப்படைத்திறன்களை அடையாமல் இடைநிலைப்பள்ளிக்கு வருகிறார்கள். தமிழ்ப்பள்ளியோடு தமிழுக்கு முழுக்குப் போட்டு விட்டு இனி தமிழோடு உறவே வேண்டாம் என ஒதுங்குகிறார்கள்.

பள்ளியில் கால அட்டவணையில் தமிழ் சேர்க்கப்பட்டுச் சொல்லித் தரப்பட்டாலும் தமிழ் வேண்டாம் என முடிவெடுக்கிறார்கள். தமிழில் தங்களால் தேர்ச்சி அடைய முடியாது என்ற அவநம்பிக்கைக்கு ஆளாகிறார்கள். யூ.பி.எஸ்.ஆர். தேர்வின் தோல்வி அல்லது குறைந்த தேர்ச்சி பெற்ற அனுபவம் அவர்களைப் பயமுறுத்துகிறது.

இவர்களில் சிலர், படிவம் ஒன்றிலும், படிவம் இரண்டிலும் தமிழ் படிப்பதாகப் பாவனை செய்தாலும் படிவம் மூன்று வந்தவுடன் பி.எம்.ஆர். தேர்வில் தமிழோடு தங்கள் உறவை முறித்துக் கொள்ளும் முடிவை எடுக்கிறார்கள். தமிழ் வகுப்பில், தேசியப் பள்ளிகளில் படித்த தமிழறியாத மாணவர்கள் தமிழ் படிக்காமல் அமர்ந்து இருப்பதைப் பார்த்து அவர்களுடன் இணைந்துகொள்கிறார்கள். பள்ளி நேரத்திற்குப் பிந்திய தமிழ் வகுப்புகள் நடைபெறும் பள்ளிகளில் தமிழ் வகுப்புக்கு மட்டம் போடும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். பெரும்பாலும் போக்குவரத்துச் சிக்கலைக் காரணம் காட்டி வகுப்புகளைப் புறக்கணிக்கிறார்கள்.

மாணவர்கள் தமிழ் வேண்டாம் என்று ஒதுங்கும் நிலைக்குப் பெற்றோர்களும் காரணமாகிறார்கள். தமிழ்ப்பள்ளியில் பயின்றவரை தம் பிள்ளைகளின் கல்வியில் ஓரளவு அக்கறை செலுத்திவரும் அவர்கள் இடைநிலைப்பள்ளியில் பிள்ளைகள் தொடர்ந்து தமிழைப் படிக்கிறார்களா என்று கவனிக்கத் தவறுகின்றனர். இதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு தமிழுக்கு முழுக்குப் போடுகிறார்கள். “பாடங்கள் கூடிவிட்டன. அவற்றோடு சிரமமாக இருக்கும் தமிழையும் பிள்ளைகள் சுமக்கவேண்டாமே” என்று பெருமனத்தோடு பெற்றோரே முடிவுக்கு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பி.எம்.ஆர். தேர்வுக்குப் பிறகு, படிவம் நான்கில் பாடங்கள் கூடுகின்றன. இதன் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் படிவம் நான்கில் தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் சரிகிறது.

“என் மகனுக்குத் தமிழ் படிக்க விருப்பமில்லை. எனவே, தமிழ் வகுப்பில் என் மகனைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று பெற்றோரே எழுதிய கடிதங்களைப் பெற்ற அனுபவம் எனக்குண்டு. தமிழில் குறைவான புள்ளிகளைப் பெறுவதால் ஒட்டுமொத்தத் தேர்ச்சியும் வீழ்ச்சியடைவதும் இதற்குக் காரணமாகிறது.

இதனை ஆழ்ந்து நோக்கினால், பெற்றோர் - மாணவர் மனநிலைக்கு இன்னொரு காரணமும் மறைவாகக் கண்சிமிட்டுவதை உணரலாம். “தமிழ்க்கல்வி தமிழ்ப்பள்ளியோடு போதும். மருத்துவம், பொறியியல், கணினி, போன்ற உயர்கல்விக்குத் தமிழ் பயன்படாது. எனவே, இடைநிலைப்பள்ளியில் தமிழ் வேண்டாம்” என்ற எண்ணம் அவர்களை ஆட்டிப்படைக்கிறது. வயிற்றுக்காக எந்த மொழியையும் எந்தப் பாடங்களையும் படிக்கலாம். ஆனால், வாழ்க்கை மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஆழமான தமிழ் உணர்வு பெற்றோருக்கும் மாணவருக்கும் இருந்தால்தான் தமிழ் புறக்கணிப்புக் கதையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.

யூ.பி.எஸ்.ஆர். தேர்வுக்குப் பிறகு, தமிழ் ஆசிரியர் இல்லாத, தமிழ் வகுப்புகள் நடைபெறாத இடைநிலைப்பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் நிலையோ இன்னும் மோசமானது. யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் தமிழ்மொழியில் சிறந்த தேர்ச்சி இருந்தும் தொடர்ந்து தமிழைப் படிக்கமுடியாத நிலையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களை அங்கு இழந்து வருகிறோம். உணர்வுள்ள பெற்றோர்கள் மட்டும் விடாப்பிடியாக வெளியில் எங்காவது தமிழ், தமிழ் இலக்கிய கூடுதல் வகுப்புகளுக்குப் பிள்ளைகளை அனுப்பித் தமிழ் மாணவர்களைக் காப்பாற்றி வருகிறார்கள்.

தாய்மொழி வகுப்புகள் நடைபெற வேண்டுமானால் பள்ளியில் குறைந்தது 15 மாணவர்கள் இருக்க வேண்டும் என்ற கல்விச் சட்டமும் சில வேளைகளின் சிக்கலை ஏற்படுத்துகிறது. 15 மாணவர்களுக்கும் குறைவாக இருந்தால் எவ்வளவு போராடினாலும் தமிழ் வகுப்புகள் தொடங்குவது சிரமம்தான்.

மேற்கூறிய காரணங்களைத் தவிர்த்து, இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே தமிழ் மாணவர்கள் எண்ணிக்கைச் சரிவுக்குக் காரணமாவது உண்டு. தமிழ்மொழியில் பின் தங்கிய மாணவர்கள் தேர்வுக்கு அமர்ந்தால் தமிழ்மொழித் தேர்ச்சி வீழ்ச்சியடையும் என்பதால் அவர்களிடம் தேர்வைத் தவிர்க்குமாறு ஆலோசனை கூறும் நிலை உள்ளது. பி.எம்.ஆர். தேர்வில் விடுபடும் மாணவர்கள் அதன் பிறகு, படிவம் நான்கில் தமிழ் வகுப்பில் வெறும் பார்வையாளர்களாக அமர்ந்திருப்பர். பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி விழுக்காடு அப்பள்ளியின் தன்மானப் பிரச்சினையாக மாறிவருவதால் தேர்ச்சிபெற வாய்ப்புள்ள மாணவரை மட்டும் தேர்வுக்கு அனுப்பும் சூழலில் தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிவைக் காணும் என்பது திண்ணம்.

எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் இலக்கியப் பாடத்தைத் தேர்வு செய்யும் மாணவர்கள் எண்ணிக்கையும் கவலையளிப்பதாக உள்ளது. பல தரப்பினரின் தீவிர முயற்சிகளுக்குப் பின்னரும் அந்த எண்ணிக்கை 23 விழுக்காடாக இருப்பது (தேர்வெழுதிய 14 471 யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களில்) ஏமாற்றத்தைத் தருகிறது. அறிவியல் துறைசார்ந்த உயர்கல்வியில் முனைப்பு காட்டினாலும் தமிழ் இலக்கியத்தின் பயன் அறிந்து அதைப் படித்துச் சுவைக்க மாணவர்களை ஆற்றுப்படுத்தவேண்டிய கடமை ஆசிரியர், பெற்றோர் ஆகிய இரு தரப்பினருக்கும் உண்டு. கீழ்க்காணும் பட்டியல் தமிழ் இலக்கியத்தின் நிலையைக் காட்டுகிறது.

§¾÷×

¬ñÎ

Á¡½Å÷

±ñ½¢ì¨¸

§ÅÚÀ¡Î

Å¢Øì¸¡Î

ä.À¢.±Š.¬÷.

2005

14 471

±Š.À¢.±õ.¾Á¢ú þÄ츢Âõ

2010

3 283

11 188

77.31

நம் சமூகத்தின் இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் ஒட்டு மொத்தக் கவனமும் தமிழ்ப்பள்ளிகளைச் சுற்றியே வருகிறது. தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பவேண்டும் என்ற உணர்வு பெற்றோர்களிடையே மேலோங்கி உள்ளது. அதோடு, தங்களின் தமிழ்க்கடமை முடிந்துபோனதாக அவர்கள் நினைக்கிறார்கள். தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும் என்ற முனைப்பும் உழைப்பும் இடைநிலைப்பள்ளிகளில் நீர்த்துப்போவதை எப்பொழுது உணரப்போகிறோம்?

தமிழ்க்கல்வி குறித்து நாம் ஆயிரம் ஆராய்ச்சி மாநாடுகளையும், கருத்தரங்கங்களையும் பயிற்சிப் பட்டறைகளையும் தொடர்ந்து நடத்தலாம். ஆனால், யாரை மையமிட்டு அவற்றை நடத்துகிறோமோ அவர்களே காணாமல் போகிறார்கள் என்னும்போது நம் முயற்சிகளால் என்ன பயன் விளையப்போகிறது?

‘தமிழ் எங்கள் உயிர்’ என்று தமிழவேள் கோ.சாரங்கபாணி சமூகப் போராட்டத்தைத் தொடங்கி நிதி திரட்டி மலாயாப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுமொழியாகத் தமிழை நிலைநிறுத்தினார். இன்றைய சூழலில், ‘இடைநிலைப்பள்ளியில் தமிழைக் காப்போம்’ என்னும் அறப்போராட்டத்தைச் சமூக இயக்கங்கள் தொடங்கிக் கடுமையாகப் போராடினால் ஒழிய இச்சிக்கலுக்குத் தீர்வு பிறக்காது.


‘தமிழ் மாணவரே! தமிழ் மாணவரே

தமிழைப் படிக்கத் தயங்கு கின்றேரே!

தமிழைத் தமிழ் மாணவர் படிக்காமல்

இமிழ்கடல் உலகில் எவர் படிப்பாரே’

நம் கவிஞர் பொன்முடி பாடிய இந்தக் கவிதையை இன்னும் எத்தனை காலத்திற்குப் பாடிக்கொண்டிருப்பது?


Friday, July 15, 2011

யாருமற்ற நாளில்


யாருமற்ற நாளில்
பேய்களோடு கழிந்தது பொழுதெனக்கு
பேய்களோடு பேசக்கூடாது என்று
அப்பா சொன்னதும் காரணமாயிருக்கலாம்
என் பேய் சகவாசத்துக்கு

சன்னல் கதவுகள் படபடக்க
வேகமாக வீசிய காற்றின் கைபிடித்து
வீட்டுக்குள் ஏதோ நுழைவது போலிருந்தது
கைகளில் படபடத்த
‘கல்லறையின் கூச்சல்’ நாவலின் பக்கங்களில்
பதுங்கிருந்த பேய்கள் ஒவ்வொன்றாய் வெளிவந்து
என்னோடு பேசத்தொடங்கின

ஒவ்வொரு பேய்க்கும் ஒவ்வொரு கோர முகம்
எல்லாப் பேய்களையும் ஒரே முகத்தோடு
கற்பனை செய்த தவறெனக்குத் தெரிந்தது

பேய்களிடமும் நிறைய கதைகள் இருந்தன
ஊர் முழுக்கச் சுற்றிச் சேகரித்த கதைகளைச்
என்னிடம் சொல்லத் தொடங்கின
தூக்குப்போட்டு இறந்த தொங்கவீட்டு முனியாண்டி
கங்காணியால் கர்ப்பமாகி தீயில் கருகிய மாலா
சுடுகாட்டு முச்சந்தியில் பஸ்சுக்குள் சிக்கிய மோகன்
குளிக்கப்போய் காணாமல் போன மனோகரன்
காதலன் கைவிட்டதால் மாத்திரைகளை விழுங்கிய உமா

கதைகளிலிருந்து வெளியேறிய புதிய பேய்கள்
என்னைச் சுற்றி நின்று உற்றுப் பார்க்க
நாவலில் பக்கங்களில் மேலும் சில பேய்களோடு
பேசத் தொடங்கினேன்

பேய்களோடு பேசும் அனுபவம்
திகிலாக இருந்தாலும் பிடித்திருந்தது
நள்ளிரவு தாண்டியும் ஆளில்லாத வீட்டில்
விருப்பத்தோடு அலையும்
பிரியமான பேய்களை அழைத்துக்கொண்டு
முச்சந்திச் சுடுகாடுவரை போய்
விட்டுவிட்டுத் திரும்பினேன்


பை நிறையக் காரணங்கள்


தங்கும் விடுதியில்
அதிகாலை நேரத்தில்
போலீஸாரின் அதிரடிச் சோதனையில்
மாட்டிக்கொண்டு விழிக்கும்
காதலர்கள்போல்

இடத்துக்கும் நேரத்துக்கும்
தகுந்தாற்போல்
அறிக்கைகளால் சமாளிக்கும்
அரசியல்வாதியைப்போல்

உதவி தேடிவருவோருக்கு
தகுந்தாற்போல்
முகம்பார்த்துப் பரிகாரம் சொல்லும்
குருவைப்போல்

இன அழிப்புப் போருக்கான
தன் வாதங்களை
பக்கம் பக்கமான அறிக்கைகளால்
உலகஅரங்கில் வைக்கும்
கொடுங்கோலன்போல்

தம் பிள்ளைகளைத்
தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாமல்
ஏடுகளின் ஆசிரியர்களாக
எழுதிக்குவிக்கும் எழுத்தாளர்களாக
இயக்கங்களின் பொறுப்பாளர்களாக
போதையூட்டும் கருத்தால்
தமிழ் இனத்தின் பெருமை பேசும்
தலைவர்கள்போல்

வாங்கிய கடனை
திருப்பிச் செலுத்தாமல்
வகையாய்க் காரணங்களால்
காலத்தை நீட்டிக்கும்
கடன்பட்டும் கலங்கா
நெஞ்சினர்போல்

பேருந்துக் கட்டணம்
தந்து உதவினால்
ஊர்போய்ச் சேர்வதாக
போதையோடு கைநீட்டி
வழிமறிக்கும் இளைஞனைப்போல்

எப்போதும்
கால்சட்டைப்பை நிறைய
காரணங்களை வைத்துக்கொண்டு
திரிகிறார்கள்
தப்பு செய்யும் மாணவர்கள்

சவப் பரிசோதனை அறிக்கை


தகவல் வந்ததும்
அந்தப் சவப் பரிசோதனைக்குப்
பிரியத்துடன் இணங்கினேன்

இறந்தவர் எனக்குத் தெரிந்த
இலக்கியவாதி என்பதால்
அவரைப் பற்றி இன்னும் அறிய
ஆவல் எழுந்தது

வழக்கம்போல் பணியாளர்கள்
உடன் இணைய
அவரை நெருங்கினேன்
‘நிர்வாண நிஜம்’ அவர் எழுதிய சிறுகதை
நினைவில் மோதியது

ஒவ்வோர் அங்கமாக அறுத்துப் பார்த்தேன்
முதுமையின் நட்டக்கணக்கு பல்லைக் காட்டியது

“நெம்புகோலாய் உலகையே
என் எழுத்தால் புரட்டிப் போடுவேன்”
மேடையில் புரட்சி பேசிய உதடுகள் உறைந்திருந்தன

மற்றவரை மட்டம் தட்டி
மற்றவர் பெயரில் படைப்புகள் எழுதி
பரிசுகள் அள்ளிய
அவரின் அற்புதக் கைகள் அடக்கமாயிருந்தன


அங்கீகாரமில்லையே என
நொந்து நொந்து வயிற்றெரிச்சலால்
வயிற்றுக்கடுப்புக்குள்ளாகி
அமிலங்களின் பிரவாகத்தால்
சமன்நிலை சீர்குலைந்து
நோய் முகாமிட்டு வென்றதற்கு
ஆதாரங்கள் கிடைத்தன
குறித்துக்கொண்டேன்

இருந்தாலும் இதயத்தையும்
அறுத்துப் பார்க்க ஆவல் மிகுந்தது
நெஞ்சக்கூடு எலும்புகளை விலக்கி
ஆழமாகக் கத்தியைச் செருகி
இதயத்தை மட்டும் தனியே எடுத்துச் சோதித்தேன்

இதயத்தின் இரத்த நாளங்கள் நெடுக
இலக்கிய மோசடிகளாலும் பொய்யாலும்
நனைந்த குருதியின்
பயணம் தடுக்கும் அடைப்புகள் கண்டேன்

அறுத்துப்போட்டதைத் தைப்பதற்கு
ஆள்கள் தயார்
நான் கையுறை கழற்றி
அறிக்கை எழுதி
ஏமாற்றத்துடன் வெளிவந்தேன்

அமைதிப் பேரணிக்கு முன்னும் பின்னும்


அமைதிப் பேரணிக்கு முன்:

சாலையை அடைத்துக்கொண்டு
புகைகக்கிப் பறக்கும்
வாகனங்களின் இடுக்குகளில்
மனிதக் கால்கள் பதியும் சாலை நெடுகிலும்
பேரங்காடி, பேருந்து - இரயில் நிலையங்களில்
உணவகங்களில் ஓயாது அசையும் உதடுகளில்
ஏடுகளின் முதல் பக்கங்களில்
எங்கும் நீக்கமறக் நிறைந்து
வழிந்துகொண்டிருந்தன

மிரட்டல்கள்
கண்டன அறிக்கைகள்
பயமுறுத்தும் குறுஞ்செய்திகள்
பீதி கிளப்பும் புரளிகள்
பிடிவாதங்கள்
போலீஸ் புகார்கள்
சட்ட நுணுக்கங்கள்
ஊகங்கள்
எதிர்பார்ப்புகள்
வேடிக்கை விரும்பிய இதயங்கள்
நீதிமன்றத் தடைகள்
எக்காளக் குரல்கள்

அமைதிப் பேரணிக்குப் பின்:

வெறிச்சோடிய சாலைகளில்
அங்கங்கே சிதறிக்கிடந்தன
காலணிகள்

கனிமநீர் பாட்டில்கள்
நெகிழிப்பைகள்
காகிதக் குப்பைகள்
உடைந்த பொருள்கள்

சுதந்திரமாய்
வண்ணங்களில் நனைந்த
வண்ணத்துப்பூச்சிகள்
வாகனமற்ற சாலைகளில் பறக்க
சாலைநெடுக உயர்ந்த கட்டடங்கள்
அழகை முழுதுமாய்க் காட்ட
மழைக்குப் பிந்திய வானம்
கட்டட இடுக்குகளில் வண்ணம் தோய்க்க
பயத்தில் மூடிக்கொண்ட
வாணிப நிறுவனத்தின் கதவுகள்
மூடியே கிடக்க

எதிர்பாராப் பணிமுடித்துக்
களைத்துத் திரும்பிக்கொண்டிருந்தன
போலீஸ் வாகனங்கள்


எனக்கான விடுதலை


அரிய பொருளைத் தொலைத்தவனின்
சஞ்சலம் மிகுந்த தவிப்பைப்போல்
நீண்டுகொண்டே இருக்கிறது
என் தேடுதலின் தாகம்

என் கைகளை இறுக்கும்
கைவிலங்கைத் திறக்கும் சாவி
யார் கையில் இருக்குமென
வருவோர் போவோரையெல்லாம்
தீவிரமாய் விசாரித்தாயிற்று
எல்லாரும் உதடு பிதுக்கி
கைகளை விரித்து
ஏளனப் பார்வை சிந்தி
நமட்டுச் சிரிப்போடு
என்னைக் கடந்து போகிறீர்கள்

உங்களில் யாரோதான்
திட்டமிட்டு
என் சாவியைத் திருடிவிட்டு
என்னைத் தவிக்க வைப்பதாய்
என் காதுக்குத்
தகவல்கள் வருகின்றன

நான் ஓரிடத்தில் முடங்க
தடுப்புச் சுவரெழுப்பி
எனைத் தவிக்கவிடுவது
நண்பர்களில் யாரோதான்
நம்பத் தொடங்கினேன்


எவ்வளவோ முயன்றும்
விலங்கை உடைத்தெறிய நினைத்து
போராடிப் போராடி
நிறைவேறாமலே போனது
விலங்குடைக்கும் எண்ணம்

எல்லாரையும் எல்லாவற்றையும்
குறை சொல்கிறேன்
எதிர்ப்படும் முகங்களைச்
சந்தேகப் பார்வையில் சலிக்கிறேன்
என் மீது வீசப்படும்
விமர்சனங்கள் மீது
விசாரணை நடத்துகிறேன்

மிஞ்சுவது வெறுமையும்
மனம்நிறைய விரக்தியும்
கைநிறைய ஏமாற்றங்களும்

கடைசிவரை
என்னை இறுக்கும் கயிறுகளை
என் கைகளே பற்றியிருக்கும்
கொடுமை அறிந்திலேன்

இதிலே
எங்கிருந்து வந்து
விலங்கு என்னைச் சிறைப்படுத்தியது?
விபரம் அறிந்திலேன்


Tuesday, July 12, 2011

பசித்தவர் இங்கே! பத்தி எழுத்துகள் எங்கே?


‘ஸ்டார்’ (Star) ஆங்கில நாளேட்டில் எழுதிவரும் 41 பத்தி எழுத்தாளர்களில் (columnists) 30 பேரை அண்மையில் அழைத்துச் சிறப்பித்து அவர்களின் குழுப்படத்தை அந்நாளேடு பெருமையோடு வெளியிட்டிருந்தது. ‘பல்வேறு துறைகளில் மாறுபட்ட சிந்தனைகளை முன்வைத்து எங்கள் நாளேட்டுக்குத் தனித்தன்மையைத் தந்துவரும் இவர்களுக்கு நன்றி’ என அவர்களின் பங்களிப்புக்கு மகுடம் சூட்டியிருந்தது.

வாரந்தோறும் 41 எழுத்தாளர்கள் ‘ஸ்டார்’ நாளேட்டில் கல்வி, பொருளாதாரம், அரசியல், சமுகம் தொடங்கி உலக நடப்புகள், சமையல், விளையாட்டு, இலக்கியம், கலையுலகம் என பல துறைகளில் நுணுக்கமாக அலசித் தம் சிந்தனைகளை வாசகர்களுக்குப் பந்தி வைக்கிறார்கள். இதனால் அதன் வாசகர்கள் தொடர்ந்து புதிய வாசிப்பு அனுபவத்தையும் மாறுபட்ட சிந்தனைகளையும் பெறுகிறார்கள். மேலும், ஏடுகளில் அச்சேறும் செய்திகள் பற்றிய அலசல்களில் ஆழமான புரிதல்களைப் பெறுகிறார்கள். மலாய் ஏடுகளிலும் பத்தி எழுத்தாளர்களின் படைப்புகள் தொடர்ந்து வருகின்றன. வாரத்தின் ஏழு நாட்களிலும் பத்தி எழுத்துகள் ஏடுகளை அலங்கரிக்கின்றன.

‘ஸ்டார்’ நாளேட்டில் பத்தி எழுத்தாளர்களின் படத்தைப் பார்த்தபோது அத்தகைய நிலை நம் தமிழ் நாளேடுகளில் இல்லையே என்ற ஏக்கம்தான் எனக்குள் எட்டிப் பார்த்தது. நீண்ட காலமாக இந்நாட்டில் தமிழ் நாளேடுகள் வெளிவருகின்றன. உணவுக்குத் தொட்டுக்குக் கொள்ளும் ஊறுகாயாக எப்போதாவது சிலரின் சிந்தனைகள் எட்டிப்பார்க்கின்றன. ஆனால், மருந்துக்குக்கூட பத்தி எழுத்துகளைக் காண்பது அரிதாக இருக்கிறது. ஏன் நமக்கும் பத்தி எழுத்துகளுக்கும் அறவே ஆகாதா? அல்லது பத்தி எழுத்து பாரம்பரியம் நமக்கு இல்லையா? தலையங்கம் தாண்டி மற்றவர் சிந்தனைகளை ஆராதிக்கும் மனம் நமக்கு இல்லையா? இப்படி வண்டாகக் குடையும் கேள்விகளுக்கு பதில் என்ன?

பத்தி எழுத்துகள் இல்லாவிட்டால் என்ன? நம் நாளேடுகள் படிப்பதற்குச் சுவையாகத்தானே உள்ளன? ஆசிரியரின் தலையங்கம் வருகிறதே? என உங்களில் பலர் கேட்கலாம். பத்தி எழுத்துகள் நாளேட்டிற்குச் சிறப்புத்தன்மையைத் தருகின்றன. தலையங்கம் என்பது நாளேட்டின் ஆசிரியர் ஒரு முக்கியச் செய்தியை, நாட்டு நடப்பை அவரின் பார்வையில் அலசும் பகுதியாக உள்ளது. அது தவிர்த்து, கேள்வி-பதில் பகுதியில் வாசகரின் சந்தேகங்களுக்குத் தம் கருத்துகளை அவர் முன் வைக்கிறார். இவை மட்டும் போதுமா என்றால் நிச்சயம் போதாது என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கமுடியும்.

தமிழ் நாளேட்டின் ஆசிரியர் அறிவு ஜீவியாகவே இருக்கட்டும். அவர் ஒருவரின் சிந்தனை மட்டும் இந்தச் சமுதாயத்திற்குப் போதுமா? ஒருவரால் எல்லாத் துறைகள் பற்றிக் கருத்துகளை ஆழமாக முன்வைக்க முடியுமா? பல துறைகள் பற்றி மேலோட்டமாக அவர் சொல்ல முனைந்தால் வாசகருக்கு இதனால் பயன் விளையுமா?

நம் சமுதாயத்தில் நிலவி வரும் ஒரு முக்கியக் குறைபாடு, சமுதாயச் சிக்கல்கள் குறித்து நம் அறிவு ஜீவிகள், கல்விமான்கள் வாயைத் திறப்பதில்லை. போகிற போக்கில் துண்டு துணுக்காகச் சின்னச் சின்ன கருத்துகளைச் சொல்லிவிட்டு நழுவிவிடுகிறார்கள். அவற்றை அலசி விரிவாக கருத்துகளைப் பதிவுசெய்வதில்லை. அதற்கான களமும் இல்லை என்பதுதான் உண்மை. சான்றுக்கு ‘இண்டர்லோக்’ நாவல் விவகாரம் ஒன்று போதுமே! மலாய், ஆங்கில ஏடுகளில் விலாவாரியாக அலசி கட்டுரைகளாகப் பதிவு செய்தபோது நம் நாளேடுகளில் அறிக்கைப் போர் நடத்தினோம்.

நம் நாளேடுகளில் எது அறிக்கை, எது செய்தி எனப் பிரித்தறிந்து கொள்ளமுடியாத மயக்க நிலை உள்ளது. பலரின் அறிக்கைகள் செய்திகளாக முக்கியத்துவம் பெற்று ஏடுகளை அலங்கரிக்கின்றன. ஓர் அறிக்கைக்கு பதில் அறிக்கை, மறுப்பு அறிக்கை, ஆதரவு அறிக்கை என தொடர் அறிக்கைகள் வருகின்றன. அறிக்கைகளைத் தாராளமாக வெளியிட வாய்ப்பு உள்ளதால் பல இயக்கங்களின் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிடுவதைத் தம் இயக்கத்தின் முக்கியத் செயல்திட்டமாக எண்ணிச் செயல்படும் நிலைமை உள்ளது. ஒரு சமுதாயச் சிக்கலை, அது பற்றி ஆழமாக அறிந்த ஒரு வல்லுநர் கருத்துகளை பத்தி எழுத்தாக முன்வைத்தால் அறிக்கைகள் ஒதுங்கிக்கொள்ளும் நிலை உருவாகும்.

நம் தமிழ் நாளேடுகளில் பத்தி எழுத்துகள் ஏன் இல்லை என்று எண்ணிப் பார்த்தேன். நீண்ட காலமாகப் பத்தி எழுத்துப் பாரம்பரியம் தமிழ் ஏடுகளில் இல்லை. எனவே, காலப்போக்கில் அதுவே ஒரு மரபாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைவராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஒருவர் பத்தி எழுத்துகளை வழங்க முன்வந்தாலும் ஏடுகள் அவற்றை ஏற்க யோசிக்கும். அதை ஓர் அறிக்கையாக ஏதாவது இயக்கத்தின் சார்பாகத் தந்தால் உடனே வெளியிட முன்வரும். பத்தி எழுத்துகளை வெளியிடா மரபைக் கட்டிக்காப்பதால் இழப்பு இனத்துக்குத்தான் என்பதை யார் எப்படி உணர்த்துவது?

பத்தி எழுத்துகளை வெளியிட தமிழ் ஏடுகள் தயக்கம் காட்டுவதற்கு முக்கியக் காரணம் பணமா?. நமக்கு மூன்று தமிழ் நாளேடுகள் உள்ளன. சமுதாயத்தில் ஐம்பது விழுக்காட்டினர் தமிழ்ப்பள்ளிகளைத் தவிர்த்துத் தேசியப் பள்ளிக்குப் போகின்றனர். மிஞ்சியுள்ள ஐம்பது விழுக்காட்டில் தமிழ் நாளேடுகளை வாங்கிப் படிப்போர் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதுதான் நிதர்சன உண்மை. நம் ஏடுகளின் விற்பனையோடு விளம்பர வருமானமும் குறைவு. இதனால் எழுத்துப் படைப்புகளுக்குச் சன்மானமும் வழங்கப்படுவதில்லை என்று காரணங்கள் கூறப்படுகின்றன.

அண்மையக் காலத்தில்தான் சிறுகதைப் படைப்பாளர்களுக்கு RM50 வழங்கப்படுகிறது. கவிதைகள், கட்டுரைகள் படைப்போர் ‘ஆயுளுக்கும் இலவயமாக எழுதிக்கடவாய்!’ என்று சபிக்கப்பட்ட கூட்டத்தார். விற்பனை குறைவு என்றாலும் ஓரளவு இலாபத்தோடுதான் நாளேடுகள் நடத்தப்படுகின்றன. எனவே, பணம்தான் காரணம் என்று புறமொதுக்காமல் நாளேடுகள் மனம் வைத்தால் நாளுக்கு ஒருவராக குறைந்த அளவில் ஒவ்வொரு நாளேட்டிலும் வாரத்திற்கு ஏழு பத்தி எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும்.

அண்மையில், பத்தி எழுத்துகள் குறித்து ஒரு தமிழ் நாளேட்டின் ஆசிரியரோடு பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஏடுகளில் பத்தி எழுத்துகளுக்கு வழிவிடுவதால் ஏற்படும் சிக்கல்களை அலசினார். “பத்தி எழுத்தாளர்கள் தமிழ் ஏடுகளில் இல்லை என்பது ஒரு குறைதான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவர்கள் தொடர்ந்து நடுநிலையோடு எழுதிவர வேண்டுமே. அவர்கள் ஒரு சார்பாக தம் சிந்தனைகளை முன்வைத்தால் நமக்குப் பாதகமாக ஆகிவிடுமே” என்று தம் பயத்தை வெளிப்படுத்தினார்.

அவரின் பயம் எனக்கு நியாயமானதாகத் தெரியவில்லை. ‘ஒரு சார்பு’ என்பதைவிட எந்தக் கருத்தும் காய்தல் உவத்தலின்றி, நடுநிலையோடு உணர்ச்சிக்கு இடம்தராமல் அறிவுசார்ந்து அலசப்பட்ட கருத்தாக இருந்தால் அதற்கு இடமளிக்கும் ஆண்மை ஏடுகளுக்கு வேண்டும். எடுத்துக்காட்டாக, “இண்டர்லோக் நாவல் விவகாரத்தில் உங்கள் கருத்துகளை முன் வையுங்கள். ஆனால், அவை எங்கள் பத்திரிகை நிர்வாகத்தின் கொள்கைக்கு ஏற்றபடி இருக்கவேண்டும்” என்று எழுதுகோலுக்குக் கடிவாளமிட்டு எழுதச்சொல்லலாமா? அப்படி எழுதப்படும் எழுத்துகளால் யாருக்கு என்ன பயன்?

பத்தி எழுத்துகளுக்குத் தமிழ் ஏடுகள் இடமளிக்கத் தயங்குவதற்கு மற்றொரு காரணம் ஆசிரியரின் தலையங்கத்திற்கு அவை போட்டியாக உருவெடுக்கும் என ஆசிரியர் நினைப்பதும் காரணமாக இருக்கலாம் என அவரே கூறினார். இப்படி நியாயமில்லாத பயத்தைக் காரணமாக்கிக் கொண்டால் எந்தக் காலத்திலும் தமிழ் நாளேடுகளில் பத்தி எழுத்துகளைக் காணவே முடியாது. ஆங்கில, மலாய் ஏடுகளில் தலையங்கம் இடம்பெறும் பக்கங்களில் பத்தி எழுத்துகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

நம் சமுதாயத்தில் அறிவு ஜீவிகளும் கல்விமான்களும் தத்தம் துறைசார்ந்த வல்லுநர்களும் நிறைந்து இருக்கிறார்கள். அவர்களின் சிந்தனைச் சேமிப்பும் இனத்தின் மேன்மைக்கு வழிகாட்டல்களும் அரிய கருத்துகளும் நம் வாசகர்களின் பார்வைக்கு வரவேண்டும். இலக்கியம், சமயம், அரசியல், கல்வி, மருத்துவம், உலக நடப்பு, பொருளாதாரம் என எந்தத் துறையாக இருந்தாலும் அவற்றை அலசி மாற்றுச் சிந்தனையை முன்வைக்கும் எழுதுகோல்களை வரவேற்போம். வண்ணத்தில் கவர்ச்சிகாட்டிப் போதையூட்டும் சினிமாப் பக்கங்களைவிட கருத்துலகத்தில் வாசகர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பத்தி எழுத்துகளுக்கு முதல் மரியாதை செய்யும் புதிய மரபு நம் தமிழ் நாளேடுகளில் மலர வேண்டும்.

இத்தகைய பத்தி எழுத்துகளுக்காக புதிய தலைமுறை வாசகன் பசித்திருக்கிறான். முன்னேறத் துடிக்கும் வாசகனுக்கு ஏடுகளில் வந்து குவியும் வெறும் அறிக்கைகளால் தீராத சலிப்புதான் ஏற்படும் என்பதை நம் தமிழ் ஏடுகள் புரிந்துகொள்வது எப்போது?

ந.பச்சைபாலன்

செம்பருத்தி 3/2011