நம் குரல்

Sunday, July 21, 2019

பன்முகக் கலைஞன்


மலேசியாவில்
மோனா லிசா




மோனா லீசா மலேசியாவுக்கு வந்துள்ளார் என்ற தகவல் புலனம்வழி கிடைத்தபொழுது தாமதிக்காமல் கோலாலம்பூரில் அமைந்துள்ள தேசிய கலைக் காட்சியகத்திற்குச் (National Art Gallery)  சென்றேன். இதுவரை பார்த்ததெல்லாம் நகல்தானே. இதுதான் உண்மையானது என்ற எண்ணமே என்னை அங்கு உந்தித் தள்ளியது.  நான் சென்ற நாளில் மட்டும் நான்காயிரம் வருகையாளர்கள் என அங்குப் பணியிலிருந்த பொறுப்பாளர் சொன்னார். மோனா லீசாவுக்கு இவ்வளவு இரசிகர்களா என வியந்தேன்.

தம் மந்திரப் புன்னகையால்  உலக மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டவர் மோனா லீசா. காண்பார் கண்களையும் கைது செய்யும் இந்த ஓவியப் பெண்ணுக்கு உயிரூட்டியவர் இத்தாலியின் புகழ்பெற்ற ஓவியர் லியொனார்டோ டாவின்சி (1452 – 1519). மோனா லீசாவோடு அவரின் மற்ற 16 அரிய ஓவியங்களைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு மலேசிய ஓவியக் காதலர்களை நாடி வந்துள்ளது. இவை அவரின் உண்மை ஓவியங்கள் அல்ல. உண்மைக்கு மிக நெருக்கமான, உயர்தர இலக்க மறுஉருவாக்கம் (high definition digital reproduction) மூலம் உயிர்பெற்ற ஓவியங்கள் என்பதை அங்குச் சென்ற பின்னரே அறிந்தேன்.

லியொனார்டோ டாவின்சி  புகழ்பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டடக் கலைஞர், புதுமைப் புனைவாளர், பொறியியலாளர், சிற்பி, ஓவியர் எனப் பல்துறை மேதையாக விளங்கியவர். அத்துடன் இவர்உடற்கூற்றியல்வானியல்குடிசார் பொறியியல் ஆகிய துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். இவர் தணியாத ஆர்வம் கொண்டவராகவும் தீவிர கற்பனை வளம் கொண்டவராகவும் இருந்துள்ளார்
உலகில் இதுவரை வாழ்ந்த சிறந்த ஓவியர்களுள் ஒருவராகவும், பன்முக ஆற்றல் கொண்டவராகவும் இருந்துள்ளார். மண்ணில் இவர்போல் மனிதரும் உண்டோ என வியந்து போற்றப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஓவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். கடைசி விருந்து (The Last Supper),  மோனா லீசா (Mona Lisa) போன்ற ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.

உலகில் அனைத்தையும் புரிந்துகொள்ள வேண்டும், அதன் ஆழ்ந்த இரகசியங்களை அறிய வேண்டும் என்ற தீவிர வேட்கை வாழ்நாள் முழுவதும் இவரை ஆட்டிப் படைத்திருக்கிறது. இதனால் பல துறைகளில் ஈடுபட்டு அவற்றை முடிக்காமல் விட்டுச் சென்றுள்ளார். இவர் வாழ்ந்ததோ போர்க் காலச் சூழல். எனவே, வெனிஸ், நேப்பில்ஸ், மிலன், பாரிஸ் என இடம் மாறிக்கொண்டே இருந்ததால் பலதுறை ஆய்வுகளில் ஈடுபட்டும் அவற்றை முடிக்க முடியவில்லை.



லியொனார்டோ டாவின்சி,  வழக்குரைஞர் ஒருவருக்கும் குடியானவப் பெண்ணுக்கும் தாம்பத்திய உறவுக்கு வெளியே பிறந்தவர். அப்பாவுக்குத் தன் மகனும் வழக்குரைஞராக வேண்டும் என விருப்பம். ஆனால், டாவின்சிக்கோ நாட்டம் வேறு. தான் வரைந்த ஓர் ஓவியத்தைக் காட்டி அப்பாவிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். 18ஆவது வயதில் புகழ்பெற்ற ஓவியர், சிற்பி, கட்டடக் கலைஞர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட ஆண்ட்ரீ தெல் வெரோசியாவிடம் பயிற்சி பெற்றார். ஆண்ட்ரீயின் அறிவியல், கலை ஈடுபாடு டாவின்சியை முழுமையாய் ஆக்கிரமித்தது.

மேலும் அக்காலத்து இயற்கைவாதியும், தத்துவவாதியும், கணித மேதையுமான டோஸ்கனெல்லியின் ஆற்றலும் இவரைப் பாதித்தது. பாரதியைப்போல் இவருக்கும்  சமுதாயத்தின் புறக்கணிப்பு நேர்ந்தது. இதனால், தம் கவனத்தையும் ஆற்றலையும் அறிவுத்தேடலுக்கு முழுமையாகப் பயன்படுத்தினார்.

டாவின்சி பற்றிய சுவைத் தகவலை இணையத்தில் கண்டேன். இவர் வாழ்நாள் முழுவதும் சைவ உணவு உண்பவராக இருந்துள்ளார். உயிர்களிடத்தில் அன்பு காட்டும் மனிதரான இவர், கூண்டுகளுக்குள் விற்கப்படும் பறவைகளை வாங்கி வந்து அவற்றை விடுவித்து விடுவாராம். வாடிய பறவையைக் கண்டபோதெல்லாம் வாடிய இவரின் உயிர் இரக்கப் பண்பு போற்றத்தக்கது.





டாவின்சி பற்றி உளநோய் மருத்துவரான சிக்மண்ட் பிராய்ட் ஆய்வு செய்து கட்டுரை எழுதியுள்ளார். அதில் மோனா லீசா ஓவியத்திலுள்ள பெண்ணின் புன்னகை யாருடையதென்ற புதிரை அவிழ்க்கிறார். டாவின்சிக்குக் காதலி கிடையாது. இதே புன்னகையை டாவின்சியின் மற்ற இரு ஓவியங்களிலும் காண முடிகிறது. டாவின்சி களிமண்ணில்  சிரிக்கும் பெண்களின் தலைகளைத் தொடக்கத்தில் செய்துள்ளார். இந்தச் சிரிக்கும் பெண்கள் டாவின்சியின் தாய் கெதரினாவின் புன்னகையை நினைவுபடுத்தியே உருவாக்கப்பட்டவை எனச் சிக்மண்ட் பிராய்ட் முடிவுக்கு வருகிறார். மோனா லீசாவின் புன்னகை, எந்த உணர்வையும் வெளிப்படுத்தாதது.  ஆனால் காண்பாரை மயக்குவதாக உள்ளது. டாவின்சியின் மன ஆழத்தில் நிலையாய்ப் பதிந்துபோன தாயின் புன்னகைதான் அது என்று அறிந்துகொண்டு மோனா லீசா ஓவியத்தை கூர்ந்து நோக்கினேன். அந்தப் புன்னகையின் அழகும்  ஆழமும் இதயத்தைக் கைது செய்தன.




இதயத்தைக் களவு செய்யும் மோனா லீசா ஓவியம் களவாடப்பட்ட சுவையான சம்பவமும் உண்டு.  21.8.1911 ஆம் நாள் பாரீசில் உள்ள அருங்காட்சியகத்தில் இது கயவர்கள் சிலரால் களவாடப்பட்டது. மறுநாள், ஓவியர் லுயி பிரவுட் என்பவர் மோனலிசா ஓவியத்தைக் காண்பதற்காகச் சென்றார். அங்கு மோனலிசா ஓவியத்திற்குப் பதில், நான்கு இரும்பினாலான முறுக்காணிகளைக் கண்டு திடுக்கிட்டார். பின்னர் அங்கிருக்கும் காவல் அதகாரிகளிடம் அணுகி, வியாபாரத்திற்காக ஓவியத்தைப் புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும்படி கூறினார். சில மணிநேரங்களிலேயே, ஓவியத்தைப் புகைப்படக்காரர்கள் எடுக்கவில்லை என நிரூபணமாயிற்று. அந்த வாரம் முழுக்க, திருடுபோனதற்கான விசாரணைக்காக அருங்காட்சியகம் மூடப்பட்டது

ஓவியம் இனி நமக்குக் கிடைக்காது என்ற நிலையில், அதைத் திருடிய கயவன் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் பிடிபட்டான். அருங்காட்சியகத்தில் துப்புரவுத் தொழிலாளியான வின்சென்சோ பெருங்கையா என்பவர்தான் களவாடினார் என்பது தெரிந்தது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெருங்கையாலியொனார்டோவின் ஓவியம், இத்தாலிக்கே திரும்ப வேண்டும் என எண்ணி நிகழ்த்திய சதியே இதுவாகும்.


மேலும், திருடிய ஓவியத்தை ஏலத்திற்கு விட்டால் இலாபம் கிடைக்குமென பெருங்கையாவின் நண்பன் ஆசையைக் காட்டினான். பின்னர், எடுவார்டோ டி வால்பியர்னோ என்பவர், இந்த ஓவியத்தை ஆறு நகல்கள் எடுத்து, ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு விற்றார். இரண்டாண்டுகளில் பொறுமையிழந்த பெருங்கையா, பிளாரன்சிலுள்ள ஒரு காட்சியகத்தில் ஓவியத்தை விற்கும் பொழுது, கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். இத்தாலியின் அனைத்து இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு, 1913ம் ஆண்டு மீண்டும் லாவ்ரேவிற்குத் திரும்பியதுமோனா லீசா ஓவியம். களவாடிய குற்றத்திற்காக, பெருங்கையாவிற்கு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனையளிக்கப்பட்டது. எப்படியோ டாவின்சியின் கனவு ஓவியம் மீட்கப்பட்டது.


டாவின்சியின் உண்மையான ஓவியங்கள் எட்டு நாடுகளில் உள்ளன. அவை மறுஉருவாக்கம் பெற்று ஒருசேர ஒரே இடத்தில் காணக்கூடிய வாய்ப்பாக இஃது அமைகிறது. இந்த ஓவியக் கண்காட்சி இத்தாலியில் தொடங்கி உலகம் முழுவதும் பயணிக்க உள்ளது. ஜோர்ஜியா, வார்ஷோ, போலந்து, சீனா ஆகிய நாடுகளில் முடிந்து இப்பொழுது  இந்தக் கண்காட்சி மலேசியாவை அடைந்துள்ளது. இதற்குப் பிறகு, பேங்கோக், மியன்மார் நோக்கிப் பயணப்படும். இவ்வாண்டு உலகிலுள்ள அருங்காட்சியகங்கள் லியொனார்டோ டா வின்சியின் 500ஆம் ஆண்டின் நினைவுநாளைக் கொண்டாடி வருகின்றன. அதன் முத்தாய்ப்புக் கொண்டாட்டம் இவ்வாண்டு அக்டோபர் 24இல் பாரீசில்  நடைபெறவுள்ளது. 



டாவின்சி கலையும் அறிவியலும் பொறியியலும் கலந்து செய்த கலவையோ என வியக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு இவரின் கலைப்பணியைவிட அறிவியல், பொறியியல் ஆய்வுகள் குறிப்புகளாகவும் படங்களாகவும் ஏறக்குறைய 13 000 பக்கங்களில், குறிப்புப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேசிய கலைக் காட்சியகத்தில் அவரின் கையெழுத்தில் அமைந்த குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. 15 / 16 ஆம் நூற்றாண்டில் இவர் வரைந்துள்ள மனித உடல் வரைபடம், பறக்கும் எந்திர வடிவமைப்பு,  மனித மூளை, மண்டையோட்டின் வரைபடம், கையின் உடற்கூற்றியியல் ஆய்வுப் படம் என அனைத்தும் இவர் இறைஞானம் பெற்ற அதிசயப் பிறப்போ என வியக்க வைக்கிறது.





மலேசியாவுக்கான இத்தாலியத் தூதர் கிரிஸ்தியானோ மெகிபிந்தோ ஓர் ஓவியர்.  அவர் கூறும் கருத்து நம் கவனத்தை ஈர்க்கிறது. ஓவியம் என்பது உணர்வைவிட கண்ணுக்கு விருந்தாகும் படைப்பு. கவிதையோ கண்களைவிட உணர்வுக்கு விருந்தாகும் படைப்பு. கோலாலம்பூரில் தேசிய கலைக் காட்சியகத்திற்கு வருபவர்கள் லியொனார்டோ டாவின்சி ஓவியங்களில் இழையோடும் கவிதையை ரசித்து அனுபவிப்பார்கள்.

டாவின்சியின் பின்புலம் அறிந்துகொண்டு அவரின் ஓவியங்களைக் காணும்போது அவை இன்னும் பொருள் செறிந்தவையாகத் தெரிந்தன. வருகையாளர்கள் திறன்பேசிகளில் ஓவியங்களைச் சிறைப்பிடிக்க அலைமோதுகிறார்கள். அதீத கனவுகளோடு வாழ்ந்த ஆளுமையின் நினைவுகளில் மூழ்கியெழ, அவரின் கலைப்படைப்புகளைத் தரிசிக்க இஃது அரிய வாய்ப்பு. அங்கிருந்து விடைபெறும்பொழுது சொல்ல முடியாத சோகம் இழையோடும் மோனா லீசாவின் புன்னகை முகமே மனத்தில் நிறைந்திருந்தது





டாவின்சியின் ஓவியக் கண்காட்சி கோலாலம்பூரில் தேசிய கலைக் காட்சியகத்தில்  (National Art Gallery) 15 ஜூலை முதல் 15 ஆகஸ்ட் வரை நடைபெறுகிறது.

லியொனார்டோ டாவின்சியின் ஓவியங்களை ரசித்து மகிழப் போய் வாருங்களேன். உங்களுக்காகத் தேசிய கலைக் காட்சியகம் திங்கள் முதல் ஞாயிறுவரை காலை மணி 10 முதல் மாலை மணி 6 வரை திறந்திருக்கிறது.


   








ஆளுமை

      ‘வெள்ளி நிலவு கவிஞர் வீரமான்



நாடறிந்த கவிஞர் வீரமான் முதுமை, உடல்நலக் குறைவு காரணமாகக் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் தகவலை  மணிக்கவிஞர் பாதாசன்வழி அறிந்த சிரம்பான் நண்பர் பெ.அருணாசலம் என்னிடம் கூறினார். அங்கிருந்து வெளியேறிய பின் கிள்ளானில் உள்ள தனியார் சமூகநல இல்லத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக அடுத்த தகவல் வந்தது. எனக்கு அதிர்வூட்டியது. 
            சில மாதங்களுக்கு முன் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரைக் கண்டு நலம் விசாரித்து வந்தேன். உடல் நலமடைந்து அங்கிருந்து விடைபெற்றவருக்கு மீண்டும் என்ன ஆனது? ஒரு ஞாயிற்றுக்கிழமை அவரைக் காண முகவரி பெற்றுக் கிள்ளானுக்குப் புறப்பட்டேன்.
            இந்நாட்டுத் தமிழாசிரியர்கள், மாணவர்களிடையே கவிஞர் வீரமான் என்றால் உடனே நினைவுக்கு வருபவை எஸ்.பி.எம். தமிழ் இலக்கியத் தேர்வுக்குத் தேர்வான அவரின் ஆறு கவிதைகள்தாம். அதிலும் குறிப்பாக, சீனரிடம் எனும் தலைப்பிலான கவிதை மாணவர்களையும் ஆசிரியர்களையும் அதிகம் கவர்ந்த கவிதை. நம்மிடமிருந்து சீனர்கள் பல பாரம்பரியத் தொழில்களைக் கற்றுக்கொண்டு வணிகம் பெருக்கி வாழ்வில் முன்னேறினார்கள். நாம் அவர்களிடமிருந்து எதைக் கற்றோம்? என அங்கதச் சுவை மிளிர எள்ளல் நடையில் அக்கவிதை அமைந்திருக்கும்.
            தமிழக மண்ணில் பிறந்து மலாயாவுக்குப் புலம்பெயர்ந்த கவிஞர் வீரமான், அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து கவிதைகளைப் படைத்து வருகிறார். இவரின் கவிதைகள் உணர்ச்சிப் பாங்கும் எளிமையும் எழுச்சியும் மிக்கவை; மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும், இனப்பற்றும் கொண்டவை. மலேசிய வாழ்வைத் தெளிவாகக் காட்டுபவை.
            மாரியப்பன் எனும் இயற்பெயர் கொண்ட இவர், தமிழகத்தில் கோடியக்கரை எனும் கிராமத்தில் பிறந்தவர். தொடக்கக் கல்வியை இவர் அங்கேயே கற்றார். முதலில் இவரின் தந்தை வீரப்பிள்ளைதான் பினாங்கு வந்தார். “நானும் வரப்போகிறேன்” என்று தந்தைக்குக் கடிதம் எழுதினார். “வேண்டாம், வீட்டிலுள்ள வெண்கல சட்டியை விற்றாவது உன்னைப் படிக்க வைக்கிறேன். நீ  தொடர்ந்து படி” என்று அப்பா மறுத்தார். ஆனால், வீரமான் கேட்கவில்லை. பினாங்குக்குக் கப்பலேறிவிட்டார். படிக்கத்தான் இங்கு வந்தார். ஆனால், இந்த மலேசிய மண் அவரை நிரந்தமாய் ஈர்த்து அரவணைத்துக்கொண்டது.



1956இல் மலேசியாவிற்கு வந்தவர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். பொன்நகை விற்பனைக் கடையில் நீண்ட காலம் பணியாற்றினார். பின்னாளில் இதழியல் துறைக்கு வந்தார். மெய்ப்புத் திருத்தும் பணியும் செய்து வந்துள்ளார். ஆயினும், கவிதைத்துறைதான் மலேசியத் தமிழர்களுக்கு அவரை நன்கு அடையாளங்காட்டியது.
            நல்லாரைச் சேர்ந்தொழுகின் நற்பண்புகள் நிறைவதுபோல், கவிஞர்களை நெருங்கியதால் வீரமான் கவிதை எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். பினாங்கில் அசன்கனி, கரு.திருவரசு, கே.எம்.யூசூப், மூ.சேது  ஆகிய நால்வரும் சேர்ந்து நால்வர் எனும் பெயரில் கவிதை எழுதினார்கள். கையெழுத்து அழகாக இருக்குமென்பதால் வீரமான்தான்


அக்கவிதைகளை எழுதிக் கொடுப்பார். பின்னாளில், காரைக்கிழார், மைதீ.சுல்தான் ஆகியோருடன் வீரமானும் இணைந்து திரிகூடர் எனும் பெயரில் கவிதைகள் எழுதினார்.  அது கவிதை உணர்வுகள் செழித்திருந்த பொற்காலம். கவிபுனையும் ஆற்றலை நன்கு வளர்த்துவிட்டது. 



தமிழ் மணிமன்றப் பாசறையில் வளர்ந்தவரான இவர் பினாங்கில் அதன் தொடக்ககால உறுப்பினர்களில் ஒருவர். அதன் சொற்பயிற்சி மன்றம் இவரின் திறனை வளர்த்துவிட்டது எனலாம். அதனால்தான்,
                        தமிழணி மணிமன்றம் தந்ததொரு பிச்சையினால்
                        தமிழ்பாடும் கவிஞனென தலைநிமிர்ந்து நிற்கின்றேன்

என்று பாடுகிறார். மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழகத்தின் அமைப்பாளர்களில் இவரும் ஒருவர். இவர் மாநாடுகளிலும் விழாக்களிலும் நடந்த பாவலரங்குகளில் பங்கேற்றுள்ளார். தலைநகரில் நீண்ட காலம் இயங்கிய கவிதைக்களம் நடத்தியவர்களில் ஒருவராய்த் தொண்டாற்றியுள்ளார். இவர் தம் கவிதைகளைத் தொகுத்து வெள்ளி நிலவு (1979), வீரமான் கவிதைகள் (1994), வீரமான் கவியமுது (2013) ஆகிய நூல்கள் வெளியிட்டுள்ளார். 

            சிங்கப்பூரில் தமிழ் முரசு நாளிதழ் நடத்திய வெண்பா போட்டிதான் வீரமானை அறிமுகப்படுத்தியது. தந்தையின் பெயரான வீரப்பிள்ளையோடு தம் பெயரையும் இணைத்து வீரமான் எனும் எனும் பெயரில் போட்டியில் கலந்துகொண்டார். இவருக்குத்தான் முதல் பரிசு. யார் இந்த வீரமான்?” எனப் பலரையும் அது திரும்பிப் பார்க்க வைத்தது. அதன் பின்னர், பல போட்டிகளில் பரிசுகள்  வென்றுள்ளார். கவிதைத் துறையில் வழங்கிய பங்களிப்புக்காகப்  பல விருதுகளும் பெற்றுள்ளார். தமிழ் நேசன் பவுன் பரிசு, தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கக் கவிதைப் பரிசு, டான்ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது (2003) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் டான்ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது (2003), டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு (2017) போன்றவை குறிப்பிடத்தக்கவை.

            கவியரசு கண்ணதாசன் பினாங்கு வந்தபோது வீரமான்தான் வரவேற்புக் கவிதை வாசித்தார். மாலைகளைக் கழற்றிப்போட்ட கண்ணதாசன் வீரமானின் வரவேற்புக் கவிதையைப் பத்திரமாக வைக்கும்படி சொன்னாராம். பின்னர் வீரமானை வாழ்த்தி,         
       
                               சேரமான் சிலம்பிற்கண்ட செந்தமிழ் பாடவல்ல    
                           வீரமான் வாழ்க பன்னாள் விளங்கவே கவிதை
என்று எழுதித் தந்தாராம். கண்ணதாசன் தமிழால் வாழ்த்துப் பெற்றதைப் பெரும் பேறாக எண்ணி மகிழ்கிறார் வீரமான்.




            கடந்தாண்டு,  நண்பர் பெ.அருணாசலம் வீரமான் கவியமுது நூல் வெளியீட்டு விழாவைச் சிரம்பானில் ஏற்பாடு செய்தார். வழக்கமாக நூல் வெளியீடுகளில் குறைவான வருகையாளர்களே கலந்துகொள்கிறார்கள். அதை மாற்றி, வெற்றி விழாவாக்கத் திட்டமிட்டோம்.  நாடு முழுவதும் தமிழாசிரியர்களை, தமிழ் உணர்வாளர்களைப் புலனம் வழி தொடர்புகொண்டு ஆதரவு கேட்டோம். எதிர்பாராத வகையில் நூறு பேர் பெயர்களை முன்பதிவு செய்து தம் பங்களிப்பை வழங்கினர். இந்நாட்டு நூல் வெளியீட்டு விழாவில் இப்படியொரு திட்டம் யாரும் செயல்படுத்தியதில்லை. தமிழ்த் தொண்டர் பெ.அருணாசலத்தின் விடாமுயற்சியால், பலரின் பங்களிப்பால் சிரம்பானில் இந்தச் சாதனை படைக்கப்பட்டது. ஐம்பது பேர் கலந்துகொண்டாலும் நூறு பேரின் ஆதரவால் நிகழ்ச்சி சிறப்பானது. உடல்நிலை தளர்ந்த நிலையிலும் கவிஞர் வீரமான் அந்நிகழ்வில் கலந்துகொண்டு தம் அளவிறந்த மகிழ்வைப் பகிர்ந்துகொண்டார். காலமெல்லாம் சமூகம் குறித்துச் சிந்தித்த கவிஞரின் உழைப்பை அங்கீகரிக்கும் நிகழ்ச்சியாக அஃது அமைந்தது.



            கவிஞர் வீரமானின் மனைவி காலமாகிவிட, இப்பொழுது இவரின் இரண்டு மகன்களும் மகளும் தமிழகத்தில் உள்ளனர்.  ஆயினும், நீண்ட காலமாக இவர் இங்கே, அவர்கள் அங்கே என வாழ்ந்ததால் மலேசியாவில் இருப்பதையே இவரின் மனம் விரும்புகிறது. அதனால்தான், தமிழகம் திரும்பிப் பிள்ளைகளோடு இணையாமல் தம் அந்திம காலத்தை மலேசிய மண்ணில் கழிக்க இவர் மனம் விழைகிறது. கிராமத்தில் இருந்த நிலங்களைத் தம் அண்ணன் தம்பிகளுக்கு எழுதித் தந்துவிட்டார். தஞ்சாவூரில் இருந்த நிலங்களைத் தம் பிள்ளைகளுக்குத் தந்து விட்டார்.  இனி, இவருக்கென்று எதுவும் இல்லை.
            கிள்ளானில், தனியார் சமூகநல இல்லத்திற்குச் சென்று சேர்வதற்குள் என் மனம் பலவற்றை அசை போட்டுப் பார்த்தது. என் எதிர்பார்ப்புக்கு மாறாக, இரண்டு மாடிகள் கொண்ட பெரிய இல்லமாக அஃது இருந்தது. உள்ளே நுழைந்து கவிஞரைத் தேடினேன். பத்துப் பதினைந்து பேர் அங்கே தென்பட்டார்கள். கீழ்த் தளத்தில் வலப்பக்கத்தில் இருந்த கட்டிலில் அமர்ந்திருந்தவர் “வாங்க பாலன்” என முகத்தில் புன்னகை மலர வரவேற்றார். வலது காலில் பெரிய கட்டு. தவறிக் கீழே விழுந்ததால் காலில் முறிவு ஏற்பட்டதாகக் கூறினார். அவர் அங்கிருப்பது தெரியாது என்பதால் இன்னும் யாரும் வந்து பார்க்கவில்லை என்றார். உடல் வேதனையும் உள்ளத்தில் சோர்வும் இருந்தாலும் அவற்றை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பேசினார்.  அங்கு நாளிதழ் வாசிக்கும் வாய்ப்பு இல்லாததால் வெளியுலகத் தொடர்பற்றுத் தனிமையில் இருப்பதாக உணர்கிறார்.
            அது நாற்பது ஆண்களுக்கு அடைக்கலம் தரும் இல்லமாக இருக்கிறது. பெரும்பாலும் முதுமையால் கைவிடப்பட்டவர்கள் அல்லது ஆதரவற்றவர்கள். வீரமான் யார் என்பது அங்கு யாருக்கும் தெரியவில்லை. அங்குப் பணியில் இருந்தவர்களிடமும் அதன் உரிமையாளரிடமும் கவிஞரைப் பற்றிக் கூறினேன். கிள்ளானில் வசிக்கும் என் அன்புத் தம்பி செல்வகுமாரை அப்பொழுதே அழைத்துக் கவிஞரின் தேவையைக் கவனித்துக் கொள்ளுமாறு கூறினேன். “அன்பாய்க் கவனிக்கிறார்கள். இங்கு  குறையொன்றும் இல்லை பாலன்” என்று கைகூப்பி விடை தந்தார்.


            தமிழ்ப்பள்ளியைப் பிறமொழிப் பள்ளியாய் மாற்றிவிடலாம் என ஒரு முறை சமுதாயத்தில் முரணான கருத்து முன்வைக்கப்பட்டபோது கவிஞர்கள் பொங்கியெழுந்து கவிபாடினார்கள். அப்பொழுது வீரமானும் தமிழுக்கோர் அம்மானை எனும் தலைப்பில் எழுச்சிமிகு கவிதையைப் பாடினார். காலத்தின் பதிவாக அஃது என்றும் நிலைத்திருக்கும். அதில் ஒரு கண்ணி:

                         கல்விபெற என்னவழி கற்றோரே சொல்லு”மென்றோம் 
                     கொள்ளிகொண்டு வந்து கொடுக்கின்றார் அம்மானை!
                      கொள்ளிகொண்டு வந்து கொடுக்கின்ற மேதைகட்குச்
                     சொல்லிவைப்போம் இச்சூழ்ச்சி செல்லாதென் றம்மானை!
                                  சூதாட்டக் காயோ சுவைத் தமிழும் அம்மானை!

சமுதாய நலம் காண பாடிய கவிஞரை நாம் சென்று காண்பதும் அவரோடு உரையாடுவதுமே நாம் அவருக்குச் செய்யும் சிறு உதவியாக இருக்கும். உங்களைச் சந்திக்கவும் உரையாடவும் கவிஞரும் ஆவலோடு காத்திருக்கிறார். முகவரி: 
Destiny Klang,
Jalan Petola 10,
Kg Raja Uda,
Port Klang


Friday, July 12, 2019

நினைவுக் கட்டுரை


இலக்கியத் தேனீ
பேராசிரியர் இரா.மோகன் 


டாக்டர் மு.வ. நூற்றாண்டு மலர் வெளியீடு

மதுரையில் பேராசிரியர் இரா.மோகன் இயற்கை எய்தினார் என்ற செய்தி அண்மையில் எனக்கு அதிர்ச்சியையும் பெருந்துயரத்தையும் ஏற்படுத்தியது. நமக்கு அறிமுகமானவர்களும் அன்பினால் நெருங்கியவர்களும் நம்மைவிட்டு நிரந்தமாய்ப் பிரியும்போது இந்தப் பாழும் மனம் அதை எளிதில் ஏற்பதில்லை. அவர்கள் நம்மோடு பழகிய கணங்களும் சந்தித்துப் பேசியவையும் மனக்கண்ணில் மீண்டும் தோன்றி மறையும். அப்படித்தான் பேராசிரியர் இரா.மோகன் அவர்களுடனான  நினைவுகளை என் மனம் அசைபோட்டுப் பார்க்கிறது.

2004ஆம் ஆண்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழகத்திற்கு மேற்கொண்ட இலக்கியப் பயணத்தின்போது மதுரையில் அவரைச் சந்தித்தேன். உலகத் திருக்குறள் பேரவையின் தலைவர் மணிமொழியன் ஏற்பாடு செய்த இலக்கியச் சந்திப்பில், மலேசிய இலக்கியம்: ஓர் அறிமுகம் எனும் நூலை வெளியிட்டுப் பேராசிரியர் இரா.மோகன் உரையாற்றினார். கேட்பாரைப் பிணிக்கும் நகைச்சுவை கலந்த அவரின் உரை அனைவரையும் ஈர்த்தது. புதுக்கவிதை, ஹைக்கூ கவிதைகளில் மிகுந்த ஈடுபாடுகொண்ட அவர் அவை குறித்தும் பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய முனைவர் ரெ.கார்த்திகேசு, “சாகித்ய அகாடமி வெளியிடத் திட்டமிட்டுள்ள தமிழ் இலக்கிய வரலாற்றில் மலேசிய இலக்கிய வரலாறும் இடம்பெற வேண்டும் என்ற என் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இன்னும் அனுமதிக் கடிதம் கிடைக்கவில்லையே” என்ற மனக்குறையை முன் வைத்தார். பேராசிரியர் இரா.மோகன் உடனே எழுந்தார். “நீங்கள் மதுரையை விட்டுப் போவதற்குள் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு கண்டு விடுகிறேன்” என்று அவர் கூறிய சொற்களில் உறுதி தெரிந்தது. அஃது உண்மை என்பது அன்றிரவே உறுதியானது. அன்று நள்ளிரவில், மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரனைக் கைப்பேசியில் அழைத்து, “முனைவர் ரெ.கா.வுக்கான கடிதம் சென்னையில் சாகித்ய அகடாமி அலுவலகத்தில் தயாராக இருக்கும். சென்னைக்குப் போகும்போது நேரில் பெற்றுக்கொள்ளலாம்” என்ற இனிப்பான தகவலைக் கூறினார். ஒரு செயலை விரைந்து முடிக்கும் அவரின் செயல்திறம் என்னை வியப்பிலாழ்த்தியது.

அந்த நிகழ்ச்சியில் தாம் எழுதிய நூல்களை எங்களுக்கு வழங்கினார். அதன் பின்னரே அவரைப் பற்றி ஆழமாக அறியும் வாய்ப்பு ஏற்பட்டது. மு.வ.வின் செல்லப் பிள்ளை எனத் தமிழ்கூறு நல்லுலகத்தில் அழைக்கப்பெறும் இவர், கு.ப.இராஜகோபாலன் சிறுகதைகள் எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். 1972இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் சேர்ந்து, விரிவுரையாளர், இணைப்பேராசிரியர், திட்ட ஒருங்கிணைப்பாளர், ஒப்பிலக்கியத்துறைத் தலைவர், புல ஒருங்கிணைப்பாளர், மூத்த பேராசிரியர், ஆட்சிக்குழு உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளில் 34 ஆண்டுக்காலம் பணியாற்றியுள்ளார். இவர்தம் நெறிகாட்டுதலில் 24 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். சோர்விலாமல் கடும் உழைப்பில் வாழ்வின் உயர்வை அடைந்தவர் என்பதை இதன்வழி அறிய முடிகிறது.


                            மகள் மருமகனோடு  இரா.மோகன் – நிர்மலா இணையர்

2009இல் மீண்டும்  மதுரைக்குப் பயணம் மேற்கொண்டோம். இம்முறை மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகமும் ம.த.எழுத்தாளர் சங்கமும் இணைந்து, 33 தமிழாசிரியர்களுக்குக் காமராசர் பல்கலைக்கழகத்தில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தன. அதைப் பேராசிரியர் இரா.மோகன் முன்னின்று சிறப்பாக ஒருங்கிணைத்தார்; அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்று விருந்தோம்பல் செய்தார்; பேருந்துப் பயணத்தில் பட்டிமன்றம் நடத்திக் கலகலப்பூட்டினார்; கோயில்களுக்கும் இலக்கியச் சந்திப்புகளுக்கும் உடன்வந்து துணைநின்றார்; நாடு திரும்பும்வரை சோர்விலாமல் அனைத்துத் தேவைகளையும் சேவகன்போல்  நிறைவுசெய்தார். எங்கள் பயணம் வெற்றிப் பயணமாக அமைய அவர் முக்கியப் பங்காற்றினார்.

ஒரு நாள் அனைவரையும் மதுரையில் தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அலங்காரப் பொருள்கள் இல்லை. வரவேற்பறை தொடங்கி உணவருந்தும் இடம்வரை எங்கும் நூல்களே நீக்கமற நிறைந்திருந்தன. இல்லத்தில் நூல்களா? நூல்களுக்குள் இல்லமா?’ என அவற்றை வியந்து பார்த்தோம். அவரின் துணைவி முனைவர் நிர்மலாவும் அன்புடன் வரவேற்று உபசரித்தார். அவர்களின் ஒரே அன்பு மகள் மணமாகி அமெரிக்காவில் வசிக்கிறார். பூமியில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பதைவிட எத்தனை நூல்கள் வாசித்தோம் என்பதுதான் முக்கியம் என்று அறிஞர் கூறிய அமுதமொழிதான் அப்பொழுது நினைவுக்கு வந்தது.

அங்குதான் அவர், தாம் எழுதிய 80 நூல்கள்கொண்ட நிலைப்பேழையைக் காட்டினார். இன்று அந்த எண்ணிக்கை நூறைத் தாண்டிவிட்டது. வாழ்நாளெல்லாம் வாசிப்பு, எழுத்து, பட்டிமன்றம், இலக்கிய நிகழ்ச்சி, இலக்கியப் பயணம் எனச் சுறுசுறுப்பாக இயங்கிய இலக்கியத் தேனீதான் பேராசிரியர் இரா.மோகன். டாக்டர் மு.வ.வின் நாவல்கள் என்பது இவரின் முதல் நூல் (1972). மு.வ. மீது மிகுந்த பற்றுக்கொண்ட மாணவராக அவர் திகழ்ந்ததின் சான்றாக  அவரைப் பற்றி ஆறு நூல்கள் எழுதியுள்ளார். 



மலேசியத் தமிழ் இலக்கியத்தின் மீது அக்கறை கொண்டவராகவும் மதுரை மண்ணில் அதற்கான அங்கீகாரத்தை வழங்குவதிலும் ஈடுபாடு காட்டினார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க அழைப்பினை ஏற்றுச் சிறுகதைக் கருத்தரங்கம், புதுக்கவிதைக் கருத்தரங்கம், டாக்டர் மு.வ. நூற்றாண்டு விழா, இலக்கியச் சந்திப்பு, நூல் வெளியீடு எனப் பல நிகழ்ச்சிகளில் பங்குபெற பலமுறை மலேசியாவுக்கு வந்துள்ளார். ஒருமுறை சிறுகதைக் கருத்தரங்கில், தேர்வுபெற்ற  இருபது சிறுகதைகளைப் பற்றி கருத்துரை வழங்கினார். கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல் எல்லாக் கதைகளையும் அலசி ஆராய்ந்து இவர் பேசினார். இவரின் நினைவாற்றல் கண்டு  அனைவரும் வியந்தோம்.

சிறுகதைக் கருத்தரங்கம் முடிந்த மறுநாள், கெந்திங் மலைக்குச் செல்ல வேண்டும் என்று தம் விருப்பத்தைத் தெரிவித்தார். டாக்டர் மு.வ.வின் மாணவருக்கு ஒருநாள் சாரதியாக உடன் இருந்து உதவும் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியதற்காக மகிழ்ந்தேன். பத்துமலையில் முருகனைத் தரிசித்துவிட்டுக் கெந்திங் புறப்பட்டோம்.   மலையை அடையும் வரை வழிநெடுக உற்சாகமாகப் பேசியபடி வந்தார். மலையைச் சூழ்ந்த பசுமை அழகையும் அதன் உச்சியில் அமைந்த கட்டட நேர்த்தியையும் ரசித்தார்.

மாலை திரும்புகையில் டாக்டர் மு.வ. வோடு பழகிய அவரின் அனுபவம் பற்றி நான் ஆர்வத்தோடு கேட்க அவற்றை ஆசையாய்க் கூறினார். தம் காதல் வாழ்விலும் மு.வ.தான் துணை வந்ததாகக் கூறினார். எப்படி என்றேன். தம்முடன் முதுகலை பயின்ற  மாணவியிடம் ஒரு நாள் கையில் வைத்திருந்த நூலை நீட்டி “நல்வாழ்வு வேண்டுகிறேன்” என்றாராம். அதை வாங்கிய மாணவிக்கோ குழப்பம். நூலைப் பார்த்தார். நூலின் தலைப்பு நல்வாழ்வு’. அது டாக்டர் மு.வ.வின் நூல். ஒரு நூலைக் கொடுத்துத் தம் காதலை அழகாகச் சொன்ன விதம்  வியப்பாக இருந்தது. அந்த மாணவிதான் அவரின் துணைவியார் முனைவர் நிர்மலா அவர்கள். திருமணத்திற்கு முன்னால் இவர் தம் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, அன்புள்ள நிலாவுக்கு என்ற நூல் வெளிவந்துள்ளது.



                      மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி

ஸ்ரீகோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் திரு. கந்தசாமி அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள அழைத்தபோது மறுக்காமல் மலேசியா வந்தார். செர்டாங் நண்பர் இராஜேந்திரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற அவ்விழாவில் நானும் இணைந்துகொண்டேன். எழுத்தாளர்களின் நூல் முயற்சிகளுக்கு அணிந்துரை வழங்கி ஒல்லும்வகையெல்லாம் துணைநின்றுள்ளார். அவை தொகுக்கப்பட்டு, இலக்கியக் கோலங்கள்’, முன்னுரை நாற்பது என இரு நூல்கள் வெளிவந்துள்ளன.

2015இல் 9ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு இங்குத் துணைவியாரோடு வந்தபோது, அவர்கள் தனித்தனியே தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இவருக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் துணைவியிடம் இருந்ததால் ஒன்றாகத் தங்கும் வசதியைக் கேட்டிருக்கிறார். முடியாது என்று ஏற்பாட்டுக் குழுவினர் மறுத்துவிட்டனர். உடனே, உதவிக்கு வந்த நண்பர் ஹில்டன் தங்கும் விடுதிக்கு இருவரையும் அழைத்துப் போனார். ஏற்பாட்டுக் குழுவினரை நண்பர் கடுமையாகத் திட்ட, “வேண்டாம் ஐயா. அவர்களைத் திட்டாதீர்கள். அவர்கள் நிலை அப்படி. நாம்தான் பொறுத்துப் போக வேண்டும்” என்று அந்தச் சூழலிலும் அமைதி காத்தார் பேராசிரியர் இரா.மோகன்.

நுண்மாண் நுழைபுலம்மிக்க பேராசிரியராய், இலக்கிய இதயங்களில் நீங்காமல் வீற்றிருக்கும் இலக்கியவாதியாய், எப்பொழுதும் புன்னகை பூத்த முகத்தினராய், நகைச்சுவைப் பேச்சில் பழகுவோரை எளிதில் ஈர்ப்பவராய், மற்றவரைக் கடிந்து பேச அறியாதவராய், இம்மண்ணில் 69 ஆண்டுகள் வாழ்ந்த பேராசிரியர் இரா. மோகன் அவர்களின் மறைவு இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு. குறையொன்றும் இல்லை, மறைமூர்த்தி கண்ணா’, இது அவரின் கைப்பேசியின் அழைப்பொலி. வாழ்வில் குறை மறந்து நிறை மட்டும் காணும் உயர்ந்த உள்ளம் அவருடையது.


                                    என் நூலைப் பெறுகிறார் இரா.மோகன்

டாக்டர் மு.வ. அவர்களுக்கு மாணவர்கள் பலருண்டு. ஆனால், இவர் தம் சொல்லால், செயலால், எழுத்தால், மு.வ.வைத் தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார். இலக்கியத்தில் பழைமையும் புதுமையும் போற்றும் பண்பாளராக மிளிர்ந்தார். முதல் நாள் கம்பன் பட்டிமன்றத்தில் பேசுவார். மறுநாள் புதுக்கவிதை நூலுக்கு அணிந்துரை எழுதுவார்.

ஒரு மரணத்தில் என்ற கவிதையில் கடைசி வரிகளாய் நான் எழுதியவை நினைவுக்கு வருகின்றன.
                                                தன் குறிப்பேட்டில்
                                                ஒரு பெயரைக்
                                                குறித்துக்கொண்டோ
                                                அழித்துவிட்டோ
                                                காலம் மௌனமாய்க்
                                                கடந்து போகிறது

தமிழ்கூறு நல்லுலகப் பேரேட்டில் பேராசிரியர் இரா.மோகனின் பெயர் என்றும் நிலைபெற்று வாழும் என்பது உறுதி. இறந்தாலும் தொடர்ந்து வாழ்விக்கும் அரிய கலைதான் எழுத்து என்பதை மறுப்பார் யாருமுண்டா?




                 இரா.மோகன் மலேசிய நூலை வெளியிட தமிழண்ணல் பெறுகிறார்



                                                      (மயில் இதழ் - ஜூலை 2019)

Tuesday, May 21, 2019

மழையின் சங்கீதம் (சிறுகதை)






பத்திரிகை அலுவலகம் பரபரப்பாயிருந்தது.  சங்கச் செய்திகளை வட்டார நிருபர்கள் அனுப்பத் தொடங்கி விட்டார்கள். ஆறு மணிக்குள் தலையங்கத்தைத் தயார் செய்ய வேண்டும். ஏழு மணிக்குள் முன்பக்கச் செய்திகளை உறுதி செய்ய வேண்டும். துணையாசிரியரான நான் பக்க வடிவமைப்புப் பணியையும் மேற்பார்வையிட வேண்டும். கொஞ்சம் தாமதமானால் ஆசிரியர் பொறுக்க மாட்டார். நான் வழக்கம்போல் இயந்திர கதியில் இயங்கினேன்.

இரண்டாவது மாடியில் என் இருக்கைக்கு எதிரே கண்ணாடிவழி வெளியே பார்த்தேன். வானம் இருண்டிருந்தது. இரண்டு வாரமாய்க் கொளுத்திய வெயிலின் வெக்கை இன்னும் தணியவில்லை. இன்று மழை வந்தால் ஆசையாய்க் கொஞ்சம் நனைய வேண்டும். கடைசியாக மழையில் எப்பொழுது நனைந்தேன்?

வழக்கமாக ஐந்து மணிக்குத் தேநீர் வரும். வந்தது. எங்கள் அலுவலகத்தில் அனைவருக்கும்  தேநீர் வழங்கும்  மாலினி மேக்கப் கலையாமல் புன்சிரிப்போடு வந்தாள்.  தேநீர்  சுவையாக இருப்பதற்குத் தேநீர்தான் காரணமா? அல்லது மாலினி கனிவாய் திறந்து கனிவாய்ப் பேசுவது காரணமா? தெரியவில்லை. கண்டுபிடிக்க வேண்டும்.

ஞாயிறு மலர் பொறுப்பாசிரியர் சின்னராசு அழைத்தார். தேநீர் கப்போடு அவரிடத்திற்குப் போனேன். அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?’ தனக்குள் பாடலை முணுமுணுத்துக்கொண்டிருந்தார். பழம்பாடல் பிரியர். அவர் வாய் திறந்தாலும் பழைய படங்களின் தகவல்தான்.

“பாலன், இந்த வாரம் வாசகர்கள் உருகுகிற மாதிரி நீங்க ஒரு காதல் கதை எழுதுறீங்க”

“நானா? காதல் கதையா? ஆள விடுங்க. வேண்டாமே இந்த விஷப் பரீட்ச”

“போன வாரம் பேய் கதை எழுதினீங்க. நல்லா இருந்துச்சுன்னு வாசகர்கள் சொல்றாங்க. இங்க பாருங்க. கெப்போங்கிலிருந்து வீர.சுந்தரேசன் அனுப்பிய வாசகர் கடிதம்”

வாங்கிப் படித்தேன். 

கவிதை உலகத்துக்குள் உழன்று கொண்டிருப்பவர் எழுத்தாளர் ந.பச்சைபாலன் என்று எண்ணியிருந்தேன். சிறுகதையிலும் சிங்கார நடை போடுவார் என்பதைக் கடந்த வாரம் ஞாயிறு மலரில் பிரசுரமான கல்லறையின் கூச்சல் சிறுகதையைப் படித்து அறிந்தேன். எழுத்தாளர் பேய் கதை மட்டும்தான் எழுதுவாரா? சிருங்கார கதைகள் எழுதமாட்டாரா?’ வீர.சுந்தரேசன், கெப்போங்.

இதென்ன வம்பு? ஞாயிறு மலருக்கு அவ்வப்போது கவிதைகள், ஆய்வுக்கட்டுரைகள் எழுதித் தருவேன். போன வாரம்தான் வழக்கத்தை மறுதலித்து ஒரு பேய்க்கதை எழுதினேன். இன்னொரு பேய்க்கதையும் கைவசம் இருக்கிறது. அதை எழுதலாம். காதல் கதையா? எனக்கு வராதே. இவருக்கு எப்படிப் புரிய வைப்பது?

“இல்ல சார். காதல்.. கொஞ்சம் சிரமம்தான். எனக்கு வராது தவிர்க்க முயன்றேன்.

“காதலா? காதல் கதையா? இங்க பாருங்க பாலன். இது உங்களுக்கு வைக்கப்பட்ட சவால். நீங்க எவ்வளவோ படைப்புகள் எழுதி நம்ம பத்திரிகையில வந்திருக்கு. உங்களுக்குக் காதல் கதை எழுத வரலன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. உங்களுக்கு காதல் அனுபவம் இருக்குமே. அதுல்ல கற்பனையை கலந்து  எழுதுங்க” மனம் வைத்துவிட்டால் விட மாட்டார். எப்படியாவது படைப்பை வாங்கி விடுவார். அது கைவந்த கலை அவருக்கு.

“பார்க்கலாம் சார். முயற்சி செய்யுறேன்... எழுதுற மனநிலை வரணும். அப்பத்தான் மனம் ஒன்றி ஒரு படைப்பை உருவாக்க முடியும்” அந்தச் சூழலில் சமாளிக்க இப்படித்தான் சொல்ல முடிந்தது.

“வேணும்னா ஒரு மர்மக் கதை எழுதட்டா?” பேச்சைத் திசை திருப்பினேன்.

“மர்மப் படம் நிறைய பார்க்கிறீங்கன்னு நினைக்கிறேன். ரெண்டு மூனு காதல் படம் பாருங்க. மூடு வந்திடும். வசந்த மாளிகையில சிவாஜியும் வாணிஸ்ரீயும் காதல வெளிப்படுத்துற பாங்கு இருக்கே அடடா..நான் படத்த ஏழெட்டு முறை பார்த்திருக்கேன்”

நான் இன்னொரு கப் தேநீரோடு என் மேசைக்கு வந்தேன். கண்ணாடிவழி பார்த்தேன். வானம் சிணுங்கத் தொடங்கியது. சிறு தூறலாய் ஆரம்பித்த மழை கண்ணாடியை நனைத்து நீர்க்கோலமிட்டுக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் சுருதி கூட்டிப் பெருங்குரலெடுத்தது.

கண்ணாடிச் சன்னலைத் திறந்து மழைக்குக் கைகளை நீட்டி அதன் குளுமையை அனுபவித்தேன். ஆகா.. என்ன இன்பம். மழையின் மாயக்கரம் பட்டவுடன் மனம் எனையறியாமல் அவிழ்ந்து கொண்டது. எழுத்தாளனின் பலமும் பலவீனமும் மழை என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. மழை எனக்குப் பலமா? பலவீனமா? தெரியவில்லை.

தூரத்தில் துன் இஸ்மாயில் சாலையில் வாகனங்கள் இருபுறமும் நீரை வாரி  இறைத்தவாறு விரைந்தன. குடை இல்லாமல் ஒருவர் மழைக்குத் தன்னை முழுமையாய் ஒப்படைத்துவிட்டு நனைந்தவாறு சாலையைக் கடந்தார். இளம் ஜோடி ஒன்று நெருக்கமாக குடை பிடித்தவாறு வாகனங்களின் சாலை நீர் அபிசேகத்தை ஏற்றுக்கொண்டு நடந்தது.

மழை உடலை மட்டுமா நனைக்கிறது? மனத்தையும் ஊடுருவி குளுமையைப் பரவச் செய்கிறது. இறுக்கமான எண்ணங்கள் நெகிழ, மனம் மென்மையாகிறது. ஈரமான மண்ணில் செடியின் வேர் எளிதில் இறங்குவதுபோல் மென்மையான மனத்தில் அன்பும் கருணையும் காதலும் உயிர் இரக்கமும் வேர் கொள்கின்றன.

வேலை முடிந்து, பக்கத்தில் இருந்த உணவகத்தில் இரவு உணவுக்குப் போனேன். மழை நிற்காமல் நீர்த் தாரைகளைப் பூமிக்கு அனுப்பிக்கொண்டிருந்தது. உடன் வந்த நிருபர் வேதா மழையைத் திட்டித் தீர்த்தார். “வீணா போன மழை. இப்படி அழுவுதே. இதுக்கு நேர காலம் தெரியாது. ரெண்டு வாரமா எங்க போய் தொலைஞ்சதுன்னு தெரியல்ல. இன்னைக்கு பார்த்து குடை கொண்டு வரல்ல” எப்பொழுதும் யாரையும் குறைசொல்வதும் நொந்துகொள்வதும் அவரின்

இயல்பு. தலைநிறைய சிக்கல்களைச் சுமந்துகொண்டு திரிவார். இன்று மழை அவரிடம் மாட்டிக்கொண்டது.

கொஞ்ச நேரத்தில் மழையின் வேகம் குறைந்தது. வேதா பழைய நாளிதழை மடித்துத் தலையை மறைத்தவாறு பேருந்து நிலையம் நோக்கி விரைந்தார். எனக்கு மழையில் நனைய வேண்டும் போலிருந்தது. உணவகத்தை விட்டு வெளியே வந்தேன்.

சாலையிலும் கடை வீதியிலும் ஒளிவெள்ளம் பரவியிருந்தது. குளிர்க்காற்று உடலைத் தீண்டியது. சற்றுத் தூரத்தில் என் கார் நிறுத்தப்பட்டிருந்த இடம்வரை நனைந்துகொண்டே நடந்தேன். மழையில் நனைவது தனி இன்பம். வாழ்வின் எத்தனையோ தருணங்களில் மழையில் நனைந்திருக்கிறேன்.

மழையில் நனையும்போதெல்லாம் பூரணியை நினைக்காமல் இருக்க முடியுமா? மழைநீர் பட்டு மண் வாசம் எழுவதுபோல் பூரணியின் நினைவுகள் மனத்தில் நிறைந்தன.
  
         *                          *                      *                         *                    *                   *







ஊடகத் துறையில் படித்து எப்படியாவது ஒரு பத்திரிகையின் ஆசிரியராக வர வேண்டும் என்ற என் ஆசையை வேலு மாமாதான் புரிந்துகொண்டு அதற்கு ஏற்பாடு செய்தார். வீட்டில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் துளியும் விருப்பமில்லை. வீட்டில் ஏதும் சிக்கலென்றால் அம்மா தன் தம்பியை அழைத்து விடுவார்.

“இவன் தாத்தாதான் பத்திரிகை, எழுத்துன்னு காலத்த வீணாக்கிட்டாரு. இவனுமா? கவர்மெண்டு வேலைன்னா பரவாயில்ல. இவனுக்கு எங்க புரியபோவுது. எங்க காலம்தான் இப்படி கித்தா மரத்தோட போராடியே கரைஞ்சு போச்சு” அப்பா கையில்  காய்ந்து பிசுபிசுத்த ரப்பர் பாலைத் தேய்த்தவாறு மாமாவிடம் கூறினார்.

“விடுங்க. இவனுக்கு அதிலெல்லாம் விருப்பமில்ல. நமக்குப் பிடிச்சா போதாது. இவனுக்குப் பிடிக்கனுமே” மாமாதான் தக்க சமயத்தில் என்னைக் காப்பாற்றினார்.  சைபர் ஜெயாவிலுள்ள தனியார் கல்லூரிக்கு என்னைக் கையோடு அழைத்துப் போய் சேர்த்து விட்டார்.

மழை பெய்து ஓய்ந்துபோன ஒரு காலைப் பொழுதில், கல்லூரி வளாகம் முழுவதும் ஈரத்தில் நனைந்த நாளில் நான் உள்ளே நுழைந்தேன். மழைக்குப் பிந்திய தூறலால் எங்கும் குடைகள் காளான்களாய் விரிந்து மலர்ந்திருந்தன. மரங்களிலும் செடிகளிலும் நீர்த்துளிகள் சொட்டிக்கொண்டிருந்தன.

முதல் நாள் பதிவு நடைபெற்றதால் கல்லூரியில் பெருந்திரளாக மாணவர்கள் கூடியிருந்தோம். பதிவுக்குப் பின் மண்டபத்தில் பாடவாரியாக விரிவுரையாளர்கள் விளக்கம் தந்தார்கள். இடைவேளையில் உணவுக்காக கெண்டீனுக்குப் போனபோது  உடன் படிக்கப்போகும் மாணவர்களின் அறிமுகம் கிடைத்தது. அனுஷா, சந்திரன், ரமேஷ், பூரணி, ராகவன் எனச் சிலர்தான் தமிழ் மாணவர்கள்.

நம்மவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் இடங்களில் நமக்குள் ஒரு பிணைப்பும் நட்பும் அதிகமாக இருக்கும். அப்படித்தான் நாங்கள் நட்பில் இணைந்தோம். அவர்களில் பூரணி தனித்துத் தெரிந்தாள். ஜோகூர் ஸ்கூடாயில் வசதி படைத்த குடும்பம். ஆனாலும் அந்தப் பந்தா அறவே இல்லாமல் பூரணியால் பழக முடிந்தது. அவள் பெயரே என்னை முதலில் ஈர்த்தது.

“நீங்க நா.பார்த்தசாரதியோட குறிஞ்சி மலர் நாவல் படிச்சிருக்கீங்களா?” நூலகத்தில் ஒரு நாள் சந்தித்தபோது கேட்டேன்.

“இல்லையே பாலன்.  ஏன்?”

“அருமையான நாவல். அது உங்களைப் பற்றியது”

“என்னைப் பற்றியதா? புரியலையே. எப்படி?” பூரணி முகத்தில் கேள்விக்குறிகள்.

“பூரணிதான் நாவலின் முக்கியப் பாத்திரம். தியாகத்தின் உருவமா நா.பார்த்தசாரதி பூரணியை படைச்சிருக்கார். அவளுக்குத் துணையா அரவிந்தன். நீங்க கட்டாயம் படிக்கனும். நான் அத படிச்சு அழுதிருக்கேன்.கொஞ்ச நாளா மனசும் சரியில்ல”

“அத நான் படிக்கணுமே. எனக்குக் கிடைக்குமா?” பூரணி ஆர்வம் பொங்கக் கேட்டாள்.

குறிஞ்சி மலர் நாவல்தான் எங்கள் இருவரையும் நெருக்கமாக்கியது.  இருவரும் தமிழ்ப்பள்ளியில் படித்தவர்கள் என்பதால் நாவல் பற்றிப் பேசினோம். குறிஞ்சி மலர் பூரணி விதவைக் கோலத்தில் வந்தபோது கண்களில் நீரை வரவழைத்து விட்டது என்றாள். நா.பா.வின் வசீகரமான மொழி அவளையும் மயக்கி விட்டது என்றாள். பூரணி பேசும் அழகை நாள் முழுக்க பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது எனக்கு.

கல்லூரியில் தீபாவளியையொட்டி தமிழ் மாணவர்கள் படைக்கும் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் இடம்பெற்ற குழு நடனத்தில் நானும் பூரணியும் சேர்ந்து ஆடினோம்.  கைகளைப் பற்றி ஆடுவதில் முதலில் எனக்குத் தயக்கம் இருந்தது. ஏதோ ஒரு புள்ளியில் நட்பு எனும் நிலையிலிருந்து நான் விலகி பூரணியை நெருங்கி வருவதை உணர்ந்தேன்.

பூரணிக்கும் அந்த நிலைதானோ? அவள் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. வழக்கம்போலவே கலகலப்பாகப் பேசிச் சிரித்தாள். முகத்தில் மிகையான அலங்காரப் பூச்சு இல்லாமல் இயற்கை அழகோடு மிளிரும் அவளின் அழகு தனி அழகுதான். கல்லூரியில் இடுபணி தரும்போதெல்லாம் நாங்கள் இருவரும் ஒரே குழுவில் இருப்போம்.

இரண்டு நாள் கடுமையான காய்ச்சலால் நான் கல்லூரிக்கு போகாத நாளில், விடுதியில் என்னுடன் தங்கும் ராகவனிடம் பூரணி என்னைப் பற்றிக் கவலையோடு விசாரித்ததாக அவன் வந்து சொன்னான்.

“பூரணிக்கு உன் மேலே அவ்வளவு அக்கறை. என்னமோ இருக்கு பாலன். ஐ திங்க் ஷி லைக் யு” பார்த்துப்பா. காதல்ல மாட்டிக்காதே” ராகவனுக்கு என்னைச் சீண்டுவதில் இன்பம்.

இரண்டரை வருட கல்லூரி நாள்கள் ஓடி மறைந்ததே தெரியவில்லை.  இதோ, இன்னும் ஒரு வாரம். இறுதித் தேர்வு முடிந்து எல்லாரும் விடைபெறும் காலம் நெருங்கி விட்டது. அன்று, மாலையில் கல்லூரிக்கு முன்னால் இருக்கும் பூங்காவின் சிமெண்டு பெஞ்சில் நானும் பூரணியும் அமர்ந்திருந்தோம். வானத்தை நோக்கினேன். அங்குச் சூரியனை மறைத்துக் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன.

என்றுமில்லாமல் பூரணியின் முகம் வாடியிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. எதையோ சொல்ல வாய் துடித்தது. வரப்போகும் பிரிவை நினைந்து வருந்துகிறாளோ?




“என்னாச்சு பூரணி? ஏன் ஒரு மாதிரி இருக்கிறே? வெளிநாட்டுல தொடர்ந்து ஜெனர்லிசம் படிக்கப் போறதா சொன்னியே...”

“நியூயோர்க் டைம்ஸ்ல என் சித்தப்பா வேல செய்யுறாருன்னு சொன்னேன்ல. அங்கே அனுப்பி வைக்க எங்க வீட்டுல ஏற்பாடு செய்யுறாங்க. எனக்கு அங்க போறதுக்கு விருப்பம் இல்ல. அங்க படிச்சிட்டு நியூயோர்க் டைம்ஸ்ல வேலைக்கு ஏற்பாடு செய்யலாம்னு சித்தப்பா சொல்றாரு. எனக்கு நம்ம நாட்டுல படிச்சு வேல செய்யத்தான் ஆசை. ஆனா..”

“நல்ல வாய்ப்புதான் பூரணி. இது எல்லாருக்கும் கிடைக்காது. இனி, உன்னை பார்க்க முடியாதுன்னு நெனச்சா எனக்கு வருத்தமா இருக்கு..என்னால் ஏமாற்றத்தை மறைக்க முடியவில்லை.

“நாம பழகுறது எப்படியோ வீட்டுல தெரிஞ்சியிருக்கு பாலன். பேசிப் பார்த்தேன். தகுதி, தராதரம்ன்னு அப்பா கடுமையா பேசுறாரு. இப்படி அப்பா எங்கிட்ட கோபமா பேசியதே இல்ல.  அப்பா அம்மா விருப்பத்த மீறி இதுவரைக்கும் நானும் நடந்தது இல்ல. முன்னமே என்னை அமெரிக்காவுக்குப் படிக்க அனுப்பியிருக்கனும்னு சொல்றாங்க. எனக்கு என்ன செய்யறதின்னு தெரியல...”   கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

என் தகுதிக்கு மீறி எதற்கும் நான் ஆசைப்பட்டது இல்லை. பூரணி வாழ்க்கையின் இடையில் நுழைந்து ஊறு செய்து அவளின் நல்ல வாய்ப்பைக் கெடுப்பதா? தகுதி, தராதரம் என்ற சொற்கள் என் தன்மானத்தை உரசிப் பார்த்தன. நான் செய்வதறியாது தவித்தேன். மனம் கனத்தது.

மழையின் தூறல் தொடங்கி எங்களை நனைக்கத் தொடங்கியது. பூரணி கையில் குடை இருந்தது. அதை விரிக்காமல் மௌனமாக இருந்தாள்.  மழைக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்து விட்டதுபோல் அப்படியே இருந்தோம்.

தண்ணீரில் மீன் அழுதால் தரைக்கு ஒரு தகவலும் வருவதில்லை என்று கவிஞன் பாடியதற்குச் சான்றாக இருவரும் அன்று அமர்ந்திருந்தோம். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? இருவர் கண்களிலும் அரும்பிய நீர் மழை நீரோடு கலந்தது.

“குறிஞ்சி மலர் போலத்தான் வாழ்க்கையும்.  அரவிந்தன் பாதியிலேயே இறந்துபோவான்னு பூரணி எதிர்பார்த்தாளா என்ன? இரண்டு பேரும் சேர்ந்து வாழனும்னுதான் வாசகர்களும் எதிர்பார்த்திருப்பாங்க. ஆனா, இரண்டு பேரும் பிரிஞ்சாதான் நாவல் சுவையா இருக்கும்னு நா.பார்த்தசாரதி முடிவு செய்திட்டாரு”

“நம்ம வாழ்க்கையும் அப்படித்தானா?” முகத்தில் வழிந்த மழை நீரை துடைத்தவாறு பூரணி கேட்டாள்.

“நம்ம வாழ்க்கை மட்டுமல்ல. மனிதர் வாழ்க்கையே இப்படித்தான். திருப்பங்கள் நிறைஞ்சது. யாரும் எதிர்பாராதது. நாம போடற கணக்குக்கெல்லாம் விடை வேற மாதிரி வரும். அதை ஏற்பதை தவிர நமக்கு வேற வழி இல்ல” தத்துவார்த்தமாக எதையோ சொல்லி பூரணியை ஆறுதல் படுத்தினாலும் ஆழ்மனத்தில் நான் உடைந்து போயிருந்தேன்.

அருகே குடை பிடித்துப் போனவர்கள் நாங்கள் மழையில் நனைந்தவாறு அமர்ந்திருந்ததை வியப்பாகப் பார்த்தார்கள். சந்திரனும் ரமேஷும் எங்களைப் பார்த்துக் கைநீட்டி வேடிக்கையாகச் சிரிப்பது தூரத்தில் தெரிந்தது.

இதோ, இந்த மழையும் அழுகிறது. எங்கள் சோகத்தில் அதுவும் பங்கு கொள்கிறது. மழை ஏதோ இராகத்தில் குரலெடுத்துப் பாடுகிறது. அதன் சங்கீதம் ரசிக்க இங்கே யாருக்கும் நேரமில்லை. அன்று வானம் அழுது தீர்க்கும்வரை நாங்கள் இருவரும் அங்கு அமர்ந்திருந்தோம்.

             *                 *                   *                  *                  *                 *


பூரணியை மட்டுமா?  இந்த மழை நந்தினியின் நினைவுகளையும் அல்லவா என்னுள் கிளறிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. 

அப்பொழுது, பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் இளங்கலை படித்துக்கொண்டிருந்தேன். இடையில் மூன்று மாத பயிற்சிக்காக மக்கள் குரல் பத்திரிகையில் சேர்ந்தேன். அதன் ஆசிரியர் குருநாதன், வேலு மாமாவின் நீண்ட நாள் நண்பர். பத்திரிகைத் துறையில் பழுத்த அனுபவம் நிறைந்தவர்.

அவர் என்னை அன்பாக அரவணைத்துக் கொண்டார்.

“பாலன், சரியான துறையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கீங்க. இது சவால்மிக்க துறை. கடுமையான உழைப்பு தேவை. இங்க ஆபிஸ்ல மட்டும் இருந்தா எதையும் கத்துக்க முடியாது. பத்திரிகையாளர் சந்திப்புக்கு  வெளியே போங்க. ஒரு செய்தியை வித்தியாசமா, மாறுபட்ட கோணத்துல அணுகத் தெரியணும். சும்மா பக்கத்த நிரப்பறது மட்டும் நம்ம வேல இல்ல. வாசகர்களை சுண்டி இழுக்கும் வித்தையை கத்துக்கணும். ஆல் தெ பெஸ்ட்”. கைகுலுக்கினார்.







அவர் சொன்னபடியே அடிக்கடி சக நிருபர்களோடு பத்திரிகையாளர் சந்திப்புக்கு வெளியே சென்று செய்தி சேகரித்தேன்.  அப்படிப் போன போதுதான் நந்தினியின் அறிமுகம் கிடைத்தது. அதுவும் ஒரு மழை நாளில். அன்று காலையிலிருந்து மழை விடாமல் தூறலாக மூக்கைச் சிந்திப் பூமியை நனைத்துக் கொண்டிருந்தது.

புத்ரா ஜெயாவில் உள்ள கல்வி அமைச்சில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தி சேகரித்துக்கொண்டு வெளியே வந்தபோது, மழை தீவிரமாகி வழி மறித்தது. நல்ல வேளை. நந்தினி கையில் குடையோடு வந்தாள். ஆங்கிலப் பத்திரிகையில் நிருபராக அன்றுதான் அவளைப் பார்த்தேன்.

“இந்த மழை நிக்காது. காருக்குத்தானே போகணும்? வாங்க போகலாம்” மிக இயல்பாக அழைத்தாள். எனக்குத்தான் தயக்கமாக இருந்தது. தொலைவில் இருந்த காருக்குப் போவதற்குள் இந்த மழை தெப்பமாக நனைத்துவிடும். வேறு வழியில்லை. குடையை வாங்கிக்கொண்டு அவளோடு சேர்ந்து நடந்தேன்.

மழையின் சாரல் இருவரையும் கொஞ்சம் நனைக்க பேசியவாறு நடந்தோம். செந்தூல் பகுதியில் வசிக்கும் நந்தினிக்கும் பத்திரிகைத் துறையில்தான் ஆர்வமாம். வேலையில் சேர்ந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறதாம். எந்தத் தயக்கமும் இன்றிக் கலகலப்பாக, வெளிப்படையாக பேசும் அவளின் இயல்பு என்னைக் கவர்ந்தது.

அன்றைய நாளைப் பின்னாளில் நினைவுகூர்ந்தபோது எழுதிய கவிதைதான் இது:

நன்றி மழையே
குடைக்குள் எங்களின்
முதல் சந்திப்பு

பத்திரிகையாளர் சந்திப்பு இருக்கும்போதெல்லாம்  சந்தித்துக்கொள்வோம்; பேசுவோம். இருவருக்கும் பகிர்ந்துகொள்ள நிறைய இருப்பதாக உணர்ந்தோம். பத்திரிகையாளர் சந்திப்பு இல்லாதபோது உணவகம் சென்றோம். திரையரங்கம் போனோம். ஆசைதீர பேசித் தீர்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது அவளின் எழில் முகம். குழிவிழும் கன்னங்களும் சுருள் கேசமும் என்னை மாயவலையாய் வளைத்தன. என் தேடல் முடிந்தது. இனி அவளோடுதான் எஞ்சிய காலம் என நினைத்திருந்தபோது அது நிகழ்ந்தது.

அன்று தன் தோழி ஜூலியின் பிறந்தநாளைக் கொண்டாட வருமாறு நந்தினி அழைத்தாள். அவள் அழைத்த இடம் ஓர் இரவுநேர கேளிக்கை விடுதி என்றபோது மனம் துணுக்குற்றது.  அம்மாதிரி இடங்களுக்கு நான் போவதில்லை. இருந்தும் போனேன்.  

கேக் வெட்டிக் கொண்டாடுவார்கள் என்று எண்ணினேன். அதற்குப் பிறகு அங்கு அரங்கேறிய காட்சிகள் என்னை நிலைகுலையச் செய்தன. ஆண்களும் பெண்களும் மதுவருந்திவிட்டு மிக நெருக்கமாக நடனமாடத் தொடங்கினர். “வாங்க பாலன். டைம் டு எஞ்ஜோய். வாழ்க்கையை அனுபவிக்கனும். வேடிக்கை பார்க்கக் கூடாது. கம் ஓன்...” வாய் குழறியபடி நந்தினி என்னை அழைத்தாள். மற்றவர்களும் என்னையும் மதுவருந்த வற்புறுத்தினர்; மறுத்துவிட்டேன். காது பிளக்கும் இசையை என்னால் தாங்க முடியவில்லை.

சுவைபானத்தைப் பருகியவாறு  ஒளிமங்கிய இருளில் அவர்களைக் கவனித்தேன். நந்தினி போதையில் தள்ளாடியபடியே ஒருவனோடு நெருக்கமாக ஆடினாள். நான் அதிர்ந்துபோனேன். இவள் நானறிந்த நந்தினி இல்லையே! இவளுக்கு இப்படியொரு மறுபக்கமா?  கோலாலம்பூரின் இரவு வாழ்க்கைக்கு தங்களை ஒப்புக்கொடுத்துவிட்டு இரையாகும் மனிதர்களா இவர்கள்? 

எல்லாவற்றையும் உதறிவிட்டு அப்பொழுதே அங்கிருந்து கிளம்பினேன்.

*              *                  *               *              *                   *               *

இந்த மழை பூரணி, நந்தினி நினைவுகளைத் திரும்பத் திரும்ப ஞாபகமூட்டிக் கொண்டே இருக்கிறது. அவற்றிலிருந்து மீளும் வழி தெரியாமல் தவித்தேன்.

இவற்றில் கொஞ்சம் கற்பனையைக் கலந்தால் சுவையான சிறுகதைகளாக மாற்றி வாசகர்களுக்கு விருந்தாக்கலாம். அதைத்தான் ஞாயிறு மலர் பொறுப்பாசிரியரும் எதிர்பார்க்கிறார்.  ஆனால், ரணமூட்டும் இந்த அனுபவங்களில் மீண்டும் மூழ்கியெழ மனம் முரண்டு பிடித்தது.

மனம் நிம்மதியை இழந்து தவிக்கும் தருணங்களில் எழுத்துதான் மருந்தாகி மனத்தை இலேசாக்கும். இன்றைய இரவும் அப்படித்தான். எதையாவது எழுதினால் மனத்தை அழுத்தும் பாரத்திலிருந்து விடுபடலாம். கணினித் திரை ஒளிரத் தொடங்கியது. நான் கற்பனை உலகில் நுழைந்தேன்.

               *              *                  *               *              *                   *               *


மறுநாள் சின்னராசுவிடம் என் படைப்பை நீட்டினேன்.

“பொன் ஒன்று கண்டேன். பெண் அங்கு இல்லை. என்னென்று நான் சொல்லலாகுமோ..” பாடலை முணுமுணுத்தவர் நிமிர்ந்து என்னைக் கவனித்தார். முகம் மலர்ந்தது. ஆசையாய் வாங்கினார்.

“வெரிகுட் பாலன். சொன்னபடியே எழுதிட்டீங்களே. காதல் கதைதானே? எனக்குத் தெரியும் உங்களால அருமையான காதல் கதை எழுத முடியும்னு? என்ன தலைப்பு?”

“ஆதலினால் கொலை செய்வீர்”

“என்ன பாலன், தலைப்பு பயங்கரமா இருக்கு. அப்ப இது காதல் கதை இல்லையா?” அவர் முகத்தில் ஏமாற்றம் பரவியது.

“இல்ல சார். இது திகில் கதை. வாசகர்கள் இதை ரொம்ப ரசிச்சு படிப்பாங்க. நீங்களே படிச்சுப் பாருங்களேன். உங்களுக்கும் பிடிக்கும்”

“அப்ப காதல் கதை?”

“அடுத்து காதல் கதைதான். உங்களையே மயக்குற மாதிரி ஒரு சிருங்காரக் கதை

அவர் சந்தேகம் தோய்ந்த முகத்தோடு என்னைப் பார்த்தார். என் இடத்திற்கு வந்து மாலினி தந்த சுவையான தேநீரைச் சுவைத்தவாறு  கண்ணாடிவழி வெளியே பார்த்தேன். மேகங்கள் இல்லாமல் வானம் தெளிவாய் இருந்தது. இன்று மழை வராது என்றே தோன்றியது.