நம் குரல்

Monday, August 12, 2019

சிறுகதை



கவிஞரின் மகள்




'பாரதிதாசன் நூற்றாண்டு விழா' வெள்ளைத் துணியில் மின்னிய அந்தப் பொன்னிற எழுத்துகளைத் தன் தூரிகையால் மெருகூட்டும் பணியில் மூழ்கியிருந்தான் அமுதன்.

விடிந்தால் விழா. மண்டபம் கடைசி நேர ஏற்பாடுகளில் பரபரப்பாயிருந்தது. ஆருயிர்க் காதலியைத் தரிசிக்கும் ஆவல்போல, அமுதன் அந்த விழாவிற்காக ஆர்வம் சொட்டச் சொட்டக் காத்திருந்தான். அதற்குக் காரணம் இல்லாமலா?

பள்ளி நாள்களிலிருந்தே தமிழின் கட்டுக்குலையாத அழகில் தன்வயமிழந்து அதனை அணுஅணுவாகச் சுவைத்துச் சுகங்கண்டு வந்தவன் அவன். அவனின் தினவுக்குத் தீனி போடுவதுபோல் அமைந்தது அந்த விழா.

விழா ஏற்பாடுகளைப் பம்பரமாய்ச் சுழன்றுச் சுழன்று செய்தனர் இளைஞர் குழுவினர். அவன் ஒல்லும் வகையெலாம் அவர்களுக்கு வலியச் சென்று உதவினான்.

காலையில் பாவரங்கம், பட்டி மன்றம். மாலையில் ஆய்வரங்கம். இரவில் இலக்கியச் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி என மிக நேர்த்தியாய் நிகழ்ச்சிகள் அணி வகுத்து நின்றன.

"முந்நூறு நாற்காலிகள் போதாது. எப்படியும் ஐந்நூறாவது வேண்டும். முத்து, கண்ணன், மாறன் நீங்க போய் அந்த ஏற்பாட்டைக் கவனிங்க, போங்க...'' விழாக்குழுத் தலைவர் கவிஞர் பூவண்ணன் இளைஞர்களின் சுறுசுறுப்புக்குச் சுருதியேற்றிக் கொண்டிருந்தார்.


அமுதனின் மனமெங்கும் ஆனந்த கங்கையே அலைமோதியது. மூடப்பழக்கங்களில் முடங்கிக் கிடந்த தமிழினத்தைத் தட்டி எழுப்ப, புயலெனப் புறப்பட்ட புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் என்றாலே அவனுள் புத்துணர்ச்சி பொங்கி நிற்கும்.

செக்குமாடாய் உழன்ற சமுதாயத்தில், அக்கினிக் கவிதைகளைத் தீக்குச்சிகளாய்க் கிழித்துப் போட்டவனின் மனத்திண்மையை ஆராயும்போதெலாம் அவன் உணர்ச்சிகளின் குவியலாகிவிடுவான்.

அந்த அளவிற்குப் பாவேந்தன் அவனுள் பாதிப்பை விதைத்திருந்தான். தமிழாசிரியரான அவன் இடம் மாற்றலாகி ரவாங் நகருக்கு வந்து ஒரு மாதமே ஆகியிருந்தது. அதற்குள், பாவேந்தருக்கு விழா என்ற இனிப்புச் செய்தி செவிப்பறையில் வந்து விழுந்தபோது அவனுள் பிரவகித்த ஆர்வ அலைகளுக்கு அளவேயில்லை.

"உங்கள் கைவண்ணம் அருமையாயிருக்கிறது, அமுதன். எடுப்பான எழுத்துகள். ஆமாம்... நாளை பாவரங்கத்தில் நீங்களும் கலந்து கொள்வதாகச் சொன்னீர்கள். முடிவில் மாற்றமில்லையே?" தயாரான பதாகையை மேடையில் மாட்டிக்கொண்டிருந்த அமுதனிடம் வந்து வினவினார் பூவண்ணான்.

"ஐயா, மரபில் எனக்குப் பயிற்சி போதாது. அதனால் புதுக்கவிதையொன்று புனைந்துள்ளேன்.''

|"அதனாலென்ன? கவிதை என்றும் கவிதைதான். மரபென்றும் புதிதென்றும் கவிதையிலும் பிரிவினை பேசுவது பிழை. தயங்காமல் கலந்து கொள்ளுங்கள். இதோ, வாழைமரங்கள் வந்துவிட்டன வாருங்கள்..." பூவண்ணன் பேசிக்கொண்டே மண்டப வாயிலுக்கு விரைந்தார்.

விழா ஏற்பாட்டுப் பணிகள் முடிந்து அன்றிரவு வீடு திரும்பு 'கையில் அவர் உதிர்த்த தெம்பூட்டும் சொற்களையே அவன் மனம் அசை போட்டது. 'கவிதையிலும் பிரிவினை பேசுவது பிழை' என்ற கூற்றின் அர்த்தத்தின் அடர்த்தி எதையோ புலப்படுத்த முயன்றது.

*                           *                         *                    *

பாவரங்கம் களை கட்டியது. ஒவ்வொரு கவிஞரும் பாவேந்தரின் சிந்தனைகளைத் தங்கள் மனக்கேமராவால் பல கோணங்களில் படம் பிடித்து, அழகு தமிழில் அவற்றைக் குழைத்துப் பந்தி வைக்க முயல...

வருகையாளர்கள் மனத்தில் தமிழ் இன்ப நதி, அருவியாக மாறி ஆரவாரிக்கத் தொடங்கியது.
இறுதியாக அமுதனை அழைத்தார் தலைமைக் கவிஞர். அவன் ஆர்வம் ததும்ப ஒலிபெருக்கியின் முன் வந்தான். 'புதுக்கவிதை புலம்பலா?' என மரபுக் கவிஞர்கள் முகஞ்சுழிக்க, அனைவரின் கண்களும் நம் அவனை மொய்க்க, 'பாவேந்தரெனும் புரட்சிப் போர்வாள்' எனும் தலைப்பில் அவன் கவிதை புறப்பட்டு வந்தது.

மூடப் பழக்கங்களிலும் சாதிப் பிரிவினையிலும் மூழ்கி மூச்சுத் திணறிய தமிழினத்தில், பாரதிதாசன் வடித்த கண்ணீரின் கனத்தைச் சுமந்துகொண்டு வாலிப வரிகள் வலம் வந்தன.

சாதிச் சனியனின்
மென்னியைப் பிடிக்க
அன்றுனது கைகள்
ஆவேசமாய் உயர்ந்தன

இன்றெங்கள் கைகளும்
சமுதாய அரிசியில்
சாதிக் கல்லைக் களைய
வீராப்பாய் உயர்கின்றன

ஆனால்
கல்லெடுக்க வந்த
கைகளே கல்லைக் கலக்கும்
அநியாயம் இங்கு தான்
அரங்கேறுகிறது.

என்று இடையே வந்த சில வரிகளைக் கூறி நிறுத்தி, மண்டபத்தை நோக்க அங்கே கவிஞர் பூவண்ணன் பார்வையாலேயே தன் பாராட்டு மடலை வாசித்துக் கொண்டிருந்தார்.

பாவரங்கில் அமுதனின் கவிதை அழுத்தமான முற்றுப்புள்ளியாக அமைந்தது. கைதட்டிக் களிக்கும் கூட்டம் வழக்கம் போலவே இயங்கியது. அழுத்தமான சில சிந்தனைகளை அவர்களுக்குப் பந்திவைத்த பரவசம் அவனுள் பரவ,  பூவண்ணன் எழுந்து வந்து அவனை ஆரத்தழுவிக் கொண்டார்.

வெறும் கற்பனையின் கட்டாயத்தால் விளைந்ததல்ல அவன் கவிதை. அவன் குடும்பத்தில் பதிந்துபோன சில அனுபவச் சுவடுகளே அவற்றுக்கு ஆதார சுருதிகள்.
பூவண்ணனின் சிந்தனைகளும் தன்னைப்போலவே என்பதை, அன்றிரவு நிகழ்ந்த இலக்கியச் சொற்பொழிவு. அவனுக்கு அடையாளம் காட்டியது. மூவர் நிகழ்த்திய உரைகளில் அவரே தனித்து நின்று கவர்ந்தார்.

"சாதிப் பிரிவினைகள் புதை மணலாக இருந்து தமிழினத்தை முன்னேறவிடாமல் அழிவு நோக்கி இழுக்கின்றன. பகையின் ஈட்டியாய்ப் பாயும் சாதியை முறித்தெறிந்தால் நம்மைப் பீடிக்கும் இழிவுகள் அனைத்தும் நீங்கும். நாம் நல்வாழ்வடைவோம். சாதிகள் பேசிடும் சழக்கரின் நாக்கினைத் தேதித்தாள்போல் தினமும் கிழித்தெறிந்தானே பாவேந்தன். அவனை நெஞ்சில் நிறுத்துவோம். நிறுத்திச் செயலில் காட்டுவோம்.''

பூவண்ணனின் ஆழமான கருத்துகள் அமுதனை நெகிழச் செய்தன. எவ்வளவு அழுத்தந் திருத்தமான பேச்சு! இத்தகைய சிந்தனைகளை விதைத்து வந்தால் இளம் தலைமுறையாவது கடைத்தேறும் இல்லையா? அமுதனின் மதிப்பீடுகளில் பூவண்ணன் உயர்ந்து கொண்டே போனார்.

மறு நாள் காலை.

விழாவின் நிகழ்வுகளை மனத்தில் பதியம் போட்டுக்கொண்டே பள்ளிக்குப் போனவனைத் தலைமையாசிரியர் தங்கசாமி ஒரு மாதிரியாய் ஏற இறங்கப் பார்த்தார்.

"வாங்க அமுதன். நேத்து விழாவிலே சாதியைத் தாறுமாறா தாக்கி கவிதை படிச்சங்களாம். அந்தச் சனியன விடக் கூடாது - கழுத்த நெறிச்சு கொல்லணும்னு ஒரே போடா போட்டு விலாசினிங்களாம்" குரலில் ஏளனம் தொனித்தது.

"ஆமாம் சார். புதிதாக ஒன்னும் சொல்லல. பாரதியாரும் பாரதிதாசனும் சொன்ன கருத்துதான். இன்னும் பயன்படுமேன்னு சொல்லி அவர்களுக்கு ஞாபகப்படுத்தினேன்."

"என்னதான் நீங்களும் நம்ம தெய்வப்புலவர் பூவண்ணனும் கத்தினாலும் ஒன்னும் ஆகப்போவது இல்ல, நேத்து இன்னிக்கு வந்ததில்ல இந்தச் சாதி. அதனால, காத்தோட கைநீட்டி சண்டை போடாம், வேற முன்னேற்ற பாதையில் அவங்கள திசை திருப்புங்க"

பக்கத்துத் தோட்டத்தில் - தமிழாசிரியராய்ப் பணிபுரியும் பூவண்ணன்மேல், அவருக்கு வண்டிக்கணக்கில் மண்டிக்கிடந்த அழுக்காறு அவிழத் தொடங்கி யது.

பள்ளிக்கு வந்த முதல் வாரத்தில், ''உங்களுக்கு இந்தியாவுல எந்த ஊரு?" எனக் கேட்டு அவன் சாதி பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினாரே. அப்பொழுதே அவரின் மீதான அவனின் மதிப்பீடுகள் பொல பொலவென உதிரத் தொடங்கின.

மறுமாதம் - பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டுக் கூட்டத்தில், "தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது மிகவும் வருத்தமான செய்தி. பெற்றோர்கள் தயங்காது தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பவேண்டும்" என ஏதோ ஞாபகத்தில் அவர் கூறப் போக,
"நாங்க அனுப்புவது இருகட்டும் சார். வாய்கிழிய கத்துற, நீங்க எங்க அனுப்புறீங்க? சொல்லுங்க! நீங்க அனுப்பி இல்ல எங்களுக்குப் புத்தி சொல்ல வரணும்.?” சம்மட்டி அடியாய் விழுந்தது கூட்டத்தில் ஒருவரின் கேள்வி.
கிஞ்சிற்றும் தமிழ் உணர்வில்லாத  அரிதாரம் பூசாத அருமையான நடிகரான அவரின் வாய்மொழிகளை அமுதன் அன்றிலிருந்து பொருட்படுத்துவதே இல்லை .பள்ளி மணியோசை அவனை வகுப்புக்கு அழைத்தது.

    *                       *                      *                         *                    *

பூமி மேனியெங்கும் இளம் மஞ்சளைப் பூசிக்கொண்ட ஒரு பொன்னிற மாலையில் -

பூவண்ணனின் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருந்த அமுதன் கண்களைச் சுழல விட்டான். திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழறிஞர்கள் படங்களே வீட்டை அலங்கரித்தன.

பழைய தமிழ் இதழ்கள் அடங்கிய கட்டுகளைத் தூசி தட்டிவிட்டு, அமுதனிடம் கொண்டு வந்து நீட்டினார் பூவண்ணன். அவற்றை, வறிய புலவனொருவன் வள்ளலிடம் கையேந்திப் பெறும் பொற்கிழியைப் போன்று இதயப்பணிவோடு பெற்றுக்கொண்டான் அமுதன்.

"தமிழர் நலங்குறித்து இதுகாறும் யான் வடித்துள்ள கதை, கட்டுரை, கவிதை யாவும் இதிலுள்ளன அமுதன். இப்படி இந்தச் சமுதாயத்திற்குச் சிந்திப்பதிலும் எழுதுவதிலும் அடியேனுக்கு அலாதி இன்பம். படித்துப் பாருங்கள்."

நாடறிந்த நல்ல கவிஞர் வண்ணனின் படைப்புகளைத் தமிழ் இதழ்களில், அவ்வப்போது படித்து வந்தாலும் இடம் மாற்றலாகி வந்து, அவரோடு நெருங்கிப் பழக முடிந்த வாய்ப்புக்காக அவன் மனம் பூரித்தது.

"விழா திட்டமிட்டபடி நடந்தது நமக்கு முழு வெற்றி. உங்கள் கவிதையும் அருமை."

"உங்கள் சொற்பொழிவும் கருத்தாழம் மிக்கதாய் அமைந்து அனைவரையும் சிந்திக்க வைத்தது. தயங்காமல், துணிவோடு சொற்பெருக்காற்றிய விதம் என்னைக் கவர்ந்தது ஐயா" அமுதனின் மனந்திறந்த பாராட்டு அது.

"தயக்கம் கொள்ளுதல் தவறு அமுதன். தூவென்று சாதியைக் காறி உமிழ்ந்தானே பாவேந்தன், அவன் தயங்கவில்லையே. நம் தமிழினம் முன்னேற வேண்டுமானால் இனமொழிப் பற்று பெருகவேண்டும். சாதிப் பிரிவும் மூடப்பழக்கங்களும் ஒழிய வேண்டும்."

அப்போது, தேநீர்த் தட்டோடு அழகு மங்கையொருத்தி அங்கே நடந்து வர...

"இவர் தானம்மா ... நான் சொன்னேனே... அமுதன். இவள் என் மகள் தமிழினியாள்."

இருவரும் இளம் புன்முறுவலைப் பரிமாறிக் கொண்டனர்.

                                    *               *               *             *                *

எதிர்பாராத வகையில் நடக்கும் விபத்து அமுதனையும் விட்டு வைக்கவில்லை. இது வாகனங்கள் மோதிக்கொள்ளும் சாலை விபத்தில்லை. இதயங்கள் மோதி நெஞ்சுக்குள் இனிப்பை இறக்குமதி செய்யும் இன்ப விபத்து. காதல் என்பது ஒரு பருவ மழையாயிற்றே! அது பெய்யாமல் போகுமா?

தமிழினியாள் என்கிற பெயரே அவனுள் ஓர் உற்சாக கங்கையை உற்பத்தி செய்தது. பூவண்ணனைக் காணச் செல்லும் போதெல்லாம் அந்த சன்னல் மின்னல் அடிக்கடி தோன்றி மறையும். இதயத்தில் விழுந்த காதல் விதை முளைத்து வேர் விட்டது. அந்தக் காதற்கிளிகள் எத்தனை நாள்களுத்தான் பார்வையாலேயே தங்கள் எண்ணங்களைப் பறிமாறிக் கொள்வது?

அந்தக் கொய்யாக்கனி நிகர்த்த கோலமேனியாள் அடிக்கடி வந்து அவன் தூக்கத்தைத் துண்டித்தாள். பூவண்ணனிடம் ஒருநாள் தன் எண்ணத்தை வெளியிடக் காத்திருந்தவனிடம், அவரே வந்து மகளின் விருப்பத்தைச் சொல்லி முடித்தார்.

தமிழினியாளை அடைய தன் அம்மாவின் பலத்த கோட்டைக் கதவுகளை எப்படிக் கடப்பது? சிக்கலின் முடிச்சுகளை அவிழ்க்கும் வழிகள் பற்றி ஆராயத் தொடங்கினான் அமுதன்.

           *             *                *           *                 *

இடி வந்து குடும்பத்தில் இறங்கி விட்டதுபோல் அம்மா அப்படிக் கலவரப்பட்டுப் போனார். "அடிக்கடி அவங்க வீட்டுக்கு போகும்போதே பயந்தேன், இப்படி ஏதாவது நடந்திடுமோன்னு. ஏண்டா, அவங்க குலம் என்ன, கோத்திரம் என்ன யோசிச்சி பார்த்தியாடா?"

அப்படி யோசித்து நான்கு பேர்களை விசாரித்துப் போதுமான தகவலை அம்மா திரட்டியிருப்பது அமுதனுக்குப் புரிந்தது.

"அம்மா, நான் ஆண் சாதி. நான் கட்டிக்கப்போற பெண், பெண் சாதி. ஆக உலகத்துல இரண்டு சாதிதான் இருக்கு."

"இந்தத் தத்துவமெல்லாம் வாழ்க்கைக்கு உதவுமாடா? உன் தங்கச்சியும் இதே மாதிரி பண்ணிட்டு நம்ம எல்லாம் ஏமாத்திட்டு போனத மறந்திட்டியா?" அம்மா அழுது புலம்பினார்.

சாதியைக் காரணங்காட்டித் தங்கையின் காதலுக்கு அம்மா போர்க்கொடி தூக்கியபோது, அவள் இந்தச் சமூகத்தின் பெண்களைப் போலவே விசத்தை நாடி... அந்தப் பழைய கண்ணீர் நாள்கள் நினைவில் புரண்டன.

அவனுக்கு ஆதரவாக அப்பா தான் வந்தார்.

"உங்க அம்மா இப்படியே சாதியை கட்டிக்கிட்டு அழட்டும். நான் சொல்றேன். நீ படிச்சவன். உலகம் புரிஞ்சவன்.  மனுசனுக்கு மனுசன் எல்லாம் சமம்தான். ஆகவேண்டியத பாரு" தங்கையின் மரணத்திற்குப் பின் மூலையில் முடங்கிப்போன அப்பாவின் குரல் ஓங்கி ஒலித்தது.

பெண் பார்க்கும் படலம் தொடங்கியது. அம்மா அரை மனத்தோடுதான் வந்தார்.

பூவண்ணன் தன் மனைவியுடன் அனைவரையும் உவந்து வரவேற்றார். நல்ல பண்புகள் நிறைந்த அமுதனே தங்கள் மகளுக்கு மணாளனாக வருகிறான் என்பதில் அவர்கள் மகிழ்வுக்கு கேட்கவா வேண்டும்.

"அமுதன் மாதிரி இருந்திட்டா... அப்புறம் அவன் ஒசத்தி, இவன் தாழ்த்தின்னு இல்லாம, நம்ம சமூகம் ரொம்ப ஒத்துமையாயிடும்"

"இல்லையா பின்ன, நம்ம இளைஞர்களுக்கு அமுதன் மாதிரி சிந்தனைத் தெளிவு வந்திட்டா போதும்" கூட்டத்தில் இருவர் காதைக் கடித்தார்கள்.

பெண்ணை அழைத்து வந்தார்கள். அவள் பேசிக் கேட்டிராத அமுதன் அவளின் குரல் இனிமையைப் பருகத் துடித்தான். "மாப்பிள்ள விருப்பப்படுறாரு. பெண்ணை பாடச் சொல்லுங்கோ" குறும்புக்கார இளைஞர்கள் சிலர் ஒத்து ஊதினார்கள்.

தமிழினியாள் சங்கடத்தில் நெளிந்தாள். தோழிகள் ஊக்க மூட்ட, 'பித்தா பிறை சூடி பெருமானே' சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரப்பாடல் அவள் வாய் இதழ்கள் அசைய, ஒலிக்கத் தொடங்கியது.

'வைத்தாய் பெண்ணை டின் பால் வெண்ணெய்...' காது மடல்களில் வந்து இறங்கிய இவ்வரிகள் ஆர்வத்துடன் காத்திருந்த அமுதனை அதிர்ச்சி வலையில் தள்ளி விட்டன. டின் பாலா? அது தென் பாலாயிற்றே !

அடுத்து ஒலித்த 'தோடுடைய செவியன்' பாடலிலும் அழகுத் தமிழ் அலங்கோலமானது. அவள் கடித்து, மென்று, துப்பிய சொற்கள் 'தூ' வென்று காறி உமிழப்பட்ட வெற்றிலைச் சாறாய் அவனுக்குப் பட, கைக்குட்டையால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டான்.

அவள் வாயசைத்து ஓய்ந்ததும், எழுந்து சென்று கையிலிருந்த புத்தகத்தை வாங்கினான். எல்லாம் ஆங்கில எழுத்துகள்! இப்போது இடி வந்து இறங்கியது அவனுக்குள்தான்! அப்படி யானால் இவள் தமிழினியாள் இல்லையா? தமிழ்ப்பிணியாளா?

"தமிழ் தெரியாதா?"

"தமிழ்ப்பள்ளிக்குப் போகவில்லை . அதனால்... ஆனாலும் ஓரளவுக்குத் தெரியும்..." சொற்களை மென்று விழுங்கினார் பூவண்ணன். அவர் முகத்தில் கலவர ரேகைகள் படர்ந்தன.

''திருத்திச் சொல்லுங்கள்! நீங்கள் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பவில்லை" திமிறி வந்த ஆவேசச் சொற்களை அவனால் அடக்க முடியவில்லை .

தமிழ், தமிழினம் என வாயினிக்கப் பேசும் தமிழாசிரியர்கள், எழுத்தாளர்கள், தலைவர்கள் பலர்போல் பூவண்ணனும் ஒரு வேடதாரிதானா? போலி இனப்பற்றாளரா? தங்கசாமி மாதிரி அரிதாரம் பூணாத அருமையான நடிகரா? - சீரணிக்கவே சிரமமாக இருந்தது அமுதனுக்கு.

காதலில் சாதிகள் அழிந்திட வேண்டும். ஆனால், தமிழ் வீழ்ந்திடலாமோ?

சுட்டெரிக்கும் பார்வையோடு பூவண்ணனை நோக்கினான். நெஞ்சமெலாம் நிறைந்து இருந்த பாவேந்தரின் நேர்கொண்ட பார்வை நினைவில் இடறியது.

'மாதொருத்தி வேண்டும் எனக்கும் - தமிழ் மகளாயிருந்தால்தான் இனிக்கும்.' எனச் சூளுரையாக மொழிந்துவிட்டு வெளியேறினான்.

மற்றோர் திகைப்பின் வசம் சிறையானார்கள்.

அமுதனைப் போன்ற இளைஞர்கள் இனிச் சமுதாயத்தில் பெருகி வந்தால்... அழுத்தமான பயமொன்று பூவண்ணனின் இதயத்தைக் கௌவிப் பிடித்துப் பிறாண்டத் தொடங்கியது.





Saturday, August 10, 2019

சிறுகதை


பயணங்கள் பாதியிலே


காலைக் கருக்கலில், காண்டா வாளியோடு உராய வந்து வழிநெடுகிலும் தொணதொணவென மன சந்தோசத்தோடு எதை எதையோ ஒப்புவித்துத் தான் வெட்டும் நிரை வந்ததும் வரட்டுமா மல்லி என அரை மனத்தோடு பிரிந்துகொண்டவன், காலை பத்து மணிக்கெல்லாம் எல்லா மரங்களையும் சீவிவிட்டு வாளி வைக்கும் இடத்தில் அமர்ந்து கையோடு கொண்டு வந்திருந்த புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டி அதில் எதையோடு தேடுவது மல்லிகாவுக்குத் தன் வெட்டு நிரையில் நின்று பார்க்கையில் நன்றாகத் தெரிந்தது. 

கண்ணன் வழக்கமாக ஒத்தாசையாய் வந்து சீவிவிடும் மரங்களையும் தானே சீவிவிட்டு, கையில் பிசுபிசுத்துக் கொண்டிருந்த கித்தாபாலைத் தேய்த்தவாறே மல்லிகா வாளி வைக்கும் இடத்திற்கு வந்தாள். அவளைத் தலைநிமிர்ந்து பார்த்தவன் சட்டென தலைதாழ்த்தி மீண்டும் கண்களை புத்தகத்தில் மேய விட்டான்.

என்ன வந்தது இவருக்கு?’ மல்லிகா சலித்தவாறு அவனுக்கு எதிரே அமர்ந்து தன் பல்வரிசைகளைப் பளிச்சிட்டாள்.

“என்ன கண்ணன். கப்பலே கவிழ்ந்த மாதிரி உம்முன்னு இருக்கீங்க?”

ஆமா, மல்லி. அமைதியா பயணம் போற கப்பல புயல் வந்து அலைக்கழிச்சி நீரில் மூழ்கடிச்சா அநியாயம் இல்லையா? ஆசையா நட்ட மரங்கள புயல் வந்து வேரோடு பிடுங்கிச் சாய்ச்சா மனம் என்ன பாடுபடும்?” கண்ணனின் சொற்களில் இருந்த அழுத்தம் கைகளுக்கும் பரவ, புத்தகத்தை மூடி கீழே வைத்தான்.

முகத்தில் அரும்பியிருந்த வியர்வை முத்துகளை அழுந்த துடைத்துக்கொண்டு, “என்ன கண்ணன் சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலையே. கப்பல் புயல்னு புதிர் போடாம தெளிவாக சொல்லுங்க” மல்லிகாவின் வாய்நழுவிய சொற்கள் அவளின் பயத்தை முழுமையாய்க் காட்டியது.

அவன் எழுந்துகொண்டு அவளுக்கு முதுகுகாட்டி நின்று, அருகே சலசலத்து ஓடும் குளிர்ந்த நீரோடையை நோக்கியவாறு பேசினான். “மல்லி, உனக்கு தெரியும். அரசியல்னாவே எனக்கு அறவே பிடிக்காதுன்னு. அது ஆழ்கடலுக்கு ஒப்பானது. அதில் நீந்தத் தெரிந்தவர்கள் மட்டும் அதில் மூழ்க முயற்சிக்க வேண்டும். இதனால நம்ம தோட்டத்தில எவ்வளவு அடிதடி, பிரச்சினைகள் அப்பப்பா....எங்கப்பா நம்ம தோட்டத்து கிளையில தலைவரா இருக்காரு. அவரோட கொள்கை வேற, என் கொள்கை வேற. காலம் காலமா தலைவரா இருக்கிற அவர எதிர்த்து இந்த வருசம் உங்கப்பா தேர்தல நிற்கிறாராம். காலையில வெட்டுக்கு வந்த மணியம் கங்காணி சொன்னாரு. உங்கப்பா எதிர்த்து நின்னு, நம்ம இரு குடும்பத்திடையே பகை உண்டாகிட்டா அப்புறம் நம்ம காதல், கடல்ல மூழ்கிய கப்பல் மாதிரி ஆகாதுன்னு என்ன நிச்சயம்?” மூச்சு இரைக்க உணர்ச்சிவயப்பட்டுப் பேசினான்.

“அரசியலுக்கும் காதலுக்கும் பாலம் போடுறீங்களே கண்ணன்” அவளின் முகம் மலர்ந்தது. மெல்லியதாய் ஓசையிட்டுக் கிளம்பியது ஒரு களுக் சிரிப்பு. அவன் கூறிய விஷயம் அபபடி ஒன்றும் ஓவென்று ஒப்பாரிவைத்து மூக்கைச் சிந்துகிற அளவுக்கு ஆபத்தானது அன்று என்பதே அவள் முடிவு.

கண்ணன் அவளருகே வந்தான். அவளின் தளிர்க்கரங்களைப் பற்றி “மல்லி, உன்ன என் உயிருக்கு உயிரா நேசிக்கிறேன். எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் உன்ன நிச்சயம் கைபிடிப்பேன். கித்தா மரத்துல காயம்பட்டா மனசு கஷ்டப்படும்ல, அது மாதிரி நம்ம காதலுக்கு அரசியல் குறுக்கே வந்திடுமோன்னு பயப்படுறேன்” மல்லிகாவின் மேல் அவன் கொண்டுள்ள மாசற்ற அன்பைத் தெளிவாய்ப் பொருள் பிரித்துக் காட்டினான்.

மல்லிகாவுக்கு என்ன வந்தது? அவளின் விழியோரங்களில் நீர்த்துளிகள் பனிப்பூக்களாய்ப் பூத்து இப்போதோ அப்போதோ எனக் கோடிட்டு வழிய தவமிருந்தன. இருவரும் பிறகு எதும் பேசவில்லை. மனங்கள் சங்கமமான பிறகு சொற்களுக்கு வாய்ப்பு ஏது? வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவை இருவரும் அமைதியாய்ச் சாப்பிட்டுப் பாலெடுக்கக் கிளம்பினர்.

வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா அப்பாகிட்ட பேசணும். தலைவர் பதவிக்கு நிற்கிற யோசனையைக் கைவிடச் சொல்லணும். நான் சொன்னா அப்பா கேட்பாரு. அவளது எண்ணங்கள் அதைச் சுற்றிச் சுற்றி வட்டமிட, வேகமாகப் பாலெடுக்கத் தொடங்கினாள் மல்லிகா.

*             *            *              *  

பாலை நிறுத்து ஸ்டோரில் டாங்க்கில் ஊற்றி, வாளிகளைப் பாசாவில் கழுவிவிட்டு வீட்டிற்கு வந்தபோது மல்லிகாவின் தந்தை சதாசிவம், அவளுக்கு முன்பாக வீடு வந்து வெளிப் பிராஞ்சாவில் அமர்ந்து அன்றைய நாளிதழைப் புரட்டி நாட்டு நடப்புகளை அலசிக்கொண்டிருந்தார்.

வந்த கையோடு வாளியில் தண்ணீரை நிரப்பி அம்மாவோடு சேர்ந்து பாத்திரங்களைக் கழுவினாள். துணி துவைத்த கையோடு குளித்துவிட்டு வயிற்றில் நாலு பருக்கைகளைப் போட்டுக்கொண்டு அப்பாவிடம் வந்தவளை எதிர்பார்த்தவர்போல், “அம்மா மல்லிகா, இப்ப அவசரமா மண்டபத்துல ஒரு கூட்டத்துக்குப் போறேன். அப்புறம் மணி அஞ்சுபோல ரெண்டு மூனு அறிக்க எழுதணும். கொல்ல கொத்த போறேன்னு உங்க அம்மாவோட வெளியே போயிடாதம்மா.”

இதுதான் சமயம். விடக்கூடாது. எப்படியாவது அப்பாவை மடக்கவேண்டும் என்று நினைத்தவளாய், “அப்பா” என்றாள்.

“என்னம்மா” மகளை ஏறிட்டார் சதாசிவம்.

“இந்த வருசம் தேர்தல்ல ராஜப்பாவை எதிர்த்து நீங்க நிற்கப்போறதா மணியம் கங்காணி சொன்னாரு. நான் நம்பவே இல்லப்பா”

சதாசிவம் கொஞ்சம் நிதானித்தபடி கண்ணாடியைக் கழற்றித் துடைத்து மீண்டும் அதை மாட்டிக்கொண்டு கொஞ்ச நாழிகைக்கு முன்பிருந்த அவசரங்களை ஒதுக்கிவைத்து விட்டு நாற்காலியில் சரிந்தார்.

“ஆமாம்மா.. உண்மைதான். நாமாவது இனி இந்த தோட்டத்து ஜனங்களுக்கு உருப்படியா எதையாவது செய்யலாம்னு முடிவு எடுத்துட்டேன். நான் உன்ன எழுதச் சொன்னதுகூட அது சம்பந்தமான அறிக்கைதான்.”

அவர் பேசி முடித்ததும் வெட்டிலிருந்து வரும்போதே மனத்தில் பதியம் ஆகியிருந்ததைக் கடகடவென ஒப்புவித்தாள் மல்லிகா. “அப்பா, அரசியல் பத்திதான் உங்களுக்கு நல்லா தெரியுமே...” என்று தொடங்கி, அதன் அட்டூழியங்களை, அதனால் வரப்போகும் பின்விளைவுகளை, அடிதடி, சண்டை, தகராறு என ஒன்றுவிடாமல் ஆனமட்டும் கூறினாள். அப்பாவின் முகத்தைப் பார்த்தாள்.  எந்த எதிர்வினையையும் அவர் முகம் காட்டவில்லை.

“அம்மா மல்லிகா, எவ்வளவு காலம்தான் பொறுத்துப் போறது? ராஜப்பா தலைவரா இருக்கிற இந்த அஞ்சு வருசத்தில ஏதாவது உருப்படியா செய்தாரா? எல்லாரும் காத்திருந்து ஏமாந்து போனதுதான் மிச்சம். இனியும் எனக்கு நம்பிக்கை இல்லை” என்று தொடங்கி,

அந்தத் தோட்ட மக்களுக்கு, விவசாயம் செய்ய அரசாங்கம் முந்நூறு ஏக்கர் நிலத்தைக் கொடுக்க முன்வந்து எழுத்துப் பத்திர வேலைகள் எல்லாம் முடிந்து, இதோ முடிச்சிடறேன் என மார்தட்டி நின்ற ராஜப்பா கடைசியில் எதையுமே சாதிக்காமல் இருக்கும் கையாலாகத்தனத்தை,

மல்லிகாவே தலைவியாய் இருக்கும் மாதர் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நான்கு தையல் மிசின்களை கொடுக்கச் சம்மதித்தைக் கண்டும் காணாது அவற்றைப் பெற்றுத் தர திராணியற்ற நிலையை,

சிமிண்டெல்லாம் சேதமாகி, உடைந்துவிழ இப்போதோ அப்போதோ எனக் காத்திருக்கும் பொது மண்டபத்தைச் சீர்படுத்த வக்கில்லாமல், இதை விடபோறதில்ல, தேசிய ரீதிவரைக்கும்  இதைக் கொண்டுபோயி பேசி நல்ல முடிவு எடுக்கப் போறேன் என வாய்ப்பந்தல் போடுவதை,   

இப்படி ஒவ்வொன்றாக விளக்க, கண்ணுக்குப் புலப்படாத ஒன்று பூதாகரமாய் எழுந்து கண்முன்னே நிற்பதுபோன்ற நிலையில் சற்று அதிர்ந்து போனாள் மல்லிகா. என்ன சொல்வது என்று தெரியவில்லை. கண்ணன் நினைவில் எட்டிப் பார்த்து, புயல்காத்துல கப்பல் கடல்ல மூழ்க வேண்டியதுதானா?’ எனக் கேட்டான்.

சதாசிவம் தொடர்ந்தார். “பதவிக்கு வர்றவங்க பெரிய பொருளாதார மேதையா இருக்கணும்னு நான் சொல்ல வரலம்மா. அரசாங்கமே கொடுக்கிற மானியமும் பிற உதவிகளும் மக்களுக்கு வந்து கிடைச்சி அதனால பயனடைஞ்சு முன்னேறதுக்கு வாய்ப்பா இருக்கணும்னுதான் சொல்ல வரேன். இப்ப சொல்லும்மா. நான் எடுத்த முடிவு சரிதானே?”

மல்லிகா எதைச் சொல்லுவாள்? மெல்லவும் முடியாமல் விழுங்கமும் முடியாமல் தொண்டைக்குள் ஏதோ சிக்கியது போலாயிற்று. சமுதாய உணர்வுகள் அவளுள் பொங்கி எழுந்தன. மனத்தைப் பிடித்து அழுத்திய கழுகுப் பிறாண்டல்கள் மெல்ல விலகிட மனம் தெளிவானது. கண்ணனிடம் பேசினால் தீர்வு பிறக்கும் என நம்பிக்கை தோன்றியது.

“சீக்கிரமா போயிட்டு வாங்கப்பா. நான் அஞ்சு மணிக்கு ரெடியா இருக்கேன்” மல்லிகாதான் கூறினாள்.

“என் பொண்ணு படிச்ச பொண்ணு. பொது வாழ்க்கையை நல்லா புரிஞ்சவன்னு நான் போட்ட கணக்கு தப்பா போகுலம்மா

சதாசிவம் கூட்டத்துக்குக் கிளம்பி விட்டார்.

*             *            *              *  

ராஜப்பாவை எதிர்த்து சதாசிவம் போட்டியிடுவது உறுதியானபிறகுதோட்ட மக்களிடம் இருந்து பலதரப்பட்ட ஊகங்கள்விமர்சனங்கள்கடைசிநேர கணிப்புகள் சூடுபரந்தன.. கொஞ்ச காலத்திற்கு எல்லார் வாயிலும் இதுவே அவலாக மெல்லப்பட்டது.

பால் நிறுக்கும் ஸ்டோர்காலைப் பிரட்டுமலைக்காடு, முச்சந்திக் கடைகள், பொது மண்டபம் இப்படி ஒரு இடம் மீதமில்லாமல் இந்த விசயமே அலை மோதியது. மாலை நேரங்களில் பந்தடிக்கும் திடலில்கூட இளைஞர்கள் கும்பலாக கூடி இதையே கதைத்தார்கள்.

ராஜப்பாவுக்கு இரத்தம் சூடேறியது. ஆங்காரமாய்பூதாகாரமாய் பொங்கி எழுந்து துடித்தார். அவருடைய முரட்டு மீசையும் துடித்தது. 'அஞ்சு வருச சாதனையை முறியடிக்க இந்த ஒரு சாதாரண சதாசிவமா பாத்திடுவோம்என எக்காளமிட்டார்.

அதனோடு வழக்கமான தனது 'ஸ்டண்டுவேலைகளையும் ஆரம்பித்தார். தனக்கு வேண்டியவர்களை பின் தேதியிட்டு அங்கத்தினர்களாகப் பதிவதும் சதாசிவத்தைப்பற்றி ஆயிரம் அவதூறுக் கதைகள் சொல்லுவதும் கையெழுத்து இடாத மொட்டை அறிக்கைகளை வெளியிடுவதும்தான் அவருக்குக் கைவந்த கலையாயிற்றே!

சதாசிவத்தின் அறிக்கையோ ரத்தினச் சுருக்கமாக இருந்தது. அறிக்கையில் வளமான எதிர்காலம்', ‘வலுவான திட்டம்என ஆங்காங்கே தனித்து நின்ற வார்த்தைகள் மல்லிகாவின் கைவண்ணத்தைத் தெள்ளெனக் காட்டின.

தேர்தல் நாளன்று (தோட்டமே அல்லோல கல்லோலப் பட்டது. ராஜப்பாவுக்குத்தான் வெற்றிமாலை என உறுதியான நிலையில் தேர்தல் முடிவுகள் தெரியவந்தபோது ராஜப்பா பேயறைந்தவர்போல் ஆனார்.

யார் எதிர்பார்த்தார்கள் சதாசிவம் ஜெயிப்பார் என்றுஇனி எவ்வளவு நாளைக்குத்தான் நாங்கள் வாய்மூடி மௌனிகளாய் இருப்போம்என உண்மை நிலையை எல்லாரும் உணர்ந்துவிட்டார்களா அவமானம் தாளாமல் ராஜப்பா மண்டபத்து பின் வழியே நடையைக் கட்டஇடையில் மாட்டிக் கொண்டது கண்ணன்தான். உங்கப்பனின் முகமூடி கிழிந்ததா என தூவென்று அவனது முகத்தில் காறித்துப்பாத குறையாய். நேற்றுவரை நண்பர்களாய் இருந்தவர் கள் கும்பலாய் கூடி நின்று எள்ளி நகையாடியது அவனது இளகிய மனத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பை இறக்குவதாய் இருந்தது.

அவமானத்தால் அப்படியே கூனிக்குறுகிப் போனான் கண்ணன். அன்பொழுகச் சிரித்துப் பேசும் தோட்டத்துக் கருப்பையா ஆசிரியரும்டிரசரும்கூட பரிகாசமாய்அற்பப் பொருள் ஒன்றை பார்ப்பதைப்போல் தன்னைப் பார்த்து விலகிச் செல்லுகையில் அவன் துடிதுடித்துப் போனான். தோட்டத்தில் உள்ளவர்கள் இப்போது அப்பாவையும் தன்னையும் சேர்த்து ஒரேயடியாய் வெறுத்து ஒதுக்குவதை அவனால் முழுசாய் உணரமுடிந்தது.

நடைப்பிணமாய் வீட்டிற்கு வந்தவனை அவனது அப்பாவும் அம்மாவும் வேறு பிடித்துக் கொண்டு வந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினர். “மல்லிகாவைப் பார்க்கக் கூடாதுஅவகூடபேசக் கூடாது” எனக் கண்டிக்கத் தொடங்கினர்.

மல்லிகாவை மறப்பதா?... அவளுக்குக் கொடுத்த வாக்குறுதி.  அவளில்லாமல் எனக்கொரு வாழ்க்கையா என மண்டையைக் குழப்பிக்கொண்டு இரவு வெகுநேரம்வரை தூக்கமில்லாமல்யோசித்து யோசித்துப் பார்த்து தலையணையை நனைத்தவாறேகடைசியில் ஏதோ ஒரு திடமான முடிவோடு அதிகாலை நேரத்தில் களைத்துத் தூங்கிப் போனான் கண்ணன்.

தேர்தலுக்குப் பிறகு இரண்டு நாளாய் பலத்த மழை பெய்துமூன்றாம் நாள் வேலைக்குப் போன மல்லிகா காலைப் பிரட்டில் கண்ணனைப் பார்க்கவில்லை மரம் சீவிய பின் கண்ணனைப் பார்த்து நிறைய பேசவேண்டும் என்று எண்ணியவளாய் வேக வேகமாக மரங்களைச் சீவினாள். புதிய உற்சாகம் கரை புரண்டோட ஏதோ ஓர் பாடலை முணுமுணுத்தவாறே தெம்போடு மரங்களைச் சீவலானாள்.


தேர்தல் முடிவுகள் கண்ணனை எவ்வகையில் பாதித்திருந்தாலும்தனது இனிய பழகும் சுபாவத்தால்அப்பழுக்கற்ற அன்பால் அவனை தன்பால் கவர்ந்துதங்களின் காதல் பயணம் இல்லறப் பயணமாய் தொடரும் என்ற திண்ணமான எண்ணங்கள் அவள் மனத்தில் ஊற்றாய் பெருகியது.

எல்லாரும் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு இலட்சியத் தம்பதிகளாய் தோட்டத்தில் வலம் வரவேண்டும். சிதறிய முத்துக்களாய் இருக்கும் தோட்டத்து இளைஞர்களையும் பெண்களையும் ஒன்று திரட்டி மேம்பாட்டுத் திட்டங்களில் ஈடுபட தானும் கண்ணனும் முன்னின்று செயல்பட வேண்டும் என எண்ணங்கள் கிளை பிரித்துச் செல்ல வாளி வைக்கும் இடத்திற்கு வந்தவள் அப்படியே திகைத்து நின்றுவிட்டாள்.

என்ன முத்தண்ணே ! கண்ணன் இன்னைக்கு திட்டியா?”

இன்னக்கி மட்டும் இல்லம்மா! தம்பி ஒரேயடியா திட்டி போட்டுருச்சு. ஆமாம்மா. இனி இந்த எஸ்டேட்டுல வேலையே வேணாம்னு. நேத்து சாயங்காலமே பெரிய கிராணிகிட்ட சொல்லிட்டு டவுனுக்கு பஸ்சு ஏறி போயிடுச்சே! உனக்குத் தெரியாதாபாவம்மா தம்பிரொம்ப மனம் நொந்து போச்சு. எல்லாம் பாழாப்போன அரசியல்தான் காரணம்மா.  நல்ல பால்வடியும் வெட்டு கிடைத்த மகிழ்ச்சியில் வெற்றிலைக் கறை ஏறிய பற்கள் தெரியச் சிரித்துக்கொண்டு மரம் சீவலானார் முத்தண்ணன்.

மல்லிகா கல்லாய்ச் சமைந்து நின்றாள்! நின்றாளாவதுபக்கத்தில் இருந்த மரமல்லவா அவளைத் தாங்கிக் கொண்டது! தான் கட்டி வந்த கோட்டை வெறும் மணற்கோட்டைதான் என்று உணர்ந்த கணத்தில் அவள் ஆற்றாமை தாளாமல் கித்தா மரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு விசும்பத் தொடங்கினாள்.

கைவிடவே மாட்டேன்னு இருந்தவர இந்த அளவுக்கு கொண்டு போச்சே... ஐயையோ.. மனத்தின் அடித்தளத்தில் இருந்து ஏக்க உணர்வுகள்ஏமாற்றம் தாளாது கொப்பளிக்க குபு குபுவெனக் கன்னங்களில் கண்ணீர் கோடிட்டு வழிந்தன. இனம்புரியாத ஏதோ ஒன்று அவளைப் பிடித்துக் குலுக்கநெஞ்செல்லாம் உலர்ந்துபோன நிலையில் 'திக்பிரமை பிடித்து நின்றாள் அவள்.

வாழ்க்கைப் பயணங்கள் தொடராமல் இப்படி பாதியிலேயே நின்றுஏமாற்றமே மிஞ்சி நிற் பதுதான் வாழ்க்கையின்நியதியோயதார்த்த வாழ்வின் கனவுகளும் கற்பனைகளும் மின்னி மறைந்து அவை இருந்த தடயங்கள் அழிந்துப் போனபின் மிஞ்சி இருப்பதும் அதே ஏமாற்றம் தானே? கண்ணன் பயந்தபடியே அமைதியாய் பயணம் போன அவர்களின் காதல் கப்பல் ரொம்பவும் அநியாயமாய் ஆழ்கடலுக்குள் இப்படி மூழ்கடிக்கப் பட்டுவிட்டதே. ஓ... இறைவாஉன் முடிவும் இதுவோ!


(தினமணி 14.12.1982)

Sunday, July 21, 2019

பன்முகக் கலைஞன்


மலேசியாவில்
மோனா லிசா




மோனா லீசா மலேசியாவுக்கு வந்துள்ளார் என்ற தகவல் புலனம்வழி கிடைத்தபொழுது தாமதிக்காமல் கோலாலம்பூரில் அமைந்துள்ள தேசிய கலைக் காட்சியகத்திற்குச் (National Art Gallery)  சென்றேன். இதுவரை பார்த்ததெல்லாம் நகல்தானே. இதுதான் உண்மையானது என்ற எண்ணமே என்னை அங்கு உந்தித் தள்ளியது.  நான் சென்ற நாளில் மட்டும் நான்காயிரம் வருகையாளர்கள் என அங்குப் பணியிலிருந்த பொறுப்பாளர் சொன்னார். மோனா லீசாவுக்கு இவ்வளவு இரசிகர்களா என வியந்தேன்.

தம் மந்திரப் புன்னகையால்  உலக மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டவர் மோனா லீசா. காண்பார் கண்களையும் கைது செய்யும் இந்த ஓவியப் பெண்ணுக்கு உயிரூட்டியவர் இத்தாலியின் புகழ்பெற்ற ஓவியர் லியொனார்டோ டாவின்சி (1452 – 1519). மோனா லீசாவோடு அவரின் மற்ற 16 அரிய ஓவியங்களைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு மலேசிய ஓவியக் காதலர்களை நாடி வந்துள்ளது. இவை அவரின் உண்மை ஓவியங்கள் அல்ல. உண்மைக்கு மிக நெருக்கமான, உயர்தர இலக்க மறுஉருவாக்கம் (high definition digital reproduction) மூலம் உயிர்பெற்ற ஓவியங்கள் என்பதை அங்குச் சென்ற பின்னரே அறிந்தேன்.

லியொனார்டோ டாவின்சி  புகழ்பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டடக் கலைஞர், புதுமைப் புனைவாளர், பொறியியலாளர், சிற்பி, ஓவியர் எனப் பல்துறை மேதையாக விளங்கியவர். அத்துடன் இவர்உடற்கூற்றியல்வானியல்குடிசார் பொறியியல் ஆகிய துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். இவர் தணியாத ஆர்வம் கொண்டவராகவும் தீவிர கற்பனை வளம் கொண்டவராகவும் இருந்துள்ளார்
உலகில் இதுவரை வாழ்ந்த சிறந்த ஓவியர்களுள் ஒருவராகவும், பன்முக ஆற்றல் கொண்டவராகவும் இருந்துள்ளார். மண்ணில் இவர்போல் மனிதரும் உண்டோ என வியந்து போற்றப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஓவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். கடைசி விருந்து (The Last Supper),  மோனா லீசா (Mona Lisa) போன்ற ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.

உலகில் அனைத்தையும் புரிந்துகொள்ள வேண்டும், அதன் ஆழ்ந்த இரகசியங்களை அறிய வேண்டும் என்ற தீவிர வேட்கை வாழ்நாள் முழுவதும் இவரை ஆட்டிப் படைத்திருக்கிறது. இதனால் பல துறைகளில் ஈடுபட்டு அவற்றை முடிக்காமல் விட்டுச் சென்றுள்ளார். இவர் வாழ்ந்ததோ போர்க் காலச் சூழல். எனவே, வெனிஸ், நேப்பில்ஸ், மிலன், பாரிஸ் என இடம் மாறிக்கொண்டே இருந்ததால் பலதுறை ஆய்வுகளில் ஈடுபட்டும் அவற்றை முடிக்க முடியவில்லை.



லியொனார்டோ டாவின்சி,  வழக்குரைஞர் ஒருவருக்கும் குடியானவப் பெண்ணுக்கும் தாம்பத்திய உறவுக்கு வெளியே பிறந்தவர். அப்பாவுக்குத் தன் மகனும் வழக்குரைஞராக வேண்டும் என விருப்பம். ஆனால், டாவின்சிக்கோ நாட்டம் வேறு. தான் வரைந்த ஓர் ஓவியத்தைக் காட்டி அப்பாவிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். 18ஆவது வயதில் புகழ்பெற்ற ஓவியர், சிற்பி, கட்டடக் கலைஞர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட ஆண்ட்ரீ தெல் வெரோசியாவிடம் பயிற்சி பெற்றார். ஆண்ட்ரீயின் அறிவியல், கலை ஈடுபாடு டாவின்சியை முழுமையாய் ஆக்கிரமித்தது.

மேலும் அக்காலத்து இயற்கைவாதியும், தத்துவவாதியும், கணித மேதையுமான டோஸ்கனெல்லியின் ஆற்றலும் இவரைப் பாதித்தது. பாரதியைப்போல் இவருக்கும்  சமுதாயத்தின் புறக்கணிப்பு நேர்ந்தது. இதனால், தம் கவனத்தையும் ஆற்றலையும் அறிவுத்தேடலுக்கு முழுமையாகப் பயன்படுத்தினார்.

டாவின்சி பற்றிய சுவைத் தகவலை இணையத்தில் கண்டேன். இவர் வாழ்நாள் முழுவதும் சைவ உணவு உண்பவராக இருந்துள்ளார். உயிர்களிடத்தில் அன்பு காட்டும் மனிதரான இவர், கூண்டுகளுக்குள் விற்கப்படும் பறவைகளை வாங்கி வந்து அவற்றை விடுவித்து விடுவாராம். வாடிய பறவையைக் கண்டபோதெல்லாம் வாடிய இவரின் உயிர் இரக்கப் பண்பு போற்றத்தக்கது.





டாவின்சி பற்றி உளநோய் மருத்துவரான சிக்மண்ட் பிராய்ட் ஆய்வு செய்து கட்டுரை எழுதியுள்ளார். அதில் மோனா லீசா ஓவியத்திலுள்ள பெண்ணின் புன்னகை யாருடையதென்ற புதிரை அவிழ்க்கிறார். டாவின்சிக்குக் காதலி கிடையாது. இதே புன்னகையை டாவின்சியின் மற்ற இரு ஓவியங்களிலும் காண முடிகிறது. டாவின்சி களிமண்ணில்  சிரிக்கும் பெண்களின் தலைகளைத் தொடக்கத்தில் செய்துள்ளார். இந்தச் சிரிக்கும் பெண்கள் டாவின்சியின் தாய் கெதரினாவின் புன்னகையை நினைவுபடுத்தியே உருவாக்கப்பட்டவை எனச் சிக்மண்ட் பிராய்ட் முடிவுக்கு வருகிறார். மோனா லீசாவின் புன்னகை, எந்த உணர்வையும் வெளிப்படுத்தாதது.  ஆனால் காண்பாரை மயக்குவதாக உள்ளது. டாவின்சியின் மன ஆழத்தில் நிலையாய்ப் பதிந்துபோன தாயின் புன்னகைதான் அது என்று அறிந்துகொண்டு மோனா லீசா ஓவியத்தை கூர்ந்து நோக்கினேன். அந்தப் புன்னகையின் அழகும்  ஆழமும் இதயத்தைக் கைது செய்தன.




இதயத்தைக் களவு செய்யும் மோனா லீசா ஓவியம் களவாடப்பட்ட சுவையான சம்பவமும் உண்டு.  21.8.1911 ஆம் நாள் பாரீசில் உள்ள அருங்காட்சியகத்தில் இது கயவர்கள் சிலரால் களவாடப்பட்டது. மறுநாள், ஓவியர் லுயி பிரவுட் என்பவர் மோனலிசா ஓவியத்தைக் காண்பதற்காகச் சென்றார். அங்கு மோனலிசா ஓவியத்திற்குப் பதில், நான்கு இரும்பினாலான முறுக்காணிகளைக் கண்டு திடுக்கிட்டார். பின்னர் அங்கிருக்கும் காவல் அதகாரிகளிடம் அணுகி, வியாபாரத்திற்காக ஓவியத்தைப் புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும்படி கூறினார். சில மணிநேரங்களிலேயே, ஓவியத்தைப் புகைப்படக்காரர்கள் எடுக்கவில்லை என நிரூபணமாயிற்று. அந்த வாரம் முழுக்க, திருடுபோனதற்கான விசாரணைக்காக அருங்காட்சியகம் மூடப்பட்டது

ஓவியம் இனி நமக்குக் கிடைக்காது என்ற நிலையில், அதைத் திருடிய கயவன் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் பிடிபட்டான். அருங்காட்சியகத்தில் துப்புரவுத் தொழிலாளியான வின்சென்சோ பெருங்கையா என்பவர்தான் களவாடினார் என்பது தெரிந்தது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெருங்கையாலியொனார்டோவின் ஓவியம், இத்தாலிக்கே திரும்ப வேண்டும் என எண்ணி நிகழ்த்திய சதியே இதுவாகும்.


மேலும், திருடிய ஓவியத்தை ஏலத்திற்கு விட்டால் இலாபம் கிடைக்குமென பெருங்கையாவின் நண்பன் ஆசையைக் காட்டினான். பின்னர், எடுவார்டோ டி வால்பியர்னோ என்பவர், இந்த ஓவியத்தை ஆறு நகல்கள் எடுத்து, ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு விற்றார். இரண்டாண்டுகளில் பொறுமையிழந்த பெருங்கையா, பிளாரன்சிலுள்ள ஒரு காட்சியகத்தில் ஓவியத்தை விற்கும் பொழுது, கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். இத்தாலியின் அனைத்து இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு, 1913ம் ஆண்டு மீண்டும் லாவ்ரேவிற்குத் திரும்பியதுமோனா லீசா ஓவியம். களவாடிய குற்றத்திற்காக, பெருங்கையாவிற்கு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனையளிக்கப்பட்டது. எப்படியோ டாவின்சியின் கனவு ஓவியம் மீட்கப்பட்டது.


டாவின்சியின் உண்மையான ஓவியங்கள் எட்டு நாடுகளில் உள்ளன. அவை மறுஉருவாக்கம் பெற்று ஒருசேர ஒரே இடத்தில் காணக்கூடிய வாய்ப்பாக இஃது அமைகிறது. இந்த ஓவியக் கண்காட்சி இத்தாலியில் தொடங்கி உலகம் முழுவதும் பயணிக்க உள்ளது. ஜோர்ஜியா, வார்ஷோ, போலந்து, சீனா ஆகிய நாடுகளில் முடிந்து இப்பொழுது  இந்தக் கண்காட்சி மலேசியாவை அடைந்துள்ளது. இதற்குப் பிறகு, பேங்கோக், மியன்மார் நோக்கிப் பயணப்படும். இவ்வாண்டு உலகிலுள்ள அருங்காட்சியகங்கள் லியொனார்டோ டா வின்சியின் 500ஆம் ஆண்டின் நினைவுநாளைக் கொண்டாடி வருகின்றன. அதன் முத்தாய்ப்புக் கொண்டாட்டம் இவ்வாண்டு அக்டோபர் 24இல் பாரீசில்  நடைபெறவுள்ளது. 



டாவின்சி கலையும் அறிவியலும் பொறியியலும் கலந்து செய்த கலவையோ என வியக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு இவரின் கலைப்பணியைவிட அறிவியல், பொறியியல் ஆய்வுகள் குறிப்புகளாகவும் படங்களாகவும் ஏறக்குறைய 13 000 பக்கங்களில், குறிப்புப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேசிய கலைக் காட்சியகத்தில் அவரின் கையெழுத்தில் அமைந்த குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. 15 / 16 ஆம் நூற்றாண்டில் இவர் வரைந்துள்ள மனித உடல் வரைபடம், பறக்கும் எந்திர வடிவமைப்பு,  மனித மூளை, மண்டையோட்டின் வரைபடம், கையின் உடற்கூற்றியியல் ஆய்வுப் படம் என அனைத்தும் இவர் இறைஞானம் பெற்ற அதிசயப் பிறப்போ என வியக்க வைக்கிறது.





மலேசியாவுக்கான இத்தாலியத் தூதர் கிரிஸ்தியானோ மெகிபிந்தோ ஓர் ஓவியர்.  அவர் கூறும் கருத்து நம் கவனத்தை ஈர்க்கிறது. ஓவியம் என்பது உணர்வைவிட கண்ணுக்கு விருந்தாகும் படைப்பு. கவிதையோ கண்களைவிட உணர்வுக்கு விருந்தாகும் படைப்பு. கோலாலம்பூரில் தேசிய கலைக் காட்சியகத்திற்கு வருபவர்கள் லியொனார்டோ டாவின்சி ஓவியங்களில் இழையோடும் கவிதையை ரசித்து அனுபவிப்பார்கள்.

டாவின்சியின் பின்புலம் அறிந்துகொண்டு அவரின் ஓவியங்களைக் காணும்போது அவை இன்னும் பொருள் செறிந்தவையாகத் தெரிந்தன. வருகையாளர்கள் திறன்பேசிகளில் ஓவியங்களைச் சிறைப்பிடிக்க அலைமோதுகிறார்கள். அதீத கனவுகளோடு வாழ்ந்த ஆளுமையின் நினைவுகளில் மூழ்கியெழ, அவரின் கலைப்படைப்புகளைத் தரிசிக்க இஃது அரிய வாய்ப்பு. அங்கிருந்து விடைபெறும்பொழுது சொல்ல முடியாத சோகம் இழையோடும் மோனா லீசாவின் புன்னகை முகமே மனத்தில் நிறைந்திருந்தது





டாவின்சியின் ஓவியக் கண்காட்சி கோலாலம்பூரில் தேசிய கலைக் காட்சியகத்தில்  (National Art Gallery) 15 ஜூலை முதல் 15 ஆகஸ்ட் வரை நடைபெறுகிறது.

லியொனார்டோ டாவின்சியின் ஓவியங்களை ரசித்து மகிழப் போய் வாருங்களேன். உங்களுக்காகத் தேசிய கலைக் காட்சியகம் திங்கள் முதல் ஞாயிறுவரை காலை மணி 10 முதல் மாலை மணி 6 வரை திறந்திருக்கிறது.