நம் குரல்

Saturday, February 19, 2011

உச்சத்தை அடைந்தவன்


கேமராக்கள் கண்விழித்து
தலைநிமிர்ந்து உற்றுப் பார்த்தன
ஒலிபெருக்கிகள் உயிர்பெற்று
முன்நகர்ந்து நெருங்கின
எழுதுகோல்கள் தலைகுனிந்து
சின்னக் குறிப்பேடுகளோடு
இணைசேர்ந்தன

புன்னகை அணிந்த இதழ்கள்
நிமிர்ந்த மேனி
கனிவான பார்வை
கலையாத கேசம்
கம்பீர நடை
காற்றை விசாரிக்கும் கைகள்

உற்சாகத்தில் நனைந்து
உச்சத்தை அடைந்தவன் வந்தபோது
கண்கள் மொய்த்தன
கடந்துபோகும் கணங்கள் கனமாயின
பரபரப்பாய்க் கால்கள் நெருங்கின

வாயிதழ்கள் அசைந்து
சொற்கள் உயிர்ப்பிக்க
கேள்விகளுக்கு அழகழகாய்ப்
பதிலளிக்கத் தொடங்கினான்

இடையிடையே
வெற்றியின் தருணங்களை
எதிர்நோக்கும் சவால்களை
எதிர்காலத் திட்டங்களை
மனத்தில் ஆசைகளை
ஒவ்வொன்றாக விவரிக்கத் தொடங்கினான்

செய்திகளுக்கான தகவல் சேர்ந்தவுடன்
எல்லாமும் விடைபெறத் தொடங்கிய பொழுதில்
நான் நெருங்கினேன்

யாரிடமும் காட்டாமல் மறைத்துவிட்ட
அவனின் ஆறாத காயங்களை
மறையாத தழும்புகளை
காயாத கண்ணீர்ச் சுவடுகளை
பொல்லாத இடறிய நொடிகளை
சொல்லாத சோகங்களை
நான் சேகரித்துக்கொண்டு வந்தேன்


2 comments:

  1. தங்களின் கவிதை மிகவும் யதார்த்தத் தன்மையுடன்
    படைக்கப்பட்டுள்ளது பாலா.
    புறச் செய்திகளுக்கு அதிக முன்னுருமை வழங்கும் பத்திரிக்கையாளர்களின் போக்கு குறியீட்டாக இறுதி மூன்று வரிகளில் உணர்த்தப்பட்டுள்ளது கவிதையின் உச்சம். உங்கள் மனக்கிணற்றில் ஊறும் இலக்கிய நீரை தினமும் மொண்டு குடிக்க ஆவல் ஏற்படுகிறது.

    ReplyDelete
  2. ஒரு படம்கூட கவிதைக்கான வித்தாக அமைந்துவிடலாம்.
    அப்படி ஒரு படமாக என் கண்ணுக்குள்
    விழுந்த படம் இது.என் கவிதை நதியில் கால்நனைக்கும் சகப்பயணியாக
    உங்களைப் பார்க்கிறேன், சேகர்.

    ReplyDelete