நம் குரல்

Sunday, February 13, 2011

காதலதிகாரம்

1
மழை நின்ற பின்பும்
ஓயாமல் சொட்டும் துளிகளைக்
கைகளில் ஏந்தினேன்
உடலில் ஊடுருவும் குளிர்ச்சியில்
நீ வந்து போகிறாய்..

2
நிலவு அங்கேதான் இருக்கிறது
அதன் அழகை ஆராதிக்கும் மனம்தான்
மாறிக்கொண்டிருக்கிறது
அது கூடுதல் அழகோடு பொலிகிறது
நீ அருகில் இருக்கும்போது..

3
கடன் கொடுத்தவன் நான்
உன் இதய வாசலுக்கு வந்து
திருப்பிக் கேட்கிறேன்

கடன் பெற்றவள் நீ
வெறுப்புகளைச் சில்லறையாய்
என் இதயப் பாத்திரத்தில் விட்டெறிகிறாய்

4
நினைவைவிட கனவையே யாசிக்கிறேன்
அங்குதான்
புன்னகை அணிந்த உன் வாயிதழிலிருந்து
அன்பு மொழிகள் உதிர்கின்றன

5
இருள் படிந்த
இதய அறைகளின் சுவர்களில்
உன் படங்களை மாட்டி வைத்த பின்புதான்
அது ஒளி மழையில் நனைந்து
ஒளிரத் தொடங்கியது

6
இலக்கில்லாமல் பயணம்போன
கால்கள் தயங்கித் தயங்கி நிற்கின்றன
துணைக்கு உன் காலடி ஒலிக்காக
காத்திருக்கின்றன

7
பறப்பதற்குச் சிறகிருந்தும்
கூண்டில் அடைபட்டுக் கிடக்கும்
கிளிக்காக இதயம் கசிந்தாலும்

உன் மனச்சிறையில் வந்து
மாட்டிக்கொள்ளவே மன்றாடுகிறேன்

8
நாம் எப்போதோ
பேசிக்கொண்ட நொடிகளை
அசைபோடுகிறேன்

மனநாடாவில் அவை மட்டும்
திரும்பத் திரும்ப ஒலித்து
உனை உடனழைத்து வருகின்றன

9
ஒரு முறை எழுதி முடித்த
காதல் அத்தியாயத்தில்
திருத்தம் செய்யச் சொல்கிறாய்

நூலை அச்சுக்கு அனுப்பிவிட்ட
மனநிலையோடு நான்
பிழைதிருத்தத்திற்கு வழி இருக்குமா
எதிர்ப்பார்ப்போடு நீ

10
எல்லாக் காதல் கதைகள் போலவும்
நம் கதையும்

ஆசைகளோடும்
திருப்பங்களோடும்
ஏமாற்றங்களோடும்
கூடுதலாக
இன்னும் காயாத
கண்ணீர்த்துளியோடும்


4 comments:

 1. கவிதையைப் படித்து முடித்து விட்ட போதும்...
  தூவானமாய் ஏக்கங்கள் காத்திருக்கின்றன..
  80' களின் நினைவுகள் முத்து முத்தாய் மனதைக் கிள்ளுகின்றன...

  அன்புடன்,
  பூச்சோங் எம்.சேகர்.

  ReplyDelete
 2. கைகளில் காய்ந்து பிசுபிசுக்கும் ரப்பர் பாலைப்போல், சிங்கை பாலுமணிமாறனின் காதல் கவிதைகளைப் படித்த பின்னர் எனக்கும் காதல் நினைவுகள் இதய அறைகளில் பிசுபிசுக்கத் தொடங்கிவிட்டன. காதல் நதியில் கால் நனைத்தால்போதும் உயிர்வரை அதன்
  உணர்வுகள் ஊடுருவும். அந்த உணர்வுகளைச் சேமித்து எழுதிப்பார்த்தேன். இப்படி வரிகளாகின...

  ReplyDelete
 3. உங்களின் வரிகள்..
  தூசு படிந்திருந்த
  என காதல் மனதைச்
  சுத்தம் செய்கையில்....

  எனக்குள்ளும்
  சில வரிகள்
  எட்டிப் பார்த்தன இப்படி....

  என் அருகில்
  உன் நிழலாடாவிட்டாலும்
  என் மனதோடு
  உன் காதலாடுகிறது

  என்னை
  வானுயர வீசினாலும்
  உன் காலடியில்
  வந்து விழும்
  என் காதல்

  காதலுக்காக
  இலக்கியத்தை நேசித்தவன்
  இன்று வாழ்க்கைக்காக
  காதலை நேசிக்கிறேன்

  பிப்ரவரி 14
  இன்றோடு முடிந்துவிடுவதில்லை
  மீண்டும் மீண்டும்
  புதிதாய்ப் பிறக்கும்
  என் காதலைப் போல........

  ReplyDelete
 4. உங்கள் கவிதை மனத்திலும்
  அழகான காதல் வரிகள்
  கண்சிமிட்டுகின்றன!

  தோண்டத் தோண்ட ஊறும்
  அந்த உணர்வுகளை
  எழுதுகோலுக்கு இடம் மாற்றுங்கள்!

  அழகான கவிதைகளில்
  மூழ்கியெழ இதயம் தவிக்கிறது

  ReplyDelete