நம் குரல்

Monday, February 14, 2011

காதல் படிக்கட்டுகள்

1
நான் திரும்பிக்கொண்டிருக்கிறேன்
நீ வந்து கொண்டிருக்கிறாய்

பயணத்தின்
எந்தப் புள்ளியிலும்
இனி நாம் சந்திக்கமுடியாது

2
துயரங்களை இறக்கிவைக்க
எழுதிவைத்த வரிகளில்
கசிகின்றன

ஊரின் வாயிக்கு அவலாய்
நம் ரகசியங்கள்

3
சினிமாவைக் கொண்டாடும் ரசிகன்
இயக்குநரின் சிரமம் அறிவானா?

நம் காதல் வரிகளில்
மூழ்கியெழும் வாசகனுக்கு
நம் அவஸ்தைகளில்
ஆழம் அறிதல் சாத்தியமா?

4
கவனமாகப் பாதம் பதித்து
ஏறிப்போன படிக்கட்டுகள்

எப்படிக் கால் இடறியதோ
இப்பொழுது திரும்புகிறேன்
புரண்டுகொண்டே
புறப்பட்ட இடத்திற்கு..

5
மனமெங்கும்
ஆறாத காயங்கள்

ஆவலோடு எதிர்பார்த்த
உன் வாயிலிருந்து
கசிந்த வார்த்தைகளால்

6
எல்லாம் உதிர்த்துவிட்டு
இலையுதிர்கால மரமாக
நிற்கிறேன்

வசந்தத்தால் வாழ்த்தாமல்
என் ஆணிவேரையே
அசைத்துப் பார்க்கிறாய்

7
நான் கேட்க நினைத்த
இராகங்களெல்லாம்
காதுக்கு வரவில்லை

உன்னால் எனக்கு
அறிமுகமானதோ முகாரி

8
கை நிறையக் கனவுகளோடு
இதய வாசலுக்கு வந்து

இன்று
பை நிறைய கற்களை
நிறைத்துக்கொண்டு நிற்கும்
கோபக்காரச் சிறுவனாய் நான்

9
காலம் கடந்துபோக
நீ இன்னமும் யோசிக்கிறாய்

நான் தேடுதலை முடித்துக்கொண்டு
புறப்படுகிறேன்
திரும்ப முடியாத பாதையில்

10
நான் திரும்பிக்கொண்டிருக்கிறேன்
நீ வந்து கொண்டிருக்கிறாய்

ஏதாவது ஒரு புள்ளியில்
நம் சந்திப்பு நிகழலாம்
நிகழாமலும் போகலாம்

5 comments:

 1. ரப்பர் மரத்திலிருந்து பால் சொட்டுச் சொட்டாய் கொட்டுவதுபோல் உங்கள் காதல் மனதிலிலிருந்து கவிதை வரிகள் கொட்டிக்கொண்டிருக்கின்றன.

  ஆனால்..இக்கவிதையில் சில முரண்கள் தெரிவதாக நான் உணர்கிறேன்.

  1. பயணத்தின் எந்த புள்ளியிலும் இனி நாம் சந்திக்கமுடியாது
  9. புறப்படுகிறேன் திரும்ப முடியாத பாதையில்
  10. ஏதாவது ஒரு புள்ளியில் நம் சந்திப்பு நிகழலாம். நிகழாமலும் போகலாம்.

  கவிதையில் இந்த முரண்கள் இருப்பதற்கு சிறப்புக் காரணம் ஏதும் இருக்கிறதா?

  ReplyDelete
 2. கவிதைகளைக் கூர்ந்து பார்த்தமைக்கு நன்றி சேகர்.
  எழுதும்போது நானும் யோசித்தேன்.

  1
  ‘நான் திரும்பிக்கொண்டிருக்கிறேன்
  நீ வந்து கொண்டிருக்கிறாய்’ - இங்கே இருவர் ஒரே திசையில் போகின்றனர்.
  ஒருவர் முன்னே போகிறார் (தேடுதலில் தோல்வியடைந்து)
  -இன்னொருவர் பின்னால் பயணமாகி வருகிறார்(மனமாற்றம் அடைந்து)
  ஒரே திசைதான் ஆனால், இனி இவர்களிடையே சந்திப்பு சாத்தியமில்லை என எண்ணினேன்.

  10
  இங்கே அதையே மாற்றி யோசித்தேன்.
  ‘நான் திரும்பிக்கொண்டிருக்கிறேன்’ (அவள் திசையில் அவளை எதிர்நோக்கிப் போகிறேன்)
  ‘நீ வந்துகொண்டிருக்கிறாய்’ (அவளும் என்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறாள்)
  எதிரெதிர் திசைதான். இங்கே சந்திப்பு சாத்தியமாகலாம். கடைசி நேர மனமாற்றத்தில் அது நிகழாமலும் போகலாம்.

  ஒரே வரிகள் இரண்டு பொருள்கள் தருவதை எழுதும்போது உணர்ந்து எழுதினேன்.

  9
  ‘நான் தேடுதலை முடித்துக்கொண்டு
  புறப்படுகிறேன்
  திரும்ப முடியாத பாதையில்’

  தேடுதல் முடிந்தது. இனி ஒன்றுசேர வாய்ப்பு இல்லை எனத் தெரிகிறது.
  அவள்தான் இன்னமும் யோசிக்கிறாளே! நான் பயணம் போகும் பாதையில்
  திரும்பிவரும் எண்ணம் இல்லை; வாய்ப்பும் குறைவு - என்பதைப் பதிவு செய்துள்ளேன்.

  இவற்றைத் தனித் தனி சித்திரங்களாக எண்ணி எழுதினேன்.
  1, 10 கவிதைகளை விடுத்து மற்றவற்றில் ஒரே உடன்பாடான சிந்தனையை எண்ணவில்லை. அதனால்தான் முரண்பாடுகள்.

  என் சிந்தனையைக் கிளறியதற்கு நன்றி சேகர்.

  ReplyDelete
 3. தங்களின் நேரத்தை ஒதுக்கி விளக்கம் கொடுத்தற்கு நன்றி.
  காதல் மனதின் இலக்கிய ஊற்றுகள்..
  மனதுக்கு இதமாக உலா வருகின்றன..

  அண்மையில் ஒரு ஹைக்கூ கவிதைத் தொகுப்பில் ஹைக்கூ கவிதைக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது

  முதல் வரி - 5 அசைகள்
  இரண்டாவது வரி - 7 அசைகள்
  மூன்றாவது வரி - 5 அசைகள்

  இருக்கவேண்டும் எனவும், மேலும் மூன்றாவது வரியின் இறுதி வார்த்தை பெயர்ச்சொல்லில் அமைந்திருக்கவேண்டும் எனவும் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

  தங்களின் கருத்து என்னவோ?

  ReplyDelete
 4. ஜப்பானில் எழுதப்படும் ஹைக்கூ 5,7,5 ஆகிய 17 அசைகளில் அமைந்திருக்கும். தமிழில் எழுதப்படும் ஹைக்கூ கவிதைகளில் அம்முறை பின்பற்றப்படுகிறதா எனக் கேட்கிறீர்கள்.

  தமிழில் இம்முறை பின்பற்றப்படுவதில்லை. ஆனால், ஹைக்கூவின் ஆதார சுருதிகளாக இருக்கும் அதன் அடிப்படைக்கூறுகளைத் தமிழில் கொண்டு வருகிறோம். பலர் 5,7,5 என எண்ணியெண்ணி ஹைக்கூவின் அழகைத் தவறவிடுகிறார்கள். 5,7,5 அசைகள் இருந்தால் மட்டும் ஒன்று ஹைக்கூவாகிவிடாது. அதன் முக்கியக் கூறுகள்:

  1. இயற்கைக்கு மீளல்
  2. எளிய உயிர்க்கு இரங்கல்
  3. தந்திமொழிபோல் சுருக்கம்
  4. கடைசி வரியில் பெயர்ச்சொல்
  5. உவமை, உருவகம் போன்ற அணிகளை விடுத்தல்
  6. பார்த்த காட்சியை மனகேமராவில் படம் பிடித்தல்
  7. பருவகால மாற்றங்கள் மனத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பதிவு செய்தல்
  8. புதிர், விடுகதை போன்றவற்றைத் தவிர்த்தல்
  9. எல்லாவற்றையும் சொல்லி முடிக்காமல் வாசகனுக்கும் பங்கு வைத்தல்
  10. எதையும் சொல்லாமல் வாசகனுக்குக் காட்சி மூலம் உணர்த்துதல்

  இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். 5,7,5 அசைகள் இல்லாவிட்டாலும் இதனைப் பின்பற்றி எழுதப்படும் கவிதைகளை ஹைக்கூவாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தமிழில் ஹைக்கூ என்ற பெயரில் புதிர், விடுகதைகளை எழுதி நம்மைச் சோதித்துவிடுகிறார்கள்.

  இதோ சில ஹைக்கூக்கள்:

  கல்லூரி ஆல்பம்
  ஆசையாய்த் திறந்தேன்
  ஆற்றில் இறந்த நண்பன்

  சாலையோர அழுக்கு நீர்
  தலைநனைக்கும்
  குருவிகள்

  குப்பைகொட்ட வந்தவள்
  தலை குனிந்தாள்
  நதியில் தெரிந்தது முகம்

  உணவைக் கொஞ்சம்
  சிந்தி உண்ணுங்கள்
  எறும்புகள் வரும் நேரம்

  அகதி முகாமில்
  பிறந்தநாள் சிறுவனுக்கு
  விளையாட்டுத் துப்பாக்கி

  சோம்பல் மாணவன்
  அழைத்துக் காட்டினேன்
  பாறை இடுக்கில் செடி

  இன்னும் மனம் நிறைய ஹைக்கூக்கள்...
  நிறைய சொல்லலாம் சேகர்

  ReplyDelete
 5. விரிவான விளக்கத்திற்கு நன்றி பாலா...
  முதல் ஹைக்கூ பூச்சோங் ஆற்றில் விழுந்து இறந்த என் நண்பன் காந்தியை என் நினைவின் ஆழத்திலிருந்து மீட்டெடுத்தது.

  ReplyDelete