என்ன நடக்கிறது ம.இ.கா.வில்? கட்சியின் பதிவு ரத்தாகிவிடுமா? ஏன் ஏடுகளில்
இத்தனை அறிக்கைகள்? யார் சொல்வது உண்மை? தலைவர் ஏன் எதற்கும் பதில் சொல்லாமல் மௌனமாக இருக்கிறார்? மறுதேர்தலை நடத்துவதில் என்ன பிரச்சினை? ஆறு லட்சம்
உறுப்பினர்களும் அரசியல் அகதிகளாக ஆகிவிடுவார்களா?
ம.இ.காவின் உறுப்பினரோ இல்லையோ, இந்நாட்டின் ஒவ்வோர் இந்தியனும் மனம் நொந்து கேட்க விரும்பிய கேள்விகள்
இவையாகத்தான் இருக்கும். சிலர் தங்களின் ஆதங்கத்தை ஏடுகளில் அறிக்கைகளாக
எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பலர் ஒவ்வொரு நாளும் அரங்கேறும் காட்சிகளை ரசித்து
மகிழ்கிறார்கள். பெரும்பாலோர் முகஞ்சுழித்து அனைத்துச் சிக்கல்களும்
தீர்ந்துபோகும் நாளுக்குக் காத்திருக்கிறார்கள். ஆனால், சிக்கல்கள்
கையாளப்படும் நிலையைப் பார்க்கும்போது எல்லாம் தீர்வதற்கு இன்னும் நீண்ட காலம்
ஆகும்போல்தான் தெரிகிறது.
ம.இ.கா. பத்தோடு பதினொன்றாக
முளைத்த அரசியல் கட்சியல்ல. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், ஆகஸ்ட் 1946இல் தோற்றம் கண்ட கட்சியாகும். அம்னோ, ம.சீ.சாவோடு
இணைந்து நாட்டின் சுதந்திரத்துக்குக் குரல் கொடுத்த கட்சி. இந்தியர்களின் கல்வி, பொருளாதாரம், சமயம், சமூக
வளர்ச்சிக்காக அரசாங்கத்தில்
பிரதிநிதித்துவம் பெற்ற கட்சி. ஆனால், 79 ஆண்டுகால வரலாற்றைக்கொண்ட இக்கட்சியின் இன்றைய நிலையைப்
பார்க்கும்போது எல்லாம் பொய்யாய், கற்பனையாய், பழங்கதையாய்ப் போய்விடுமோ என்ற வருத்தமே மேலோங்குகிறது.
எல்லாச் சிக்கல்களுக்கும்
பிள்ளையார் சுழியிட்டது ம.இ.காவில் நடந்த தேர்தல்தான். உதவித் தலைவர் மற்றும்
மத்திய செயலவைக்கான தேர்தலை முறையாக நடத்தியிருந்தால் பிரச்சினைகள் இந்த அளவுக்கு
விஸ்வரூபம் எடுத்திருக்காது. தேர்தலைக்கூட முறையாக நடத்தத் தெரியாத கட்சி என்ற அவப்பெயர்
சூழ்ந்து கட்சியின் தோற்றத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட விதம் ஒரு
திகில் நாடகத்தைப் பார்க்கும் பரபரப்பு உணர்வை எல்லாரிடமும் ஏற்படுத்திவிட்டது.
வாக்குகளை வாங்கப் பணம் தண்ணீராய் அள்ளி இறைக்கப்பட்டதும் கட்சியின் அடுத்தக் கட்ட
தலைமைத்துவத்தை உருவாக்கும் முயற்சிக்குச் சிறப்பைச் சேர்க்காது.
நம் சமூகத்தின் எல்லா நிலைகளிலும்
தலைமைத்துவப் போராட்டம் பெரும் சிக்கலாய் உருவெடுத்துள்ளது. பெற்றோர் ஆசிரியர்
சங்கம் தொடங்கி, கோயில் நிர்வாகம்,
சமூக இயக்கங்கள், அரசியல்வரை பதவிகளுக்காகப் அதிகமாகப்
போராடுவதும் அடித்துக்கொள்வதும் இயல்பாகிவிட்டது. உளவியல் பார்வையில், இந்திய சமுதாயத்தின் மனப்போக்காக, தனித்த அடையாளமாக, இயல்பான ஓர் கூறாக இது மாறியுள்ளது.
சமுதாய நலனை முன்நிறுத்தும் சிறந்த பண்புகளைப் போற்றும் மனப்பாங்கு இல்லை.
விட்டுக்கொடுத்தல், அனைவரையும் அரவணைத்தல், மாற்றுக்கருத்தை மதித்தல், குறை பொறுத்து நிறை
காணல், பதவியில் நீண்ட காலம் ஒட்டிகொள்ளாமல் அடுத்த
தலைமுறைக்கு வாய்ப்பளித்தல் என எத்தனையோ தலைமைத்துவப் பண்புகள் மறைந்துவிட்டன. தலைமைத்துவப்
பண்புகளைப் போற்றாத சமுதாயம் மீட்சி பெற வாய்ப்பில்லை.
கணவன் - மனைவி உறவில் எழும் சிக்கல் போன்றதுதான் ஓர்
அரசியல் கட்சியில் அதன் தலைவர்களிடையே எழும் சிக்கல்கள். கணவன் மனைவியிடையே எழும்
ஊடல் இயல்பானது; மிகவும் அவசியமானது. ஆழமான அன்புக்கும்
நெருங்கிய உறவுக்கும் அதுவே பாலம் அமைக்கிறது. ஆனால், அஃது
உணவில் உப்புபோல் சிறு அளவாக இருக்க வேண்டும். ‘உப்பமைந்
தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்’ என்கிறார்
வள்ளுவர். ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம்,
உணவில் இடும் உப்புபோல் சிறு அளவாக இருக்கவேண்டும். அந்தக் கால அளவு நீடித்தால்
உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்.
இன்று, ம.இ.கா.வில் நடக்கும் குளறுபடிகளுக்கு இது மிகவும் பொருந்துகிறது.
தலைவர்களிடையே பிணக்கும் கருத்து வேறுபாடுகளும் தோன்றுவது இயல்பு. ஆனால், அது உப்பாக இருக்கவேண்டுமே தவிர அதுவே உணவாகிவிடக்கூடாது. தலைவர்கள்.
சிக்கல்களை விரைந்து தீர்க்க முயல வேண்டும். அதைவிடுத்து,
காலத்தை நீட்டித்த காரணத்தால் மனைவி பலமுறை கைப்பேசியில் அழைத்தும் குறுந்தகவல்
அனுப்பியும் கணவன் வீராப்புக் கோபம் காட்டி முறுக்கிக்கொண்டு நின்றதால் இன்று
அக்கம் பக்கத்தார், உறவு என்றில்லாமல் நாடே வேடிக்கை
பார்க்கும் நிலையில் குடும்பச் சண்டை பெரும்பகையாய் மாறிவிட்டது.
கட்சி நடத்திய தேர்தல் செல்லாது எனச்
சங்கங்களின் பதிவதிகாரி கடிதம் அனுப்பிய பிறகு,
விரைந்து செயல்பட்டுத் தேர்தல்களுக்கு நாள் குறித்து விரைந்து செயல்பட்டிருந்தால்
கால விரயம் ஏற்பட்டு வீண் அறிக்கைப் போர்களும் நிகழ்ந்திருக்காது. இது, ஏதோ மேல்நிலைத் தலைவர்களை மட்டும் பாதிக்கும் சிக்கல்கள் அல்ல.
மேல்நிலைத் தலைவர்களிடையே ஏற்படும் மோதலும் பிளவும் கீழ்நிலை வரை (மாநிலம், தொகுதி, கிளை) பெரும் பிளவையும் பிணக்கையும்
ஏற்படுத்தியுள்ளன என்பதை பலரும் உணர்வதில்லை. ‘சாமிவேலு –
சுப்ரா மோதல்கள்’ சமுதாயத்தை இரு கூறாக்கி நீண்ட காலம்
பிளவுபடுத்தியதை மறுக்கமுடியுமா? அதேபோன்ற சமுதாயப்பிளவு
இப்பொழுது தொடங்கியிருக்கிறது. ம.இ.கா. வளாகத்தில் ஒற்றுமைப் பொங்கலைக்
கொண்டாடுவது சிறப்புதான். ஆனால், நாடு முழுமையும்
சமுதாயத்தில் பல பிரிவாய் வேற்றுமையால் மீண்டும் சிதறத் தொடங்கியுள்ள ம.இ.கா.
உறுப்பினர்களை எப்படி ஒருங்கிணைப்பது?
சில வேளைகளில் மௌனமொழி சிறந்த
மொழிதான். மறுக்கவில்லை. ஆனால்,
கட்சியின் தலைவர் பல வேளைகளில் மௌனம் காப்பது பெரும் குழப்பத்துக்கு
இட்டுச்சென்றுள்ளது. என்ன நடக்கிறது என ஏடுகளையும் தகவல் ஊடகங்களையும் நாடுவோர் ‘என்ன நடக்கிறது?’ எனத் தெரியாமல் தவிக்கின்றனர். ‘இப்படியிருக்குமோ? இல்லை அப்படியிருக்குமோ?’ என ஏதோ முடிவுகளுக்கு வந்துள்ளனர். குறிப்பாக, ‘இப்படியே போனால் நாம் அரசியல் அகதிகள்’ என்ற கூற்று
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை பலரின் அறிக்கைகள் பிரதிபலித்தன. ‘அகதிகள்’ என்ற சொல் பயந்த இயல்புகொண்ட சமுதாயத்தை
மேலும் பயமுறுத்திவிட்டதது. இதன் விளைவாய் இன்னொன்றையும் காணலாம். தலைவர்களிடையே
ஏற்பட்டுள்ள மோதல்கள் பலருக்கு பெரும் வாய்ப்பாய்ப் போய்விட்டது. அவரவரும்
விருப்பத்துக்கு அறிக்கை வெளியிட்டு ஏடுகளில் கோபமுகம் காட்டுகிறார்கள். இதுவும்
பெரும் பிளவுக்கு வழியமைக்கும் என்பதை மறுக்க முடியாது. அவரவரும் ‘அறிக்கை எழுதி, அறிக்கை படித்து இன்புற்றியிருப்பதன்றி
வேறொன்றும் அறியார் பராபரமே’ எனப் பாடத்தோன்றுகிறது.
ம.இ.காவில் ஏற்பட்டுள்ள குழப்பம்
ம.இ.கா. என்ற கட்சியை மட்டுமல்ல. நம் சமுதாயத்தையும் பாதித்துள்ளது. பல்லின மக்கள் வாழும் சூழலில், நாம் மரியாதையோடு தலைநிமிர்ந்து வாழ நம் செயல்கள்தாம் அடித்தளம். நாம்
சூழலை மறந்துவிட்டுக் அடிதடிச் சண்டையில் மும்முரம் காட்டினால், அதை அப்படியே படம்பிடித்து முதல் பக்கச் செய்தியாக்க பிறமொழி ஏடுகள்
காத்திருக்கின்றன. அதுதான் அண்மையில் நடந்தது. ம.இ.கா. கூட்டங்களில் நாற்காலிகள்
பறந்த காலங்கள் உண்டு. அந்தக் காட்சிகள் அரங்கேறும் காலம் மீண்டும் திரும்பும்போல்
இருக்கிறது. அந்தக் காட்சிகளுக்காக கேமராக்கள் பசியோடு காத்திருக்கின்றன.
போர் மேகங்கள் உடனே விலகாமல்
ம.இ.காவை சூழ்ந்துகொண்டு இருப்பதால் இன்னும் எத்தனையோ இழப்புகள் உள்ளன. தங்களின்
பல்வேறு பிரச்சினைகளுக்காக ம.இ.காவின் உதவியை நாடி வருபவர்களைக் கவனிப்பதற்கு
நேரமேது? ஒவ்வொரு நாளும் முப்பது நாற்பது பேரைச்
சந்தித்துப் பிரச்சினைகளைத் தீர்த்த காலம்போய் “வேணாம்பா,
அவங்களே சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. நாம போனா எங்க கவனிக்கப்போறாங்க” என
ஒதுங்கிப்போகும் நிலைதான் இன்றைய நிலை.
ம.இ.கா. தலைவர்களின் நேரம், உழைப்பு, பணம் என அனைத்தும் குவிமையமாக ஒன்றை
நோக்கியே செலவழிக்கப்படுகின்றன. நாடு முழுதும் உள்ள மாநில,
தொகுதி, கிளைத் தலைவர்கள் பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து
விளக்கக்கூட்டங்கள், ஆதரவுக்கூட்டங்கள், எதிர்ப்புக்கூட்டங்கள், சந்திப்புக் கூட்டங்கள்
எனப் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு பேசிக் களைத்துத் திரும்புகிறார்கள். ‘பொங்கி எழுவோம்’ என வீர முழக்கங்கள் கேட்கத்
தொடங்கிவிட்டன. ஆக்கத்திற்குச் செலவழிக்க வேண்டிய அனைத்தும்,
இன்று நெல்லுக்கு இறைக்கவேண்டிய நீரைப் புல்லுக்கு இறைத்த கதையாக
ஆகிக்கொண்டிருக்கின்றன.
மிக முக்கியமான காலக்கட்டத்தில், நம் இந்திய சமூகம் தொடர்ந்து எல்லாவிதமான இன்னலிலிருந்து மீட்சி
அடைவதற்கான போராட்டத்தில் தொடர்ந்து உரிமைக் குரலெழுப்பிப் போராடிக்கொண்டிருக்கிறது.
ஆனால், நாம் சூழலின் தீவிரத்தன்மை புரியாமல் பிடில்
வாசித்துக் கொண்டிருக்கிறோம்.
எத்தனை இழப்புகள் நமக்கு. கேட்டுப்பெற
வேண்டிய உரிமைகளை இழக்கிறோம். சமூகத்துக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை
இழக்கிறோம். இன்னும் மிச்சமிருக்கிற தன்மானத்தை இழக்கிறோம். ம.இ.கா. என்ற
கட்சியின் மீது இந்திய சமூகம்கொண்ட ஆதரவை இழக்கிறோம். நம் சமூகத்தின், இழப்புகளின் காலமாக மட்டுமே இன்றைய நிலையை என்னால் அவதானிக்க முடிகிறது.
இவற்றுக்கெல்லாம் என்னதான் தீர்வு? செயலாற்றல்மிக்க, நாவன்மைமிக்க, அனைவரையும் அரவணைக்கும் தன்மைமிக்க, பிரச்சினைகள்
வந்தால் விரைந்து தீர்க்கும் புதிய தலைமைத்துவம் ம.இ.காவை வழிநடத்தும் நாள்
எந்நாளோ, அந்நாளே சமூகத்தின் விடிவுக்கு வழிகாட்டும் நாளாக
மலரும். அந்த நாளுக்காகச் சமூகம்
காத்திருக்கிறது.
No comments:
Post a Comment