நம் குரல்

Tuesday, February 3, 2015

வாசிப்பின் ருசி அறிவோம்


 


38ஆம் ஆண்டாகச் சென்னையில் புத்தகக் கண்காட்சி அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இரண்டு வாரங்கள் நடைபெற்ற இக்கண்காட்சியில் பல லட்சம் பேர் வருகை தந்துள்ளார்கள். நான்கு நாள்கள் பொங்கல் விடுமுறை என்பதால் கூட்ட நெரிசலில் கண்காட்சி  திருவிழா இடமாக மாறியது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற இதனில் 6 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். பலதரப்பட்ட மொழி புத்தகங்களுடன் 700 அரங்குகளில் 5 லட்சம் புத்தகங்களுடன் நடைபெற்ற இப்புத்தகக் கண்காட்சிக்கு உள்ளூர், வெளியூர் வெளிமாநில வாசகர்களோடு வெளிநாட்டு வாசகர்களும் வந்துள்ளனர்.

37 ஆண்டுகளுக்கு முன் சாதாரண நிகழ்வாகத் தொடங்கப்பட்ட இப்புத்தகக் கண்காட்சி, அனைவரையும் பிரமிக்க வைப்பதாக வளர்ச்சியடைந்துள்ளது. திமுக ஆட்சியின்போது (2006-2011) அரசின் ஆதரவோடு இது புதிய எழுச்சி பெற்றது. பத்திரிகைகளும் தகவல் ஊடகங்களும் இதனை மிகப்  பெரிய நிகழ்வாக மாற்றுவதில் பெரும் பங்காற்றியுள்ளன. இங்குப் பல கோடி ரூபாய்க்குப் புத்தகங்கள் விற்பனையாகின்றன. இவ்வாண்டு மட்டும் விற்பனை 10 கோடி ரூபாய். வாசிப்பின் ருசி காட்டி வாசகர்களைப் புத்தகங்களை நோக்கி ஈர்ப்பதில் இந்நிகழ்வு வெற்றி பெற்றுள்ளது.

தாங்கள் வாழும் ஊர்களிலேயே  புத்தகங்களை வாங்கிக்கொள்ள முடியும் என்றாலும் இந்தப் புத்தகக் கண்காட்சி மீது ஏன் இத்தனை ஈர்ப்பு? இங்கு வழங்கப்படும் சிறப்புக் கழிவுகளும் ஒரு காரணம் என்றாலும் அதற்கும் அப்பால் ஜனத்திரளில் நுழைந்து புத்தகக் கடைகளை வலம் வந்து புத்தகங்களை வாங்குவதில் தனி இன்பம் இருப்பதாகப் பலரும் உணர்கிறார்கள். அதனால்தான், ஆண்டுதோறும் வருகையாளர் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. மேலும், எல்லாப் பதிப்பகங்களின் புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்க முடியும்.இப்புத்தகக் கண்காட்சியோடு சேர்த்து நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் தொடர் சொற்பொழிவுகள், நூல் அறிமுகங்கள், நடனங்கள், கருத்தாய்வு அமர்வுகள், கலை படைப்புகள் எனப் பயனான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. புத்தகம் வாங்க வருபவர்களை இவை ஈர்த்துக்கொண்டு, எத்தகைய பண்பாட்டுக்கும் பாரம்பரியத்துக்கும் நாம் உரியவர்கள் என்ற பெருமித உணர்வை ஊட்டுகின்றன.  புத்தகக் கண்காட்சியின் நிறைவு நாளில், பதிப்பகத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் 33 நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், குறும்படப் போட்டியில் வெற்றிபெற்ற 100 பேருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.


இத்தகைய புத்தகக் கண்காட்சிக்கான தேவை மலேசியாவில் இருக்கிறதா என எண்ணிப் பார்க்கிறேன். இதே போன்ற புத்தகக் கண்காட்சிகள் மலேசியாவிலும் நடக்கின்றன. ஆனால், எல்லாம் பிற மொழிகளில். இதுவரை பெரிய அளவில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி இங்கு நடத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. உமா, ஜெயபக்தி, காசி புத்தக நிறுவனத்தார்கள் ஆங்காங்கே மாநிலந்தோறும் சிறிய அளவில் நடத்திவருகிறார்கள்.

இங்குப் புத்தகப் பதிப்பாளர்கள் குறைவு. ஆண்டுதோறும் குறைந்த எண்ணிக்கையிலான புத்தகங்களே பதிப்பிக்கப்படுகின்றன. பெரும்பாலும் எழுத்தாளர்கள் சுய முயற்சியில் புத்தகங்களைப் பதிப்பிக்கிறார்கள். பின்னர், யாராவது தலைவர்களை நாடி அவற்றை வெளியிட்டு, அந்த வெளியீட்டு நிகழ்வோடு அந்தப் புத்தகத்துக்கு முடிவுரை எழுதிவிடுகிறார்கள். எழுத்தாளர்கள் வாசகனை நாடிப் போவதோ, அல்லது வாசகன் எழுத்தாளரை நாடி போவதோ இங்கு அபூர்வம் என்றுதான் கூறவேண்டும்.

140 ஆண்டுகால இலக்கிய வரலாற்றைக்கொண்ட இந்த மலேசிய மண்ணில் நம் எழுத்தாளர்களின் படைப்புகளுக்குத் தேவையான புத்தகச் சந்தையை இன்னும் உருவாகவில்லை, அதற்கான எந்தவொரு முயற்சியும் யாராலும் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஒரு புத்தகத்தின்  ஆயிரம் படிகளை விற்பதற்குப் பலர் பல ஆண்டுகளுக்குக் காத்திருக்கிறார்கள்.இதனால் விளைந்த பெரிய இலக்கிய சோகம் என்ன தெரியுமா? பல எழுத்தாளர்களின் அரிய படைப்புகள் ஏடுகளில் முகங்காட்டி அச்சு வாகனம் ஏறாமல் காணாமல் போய்விட்டன.  அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவரும் படைப்புகளை வைத்தே நம் இலக்கிய முகத்தை உருவாக்கிக் கொள்ளும் சூழலில் உள்ளோம். நம் இலக்கிய முன்னோடிகளில் ஒருவராக நாம் கொண்டாடும் கவிதைவேள் கா.பெருமாளின்  ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்துப் படிவங்கள் நூலுருவம் காணாமல் எங்கோ தொலைந்துபோன சோகத்தை யாரிடம் முறையிடுவது? நம் இலக்கிய முன்னோடிகள்’, நம் சிறந்த இலக்கிய ஆளுமைகள் என ஒரு பட்டியலை மட்டும் மாநாடுகளில், கருத்தரங்குகளில் வாசித்தால் போதுமா?

நம் இலக்கிய முயற்சிகளின் மீது ஒரு போலித்திரை மூடியிருப்பதாக நான் உணர்கிறேன். இலக்கியப் போட்டிகள், பரிசளிப்பு விழாக்கள், கருத்தரங்குகள், மாநாடுகள், நூல் வெளியீடுகள் யாவும் பல இயக்கங்களின் ஆண்டுத் திட்டமாக நிறைவேற்றப்படுகின்றன. ஒரு சிறிய வட்டத்தில் அந்த முயற்சிகள் முடங்கிவிடுகின்றன. பத்திரிகைச் செய்தியாக அவற்றை வாசிப்பதோடு வாசகன் தன்னிறைவு அடைகிறான். அவனுக்கும் படைப்புகளுக்குமான உறவு தொடர்பு எல்லைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது.

என்ன செய்வது? பதிப்பாளர்கள்தானே புத்தகங்களை வெளியிட வேண்டும்? என ஒரு தரப்பினர் கேட்கலாம். அவற்றை வாங்குவதற்கு வாசகர்கள் இருந்தால்தானே பதிப்பகங்கள் முன்வரும் என மற்றொரு தரப்பினர் கூறலாம். இந்த விஷயத்தில் சிஷ்யன் தோன்றினால் குரு தோன்றுவான் என்பது எனது கருத்து. புத்தங்களைத் தேடி வாங்கும் வாசகர்களை உருவாக்கினால் எழுத்தாளர்கள் படைப்புகளை நூலாக்குவார்கள். பதிப்பகங்களின் தேவையும் அதிகரிக்கும்.உலகம் முழுதும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் குறித்து அறிந்துகொள்வதில் ஆய்வாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மலேசியத் தமிழ் இலக்கியம் என்றால் ஏதோ ஆழம் இல்லாத இலக்கியம் என்ற அவர்களின் எண்ணத்தைப் பொய்யாக்க வேண்டுமானால் தரமான படைப்புகள் இங்கு வெளிவர வேண்டும். இந்த மண்ணில் நாம் எதிர்நோக்கும் சிக்கல்களும் வாழ்க்கை அவலங்களும் அடைந்த வெற்றிகளும் ஓரளவு நூல்களாக உருவாகியுள்ளன. ஆனால், உலகத் தமிழர்களின் பார்வைக்கு அவற்றைக் கொண்டுபோகும் முயற்சிக்குப் புத்தகக் கண்காட்சிகளே சிறந்த வழியாக இருக்கும்.

இத்தகைய புத்தகக் கண்காட்சியை இங்குத் தொடங்கும் முயற்சி சவால்மிக்கது. பன்னெடுங்கால இலக்கிய வரலாற்றினை உடைய தமிழகத்திலேயே 37 ஆண்டுகளுக்கு முன்புதான் இது சாத்தியமாயிற்று. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் போன்று இங்கும் ஓர் அமைப்பினை ஏற்படுத்த வேண்டும். அரசின் ஆதரவோடு கோலாலம்பூரில் முதல் புத்தகக் கண்காட்சியை நடத்தலாம். தொடங்குக, மற்றவை எளிதே என்பதற்கேற்ப முதல் முயற்சி தொடர் முயற்சியாகி, நாடு முழுமையும் வாசகர்களின் வரவேற்பை எதிர்பார்க்கலாம்.
இந்தப் புத்தகக் கண்காட்சியில்,  எழுத்தாளர்களுடன் நேரடிச் சந்திப்பு,  தொடர் சொற்பொழிவுகள், நூல் அறிமுகங்கள், கருத்தாய்வு அமர்வுகள், கலைப் படைப்புகள் எனப் புத்தகத் திருவிழாவைப் பொருள் பொதிந்த நிகழ்வாக உருவாக்கலாம். தமிழகப் புத்தகப் பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் இந்தக் கண்காட்சியில் பங்குபெற வாய்ப்பினை வழங்கலாம். இதன்வழி மலேசிய வாசகர்கள்,  தமிழகப் புத்தகங்களையும் வாங்கும் வாய்ப்பினைப் பெறுவார்கள். தமிழகத்தில் ஜனவரி மாதம் இக்கண்காட்சி நடத்தப்படுவதால் இங்கு ஜூன் அல்லது டிசம்பர் மாதத்தில், பள்ளி விடுமுறையில் நடத்தலாம். கண்காட்சியில் புத்தகம் வாங்க தமிழகம் நோக்கிப் படையெடுக்கும் வெளிநாட்டு வாசகர்கள் மலேசியாவுக்கும்  வருவார்கள்.

இந்தப் புத்தகக் கண்காட்சியினால் இன்னொரு முக்கியமான நன்மையும் உண்டு. போட்டி நிறைந்த சந்தை உருவாக்கப்பட்டால் தரமிக்க புத்தகங்களை உருவாக்கவேண்டும் என்ற முனைப்பு அனைவருக்கும் ஏற்படும். புத்தகத்தின் உள்ளடகத்திலும் அமைப்பிலும் தரமிக்க புத்தகங்கள் உருவாகும். அணிந்துரை, வாழ்த்துரை, அன்புரை, சிறப்புரை, முன்னுரை, ஆய்வுரை என ஏகப்பட்ட உரைகளால் சிக்கித் திணறும் படைப்புகளைக் காப்பாற்றி உலகத் தரமிக்க படைப்புகளாக மாற்றும் முனைப்புகள் முன்னெடுக்கப்படும். 

புத்தகத்துக்கான சந்தை இல்லாத காரணத்தால் நம் இலக்கிய முயற்சிகள் முழுமைபெறாமல் முடங்கிவிடுகின்றன. இந்நாட்டில் இளையோருக்கான இலக்கியம் இன்னும் வளர்ச்சி பெறாமல் தேங்கியிருக்கிறது. உயர்கல்விவரை பாட நூல்களை மட்டும் படிப்பதோடு வாசிப்பை முடித்துக் கொள்ளும் இளையோரையே தொடர்ந்து உருவாக்கி வருகிறோம். வாசிப்பின் ருசி காட்டி புத்தகங்கள் நோக்கி அவர்களை ஆற்றுப்படுத்த தீவிர முயற்சிகள் தேவை. அதற்கு, புத்தகக் கண்காட்சி போன்ற முயற்சிகள் பெரிதும் துணைசெய்யும்.

மனிதப் படைப்பில் மிக உச்சமானது மொழி. அந்த மொழியில் உருவாகும் புத்தகங்களே மனிதனைச் சிந்திக்கத் தூண்டி அறிவு வளர்ச்சிக்கு வித்திடுகின்றன. அதிகமாக வாசிக்கும் இனத்திலிருந்தே கல்வியாளர்களும் சிந்தனையாளர்களும் அறிவுஜீவிகளும் தோன்றுகிறார்கள். மலேசியத் தமிழர்களின் தொடர் வளர்ச்சிக்கு புத்தகங்கள் மீதான தீராக் காதலும் முக்கியப் பங்காற்ற முடியும்.

2 comments:

 1. இன்றைய எனது பகிர்வும் இதைப்பற்றித் தான்...

  உங்கள் எண்ணங்கள் நிறைவேறட்டும்...

  ReplyDelete
 2. வணக்கம்
  ஐயா
  உண்மைதான் தங்களின் எண்ண உணர்வு வரவேற்க தக்கது.. நானும் பல நாட்கள் இப்படியான நிகழ்வை எதீர்பார்த்து காத்திருக்கேன் செய்யுங்கள் எப்போதும் எனது ஒத்துழைப்பு இருக்கும் ஐயா.

  சில போட்டிகள் நடத்து கிறேன் நிச்சயம் வாருங்கள் எனது இணையப்பக்கம் ஐயா.இதோ வலைத்தள முகவரி
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.-2015...:                                        வணக்கம் வலையுலக உறவுகளே . தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறு...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete