நம் குரல்

Friday, February 20, 2015

அறிக்கைகள் எழுதி இன்புற்று..


   ஒவ்வொரு நாளும் காலைப் பொழுதை ஆர்வத்தோடு தொடங்கவும் சுவைமிகுந்ததாக மாற்றவும் நாளிதழ்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.  மலேசியாவின் மக்கள் தொகையில் நாம் மூன்றாம் இடத்தில் இருந்தாலும் நாளிதழ்கள் எண்ணிக்கையில் முதல் நிலையில் இருக்கிறோம். சிறிய சமூகத்தில் தமிழ் நாளிதழ்களின் எண்ணிக்கை ஏழு என்பது வியப்புக்குரியதாக இருக்கிறது. பிற இனத்தவரோடு ஒப்பிட்டால் நாம் குறைவாகத்தான் வாசிக்கிறோம். இதற்குப் புள்ளி விபரம் தேவையில்லை. நாம் வாழும் சுற்றுச் சூழலை ஆழ்ந்து அவதானித்தாலே போதும்.

      ஏழு தமிழ் நாளிதழ்கள் என்றாலும் அவற்றின் உள்ளடக்கமும் செய்திகளின் வகைமையும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. தமிழ் நாளிதழ்களை  மலாய், ஆங்கில, சீன நாளிதழ்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எத்தனையோ வேறுபாடுகளைக் காணலாம். அவற்றில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அறிக்கைகளைக் கூறலாம். மற்றமொழி நாளிதழ்களில் யாரும் விருப்பம்போல் அறிக்கைகள் வெளியிட முடியாது. அரசியல், சமுதாய இயக்கங்களில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் கருத்துகள் செய்திகளாக இடம்பெறும். தலைவர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையே நிருபர்கள் நின்றுகொண்டு தேவையானவற்றை மட்டும் அளந்து கொடுக்கிறார்கள். அறிக்கைகள் மிக அரிதாகத்தான் வெளிவரும். அதிலும் நீண்ட அறிக்கைகளுக்கு அறவே வாய்ப்பில்லை.  ஒரு சமுதாயச் சிக்கலென்றால் இரு தரப்பின் கருத்துகளுக்கும் இடமளிக்கிறார்கள். வீணான அறிக்கைப் போருக்கு வாய்ப்பில்லை.  

      ஆனால், தமிழ் நாளிதழ்களோ அறிக்கைகளின் சரணாலயமாகத் திகழ்கின்றன. இயக்கங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தொடங்கி, எல்லா நிலைப் பொறுப்பாளர்களும் அவரவர் பங்குக்கு அறிக்கை எழுதுகிறார்கள். ஆதரவு அறிக்கை, கண்டன அறிக்கை, சமூக நலன் அறிக்கை என பல்வேறு ரூபத்தில் அறிக்கைகள் வருகின்றன. சில நாள்களில் செய்திகளின் இடங்களை அவை நிரப்பி விடுகின்றன. சிலர் ஒவ்வொரு நாளும் காலையில் நாளிதழ்களைப் புரட்டிவிட்டு அறிக்கை எழுதத் தொடங்கிவிடுகின்றனர். ஓர் இயக்கத்தின் தலைவரைக் காலை பத்து மணியளவில் அவரின் அலுவலகத்தில் சந்திக்கப் போயிருந்தேன். நாளிதழ்களைப் படித்துவிட்டு அப்பொழுதே அறிக்கை எழுதிக்கொண்டிருந்தார். அறிக்கைப் போரில் தம் இயக்கமும் தாமும் பின்தங்கிவிடக்கூடாது என்ற பதைபதைப்பு பலரிடம் நிலவுவதை உணரமுடிகிறது. இயக்கத்தின் ஆண்டு அறிக்கையில் அறிக்கைகளையும் செயல் திட்டத்தில் இணைத்து விடுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு நாளிதழ்களில் ஒரே அறிக்கை மயமாக உள்ளது. சிலர் அறிக்கை எழுதுவதற்கே இயக்கத்தை ஆரம்பித்தார்களோ எனச் சந்தேகமாக உள்ளது.

      அப்படியென்றால் நாளிதழுக்கு அறிக்கை எழுதுவது தவறா என்று நீங்கள் வினவலாம். ஒரு சமுதாயச் சிக்கலைத் தீர்ப்பதற்குத் தக்க நேரத்தில் அறிக்கைவழி எழுப்பப்படும் குரல்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை என்பதை மறுக்க முடியாது. தமிழ்ச் சமுதாயத்தைப் பொறுத்தமட்டில் அறிக்கைகள் என்பவை பலரும் ஒன்றுகூடி ஒரு பிரச்சினை குறித்துக் கலந்துபேசி கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் களமாக இருக்கின்றன. வாசகர்கள் சுற்றி நின்று கலந்துரையாடலைக் கேட்டுத் தம் எண்ணங்களோடு அவற்றைப் பொருத்திப் பார்க்கிறார்கள். எத்தனையோ முக்கியமான பிரச்சினைகள் நம் சமூகத்தில் எழுந்தபோது எழுதிக் குவிக்கப்பட்ட அறிக்கைகள் அவற்றின் தீர்வுக்கு வழியமைத்துள்ளன என்பதை மறுக்க முடியாது. எடுத்துக்காட்டாக, எஸ்.பி.எம். தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே என்ற பிரச்சினை எழுந்தபோது தேர்வில் 12 பாடங்கள் வேண்டும். தமிழும் இலக்கியமும் பயில வாய்ப்பு வேண்டும் என்று அறிக்கைகள்வழி வைக்கப்பட்ட  கோரிக்கைகள் சிக்கலின் தீர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. மேலும், நாளிதழ்களில் வெளிவரும் அறிக்கைகள்வழி மக்களின் பல சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டதையும் மறுப்பதற்கில்லை.

      நம் சமூகம் தொடர்பான பிரச்சினைகளின் அலசல்கள் மற்ற மொழி ஏடுகளில் குறைவாக வருகின்றன அல்லது அவ்வப்போது ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ளும் அளவில்தான் வருகின்றன. இதன் காரணமாகவும் நமக்குள்ளே விரிவாகப் பேச அறிக்கைகள் பயன்படுகின்றன. அதற்காக, எதற்கெடுத்தாலும் அறிக்கை, எப்பொழுதும் அறிக்கை எனப் பலர் அறிக்கைக் கனவிலேயே இருப்பதுதான் நமக்குள் வருத்தத்தை விதைப்பதாக உள்ளது.

      நாளிதழ்களில் வரும் அறிக்கைகள், அதன் தொடர்பான தரப்பின் பார்வைக்குப் போகிறதா என்பது நாம் இன்னொரு கோணத்தில்  சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். குறிப்பாக, அரசின் பார்வைக்கு ஒவ்வொரு அறிக்கையின்வழி முன்வைக்கப்படும் சிக்கல்கள் போய்ச் சேருகின்றனவா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு அமைச்சிலும் தமிழ் நாளிதழ்களில் வரும் கருத்துகள் மொழிபெயர்க்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா? அதற்காக, தமிழ் தெரிந்த அரசு அதிகாரிகள் எல்லா அரசாங்க இலாகாவிலும் நியமனம் பெற்றுள்ளார்களா? இத்தகைய நியமனத்துக்கான பரிந்துரையை நம்மைப் பிரதிநிதிக்கும் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ளனவா?

      நமக்குள் தீர்த்துக்கொள்ளும் நமக்கான பிரச்சினையெனில் நாம் தமிழில் அறிக்கைகள் எழுதி நாளிதழில் வெளியிடலாம். ஆனால், அரசின் பார்வைக்கு அனுப்பவேண்டுமெனில் தமிழில் மட்டும் எழுதினால் போதுமா? அந்த அறிக்கைகளை நம் தலைவர்கள் படித்துப் புரிந்துகொண்டு நமக்காக சம்பந்தப்பட்ட தரப்பிடம் பேசிப் பிரச்சினையைத் தீர்ப்பார்கள் என எதிர்பார்க்க முடியுமா? தமிழ் தெரியாத தலைவர்கள் பெருகிவரும் சூழலில் எந்த அறிக்கையைப் படித்து அவர்கள் முழுமையாகப் புரிந்துகொள்வார்கள்?  “அறிக்கையெல்லாம் எதுக்குங்க? எஸ்.எம்.எஸே போதும்” என நவீனத்துக்குத் தாவிவிட்ட தலைவர்களிடையே இன்னும் எந்த நம்பிக்கையில் நாம் தமிழில் அறிக்கைகள் எழுதிக் குவிக்கிறோம்?

      எனவே, சிக்கல்களுக்கு விரைந்து தீர்வுகாண தமிழ் நாளிதழ்களுக்கு அறிக்கை  எழுதி அனுப்பியதோடு அதை மலாய்மொழியில் மொழிபெயர்த்து அதன் தொடர்பான தரப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் அறிக்கை எழுதியதன் பலனை எதிர்பார்க்கலாம். இல்லாவிட்டால் நாம்  எழுதிய அறிக்கைகளை நறுக்கியெடுத்துக் கோப்புகளில் அடுக்கி அழகு பார்த்து நம்மை நாமே பாராட்டிக்கொள்வதால் பயனேதும் விளையாது என்பதை உணரவேண்டும்.

      “தமிழில் எழுதினால் போதாதா? மலாய்மொழியில் வேறு எழுதவேண்டுமா?” எனக் கேட்போரின் பார்வைக்குப் பின்வரும் இரண்டு  நிகழ்வுகளை முன்வைக்கிறேன்.


நிகழ்வு 1

      ஈப்போவைச் சேர்ந்த நம் நாடு நாளிதழ் நிருபர் மு.ஈ ரமேஸ்வரியின் கவனத்துக்கு ஆயர் கூனிங் பகுதி மக்கள் ஈக்களால் எதிர்நோக்கும் பிரச்சினை வருகிறது. குடியிருப்பாளர் பகுதிக்கு அருகிலிருக்கும் கோழிப்பண்ணையிலிருந்து பெருக்கெடுக்கும் ஈக்களால் அங்கிருக்கும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர். குறிப்பாக, மழைக்காலங்களில் நிலைமை மோசமாகி அவர்களின் இயல்பு வாழ்க்கையையும், வியாபாரம் மற்றும் உணவகங்களையும் பெரிதும் பாதித்துள்ளது.  “வீட்டில் நிம்மதியாய் உணவு சாப்பிட முடியவில்லை; தண்ணீர் குடிக்க முடியவில்லை, இதற்கு என்றுதான் தீர்வு பிறக்குமோ எனத் தெரியாமல் தவிக்கிறோம்” என்ற அவர்களின் மனக்குமுறலைச் செய்தியாய் வெளியிட்டிருந்தார் மு.ஈ ரமேஸ்வரி.
     


நாளிதழில் செய்தி வந்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்தப் பிரச்சினையை இவரே தாப்பா மாவட்ட சுகாதார இலாகாவின் பார்வைக்குக் கொண்டுபோயிருக்கிறார்.  நாளிதழை வாங்கிப் பார்த்த அதிகாரிகள் “இவ்வளவு மோசமாவா இருக்கு? எங்களுக்கு தெரியாம போச்சே என ஆச்சரியம் காட்டியிருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனையின் பேரில் தாப்பா மாவட்ட கால்நடை இலாகாவின் தலைமை அதிகாரி டாக்டர் சித்தி நோர்சுபாயிடாவைச் சந்தித்து நாளிதழ் செய்தி குறித்த தகவலையும் விளக்கத்தையும் ரமேஸ்வரியே வழங்கினார். விபரங்களைக் கேட்டறிந்த அவர், அது குறித்து பேராக் மாநில கால்நடை இலாகா, மாநில அமலாக்கப்பிரிவு மற்றும் சுகாதார இலாகாவுடன் பேச்சு வார்த்தை நடத்தியபின் ஒரு வாரத்திற்குள் தீர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்குவதாக நம்பிக்கை தெரிவித்தார். எதனால் ஈ அதிகரிப்பு ஏற்படுகிறது என இலாகாக்கள் ஆயிர் கூனிங் பகுதிக்கு சென்று ஓர் உடனடி ஆய்வையும் நடத்தும் எனத் தெரிவித்த அவர் கிடைக்கப்பெறும் ஆய்வின் முடிவின்படி அதன் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார். அதன்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டு ஈக்களின் தொல்லையிலிருந்து மக்கள் விடுபட்டிருக்கின்றனர்.

ஈக்கள் பிரச்சினைக்கே இவ்வளவு முயற்சிகள், ஆய்வுகள் என்றால் மற்றப் பிரச்சினைகளுக்கு என்ன நிலைமை என்ன எண்ணிப் பாருங்கள். செய்தியை எழுதிய நிருபரே அதனை மலாய்மொழியில் கடிதமாய் எழுதிக்கொடுத்துத்தான் இதனை அதிகாரிகளுக்கு விளக்கியிருக்கிறார். அரசு கோப்புகளில் தமிழ் நாளிதழ்ச் செய்தியை நறுக்கி வைக்க முடியாதே! 

நிகழ்வு 2

ரவாங், சூப்பர் மைண்ட் டைனமிக்ஒருங்கிணைப்பாளரும் தன்முனைப்புப் பேச்சாளருமான மு.கணேசன் மற்றும் அவர்தம் குழுவினரின் அயராத  முயற்சியினால் சிலாங்கூர் மாநில நூலகங்களில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் எழுதிய 81 நூல்களை இடம்பெறச் செய்யும் முயற்சி 2013இல்  வெற்றி பெற்றது. நூலக இலாகா நூல்களை விலைகொடுத்துப் பெற்றுக்கொண்டது.  ஆனால், கடந்த ஆண்டு,  9 நூலகங்களுக்கு மட்டும், தலா இரண்டு நூல்களாக 18 நூல்கள் மட்டும் போதும் என அறிவித்தது. நூலக அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் பெரும்பாலான நூலகங்களில் தமிழ் வாசகர்களின் வருகை குறைவு என்பது கண்டறியப்பட்டதாம். இந்த அறிவிப்பு எழுத்தாளர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. ஆனாலும், சூப்பர் மைண்ட் டைனமிக் இயக்கம் திட்டமிட்டுக் காய்களை நகர்த்தியது. இதற்குக் கண்டனம் தெரிவித்து  எழுத்தாளர்களை, சமூக இயக்கங்களை அறிக்கை வெளியிடுமாறு வேண்டுகோள் விடுத்தது. நாளிதழில் பல அறிக்கைகள் வந்தன. சிலர் மலாய் மொழியில் நேரடியாக சிலாங்கூர் மாநில நூலக இலாகாவுக்கு மின்னஞ்சல் வழி முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர். நாளிதழ் அறிக்கைகளை மொழிபெயர்த்ததோடு நாளிதழ் செய்திகளையும் தலையங்கத்தையும் மாநில  மந்திரி பெசாரின் பார்வைக்கு அனுப்பினார் மு.கணேசன்.அதன் பிறகே, மந்திரி பெசாருக்கே இப்படியொரு பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது. உடனே, கல்விப்பகுதிக்குப் பொறுப்பான மாநில ஆட்சிக்குழு உறுப்பினரிடம் “வாங்கும் நூல்களின் எண்ணிக்கை ஏன் குறைக்கப்பட்டது?” என வினவியிருக்கிறார். அவர், “அப்படியா? ஏன் குறைக்கப்பட்டது?” என மாநில நூலக இலாகா இயக்குநரிடம் கேட்க, அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, பினாங்கு போயிருந்த மு.கணேசனை விரைந்து வரச்சொல்லி, கலந்துபேசி, 79 நூல்கள் ( 2 நடமாடும்  நூலகங்கள் செயல்படாததால்) வாங்கும் திட்டத்தைத் தொடர்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இப்பொழுது சிலர் நாளிதழில், பொங்கி எழுவோம் என வீரவசனம் பேசுவதுபோல இந்தப் பிரச்சினையிலும் அறிக்கைகளை எழுதிவிட்டு நம் கடமை முடிந்ததாகச் செயல்பட்டிருந்தால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு பிறந்திருக்குமா?

நம் சமூகத்தில் மட்டும் விவாதிக்கும், பேசித் தீர்க்கும் பிரச்சினையெனில் தமிழில் எழுதுவோம். அவை அரசின் காதுக்கும் எட்டவேண்டிய பிரச்சினையெனில் தமிழில் அறிக்கை எழுதியதோடு அரசின் பேசுமொழியாக இருக்கும் மலாய் மொழியிலும் எழுதி அது தொடர்பான தரப்புக்கு அனுப்புவோம்.

தமிழில் மட்டும்தான் எழுதுவோம் எனச் சிலர் அடம்பிடிக்கலாம். ‘அறிக்கைகள் எழுதி இன்புற்றிருப்பதன்றி வேறொன்றும் அறியார் பராபரமே’ என இவர்களை ஒதுக்கிவிட்டு, பிரச்சினைகளின் முடிச்சவிழ்க்கும் செயல்களில் மற்றவர்கள் முனைப்புக் காட்டவேண்டும். தமிழ் தெரியாத, தமிழ் நாளிதழ்கள் வாசிக்காத தலைவர்களை இனி நம்பிப் பயனில்லை.No comments:

Post a Comment