நம் குரல்

Sunday, February 15, 2015

தங்கமீன் பதிப்பகமும் மலேசிய நூல்களும்



தாம் எழுதிய  படைப்புகளை நூலாக்கிப் பார்ப்பதுதான் எழுத்தாளர் ஒவ்வொருவரின் கனவாக இருக்கிறது. ஆனால், நம் நாட்டில் தமிழ் எழுத்தாளர்களுக்கு அது துன்பக் கனவு போன்றது. படைப்புகளை எழுதி ஏடுகளுக்கு அனுப்பிவிட்டு, அவை அச்சு வாகனத்தில் வருவதைக் காண்பதோடு பலர் மனநிறைவு அடைகிறார்கள். அவற்றை நூலாக்குவதில் உள்ள சிரமத்தை எண்ணிப்பார்த்து அத்தகைய முயற்சிகளில் ஈடுபடாதவர்கள் இங்கு அதிகம். நூலைப் பதிப்பிப்பதோடு வேலை முடிவதில்லை. தொடர்ந்து,  நூல் வெளியீடு, நூல் விற்பனை என இருப்பதால் நமக்கேன் வம்பு எனப் பெரும்பாலோர் நூல் கனவைக் கைவிட்டு ஒதுங்கிவிடுகின்றனர்.

இந்நாட்டில் மலாய் மொழியில் எழுதுவோருக்கு இத்தகைய சிரமங்கள் ஏதும் இல்லை. எழுதுவோடு அவர்கள் கடமை முடிந்து விடுகிறது. அவர்கள் படைப்புகளைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு நூலாக்கி விற்பனை செய்வதை மலாய்மொழி வளர்ச்சிக் கழகம் (டேவான் பகாசா டான் புஸ்தாகா) மேற்கொள்கிறது. சிங்கப்பூரில் தேசியக் கலை மன்றம் (National Art
council) மூலம் தமிழ் எழுத்தாளர்கள் நிதி உதவி பெற்று நூல்களை வெளியிடுகிறார்கள்.

மலேசியாவில் நம் தமிழ் எழுத்தாளர்கள் நூல்களை வெளியிட ஏன் அரசு  உதவுவதில்லை? அதற்கான முயற்சியை நம் அரசியல் கட்சிகளோ, தமிழ் எழுத்தாளர் சங்கமோ இதுவரை மேற்கொண்டதாகத் தகவல் ஏதும் இல்லை. சக்தி அறவாரியம் மூலம், டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன் பிரதமரை அணுகி நிதி உதவிபெற்று, இதுவரை மொத்தம் 15 நூல்களை வெளியிட்டுள்ளார். அந்த முயற்சி, தேர்தல் காலத் திட்டமா  அல்லது தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.



டேவான் பகாசா டான் புஸ்தாகா போன்ற ஒரு மொழி மையத்தை நாம் அமைக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் நூல்களை வெளியிடும் பணி செம்மையாக நடைபெறும் என்ற சிந்தனையை அமரர் முனைவர் கலியபெருமாள் போன்ற மூத்த படைப்பாளிகள் முன்வைத்தனர். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான். அவரவரும் அரசிடம் செயல்திட்ட வரைவைச் சமர்ப்பித்து நிதி பெறுவதில் முனைப்பு காட்டுகிறோமே தவிர, பயன்நல்கும் நிலையான திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக இல்லை. எனவே, நம் எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு இன்னல்கள் அடுத்த நூற்றாண்டுக்கும் தொடரும் எனத் திண்ணமாய் நம்பலாம்.

உமா பதிப்பகம், ஜெயபக்தி, வல்லினம் போன்ற பதிப்பகங்கள் இந்நாட்டு நூல்களை அவ்வப்போது  பதிப்பித்து வருகின்றன. அந்த வரிசையில் சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பகமும் இணைந்துள்ளதை மகிழ்வோடு இங்குப் பதிவு செய்கிறேன். இந்தத் தங்கமீன் பதிப்பகத்தை நடத்தி வருபவர் தமிழகத்தில் பிறந்த பாலு மணிமாறன்.

அவரை இங்கு, அப்பாவி சோழன் என்றால் பலருக்கும் தெரியும். 1990களில் மக்கள் ஓசையில் வாரம் ஒரு சிறுகதை எழுதி பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் இவர். அரும்பு வார ஏட்டில் பி.ஆர்.இராஜனோடு கைகோர்த்துப் பயணித்தவர். அவர் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கி  (எங்கே நீ வெண்ணிலவே?) அந்த நூல் வெளியீட்டை ஆதி.குணனன் தலைமையில் இங்கு வெளியிட்டவர். எம்.ஏ.இளஞ்செல்வனோடு  இலக்கியச் சர்ச்சையிலும் முனைப்பு காட்டியவர். இரண்டு ஆண்டுகள் மலேசியாவில் வாழ்ந்துவிட்டு சிங்கப்பூருக்கு வேலையிட மாற்றலாகிச் சென்றவர்.

இடம் மாறினாலும் இதயம் ஒன்றுதானே? அதிலும் இவரின் மனமோ இலக்கிய மனம். அங்கும் இலக்கியப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். முதலில், தங்கமீன் இணைய இதழைத் தொடங்கினார். அதில், சிங்கப்பூர், மலேசிய இலக்கிய ஆக்கங்களை வெளியிட்டதோடு, அங்குள்ள சமூக, கலை, ஊடக, விளையாட்டுத் துறைகளில் சாதித்துள்ள தமிழர்கள் பற்றிய அரிய தகவல்களைப் பதிவேற்றினார். அது இணைய வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக, 2012ஆம் ஆண்டு தங்கமீன் வாசகர் வட்டத்தைத் தொடங்கினார். விரிவான களத்தில் இலக்கிய நிகழ்வுகளை நடத்தவும் வாசகர்களிடையே சந்திப்பு – கலந்துரையாடல் வழி படைப்பாற்றலை வளர்க்கவும் அது கைகொடுத்தது. சிறுகதைப் போட்டி, கவிதைப்போட்டிகளும் நடத்தித் தேர்வாகும் படைப்புகளை நூலாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். தமிழகப் படைப்பாளரகளை வரவழைத்து இலக்கிய நிகழ்வுகளும் நூல் வெளியீடுகளும் நடத்தினார். இப்பொழுது தங்கமீன் வாசகர் வட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளவர் எம்.சேகர். இவர் நம் நாட்டு பூச்சோங் எம்.சேகர்தான், இப்பொழுது சிங்கப்பூரில் தமிழாசிரியர்.



தங்கமீன் வாசகர் வட்டத்தின் இலக்கியச் செயல்பாடுகளே தங்கமீன் பதிப்பகம் உருவாகக் காரணமாக அமைந்தன. இதன் மூலம் சிங்கப்பூர், மலேசிய படைப்புகளைத் தேர்வுசெய்து நூலாக்கும் பணியில் இறங்கினார் பாலு மணிமாறன். இதுவரை மொத்தம்  30 நூல்கள். அவற்றில் மலேசிய நூல்கள் 11. பீர்.முகம்மது, கோ. புண்ணியவான், கே.பாலமுருகன், ஏ.தேவராஜன், ந.பச்சைபாலன், வாணி ஜெயம், சீ.முத்துசாமி, பெ.சூரியமூர்த்தி, ஆகியோரின் நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

நூல் உருவாக்கத்தில் சிறப்புக் கவனம் செலுத்தித் தரமான வடிவமைப்போடு நூல்களைப் பதிப்பித்து  வருகிறார். இதன் காரணமாகத் தங்கமீன் பதிப்பக நூல்கள் தனிக் கவனத்தைப் பெறுகின்றன. 2013ஆம் ஆண்டில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முஸ்தபா அறக்கட்டளையின் கரிகாற்சோழன் விருதை வென்ற மலேசியா, சிங்கப்பூரின் இரண்டு சிறந்த நூல்களும் இவரின் பதிப்பித்ததாகும்.

சிங்கப்பூரைத் தவிர்த்துத் தமிழக மண்ணியிலும் தாம் பதிப்பிக்கும் நூல்களை அறிமுகப்படுத்தி வருகிறார் பாலு மணிமாறன். அண்மையில் நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் சிங்கப்பூரின்  பெண் எழுத்தாளர்களான கமலாதேவி அரவிந்தன், நூர்ஜஹான் சுலைமான், சூரிய ரத்னா, ரம்யா ரமேஸ்வரன் ஆகிய நால்வரின் ஆறு நூல்களின் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வில் கல்கி ஆசிரியர் வெங்கடேஷ், பாடலாசிரியர் நா.முத்துகுமார் ஆகியோர் கலந்துகொண்டு தங்கமீன் முயற்சியைப் பாராட்டினர்.

சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்ற காலத்தில் சென்னையில் மலேசியப் படைப்பாளரிகளின் மூன்று நூல்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வையும் பாலு மணிமாறன் தனியாக ஏற்பாடு செய்தார். சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் (நாவல்கள்), பந்திங் சூரியமூர்த்தியின் பெட்டி வீடு (கவிதைகள்), நான் எழுதிய இன்னும் மிச்சமிருக்கிறது (கவிதைகள்) ஆகிய நூல்களே அவையாகும். அந்நிகழ்வில் கலந்துகொண்டு சீ.முத்துசாமியின் நாவல்களை ஆய்வுசெய்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, தமிழக எழுத்தாளர்களுக்கு நிகரான படைப்பாளியாக சீ.முத்துசாமி திகழ்வதை வியந்து பாராட்டினார்.

தங்கமீன் பதிப்பகம் வழி, நம் மலேசிய நூல்கள் சிங்கப்பூர், தமிழகம் ஆகிய இடங்களில் வாசகரிடையே அறிமுகமாவது நம் இலக்கியத்தை பரந்த வாசகத் தளத்துக்கு அழைத்துச் செல்லும் சிறந்த முயற்சியாகும். பீர்.முகம்மது, ஜாசின் தேவராஜன், கே.பாலமுருகன் ஆகியோரை அழைத்துச் சிங்கப்பூரில் அவர்களின் நூல் வெளியீடுகளை நடத்தியுள்ளார் பாலு மணிமாறன்.


சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைப்பது கற்களாலும் சிமெண்டாலும் கட்டப்பட்ட ஜோகூர் பாலம். அதுமட்டுமல்ல. இன்னொரு பாலமும் உண்டு. அஃது இலக்கியப் பாலம். இரு நாடுகளுக்கிடையே அத்தகைய இலக்கியப் பால நிர்மாணிப்பில் தங்கமீன் பதிப்பகமும் பாலு மணிமாறனும்  முனைப்பு காட்டி வருவது பாராட்டுக்குரியது.

இந்த ஆண்டு மேலும் பல தரமான மலேசிய நூல்களை வெளியிட தங்கமீன் பதிப்பகம் விரும்புகிறது. தரமான  படைப்புகள் தங்களிடம் இருப்பதாக நினைப்பவர்கள் பாலு மனிமாறனோடு தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்  +6582793770  (thangameen@hotmail.com)



2 comments:

  1. வணக்கம்
    ஐயா
    உணர்வின் வெளிப்பாடு செம்மையான வரியாக பிறந்துள்ளது தாங்கள் சொல்வது 100 வீதம் உண்மைதான்... பகிர்வுக்கு நன்றி ஐயா..தாங்கள் சொல்லிய
    பீ முகம்மது .கோ. புண்ணியவான் ஆகியோர் என்னிடம் தொடர்பில் உள்ளவர்கள்.. மற்றவர்களை தெரியாது.. காலம் கடக்கும் போது பார்க்கலாம்.

    இப்போது உள்ள எழுத்தாளர்களை ஒன்று கூட்டி ஒரு இலக்கிய சந்திப்பு சந்திக்கலாம். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்.. அதன் பின்பு படிப்படியாக வளரும் என்பதை கூறுகிறேன்..கடின உழைப்பு இலகுவான வெற்றி...
    நான் இருப்பது...
    IPOH.PERAK...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-



    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-


    ReplyDelete
    Replies
    1. கட்டுரை குறித்த தங்களின் கருத்துக்கு நன்றி ரூபன். தங்களின் ஆலோசனை சிந்திக்கவேண்டிய ஒன்று.

      அன்புடன்
      ந.பச்சைபாலன்

      Delete