நம் நாட்டில் நாளிதழ்களும் வார, மாத
ஏடுகளும் எழுத்தாளர் இயக்கங்களும் நீண்ட காலமாக இலக்கியத்தை வளர்க்கும் பணியைச்
செய்து வருகின்றன. நாவல், மரபுக் கவிதை, புதுக்கவிதை, சிறுகதை,
கட்டுரை என எல்லா இலக்கிய வடிவங்களின் வளர்ச்சியும் அவற்றைச் சார்ந்தே அமைந்துள்ளது.
140 ஆண்டுகளாக நம் மலேசியத் தமிழ் இலக்கியம் ‘ஞாயிற்றுக்கிழமை
இலக்கியமாக’ ஒரு வட்டத்தில் உழன்று வருவதை யாரும் மறுக்க
முடியாது. ஒரு தொடர்கதை, ஒரு சிறுகதை,
சில கவிதைகள் என ஞாயிறு இதழ்கள் தம் இலக்கியப் பணிக்கு எல்லை வகுத்துச்
செயல்படுகின்றன. எனவே, இலக்கியத்தின் தீவிர நகர்வுக்குச்
சிற்றிதழ் தேவை என்ற எண்ணம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் படைப்பாளிகளிடம் எழுந்தது.
மலேசியத் தமிழரும் தமிழும் எனும் நூலில், முனைவர் முரசு
நெடுமாறன், மலேசியாவில்
நடந்த சிற்றிதழ் முயற்சிகளைப் பதிவு செய்துள்ளார். 1941இல் போர் நடந்த காலத்தில் வெளிவந்த தமிழ்கொடி,
46க்குப் பிந்திய இலக்கிய இதழ்களில்
கா.இராமநாதனையும் பின்னர் தி.சு.சண்முகத்தையும் ஆசிரியராகக்
கொண்டு வெளிவந்த 'சோலை' திங்களிதழ், 1954 முதல் 1956வரை எழுத்தாளர் மா.செ மாயதேவன் மூலம்
கையெழுத்து இதழாகத் தொடங்கிப்
பின்னர் அச்சு இதழாக வந்த 'திருமுகம்',
கரு.இராமநாதனை ஆசிரியராகக் கொண்டு
ஈப்போவிலிருந்து 1956இல் வெளிவந்த 'மலைமகள்' போன்றவை குறிப்பிடத்தக்கவை.
சுதந்திரத்துக்குப் பிறகு, 1958இல் வெளிவந்த 'நவரசம்', 1965இல் கருத்து மோதல்களுக்கு
வாய்ப்பளித்த 'பொன்னி', 1999இல்
மா.இராமையா அவர்கள் வெளியிட்ட 'இலக்கியக்குரிசில்' என இலக்கியம் சார்ந்த இதழியல் முயற்சிகளைப் பட்டியலிடலாம். இவ்விதழ்களில் சில மட்டுமே இன்று வாசிப்புக்குக் கிடைக்கின்றன. மற்றவை
இதற்கு முந்தைய ஆய்வாளர்களுக்குக் கிடைத்த தகவல் அடிப்படையில் உள்ளவையே. வாசிக்கக் கிடைத்த இவ்விதழ் அனைத்துமே அவ்வப்போதைய இலக்கியப் படைப்புகளைப்
பிரசுரிக்க முனைப்புக் காட்டின.
சிற்றிதழ் என்றால் என்ன? நம் இலக்கியச் சூழலில் இதன்
தேவை என்ன? நம் நாட்டில் நாள், வார, மாத ஏடுகளும், எழுத்தாளர் இயங்கங்களும் நீண்ட
காலமாக இலக்கியத்தை வளர்க்கும் பணியைத்தானே செய்து வருகின்றன? இதற்குத் தனியாக ஒரு களம் தேவையா? என்று நீங்கள்
கேட்கலாம். அதிகார பலமும் பொருளாதார பலமும் இல்லாதவர்களின் வெளிப்பாடாகவும், குரல் நசுக்கப்பட்டவர்கள் தங்கள் குரலை வெளிப்படுத்தும் ஊடகமாகவும், வாசகனைக் கவர்வதற்காக சமரசம் செய்துகொள்ளாமலும்,
மாற்றுச் சிந்தனையை முன்வைத்தும், வண்ணங்களுக்கு
முக்கியத்துவம் தராமல் குறைவான அச்சுத் தரத்தோடும் வெளிவரும் இதழ்களாகச்
சிற்றிதழ்களை அடையாளங் காணலாம். ஆனால், இன்று இந்த
அளவுகோல்களில் சிலவற்றில் தொழில்நுட்ப வசதிகள்
மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
நாளிதழ்களிலும்
வார, மாத ஏடுகளிலும் இலக்கியத்துக்கான பக்கங்கள்
குறைவு. அவை, அவ்வப்போது படைப்புகளை வெளியிட்டும் போட்டிகள்
நடத்திப் பரிசுகள் வழங்கி வந்தாலும் தொடர்ச்சியான இலக்கியச் சிந்தனைக்கும்
விவாதத்துக்கும் அவற்றில் வாய்ப்புகள் குறைவு. இந்த எதிர்பார்ப்புகளை
நிறைவேற்றிக்கொள்ள சாத்தியமில்லை. எனவே, சிற்றிதழ்களே அந்தப்
பணிகளை முன்னெடுக்க முடியும். ஆக்கப்பூர்வமான இலக்கிய விவாதங்களை முன் வைக்க, புதிய படைப்பு முயற்சிகளை ஊக்குவிக்க, காய்தல்
உவத்தல் இல்லாமல் விமர்சனங்களை வரவேற்க, நவீன இலக்கியத்தை
வாசகனுக்கு அறிமுகப்படுத்த, உலக இலக்கியத்திலும் தமிழ்
இலக்கியப் பரப்பிலும் நிகழ்ந்துவரும் மாற்றங்களை அறிவிக்க சிற்றிதழ்கள் பங்காற்ற
முடியும்.
அதோடு
நம் கலை, இலக்கியச் சாதனைகளை,
சறுக்கல்களை ஒளிவு மறைவின்றி ஒப்புக்கொள்ள, வாசகர்
கடிதங்களோடு நின்றுவிடுகின்ற வாசகனைத் தீவிர
இலக்கியத்துக்கு ஆற்றுப்படுத்த, கட்சி – அணி
பேதமின்றி பொதுவெளியில் எழுத்தாளர்களை – வாசகர்களை ஒருங்கிணைக்க நமக்குச்
சிற்றிதழ்கள் தேவைப்படுகின்றன. சிறந்த இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம், மொழிபெயர்ப்புப் படைப்புகள், நேர்காணல்கள், இலக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான பதிவுகள்,
புதிய நூல்கள் பற்றிய அறிமுகங்கள் எனச் சிற்றிதழ்கள் பரவலான தளத்தில்
செயல்படமுடியும்.
1976ஆம்
ஆண்டு ‘Dewan Sastera’ என்ற தீவிர இலக்கிய இதழ்
வெளிவந்த பிறகு, மலாய் இலக்கிய உலகம் புதிய உத்வேகத்தைப்
பெற்றது எனலாம். அங்கு எழுதுவோர் எண்ணிக்கையும் உயர்ந்தது. தீவிர இலக்கியத்தின்
மீது நாட்டம் கொண்டோரும் அதிகரித்தனர். நூல்களுக்கான விற்பனைச் சந்தையும் விரிவடைந்தது. மலாய் இலக்கியம், நாளிதழ்களையும்
வார, மாத ஏடுகளையும் மட்டும் நம்பியிருந்தால் இன்றைய
வளர்ச்சியை அடைந்திருக்க முடியாது.
தமிழகத்தில்
தீவிர இலக்கியம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் சிற்றிதழ்களைத்தான் நாடவேண்டும்.
2004இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழகத்துக்கு மேற்கொண்ட இலக்கியப்
பயணத்தில் நானும் இணைந்திருந்தேன். அங்குப் போய்ச் சேர்ந்தவுடன் முனைவர் ரெ. கார்த்திகேசு என்னைத் தியாகராய நகரிலுள் புக்லேண்ட் கடைக்கு அழைத்துச்
சென்றார். அதுவரை கேட்டறியாத இருபதுக்கும் குறையாத சிற்றிதழ்கள் அங்கிருக்கக்
கண்டேன். நமக்கு நன்கு அறிமுகமான காலச்சுவடு, தீராநதி, புதிய பார்வை ஆகிய இதழ்களைத் தவிர்த்து புது எழுத்து, அட்சரம், வனம், மாற்று, புது விசை, படித்துறை, ரசனை, உயிர்மை, இனிய
நந்தவனம் என நிறைய இதழ்கள் வெளிவருகின்றன. சிற்றிதழுக்கான தீவிரம் சில
இதழ்களில் இல்லாவிட்டாலும் புதிய இலக்கில் இலக்கியம் பற்றிப் பேசும் இதழ்களாக அவை
இருந்தன.
அத்தகைய
சிற்றிதழ் முயற்சி நம் நாட்டில் வெற்றிபெறவில்லையே என எண்ணிப் பார்க்கையில்
ஏமாற்றம்தான் அப்பொழுது எழுந்தது. தமிழகத்தின் முக்கிய நகர்களில் நடைபெற்ற
இலக்கியச் சந்திப்புகளில் “உங்கள் நாட்டில் சிற்றிதழ் உண்டா?” எனக் கேள்வி எழுந்தபோது “இல்லை” என்ற பதிலைத்தான் தந்தோம். நம்
இலக்கியத்தை மற்ற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தும் பணியில் சிற்றிதழின்
முக்கியத்துவத்தை உணர முடிந்தது. அதன் விளைவாக, மறு ஆண்டில்
முனைவர் ரெ.காவோடு இணைந்து ‘முகம்’ (டிசம்பர், 2005) எனும் சிற்றிதழைப் பெரும் போராட்டத்தோடு கொண்டு வந்தேன். எம்.ஏ.இளஞ்செல்வனின்
இலக்கியப் பங்களிப்புப் பற்றிய கட்டுரைகள் அதில் பெற்றன. அவற்றை முனைவர் ரெ.கா.
எழுதினார். சிற்றிதழை வெளியிடும் கனவு இனிமையானது. ஆனால்,
செயல்படுத்துவது எவ்வளவு கடினமானது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். ஓர் இதழோடு
போதிய ஆதரவின்றி அந்தக் கனவு முயற்சியைக் கைவிட்டேன்.
தீவிரத்தன்மையோடு இயங்கும் சிற்றிதழ்களைத் இங்குத் தமிழில்
வெளியிடும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். அவர்களில் சீ.அருண், வழக்கறிஞர் பசுபதி, ம.நவீன்,
கே.பாலமுருகன், ஏ.தேவராஜன் ஆகியோரின் முயற்சிகள்
முக்கியமானவை. மலேசியாவின் முதல் இதழாக செம்பருத்தியைக் குறிப்பிட வேண்டும்.
எழுத்தாளர் மா.சண்முகசிவா அவர்களின் தூண்டுதலால் வழக்கறிஞர் பசுபதி அவர்கள்
தொடங்கிய இவ்விதழ் முற்றிலுமாக
அதிகாரத்துக்கு எதிரான குரலை அதில் வெளிவந்த இலக்கியங்கள், கட்டுரை, சிறுகதை
மூலமாகப் பதிவு செய்தது. சிற்றிதழ் சூழலில் அனுபவம் கொண்ட இலங்கைத் தமிழரான கணபதி
கணேசனை ஆசிரியராக கொண்டு நடத்தப்பட்ட காலத்தில் (1998) அவ்விதழ் மிகவும் தீவிரமாக
இடதுசாரி சிந்தனையில் செயல்பட்டது. மேலும் சிற்றிதழுக்கே உரிய காத்திரத்துடன் ஓர்
இயக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதில் இலக்கியத்துக்கான
முக்கியத்துவம் மிகக்குறைந்த அளவே இருந்தது. மேலும் பரீட்சார்த்தமான இலக்கிய
முயற்சிகள் அதில் நடைபெறவில்லை.
கவிஞர்
சீ.அருண் ‘அருவி’ (1998 – 2001) இதழை வெளியிட்டார். மொத்தம் 11 இதழ்கள் வெளிவந்தன. வெளிநாட்டுப்
பொறுப்பாளர்களாகச் சிலரை நியமித்து வெளிநாடுகளுக்கும் இதழ்களை அனுப்பினார்.
வெளிநாட்டுப் படைப்புகளையும் இதழில் இடம்பெறச் செய்தார். புதுக்கவிதைகளோடு
மரபுக்கவிதைகளையும் வெளியிட்டார்.
அதிகமாகப் புதுக்கவிதைகளை இடம்பெறச் செய்து படைப்பாளர்களின் சுதந்திரமான
கற்பனைக்குக் களம் அமைத்துக் கொடுத்தார்.
புதுக்கவிதையை
நவீன கவிதையாக வளர்த்தெடுப்பதில் மிக முக்கியப் பங்கினை ‘மௌனம்’ கவிதை
இதழ்வழி ஜாசின் ஏ.தேவராஜன் மேற்கொண்டார். 2009இல் தேவராஜன் முயற்சியில் 15 இதழ்கள்
வெளிவந்தன. படைப்பிலக்கியத்திலும் கவிதை வளர்ச்சியிலும் தீராத காதல் கொண்ட
தேவராஜனின் தனிப்பட்ட முயற்சியில் இந்த இதழ் வெளிவந்தது. பொருளாதார அழுத்தத்தையும்
தாங்கிக்கொண்டு பலரையும் தொடர்புகொண்டு கவிதைகளைப் போராடிப் பெற்று மிக
நேர்த்தியான பக்க அமைப்போடு இவர் மௌனைத்தை வெளியிட்டு வந்தார். மூத்த
படைப்பாளிகளோடு பல புதியவர்களுக்கும் ‘மௌனம்’ களம் அமைத்துக் கொடுத்தது. எழுத்தாளர் தினச் சிறப்பிதழாக 168 பக்கங்களில்
(ஜூன் - ஆகஸ்ட் 2009) கவிஞர்களைப் பற்றிய குறிப்புகளையும் இணைத்து வெளியிட்டது
இதுவரை யாரும் மேற்கொள்ளாத ஒரு முயற்சியாகும்.
ஒவ்வோர்
இதழிலும் வரும் கவிதைகளைப் பற்றிய விமர்சனத்தை மறு இதழிலேயே வெளியிட்டுப்
படைப்பாளர்களிடம் படைப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்ததும் சிறந்த
அணுகுமுறையாகும். மௌனத்துக்கு எழுதத்தொடங்கி தங்கள் கவிதைமொழியில் புதிய தடத்தைக்
கண்ட படைப்பாளிகளை காணமுடிகிறது. மௌனத்துக்கான கவிதை எதிர்பார்ப்பைப் புரிந்து, புதிய கவிதைமொழியில் எழுதத் தொடங்கிய படைப்பாளிகளும் உண்டு. புதிய
படைப்பாளிகளை உருவாக்கும் முயற்சியில், கவிதைமீது ஆர்வத்தை
ஏற்படுத்தும் முயற்சியில் கருத்தரங்குகளும் பயிலரங்குகளும் அடைய முயன்றதை ‘மௌனம்’ இதழ்
மௌனமாகச் சாதித்துக் காட்டியது.
ம.நவீனின்
சிற்றிதழ் முயற்சிகள் முக்கியமானவை. காதல், வல்லினம், பறை எனப் பல இதழ்களில் தன் பங்களிப்பை வழங்கி வருகிறார். ‘காதல்’ மொத்தம் 10 இதழ்கள் (2005
முதல் 2006) வெளிவந்தன. ‘நவீன இலக்கியத்தை நோக்கி’ என்ற இலக்கோடு நேர்த்தியான
படைப்புகளோடும் பக்க அமைப்போடும் ‘காதல்’ வெளிவந்தது.
முதல் முறையாக,
தீவிர இலக்கியம் குறித்து விரிவான தளத்தில் விவாதங்களும்
படைப்புகளும் முன் வைக்கப்பட்டன. இலக்கியம் என்பது ஞாயிற்றுக்கிழமைகளில் நாளிதழில்
இடம்பெறும் ஒரு பகுதி என்ற நிலை மாறி இலக்கியத்துக்கான ஓர் ஆடுகளத்தை ‘காதல்’ ஏற்படுத்தியது.
முதல் முறையாக பல படைப்பாளிகளின் ஆளுமைகள் விரிவாக இதனில் இடம்பெற்றன. நவீன
இலக்கியச் சிந்தனை இந்நாட்டில் வளர, இலக்கிய ஆளுமைகளை இங்கு
வரவழைக்கும் முயற்சியில் ‘காதல்’ இறங்கியது.
‘காதல்’ இதழ் நின்றுபோனதும் அதுபோன்ற முயற்சியில்
தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்ற உந்துதலில் ம.நவீன் தம் நண்பர்களின் துணையுடன் ‘வல்லினம்’ இதழை 2007 முதல் வெளியிட்டார். இலக்கியச்
சிற்றிதழுக்கான ஒரு தளம் ‘காதல்’ இதழில்
அமைந்து விட்டதால் அதே தீவிரத்தன்மையோடும் காத்திரத்தோடும் வல்லினம் வெளிவந்தது
மீண்டும் பொருளாதாரச் சிக்கல் எழுந்ததால் வல்லினம் 9ஆவது இதழ் முதல் (செப்டம்பர்
2009) இணைய இதழாக வெளிவருகிறது. அச்சு வாகனத்தில் இல்லாத ஒரு வாய்ப்பு இணைய
வாகனத்தில் வல்லினத்திற்கு அமைந்தது. மலேசிய படைப்புகளை உலகளாவிய நிலையில் பல்வேறு
நாடுகளில் வாழும் தமிழ்ப்
படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் விமர்சனர்களுக்கும் கொண்டு செல்லும் முயற்சி
இதன்வழி வெற்றி பெற்றிருக்கிறது. வல்லினத்தில் வெளிவரும் படைப்புகள் நூலாக்கம்
பெற்றுள்ளன.
தற்பொழுது, வல்லினத்தின் வெளியீடாக, ‘பறை’ ஆய்விதழ் (2014) வெளிவருகிறது. குறிப்பிட்ட ஒரு
தலைப்பை ஒட்டி பல்வேறு நோக்கிலிருந்து பார்வையைக் குவித்து அதை ஆய்விதழாகப் பிரசுரமாக்கிப் புதிய
வாசிப்புக்களத்தை வல்லினம் குழுவினர் மலேசிய இலக்கிய உலகுக்கு வழங்கியுள்ளது
குறிப்பிடத்தக்கது. காலத்துக்கு ஏற்ற மாற்றமாகவே இதைக் கருத முடிகிறது.
அடுத்து, கே.பாலமுருகனின் முயற்சியில் ‘அநங்கம்’ (மேகம்
என்று பொருள்) சிற்றிதழ் ஜூன் 2008 தொடங்கி ஏழு இதழ்கள் வெளிவந்தன. மலேசியத் தீவிர எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இணைப்பது
என்ற இலக்கோடு இந்த இதழ் பயணத்தைத் தொடங்கியது. நவீன இலக்கியச் சிந்தனையைக் கொண்ட
படைப்புகளை (கவிதை,
விமர்சனம், நேர்காணல், சிறுகதை, கட்டுரை)
வெளியிட்டது. அநங்கம் சிறுகதைச் சிறப்பிதழ் குறிப்பிடத்தக்கது. இதன் 8ஆவது இதழ் ‘பறை’ என்ற
பெயர் மாற்றம் பெற்று ஓர் இதழ் மட்டும் வந்தது. தற்பொழுது ‘களம்’ இலக்கிய இதழை (பிப்ரவரி,
2015 முதல்) அ.பாண்டியன், தினகரன் ஆகியோருடன் இணைந்து
வெளியிடுகிறார். தீவிர இலக்கியம் நோக்கி வாசகனை ஆற்றுப்படுத்த, முதலில் இலக்கியம் மீதான ஆர்வத்தையும் இரசனையையும் ஏற்படுத்தும் நடுநிலை
முயற்சியாக ‘களம்’ திகழ்கிறது.
‘ஞாயிற்றுக்கிழமை இலக்கியம்’ என்ற சூழலில் தேங்கியிருந்த நம் இலக்கியம் 2000ஆம் ஆண்டிலிருந்து
சிற்றிதழ்களின் வருகையால் புதிய நம்பிக்கையைத் தரும் வகையில் மாற்றங்கண்டு
வருகிறது. ஆனால், பொருளாதாரச் சிக்கலால் ஒவ்வொரு
காலக்கட்டத்திலும் வெளிவரும் சிற்றிதழ்கள் நின்றுபோகின்றன. ‘பறை’ இதழ்போல் திட்டமிட்டுச் செயல்படுத்தினால் பரந்த வாசகர் தளத்தை எல்லாச்
சிற்றிதழ்களும் ஏற்படுத்த முடியும். ‘களம்’ முதல் இதழிலேயே தன் எல்லையை எட்டியுள்ளது.
“எது உங்கள் இலக்கிய முகம்?” என்று வெளிநாட்டினர் கேட்டால் நாம் எதைக் காட்டப் போகிறோம்?
‘முகம்’ அறிமுக இதழில்
நான் எழுதிய இந்த வரிகளே நினைவுக்கு வருகின்றன: ‘இந்த ‘முகம்’ முகமூடி இல்லாமல்,
அரிதாரம் பூசி நடிப்பு காட்டாமல் உள்ளதை உள்ளவாறு காட்ட வருகிறது. எழுத்து
பொழுதுபோக்காய், விலை குறைந்த மலிவுச் சரக்காய்
உலவிக்கொண்டிருக்கும் மனிதச் சந்தையில், எழுத்து குறித்த
நம்பிக்கையை, அதன் மீது உயர்ந்த மதிப்பை இளையோர்
நெஞ்சங்களில் எழுதிட இந்த ‘முகம்’
வருகிறது.’
நம் உண்மையான இலக்கிய முகத்தைக் காட்ட, சிற்றிதழ்கள் கடும் உழைப்பில் உருவாகிக் காத்திருக்கின்றன. அவற்றை
அரவணைப்பது இலக்கியத்தை நேசிக்கும் உண்மை வாசகர்களின் முக்கியக் கடமையாகும்.
செய்வோமா?
வணக்கம்
ReplyDeleteதாங்கள் சொல்வது போல... சிற்றிதழ்கள் பல வெளிவந்த வண்ணம் உள்ளது... படிப்பது குறைவு... எல்லோரும் வேண்டி படிப்பார்கள் என்றால் ஒரு பரிணாம வளச்சி அடையும் என்பதில் ஐமில்லை..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-