நம் குரல்

Friday, July 15, 2011

பை நிறையக் காரணங்கள்


தங்கும் விடுதியில்
அதிகாலை நேரத்தில்
போலீஸாரின் அதிரடிச் சோதனையில்
மாட்டிக்கொண்டு விழிக்கும்
காதலர்கள்போல்

இடத்துக்கும் நேரத்துக்கும்
தகுந்தாற்போல்
அறிக்கைகளால் சமாளிக்கும்
அரசியல்வாதியைப்போல்

உதவி தேடிவருவோருக்கு
தகுந்தாற்போல்
முகம்பார்த்துப் பரிகாரம் சொல்லும்
குருவைப்போல்

இன அழிப்புப் போருக்கான
தன் வாதங்களை
பக்கம் பக்கமான அறிக்கைகளால்
உலகஅரங்கில் வைக்கும்
கொடுங்கோலன்போல்

தம் பிள்ளைகளைத்
தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாமல்
ஏடுகளின் ஆசிரியர்களாக
எழுதிக்குவிக்கும் எழுத்தாளர்களாக
இயக்கங்களின் பொறுப்பாளர்களாக
போதையூட்டும் கருத்தால்
தமிழ் இனத்தின் பெருமை பேசும்
தலைவர்கள்போல்

வாங்கிய கடனை
திருப்பிச் செலுத்தாமல்
வகையாய்க் காரணங்களால்
காலத்தை நீட்டிக்கும்
கடன்பட்டும் கலங்கா
நெஞ்சினர்போல்

பேருந்துக் கட்டணம்
தந்து உதவினால்
ஊர்போய்ச் சேர்வதாக
போதையோடு கைநீட்டி
வழிமறிக்கும் இளைஞனைப்போல்

எப்போதும்
கால்சட்டைப்பை நிறைய
காரணங்களை வைத்துக்கொண்டு
திரிகிறார்கள்
தப்பு செய்யும் மாணவர்கள்

சவப் பரிசோதனை அறிக்கை


தகவல் வந்ததும்
அந்தப் சவப் பரிசோதனைக்குப்
பிரியத்துடன் இணங்கினேன்

இறந்தவர் எனக்குத் தெரிந்த
இலக்கியவாதி என்பதால்
அவரைப் பற்றி இன்னும் அறிய
ஆவல் எழுந்தது

வழக்கம்போல் பணியாளர்கள்
உடன் இணைய
அவரை நெருங்கினேன்
‘நிர்வாண நிஜம்’ அவர் எழுதிய சிறுகதை
நினைவில் மோதியது

ஒவ்வோர் அங்கமாக அறுத்துப் பார்த்தேன்
முதுமையின் நட்டக்கணக்கு பல்லைக் காட்டியது

“நெம்புகோலாய் உலகையே
என் எழுத்தால் புரட்டிப் போடுவேன்”
மேடையில் புரட்சி பேசிய உதடுகள் உறைந்திருந்தன

மற்றவரை மட்டம் தட்டி
மற்றவர் பெயரில் படைப்புகள் எழுதி
பரிசுகள் அள்ளிய
அவரின் அற்புதக் கைகள் அடக்கமாயிருந்தன


அங்கீகாரமில்லையே என
நொந்து நொந்து வயிற்றெரிச்சலால்
வயிற்றுக்கடுப்புக்குள்ளாகி
அமிலங்களின் பிரவாகத்தால்
சமன்நிலை சீர்குலைந்து
நோய் முகாமிட்டு வென்றதற்கு
ஆதாரங்கள் கிடைத்தன
குறித்துக்கொண்டேன்

இருந்தாலும் இதயத்தையும்
அறுத்துப் பார்க்க ஆவல் மிகுந்தது
நெஞ்சக்கூடு எலும்புகளை விலக்கி
ஆழமாகக் கத்தியைச் செருகி
இதயத்தை மட்டும் தனியே எடுத்துச் சோதித்தேன்

இதயத்தின் இரத்த நாளங்கள் நெடுக
இலக்கிய மோசடிகளாலும் பொய்யாலும்
நனைந்த குருதியின்
பயணம் தடுக்கும் அடைப்புகள் கண்டேன்

அறுத்துப்போட்டதைத் தைப்பதற்கு
ஆள்கள் தயார்
நான் கையுறை கழற்றி
அறிக்கை எழுதி
ஏமாற்றத்துடன் வெளிவந்தேன்

அமைதிப் பேரணிக்கு முன்னும் பின்னும்


அமைதிப் பேரணிக்கு முன்:

சாலையை அடைத்துக்கொண்டு
புகைகக்கிப் பறக்கும்
வாகனங்களின் இடுக்குகளில்
மனிதக் கால்கள் பதியும் சாலை நெடுகிலும்
பேரங்காடி, பேருந்து - இரயில் நிலையங்களில்
உணவகங்களில் ஓயாது அசையும் உதடுகளில்
ஏடுகளின் முதல் பக்கங்களில்
எங்கும் நீக்கமறக் நிறைந்து
வழிந்துகொண்டிருந்தன

மிரட்டல்கள்
கண்டன அறிக்கைகள்
பயமுறுத்தும் குறுஞ்செய்திகள்
பீதி கிளப்பும் புரளிகள்
பிடிவாதங்கள்
போலீஸ் புகார்கள்
சட்ட நுணுக்கங்கள்
ஊகங்கள்
எதிர்பார்ப்புகள்
வேடிக்கை விரும்பிய இதயங்கள்
நீதிமன்றத் தடைகள்
எக்காளக் குரல்கள்

அமைதிப் பேரணிக்குப் பின்:

வெறிச்சோடிய சாலைகளில்
அங்கங்கே சிதறிக்கிடந்தன
காலணிகள்

கனிமநீர் பாட்டில்கள்
நெகிழிப்பைகள்
காகிதக் குப்பைகள்
உடைந்த பொருள்கள்

சுதந்திரமாய்
வண்ணங்களில் நனைந்த
வண்ணத்துப்பூச்சிகள்
வாகனமற்ற சாலைகளில் பறக்க
சாலைநெடுக உயர்ந்த கட்டடங்கள்
அழகை முழுதுமாய்க் காட்ட
மழைக்குப் பிந்திய வானம்
கட்டட இடுக்குகளில் வண்ணம் தோய்க்க
பயத்தில் மூடிக்கொண்ட
வாணிப நிறுவனத்தின் கதவுகள்
மூடியே கிடக்க

எதிர்பாராப் பணிமுடித்துக்
களைத்துத் திரும்பிக்கொண்டிருந்தன
போலீஸ் வாகனங்கள்


எனக்கான விடுதலை


அரிய பொருளைத் தொலைத்தவனின்
சஞ்சலம் மிகுந்த தவிப்பைப்போல்
நீண்டுகொண்டே இருக்கிறது
என் தேடுதலின் தாகம்

என் கைகளை இறுக்கும்
கைவிலங்கைத் திறக்கும் சாவி
யார் கையில் இருக்குமென
வருவோர் போவோரையெல்லாம்
தீவிரமாய் விசாரித்தாயிற்று
எல்லாரும் உதடு பிதுக்கி
கைகளை விரித்து
ஏளனப் பார்வை சிந்தி
நமட்டுச் சிரிப்போடு
என்னைக் கடந்து போகிறீர்கள்

உங்களில் யாரோதான்
திட்டமிட்டு
என் சாவியைத் திருடிவிட்டு
என்னைத் தவிக்க வைப்பதாய்
என் காதுக்குத்
தகவல்கள் வருகின்றன

நான் ஓரிடத்தில் முடங்க
தடுப்புச் சுவரெழுப்பி
எனைத் தவிக்கவிடுவது
நண்பர்களில் யாரோதான்
நம்பத் தொடங்கினேன்


எவ்வளவோ முயன்றும்
விலங்கை உடைத்தெறிய நினைத்து
போராடிப் போராடி
நிறைவேறாமலே போனது
விலங்குடைக்கும் எண்ணம்

எல்லாரையும் எல்லாவற்றையும்
குறை சொல்கிறேன்
எதிர்ப்படும் முகங்களைச்
சந்தேகப் பார்வையில் சலிக்கிறேன்
என் மீது வீசப்படும்
விமர்சனங்கள் மீது
விசாரணை நடத்துகிறேன்

மிஞ்சுவது வெறுமையும்
மனம்நிறைய விரக்தியும்
கைநிறைய ஏமாற்றங்களும்

கடைசிவரை
என்னை இறுக்கும் கயிறுகளை
என் கைகளே பற்றியிருக்கும்
கொடுமை அறிந்திலேன்

இதிலே
எங்கிருந்து வந்து
விலங்கு என்னைச் சிறைப்படுத்தியது?
விபரம் அறிந்திலேன்


Tuesday, July 12, 2011

பசித்தவர் இங்கே! பத்தி எழுத்துகள் எங்கே?


‘ஸ்டார்’ (Star) ஆங்கில நாளேட்டில் எழுதிவரும் 41 பத்தி எழுத்தாளர்களில் (columnists) 30 பேரை அண்மையில் அழைத்துச் சிறப்பித்து அவர்களின் குழுப்படத்தை அந்நாளேடு பெருமையோடு வெளியிட்டிருந்தது. ‘பல்வேறு துறைகளில் மாறுபட்ட சிந்தனைகளை முன்வைத்து எங்கள் நாளேட்டுக்குத் தனித்தன்மையைத் தந்துவரும் இவர்களுக்கு நன்றி’ என அவர்களின் பங்களிப்புக்கு மகுடம் சூட்டியிருந்தது.

வாரந்தோறும் 41 எழுத்தாளர்கள் ‘ஸ்டார்’ நாளேட்டில் கல்வி, பொருளாதாரம், அரசியல், சமுகம் தொடங்கி உலக நடப்புகள், சமையல், விளையாட்டு, இலக்கியம், கலையுலகம் என பல துறைகளில் நுணுக்கமாக அலசித் தம் சிந்தனைகளை வாசகர்களுக்குப் பந்தி வைக்கிறார்கள். இதனால் அதன் வாசகர்கள் தொடர்ந்து புதிய வாசிப்பு அனுபவத்தையும் மாறுபட்ட சிந்தனைகளையும் பெறுகிறார்கள். மேலும், ஏடுகளில் அச்சேறும் செய்திகள் பற்றிய அலசல்களில் ஆழமான புரிதல்களைப் பெறுகிறார்கள். மலாய் ஏடுகளிலும் பத்தி எழுத்தாளர்களின் படைப்புகள் தொடர்ந்து வருகின்றன. வாரத்தின் ஏழு நாட்களிலும் பத்தி எழுத்துகள் ஏடுகளை அலங்கரிக்கின்றன.

‘ஸ்டார்’ நாளேட்டில் பத்தி எழுத்தாளர்களின் படத்தைப் பார்த்தபோது அத்தகைய நிலை நம் தமிழ் நாளேடுகளில் இல்லையே என்ற ஏக்கம்தான் எனக்குள் எட்டிப் பார்த்தது. நீண்ட காலமாக இந்நாட்டில் தமிழ் நாளேடுகள் வெளிவருகின்றன. உணவுக்குத் தொட்டுக்குக் கொள்ளும் ஊறுகாயாக எப்போதாவது சிலரின் சிந்தனைகள் எட்டிப்பார்க்கின்றன. ஆனால், மருந்துக்குக்கூட பத்தி எழுத்துகளைக் காண்பது அரிதாக இருக்கிறது. ஏன் நமக்கும் பத்தி எழுத்துகளுக்கும் அறவே ஆகாதா? அல்லது பத்தி எழுத்து பாரம்பரியம் நமக்கு இல்லையா? தலையங்கம் தாண்டி மற்றவர் சிந்தனைகளை ஆராதிக்கும் மனம் நமக்கு இல்லையா? இப்படி வண்டாகக் குடையும் கேள்விகளுக்கு பதில் என்ன?

பத்தி எழுத்துகள் இல்லாவிட்டால் என்ன? நம் நாளேடுகள் படிப்பதற்குச் சுவையாகத்தானே உள்ளன? ஆசிரியரின் தலையங்கம் வருகிறதே? என உங்களில் பலர் கேட்கலாம். பத்தி எழுத்துகள் நாளேட்டிற்குச் சிறப்புத்தன்மையைத் தருகின்றன. தலையங்கம் என்பது நாளேட்டின் ஆசிரியர் ஒரு முக்கியச் செய்தியை, நாட்டு நடப்பை அவரின் பார்வையில் அலசும் பகுதியாக உள்ளது. அது தவிர்த்து, கேள்வி-பதில் பகுதியில் வாசகரின் சந்தேகங்களுக்குத் தம் கருத்துகளை அவர் முன் வைக்கிறார். இவை மட்டும் போதுமா என்றால் நிச்சயம் போதாது என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கமுடியும்.

தமிழ் நாளேட்டின் ஆசிரியர் அறிவு ஜீவியாகவே இருக்கட்டும். அவர் ஒருவரின் சிந்தனை மட்டும் இந்தச் சமுதாயத்திற்குப் போதுமா? ஒருவரால் எல்லாத் துறைகள் பற்றிக் கருத்துகளை ஆழமாக முன்வைக்க முடியுமா? பல துறைகள் பற்றி மேலோட்டமாக அவர் சொல்ல முனைந்தால் வாசகருக்கு இதனால் பயன் விளையுமா?

நம் சமுதாயத்தில் நிலவி வரும் ஒரு முக்கியக் குறைபாடு, சமுதாயச் சிக்கல்கள் குறித்து நம் அறிவு ஜீவிகள், கல்விமான்கள் வாயைத் திறப்பதில்லை. போகிற போக்கில் துண்டு துணுக்காகச் சின்னச் சின்ன கருத்துகளைச் சொல்லிவிட்டு நழுவிவிடுகிறார்கள். அவற்றை அலசி விரிவாக கருத்துகளைப் பதிவுசெய்வதில்லை. அதற்கான களமும் இல்லை என்பதுதான் உண்மை. சான்றுக்கு ‘இண்டர்லோக்’ நாவல் விவகாரம் ஒன்று போதுமே! மலாய், ஆங்கில ஏடுகளில் விலாவாரியாக அலசி கட்டுரைகளாகப் பதிவு செய்தபோது நம் நாளேடுகளில் அறிக்கைப் போர் நடத்தினோம்.

நம் நாளேடுகளில் எது அறிக்கை, எது செய்தி எனப் பிரித்தறிந்து கொள்ளமுடியாத மயக்க நிலை உள்ளது. பலரின் அறிக்கைகள் செய்திகளாக முக்கியத்துவம் பெற்று ஏடுகளை அலங்கரிக்கின்றன. ஓர் அறிக்கைக்கு பதில் அறிக்கை, மறுப்பு அறிக்கை, ஆதரவு அறிக்கை என தொடர் அறிக்கைகள் வருகின்றன. அறிக்கைகளைத் தாராளமாக வெளியிட வாய்ப்பு உள்ளதால் பல இயக்கங்களின் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிடுவதைத் தம் இயக்கத்தின் முக்கியத் செயல்திட்டமாக எண்ணிச் செயல்படும் நிலைமை உள்ளது. ஒரு சமுதாயச் சிக்கலை, அது பற்றி ஆழமாக அறிந்த ஒரு வல்லுநர் கருத்துகளை பத்தி எழுத்தாக முன்வைத்தால் அறிக்கைகள் ஒதுங்கிக்கொள்ளும் நிலை உருவாகும்.

நம் தமிழ் நாளேடுகளில் பத்தி எழுத்துகள் ஏன் இல்லை என்று எண்ணிப் பார்த்தேன். நீண்ட காலமாகப் பத்தி எழுத்துப் பாரம்பரியம் தமிழ் ஏடுகளில் இல்லை. எனவே, காலப்போக்கில் அதுவே ஒரு மரபாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைவராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஒருவர் பத்தி எழுத்துகளை வழங்க முன்வந்தாலும் ஏடுகள் அவற்றை ஏற்க யோசிக்கும். அதை ஓர் அறிக்கையாக ஏதாவது இயக்கத்தின் சார்பாகத் தந்தால் உடனே வெளியிட முன்வரும். பத்தி எழுத்துகளை வெளியிடா மரபைக் கட்டிக்காப்பதால் இழப்பு இனத்துக்குத்தான் என்பதை யார் எப்படி உணர்த்துவது?

பத்தி எழுத்துகளை வெளியிட தமிழ் ஏடுகள் தயக்கம் காட்டுவதற்கு முக்கியக் காரணம் பணமா?. நமக்கு மூன்று தமிழ் நாளேடுகள் உள்ளன. சமுதாயத்தில் ஐம்பது விழுக்காட்டினர் தமிழ்ப்பள்ளிகளைத் தவிர்த்துத் தேசியப் பள்ளிக்குப் போகின்றனர். மிஞ்சியுள்ள ஐம்பது விழுக்காட்டில் தமிழ் நாளேடுகளை வாங்கிப் படிப்போர் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதுதான் நிதர்சன உண்மை. நம் ஏடுகளின் விற்பனையோடு விளம்பர வருமானமும் குறைவு. இதனால் எழுத்துப் படைப்புகளுக்குச் சன்மானமும் வழங்கப்படுவதில்லை என்று காரணங்கள் கூறப்படுகின்றன.

அண்மையக் காலத்தில்தான் சிறுகதைப் படைப்பாளர்களுக்கு RM50 வழங்கப்படுகிறது. கவிதைகள், கட்டுரைகள் படைப்போர் ‘ஆயுளுக்கும் இலவயமாக எழுதிக்கடவாய்!’ என்று சபிக்கப்பட்ட கூட்டத்தார். விற்பனை குறைவு என்றாலும் ஓரளவு இலாபத்தோடுதான் நாளேடுகள் நடத்தப்படுகின்றன. எனவே, பணம்தான் காரணம் என்று புறமொதுக்காமல் நாளேடுகள் மனம் வைத்தால் நாளுக்கு ஒருவராக குறைந்த அளவில் ஒவ்வொரு நாளேட்டிலும் வாரத்திற்கு ஏழு பத்தி எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும்.

அண்மையில், பத்தி எழுத்துகள் குறித்து ஒரு தமிழ் நாளேட்டின் ஆசிரியரோடு பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஏடுகளில் பத்தி எழுத்துகளுக்கு வழிவிடுவதால் ஏற்படும் சிக்கல்களை அலசினார். “பத்தி எழுத்தாளர்கள் தமிழ் ஏடுகளில் இல்லை என்பது ஒரு குறைதான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவர்கள் தொடர்ந்து நடுநிலையோடு எழுதிவர வேண்டுமே. அவர்கள் ஒரு சார்பாக தம் சிந்தனைகளை முன்வைத்தால் நமக்குப் பாதகமாக ஆகிவிடுமே” என்று தம் பயத்தை வெளிப்படுத்தினார்.

அவரின் பயம் எனக்கு நியாயமானதாகத் தெரியவில்லை. ‘ஒரு சார்பு’ என்பதைவிட எந்தக் கருத்தும் காய்தல் உவத்தலின்றி, நடுநிலையோடு உணர்ச்சிக்கு இடம்தராமல் அறிவுசார்ந்து அலசப்பட்ட கருத்தாக இருந்தால் அதற்கு இடமளிக்கும் ஆண்மை ஏடுகளுக்கு வேண்டும். எடுத்துக்காட்டாக, “இண்டர்லோக் நாவல் விவகாரத்தில் உங்கள் கருத்துகளை முன் வையுங்கள். ஆனால், அவை எங்கள் பத்திரிகை நிர்வாகத்தின் கொள்கைக்கு ஏற்றபடி இருக்கவேண்டும்” என்று எழுதுகோலுக்குக் கடிவாளமிட்டு எழுதச்சொல்லலாமா? அப்படி எழுதப்படும் எழுத்துகளால் யாருக்கு என்ன பயன்?

பத்தி எழுத்துகளுக்குத் தமிழ் ஏடுகள் இடமளிக்கத் தயங்குவதற்கு மற்றொரு காரணம் ஆசிரியரின் தலையங்கத்திற்கு அவை போட்டியாக உருவெடுக்கும் என ஆசிரியர் நினைப்பதும் காரணமாக இருக்கலாம் என அவரே கூறினார். இப்படி நியாயமில்லாத பயத்தைக் காரணமாக்கிக் கொண்டால் எந்தக் காலத்திலும் தமிழ் நாளேடுகளில் பத்தி எழுத்துகளைக் காணவே முடியாது. ஆங்கில, மலாய் ஏடுகளில் தலையங்கம் இடம்பெறும் பக்கங்களில் பத்தி எழுத்துகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

நம் சமுதாயத்தில் அறிவு ஜீவிகளும் கல்விமான்களும் தத்தம் துறைசார்ந்த வல்லுநர்களும் நிறைந்து இருக்கிறார்கள். அவர்களின் சிந்தனைச் சேமிப்பும் இனத்தின் மேன்மைக்கு வழிகாட்டல்களும் அரிய கருத்துகளும் நம் வாசகர்களின் பார்வைக்கு வரவேண்டும். இலக்கியம், சமயம், அரசியல், கல்வி, மருத்துவம், உலக நடப்பு, பொருளாதாரம் என எந்தத் துறையாக இருந்தாலும் அவற்றை அலசி மாற்றுச் சிந்தனையை முன்வைக்கும் எழுதுகோல்களை வரவேற்போம். வண்ணத்தில் கவர்ச்சிகாட்டிப் போதையூட்டும் சினிமாப் பக்கங்களைவிட கருத்துலகத்தில் வாசகர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பத்தி எழுத்துகளுக்கு முதல் மரியாதை செய்யும் புதிய மரபு நம் தமிழ் நாளேடுகளில் மலர வேண்டும்.

இத்தகைய பத்தி எழுத்துகளுக்காக புதிய தலைமுறை வாசகன் பசித்திருக்கிறான். முன்னேறத் துடிக்கும் வாசகனுக்கு ஏடுகளில் வந்து குவியும் வெறும் அறிக்கைகளால் தீராத சலிப்புதான் ஏற்படும் என்பதை நம் தமிழ் ஏடுகள் புரிந்துகொள்வது எப்போது?

ந.பச்சைபாலன்

செம்பருத்தி 3/2011


Saturday, June 18, 2011

ஆடு மேய்த்த அந்த நாட்கள்


நீங்கள் ஆடு மேய்த்ததுண்டா?

நான் மேய்த்திருக்கிறேன்.

என் அம்மா எந்நேரமும் தன் இடுப்பில் முடிந்து வைத்திருக்கும் வெற்றிலைப் பாக்குப் பை போல், அந்த நாட்களின் ஞாபகங்கள் என் நினைவின் பிடியில் இன்னமும் இறுக்கமாகவே இருக்கின்றன.

என் பத்து வயதிலிருந்து பதினைந்து வயது வரைக்கும் ரவாங்கை அடுத்து உள்ள சுங்கை சோ தோட்டத்தின் அடர்ந்த ரப்பர்க் காட்டுக்குள் ஆடுகளோடு அளவளாவி வாழ்ந்த அந்த நாள்கள் இருக்கின்றனவே அவை அலாதியானவை. என் ஆராதனைக்கு உரியவை.

அவை எளிதில் அழித்துவிட முடியாத அழுத்தமான கோலங்களாக, காலக் கரையான் அரித்துவிட முடியாத கல்வெட்டுகளாக, அழகிய வார்ப்படங்களாக என்னுள்ளே பதிந்து போயிருக்கின்றன.

அந்த நினைவுகளின் நீரோடையில் மீண்டும் ஒரு முறை ஆசை தீர மூழ்கி எழ, இதோ உங்கள் ஒவ்வொருவரின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு என் இளமை நாட்கள் நோக்கிப் பயணப்படுகிறேன்.

ஆடு வளர்ப்பதும் மாடு வளர்ப்பதும் தோட்டப்புற வாழ்க்கையில் இரண்டறக் கலந்துபோன ஒன்றுதான். ஆயினும், ஆடு மேய்க்கும்போது எனக்கு நேர்ந்த அனுபவங்கள் இறுகிக் கிடந்த என் மனத்தை அத்துணை ஆழமாக உழுது போட்டதுதான் எனக்கு விந்தையாக இருக்கிறது.

என் அப்பா ஆடுமாடு வளர்ப்பதில் கைராசிக்காரர். எனக்குப் பத்து வயதானபோது ஆடு மேய்க்கும் பக்குவத்தை எனக்குப் பயிற்றுவித்து என்னை உற்சாகமாத் தட்டிக்கொடுத்து மேய்ச்சல் காட்டுக்கு ஆடுகளோடு அனுப்பி வைத்தவர் அவர்தான்.

அதுவரையில் குண்டு விளையாடவும் பட்டம் விடவும் சைக்கிள் ஓட்டவும் வெட்டுக்கிளி பிடிக்கவும் மட்டுமே தகுதி பெற்றிருந்த நான், பதவி உயர்வு கிடைத்த பூரிப்பில் திளைத்துப் போனேன்.

பள்ளி முடிந்து வீடு வந்து உடைமாற்றிய கையோடு நண்பகல் உணவைத் துரித கதியில் வயிற்றுக்குள் அனுப்பிவிட்டு, ‘மே..மே.. எனப் பசி இராகத்தில் குரல் கொடுக்கும் ஆடுகளை ஓட்டிக்கொண்டு போனால் மீண்டும் வீடு திரும்ப மாலை மணி ஆறாகிவிடும்.

அப்பொழுதெல்லாம் ஆடுகள் மேய்வதைப் பார்ப்பதே அலாதியாகவும் ரசிப்புக்கு உரியதாகவும் இருந்திருக்கிறது. ஒட்டிய வயிறுகளோடு வந்த ஆடுகள் இலைதழைகளையும் மீனாக்கொடிகளையும் வயிறு புடைக்க மேய்ந்து விட்டு ஆடி அசைந்து தோட்ட மண்சாலையில் நடக்கத் தொடங்கினால் உற்சாகப் பாட்டொன்று எனக்குள் உற்பத்தியாகிவிடும்.

இயற்கையை நேசிக்கவும் அழகாயிருப்பதையெல்லாம் ஆராதிக்கவும் பள்ளியின்றி ஆசிரியரின்றி எனக்குக் கற்றுக் கொடுத்த அந்த மஞ்சள் வெயில் பூசிய மாலைநேர நாட்களை, இப்பொழுதும் என்னால் துல்லிதமாக மனக் கண்களால் துலாவ முடிகிறது.

ஆடுகளை மேயவிட்டு விட்டு பசுமை படர்ந்த ரப்பர் காடுகளுக்குள் காலாற நடப்பேன். அணிவகுத்து நிற்கும் கித்தா மரங்களின் நேர்த்தி கண்டு வியப்பேன். இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் வாரி இறைத்திருக்கும் அந்தி நேர அழகை அள்ளிப் பருகுவேன். மலைக்காடுகளின் மடியில் பாம்புபோல் படுத்திருக்கும் மண்சாலைகளை விழிப்பார்வையால் விசாரிப்பேன்.

ஓ.. அந்த நாள்கள் எனக்குள் அரும்பிய ரசனை உணர்வுகளைத் திருகிவிட்டு, துளிர்விட்ட தளிருக்கு நீர் பாய்ச்சிய எழுச்சி நாள்கள் என்பேன்!

*********************************************
ஒருமுறை ஆடு மேய்க்கப் போகாமல் ‘திட்டி’ போட்ட நாளில், மேய்ந்துவிட்டு கொட்டகை திரும்பிய ஆடுகளின் எண்ணிக்கை சரிதானா என எண்ணிப் பார்க்கிறேன்.

ஒன்று குறைகிறது. மனம் பதைபதைக்கிறது. பேறு காலத்திற்காகக் காத்திருந்த செவலை ஆடுதான் அஃது என்று தெரிந்தபோது பதைபதைப்பு இரட்டிப்பானது. அப்பாவுக்குத் தெரிந்தால் என்னைத் துவைத்து எடுத்துவிடுவாரே என நினைத்தபோது அது மும்மடங்காகியது. பயத்தோடு வீட்டுக்குள் பதுங்கியிருந்தேன்.

மாடுகளுக்குக் கஞ்சி வைத்துவிட்டு பால் கறந்துகொண்டு ஏழரை மணிவாக்கில் வீடு வந்த அப்பா விசயம் தெரிந்து கோபத்தில் கொதித்துப் போனார்.

“ஆட்டோடு வராமல் வீட்டுக்குள் நுழையாதே போடா” எனக் கடுமையான குரலில் கட்டளை பிறப்பிக்கிறார். நான் தேம்பிக்கொண்டே ஆறாம் நம்பர் மலைக்காட்டுப் பக்கம் பயணப்படுகிறேன்.

தோட்ட லயங்களின் மேற்கே, மேட்டுப்பகுதியில் தொடங்கும் மண்சாலையில் அந்தக் கும்மிருட்டு வேளையில் கால் பதித்தபோது அதுவரை அடக்கிவைத்த ஆதங்கம் அவிழ்ந்துகொண்டது.

உலகத்துச் சோகத்தையெல்லாம் மொத்த குத்தகை எடுத்துக்கொண்டவன்போல ஓ..வெனக் கதறிக் கதறி அழுகிறேன். கண்களின் கரைகள் உடைப்பெடுத்துக்கொண்டு தாரை தாரையாகக் கண்ணீர் வழிகிறது.

“என்னை இப்படிப் படைத்து விட்டாயே இறைவா! என் செவலை ஆட்டை வீட்டுக்கு அனுப்பாமல் என்னைச் சோதிக்கலாமா? இஃது அடுக்குமா? நான் பண்ணிய பாவம்தான் என்ன?” அந்தப் பிஞ்சு வயதிலேயே விரக்தியில் வீழ்ந்துபோன வயதான ஒரு முதியவனைப்போல் இறைவனை நொந்துகொண்டு அழுகிறேன்.

பல நாட்கள் தேடியும் ஆசையாய் வளர்த்த அந்தச் செவலை ஆடு கடைசி வரைக்கும் கிடைக்காமலே போனதில் இப்பொழுதும் மனத்திற்குள் இழைகிறது அழுத்தமான வருத்தம். அம்மா எப்போதாவது “பின்னாடி ஒரு முறை ஒரு செவல ஆடு செனையா இருக்கும்போது காணாம போயி, இவனும் கொஞ்ச நாளா மனசு சரியில்லாம....” என்று வெற்றிலைப்பயை அவிழ்த்துக்கொண்டே அந்தப் பழைய தோட்ட வாழ்க்கையை அண்டை வீட்டாரோடு அசைபோடும்போது..

காயம் பட்ட கித்தா மரம் மொக்குத்தட்டி விட்டதைப்போல் அந்தக் கண்ணீர் நாட்கள் மாறாத சோகத்தோடு இன்னமும் முகங்காட்டிக் கொண்டு முன்னே வந்து நிற்கும்.

***********************************************
படிக்கும் பழக்கம் எனக்குப் பிடிகும் பழக்கமாக ஆனதற்கு அந்த ஆடு மேய்த்த நாட்களே அடித்தளமிட்டுள்ள என்பேன். வேர் பிடுங்கிச் சாய்ந்த கித்தா மரத்தின் அடிமடியில் அமர்ந்துகொண்டோ, கித்தாமர நிரைகளில் காணும் சருகுகளில் தலைசாய்ந்துகொண்டோ அம்புலிமாமா கதைகளில் வரும் கதைமாந்தர்களோடு ஒன்றிப் போயிருக்கிறேன்.

அடிக்கடி அவஸ்தைக்குள்ளாக்கியது விக்கிரமாதித்தன்தான். வேதாளத்தின் கேள்விக்கு அவனால் விடைகூற முடியாமல் போய்விடுமோ எனப் பதைபதைப்பு மனத்திற்குள் பரவும். ஆனால், ஒவ்வொரு முறையும் அவனின் சரியான விடையால் மனம் நிம்மதிப் பெருமூச்சுவிடும்.

ஒவ்வொரு நாளும் தனிமை என்னைத் தத்தெடுத்துக்கொண்டு எனக்குள் இருந்த கற்பனையின் ஊற்றுக்கண்ணைத் திறந்துவிட்டு, ஆட்டு இடையனாய் இருந்தவனை அங்குலம் அங்குலமாய்ப் படைப்பிலக்கியத்தின் பக்கம் பாதம் பதிய நடக்கச் சொல்லிக் கொடுத்ததே.. அதை நன்றி உணர்வோடு இப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன்.

என்னைப்போலவே ஆடு மேய்க்க வரும் என் வயது ஒத்த தோழர்களோடு ஆண்டு முழுவதும் நுரைத்துக்கொண்டோடும் ஆற்றில் ஆசை தீரக் குதித்துக் கும்மாளம் போட்டதும் பனி கொட்டும் இரவில் முதல் நாள் தோட்டத்தில் பார்த்த படத்தின் கதாநாயகர்களை மனத்தில் படமெடுத்துக்கொண்டு கித்தாமரக் குச்சிகளை ஒடித்துக்கொண்டு வாட்போரில் ஈடுபட்டதும்.... எல்லாம் எளிதில் அழித்துவிட முடியாதவாறு மனத்திற்குள் அப்பிக்கொண்டு விட்டன.

அந்தப் பிஞ்சு வயதிலேயே ஆடுகளுக்குப் பிரசவம் பார்த்திருக்கிறேன். சொறி, சிரங்கு வந்த ஆடுகளுக்கு அப்பா தயாரித்துக் கொடுத்த மருந்து எண்ணெயைப்பூசி மருத்துவம் பார்த்திருக்கிறேன். தாய்ப்பால் போதாத ஆட்டுக்குட்டிகளுக்குப் பசும்பாலைப் போத்தலில் நிரப்பி, பாலூட்டி அவற்றைத் தாயன்போடு வளர்த்திருக்கிறேன். தீபாவளி வரும்போதெல்லாம் ஆசையாய் வளர்த்த கிடாவை அப்பா வெட்டிக் கூறுபோடுகையில் எட்டி நின்று பார்த்துக் கண்களைக் கசக்கியிருக்கிறேன்.

அதுதானோ? ஆடுகளோடு கொண்ட அந்த நெருங்கிய சினேகம்தானோ, உயிரினங்களை நேசிக்கவும், ஐந்தறிவு கொண்டவை என அவற்றை அலட்சியப்படுத்தாமல் அன்பு செலுத்தவும் எனக்குக் கற்றுக்கொடுத்தது?

என்னதான் தோட்டப்புற வாழ்க்கையைவிட்டுக் கொஞ்சங் கொஞ்சமாக அடிபெயர்ந்தும் குடிபெயர்ந்தும் நகர வாழ்க்கைக்கு நகர்ந்து வந்து விட்டாலும் அந்தப் பழைய உயிர் நாட்களை மறப்பதென்பது எனக்கு ஒண்ணாது.

ஆடு மேய்ப்பது அசிங்கம் என யாராவது அருவருத்துக்கொண்டு முகஞ்சுழிப்பார்களேயானால் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆடு மேய்ப்பதென்பது ஒன்றும் அசிங்கமன்று.

அஃது ஓர் அருந்தவம். அந்த அனுபவம் அலாதியானது. அஃது என் நேசிப்புக்குரியது; ஆராதனைக்குரியது.

நான் மேய்த்திருக்கிறேன்.

நீங்கள் ஆடு மேய்த்ததுண்டா?

thangameen.com (Jun)

Wednesday, June 1, 2011

Simposium Linguistik Dan Kesusasteraan Tamil 2011 Slideshow

Simposium Linguistik Dan Kesusasteraan Tamil 2011 Slideshow: "TripAdvisor™ TripWow ★ Simposium Linguistik Dan Kesusasteraan Tamil 2011 Slideshow ★ to Kuala Lumpur (near Puchong). Stunning free travel slideshows on TripAdvisor"