சொற்கள் நிரம்பி வழியும்
அந்த அழகிய அறையைநெருங்கி வருகிறோம் ஒவ்வொருவரும்
வெளியில் நின்று வேடிக்கை பார்க்கும்
பலரை விலக்கி விட்டு
நம்மில் சிலர் முன் நகர்கிறோம்
இதுதான் நுழையும் வழி என
யாரோ எழுதிவைத்தாலும்
பொருட்படுத்தவில்லை நீங்களும் நானும்
பலவழிகள் கொண்ட அந்த அறையினுள்
ஆளுக்கு ஒரு வழியில் நுழைகிறோம்
நுழைவுச்சீட்டாய் அவரவர் கைகளில்
ஏதோ ஒன்று தட்டுப்படுகிறது :
அனுபவங்கள் பதிந்த நெஞ்சம்
மொழி மீதான காதல்
புதியன நாடும் மோகம்
சொற்களை மேயும் சுகம்
தீனிக்கு அலையும் அறிவு
உள்ளே வழியும் சொற்களை
அள்ளிச் சுவைக்கிறோம்
சொற்களைச் சமைத்தவர்
விலகி நிற்க
வாயில் உருகிக் கரையும் சொற்களில்
ஒவ்வொருவரும் உணர்கிறோம்
தனித்தனி சுவையை
சொற்களின் சுவையில் மூழ்கி
சிலர் அங்கு நின்றுவிட
அறையை விட்டு நமக்கான
புதிய அறைகளை
உருவாக்கப் புறப்படுகிறோம்
நமக்காக எப்பொழுதும் காத்திருக்கின்றன
சொற்கள் நிரம்ப விழையும் அறைகள்
No comments:
Post a Comment