நம் குரல்

Monday, February 15, 2010

தொலையும் இலக்கு (சிறுகதை)



“என்னை கேட்காம உங்கள யாரு இலக்கியப் பாடத்துக்குப் பதியச் சொன்னது? இதுக்குத்தான் முன் யோசனை வேணும்கிறது. எடுத்தோம் கவிழ்த்தோம்ணு எதுக்கு இந்த அவசரம்? கொஞ்சம் யோசிக்க வேண்டாம்? மாணவர்களை நோக்கிக் கேள்விக் கணைகளை வீசிவிட்டு அவர்களைத் தீர்க்கமாகப் பார்த்தார் ஆசிரியர் மாதவன். அவர் குரலின் கடுமையும் கேள்வியின் உக்கிரமும் மாணவர்களை உலுக்கிவிட்டது உண்மைதான்.

“இங்கே நீங்கதான் சார் தமிழ்படிச்சிக் கொடுக்கிறிங்க. இலக்கியமும் படிச்சிக் கொடுப்பீங்கன்னு நெனச்சோம். அதனால..” மாதவனைக் காண ஆசிரியர் அறைக்கு ஐந்து மாணவர்களை அழைத்து வந்த முகிலன்தான் பதில் கூறினான். மற்றவர்கள் அதையே மோதிப்பதாக முகபாவனை காட்டினார்கள்.

“தமிழ் படிச்சிக் கொடுத்தா? இலக்கியமும் படிச்சிக் கொடுப்பேன்னு என்னைக்காவது சொன்னேன்னா? இங்க டிசிப்பிலின் வேலையே தலைக்குமேல இருக்குது. அதை யார் கவனிக்கிறது?” ஆயிரத்து எண்ணூறு மாணவர்கள் படிக்கும் இடைநிலைப் பள்ளியில் கட்டொழுங்கு சிரியராக இருப்பது எவ்வளவு சிரமம் என்பது அவருக்குத்தான் தெரியும்.

சபைகூடல் முடிந்து மாணவர்கள் தத்தம் வகுப்புகளுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். இவர்களை எப்படியாவது சமாளிக்க வேண்டும். ஏதாவது வாக்குத் தந்து வீண் பணிச்சுமையில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று உள்மனம் அவரை உஷார்ப்படுத்தியது.

“உங்க ஆறு பேருக்காக இங்கே இலக்கிய வகுப்பு நடத்த முடியாது. தமிழ்ப்பாடம்தான் இருக்கே. அது போதும். அதுல நல்லா படிச்சி ‘ஏ’ எடுங்க. அது ரொம்ப முக்கியம். இங்கே ரொம்ப பேரு அதிலேயே கோட்டை விடுறாங்க.” அவர்களின் இலக்கியப்பாடக் கனவை எப்படியாவது கலைத்துவிடுவதிலேயே அவரின் வாய் உதிர்த்த சொற்கள் குறியாக இருந்தன.

“சார், வெள்ளிக்கிழமை தமிழ் வகுப்பு முடிஞ்சவுடன் அப்படியே ஒரு மணிநேரம் இலக்கியப் பாடம் படிக்கலாம். ஜாலான் பெசார் பள்ளியிலகூட அப்படித்தான் நடக்குது.” நாகேந்திரன் தன் பங்குக்கு முயன்று பார்த்தான்.

“ ஊகும். அதுக்கெல்லாம் சாத்தியமே இல்ல. கேட்க நல்லா இருக்கும். ஒரு மணி நேரத்துல இலக்கியம் படிச்சிக் கொடுத்து உங்கள பரீச்சைக்கு தயார் படுத்தறது ரொம்ப சிரமம். அப்புறம் உங்க மார்க் குறைஞ்சு போனா என்னா படிச்சி கொடுத்தாரு வாத்தியாருன்னு அந்த பழியும் என் தலையிலதான் விழும்.” மாதவன் தன் முடிவில் திட்டவட்டமாக இருந்தார். மாணவர்கள்தான் அவரைப் புரிந்துகொள்ளவில்லை. இன்னும் முயன்று பார்த்தார்கள்.

“எங்களுக்கு நம்பிக்கை இருக்கு சார். தமிழ்லயும் இலக்கியத்திலும் ‘ஏ’ ஒன் எடுக்க முடியும்னு. நீங்க கொஞ்சம் உதவி செஞ்சா போதும்” ரமேஷ் கூறியது அவரின் பொறுமையில் கல்லெறிந்திருக்க வேண்டும். உடனே பொங்கிவிட்டார்.

“எனக்கு நம்பிக்கை இல்லையே. இவ்வளவு சொல்லியும் கேட்கமாட்டுறீங்க. அது சரி, இலக்கியப் பாடத்துக்குப் பதியனும்னா பெங்கதுவா கிட்டே அனுமதி வாங்கணுமே. செஞ்சீங்களா? வாங்க என்கூட” அப்பொழுது படிவம் 5சி -யில் மாதவனுக்கு நன்னெறிப் பாடம். அதைவிட முக்கியமாக இலக்கியப்பாடச் சிக்கலுக்குத் தீர்வுகாண வேண்டிய நிர்பந்தம் அவருக்கு நேர்ந்துவிட்டது.

காஜாங் நகரிலிருந்து தெற்கு நோக்கி நீளும் செமினி சாலையை அணைத்தவாறு கம்பீரமாக நிற்கும் அந்த இடைநிலைப்பள்ளியில் இந்த ஆண்டுதான் பணியில் சேர்ந்தார் மாதவன். தமிழில் இளங்கலைப் பட்டப் படிப்போடு கல்லூரியில் சிரியர் பயிற்சியையும் முடித்து அங்கு வந்து இன்னும் இரண்டு மாதங்கள்கூட முடியவில்லை. அதற்குள் தமிழ், நன்னெறிப் பாடங்களோடு இப்பொழுது தமிழ் இலக்கியத்தையும் கற்பிக்கவேண்டும் என்ற நினைப்பையே ஜீரணிக்கச் சிரமமாக இருந்தது அவருக்கு.

பள்ளி முதல்வர் அறைக்குள் சென்று முதலில் மாதவன் ஏதோ பேசினார். மாணவர்கள் அறைக்கு வெளியே காத்திருந்தனர். சிரியர் மாதவன் எதையாவது சொல்லி, முதல்வர் தங்களைக் கடுமையாகத் திட்டுவாரோ என்ற அவநம்பிக்கை அவர்களை அரிக்கத் தொடங்கியது.

பக்கத்தில் இருந்த தோட்டத் தமிழ்ப்பள்ளியில் படித்து இந்தப் பள்ளியில் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்த அறுபத்து மூன்று மாணவர்களில் சிலர் பி.எம்.ர். தேர்வோடு காணாமல்போக, இந்த ண்டு எஸ்.பி.எம். தேர்வில் ஐம்பத்து நான்கு மாணவர்கள் தமிழையும் ஒரு தேர்வுப்பாடமாக எடுக்கவிருந்தனர். அவர்களில் அறுவர் மட்டும் தமிழ் இலக்கியப்பாடத்திற்கும் பதிந்துகொண்டு இரண்டு வெற்றிக்கனிகள் பறிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர். வெற்றிக்கனியா முதல்வரின் கடுமையான திட்டா என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்.

உள்ளே அழைத்த முதல்வர் புவான் ஜமீலா முகத்தில் கோப ரேகை எதையும் அவர்களால் காணமுடியவில்லை. அவர் அமைதியாகவே பேசினார். “தேர்வில் இலக்கியப் பாடம் எடுப்பது உங்கள் உரிமை. நான் அதை மறுக்கவில்லை. ஆனால் பள்ளியில் இந்தப் பாடம் போதிக்கப்படவில்லை. ஒருவேளை வெளியே டியூசன் வகுப்புக்குப் போய் நீங்கள் பயிலலாம். அப்படித் தனிப்பட்ட முறையில் நீங்கள் படித்துத் தேர்வுக்குத் தயாராவதாக உங்கள் பெற்றோர்கள் உறுதிக் கடிதம் தரவேண்டும். அப்பொழுதுதான் நான் உங்களை அனுமதிப்பேன். ஆசிரியர் மாதவன் போதிக்கவேண்டும் என்று நீங்கள் வற்புறுத்த முடியாது. இவருக்குப் பல பொறுப்புகள் உள்ளன. தமிழ்ப்பாட நேரத்தில் தமிழ் இலக்கியமும் போதிப்பது சாத்தியமில்லை. இந்தப் பாடம் சிரமமான பாடம் என்று மாதவன் கூறுகிறார். பிறகு எதற்காக நீங்கள் கஷ்டப்படவேண்டும்?” பள்ளியின் தேர்வு முடிவுகள் சிறப்பாக இருக்க வேண்டும். அதற்குப் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதிலே புவான் ஜாமீலா குறியாக இருந்தார்.

‘அப்பாடா.. சிக்கல் தீர்ந்தது. நான் தப்பித்தேன்’ என மனத்திற்குள் முதல்வருக்கு நன்றி கூறியவாறு வகுப்புக்கு விரைந்தார் மாதவன். இனி யாராவது இலக்கியப் பாடம் சொல்லித்தாங்க சார்னு வரட்டும். பெங்கதுவா அறைக்கு அனுப்பிட வேண்டியதுதான். தனக்கான தற்காப்பு அரணையும் மாதவனின் மனம் அசைபோட்டுப் பார்த்தது.

மாணவர்கள் அறுவரையும் ஏமாற்ற உணர்வுகள் பிசையத் தொடங்கின. தமிழ்ப்பாட நேரத்திலேயே இலக்கியம் பயிலவேண்டும் என்ற எண்ணத்தில் மண் விழுந்து விட்டது. இனி எங்கு முட்டி மோதினாலும் வாய்ப்பில்லை என்று உறுதியாகிவிட்டது.

“பெங்கதுவா சொன்ன மாதிரி வெளியே எங்காவது டியூசன் படிக்கலாமா? இன்னும் கொஞ்சம் பேர சேர்த்துக்குவோம். நல்லா பாஸ் பண்ணி மாதவன் சாருக்கு காட்டணும்போல இருக்கு” அதுவரை அமைதியாக இருந்த புனிதா வாய் திறந்தாள்.

“எனக்கும் அதுதான் சரியின்னு படுது. எத்தனையோ பேரு பதினாலு பதினைஞ்சு பாடங்கள் எடுக்கிறாங்க. சிறப்பு தேர்ச்சி அடையிறாங்க. நாம தமிழ் இலக்கியம்தானே எடுக்கிறோம்” தமிழினியன் குரலிலும் உறுதி தொனித்தது.

@ @ @ @ @ @ @ @

மறுநாள், படிவம் 3பி - இல் தமிழ்ப்பாடம் முடிந்து ஆசிரியர் அறைக்கு மாதவன் வந்தபோது அவரை எதிர்பார்த்து புனிதாவின் அப்பா பொன்னையா காத்திருந்தார். தோட்டத்தில் உழைத்து உரமேறிய உடல் அவருக்கு. கலைந்த தலைமுடி, வெற்றிலைக்காவியேறிய பற்கள். கித்தாமர வேர் தடுக்கி விழுந்ததால் முகத்தில் பதிந்துபோன மாறாத தழும்பு. மனத்தைப்போலவே வஞ்சகமில்லாமல் முகத்தில் அரும்பும் சிரிப்பு.

“சார், நீங்க தமிழ் இலக்கியம் படிச்சுக்கொடுக்க முடியாதுன்னு சொன்னதா மக வந்து சொல்லுச்சு. அத கேட்டு மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. அதான் உங்கள பாத்து பேசலான்னு வந்தேன்..”

“அதற்கான காரணத்த நான் மட்டும் இல்ல எங்க பெங்கெதுவாவும் ரொம்ப தெளிவா விளக்கி சொல்லிட்டோமே. மாணவர்களும் அத நல்லா புரிஞ்சுகிட்டாங்கள” மாதவன் தன் மனத்தில் கிளர்ந்த வெறுப்பு சொற்களில் கசியாமல் பார்த்துக்கொண்டார்.

“சார், தமிழ்ப்பள்ளியில படிச்ச பிள்ளைங்கதானே தமிழ் இலக்கியமும் படிக்க முடியும்? பரீச்ச முடிவு வந்தா தமிழ்லயும் இலக்கியத்திலயும் ஏ ஒன் எடுத்த பிள்ளங்க படம் பேப்பருல வருது. எம் பிள்ளையும் அப்படி எடுக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு. அதுக்கு வழியில்லையா?” வெளிப்படையான பேச்சு.

“வழி இருக்குங்க. ஆனா அது நிச்சயமா இங்கே இல்ல. நீங்க கொஞ்சம் முயற்சி எடுத்தா காஜாங்ல ஒரு வாத்தியார தேடி டியூசன் மாதிரி நடத்தலாம். முயற்சி எடுங்க”

“என்ன சார்? செண்டுக்கு வழிகேட்டா நீ£ங்க கொண்டைக்கே வழி சொல்றீங்க. நீங்க இங்க அருமையான வாத்தியாரு இருக்கும்போது காஜாங்ல ஏன் போய் தேடணும்? தெனமும் பேப்பர பாத்தா வெட்டு, குத்து, கொலன்னு செய்தி வருது. இப்படி தமிழு இலக்கியம்னு படிச்சா நம்ம பிள்ளைங்க ஏன் அப்படி போகப்போதுங்க சொல்லுங்க” விட்டால் மாதவனுக்கே வகுப்பு எடுப்பார்போல் இருந்தது.

“நீங்க சொல்றதுல உண்மை இருக்கு. நான் இல்லன்னு சொல்லல்ல. னா இங்க எனக்கு வேலைப்பளுவால வகுப்பு நடத்துற சாத்தியம் இல்லை என்பதை நீங்க புரிஞ்சுக்கணும்” மாதவன் சமாளிக்க முயன்றார். அவர் விடுவதாக இல்லை.

“அதுமட்டும் இல்லைங்க சார். தமிழ் இலக்கியம் படிக்கிறது இந்த நாட்டில நம்ம உரிமை இல்லைங்களா. அத இழக்கலாமா சொல்லுங்க? பேப்பரில பாத்தேன். போட்டிருந்தாங்க. முன்பு மூவாயிரம் பேரு இலக்கியம் எடுத்த நில மாறி கொஞ்ச காலத்துக்கு முந்தி முன்னூறா கொறைஞ்சு போச்சாம். இப்ப படிப்படியா கூடி நாலாயிரம் சொச்சம் வந்திருக்காம். நாம நம்ம பங்குக்கு ஏதும் செஞ்சாதானே அது ஐயாயிரமா ஏறும். நீங்களே சொல்லுங்க சார்”

எதைச் சொல்லுவார் மாதவன்? பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி தொடர்பான நிகழ்வென்றால் ஊனுருக, உயிருருக மாதவன் காட்டிய செயல்வேகம் மாணவர்களையே வியப்பில் ஆழ்த்தியதே அதைச் சொல்லுவாரா? பல்கலைக்கழகத் தமிழ்மொழி இயக்கத்தின் தலைவராகி அவ்வப்போது ஒலிபெருக்கியோடு ஒன்றிவிடுவாரே அதைச் சொல்வாரா?

அப்பொழுது எதையும் சொல்ல மாதவன் தயாராக இல்லை. பத்திரிகையெல்லாம் படித்து நாட்டு நடப்பையும் சமுதாய நிலையையும் புரிந்துகொண்ட ஒருவரால் தன்னுடைய நிலையைப் புரிந்துகொள்ள முடியவில்லையே என்ற தங்கமே அவர் மனம் முழுக்க வியாபித்திருந்தது.
“சார், நம்ம சமயத்துல சொல்வாங்க, சிஷ்யன் தோன்றினா அங்கே குரு தோன்றுவாருன்னு. ஆனா என்ன பொறுத்த வரைக்கும் இலக்கியப் பாடத்தில உங்கள மாதிரி குரு அமைஞ்சா அங்கே, நிறைய சிஷ்யன்க தோன்றுவாங்க.”

“நீங்க சொல்ற குரு சிஷ்யன் கதை இங்க சாத்தியம் இல்லைங்க. காஜாங் தமிழ்ச் சங்கத்திலதான் நிறைய கவிஞர்களும் எழுத்தாளர்களும் இருக்காங்கள. அவங்க இலக்கிய வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யலாமே. போய் பேசி பாருங்க. எனக்கு இப்ப வகுப்பு இருக்கு.” மாதவன் கொஞ்சமும் பிடிகொடுக்காதது பொன்னையாவின் முகத்தில் ஏமாற்றமாய்ப் படர்ந்தது.

@ @ @ @ @ @ @ @ @

“தலைவரே, விழாவுக்கு நாம ர்டர் கொடுத்த பேனர் வந்திருச்சு, பாருங்க” செயலாளர் தமிழ்மாறன் பேனரை விரித்துக் காட்டினார். ‘காஜாங் தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் 15ம் ண்டு தமிழர் திருநாள். சிறப்பு வருகை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு கதிரவன் அவர்கள்’ பொன்னிற எழுத்துக்களில் கண்ணைப் பறிக்கும் ஓவியங்கள் மின்னின.

“அருமையா அமைஞ்சிருக்கு. இந்த ஆண்டு தமிழர் திருநாள் கொண்டாட்டமும் நாம திட்டமிட்டபடி சிறப்பா அமையும்னு இப்பவே எனக்கு நம்பிக்கை வந்திருச்சு. நூறு பக்கங்களில் நாம வெளியிடுற விழா மலர் தனி முத்திரை பதிக்கப்போவுது. இன்னும் ஒரு மாதம்தான் இருக்கு. ஏற்பாட்டுக்குழு இன்னும் துடிப்பா வேல செய்யணும். இன்னும் பத்தாயிரம் வெள்ளி நன்கொடை வந்தா ஏற்பாட்டு வேல முடிஞ்ச மாதிரிதான்” தலைவரின் பேச்சில் நம்பிக்கை அருவியாய் ஆர்ப்பரித்தது.

இரவு மணி எட்டுக்குத் தமிழர் திருநாள் ஏற்பாட்டுக்குழுக் கூட்டம். காஜாங் நகரின் மையத்தில் அமைந்திருக்கும் தமிழ்ச் சங்கத்தின் சொந்தக் கட்டடம் அதற்கான பரபரப்பில் ஆழ்ந்திருந்தது. இருபது அமைப்புகள் ஒன்று சேர்ந்து நடத்தும் விழாவென்றால் சும்மாவா?

“தலைவரே, சாயங்காலம் செமினி பொன்னையா வந்திருந்தாரு. பதினைந்து பேரு இந்த ஆண்டு எஸ்.பி.எம்ல தமிழ் இலக்கியம் எடுக்கிறாங்களாம். அங்க பள்ளியில வகுப்பு நடத்த வாய்ப்பு இல்லையாம். இங்க நம்ம தமிழ்ச் சங்க ஏற்பாட்டில இந்தக் இடத்தில வகுப்பு நடத்தும்படி கேட்டாரு. செயற்குழுவில பேசிட்டு சொல்றேன்னு சொல்லி அனுப்பிட்டேன். நம்ப உதவியை ரொம்ப எதிர்பார்க்கிறாரு” தமிழ்மாறன் தலைவர் முகத்தை கூர்ந்து நோக்கினார்.

“என்னையா இது? இன்னும் ஒரு மாசத்தில நமக்கு முக்கியமான நிகழ்ச்சி இருக்கு. நாம அதில மூழ்கிபோயிருக்கோம். ஏற்பாட்டு வேலயே இன்னும் எவ்வளவோ இருக்கு. இப்ப போயி இலக்கிய வகுப்பு வையிங்கனா எப்படி? நீங்க தெளிவா சொல்லவேண்டியதுதானே?” தலைவர் சொற்களில் கோபம் எட்டிப் பார்த்தது.

“சொன்னேன். அவருக்கு வேற வழி இல்லாமதான் இங்கே வந்தாராம். இங்கதானே கவிஞரும் எழுத்தாளரும் இருக்கீங்க. நீங்கதான் உதவி செய்யணுன்னு சொல்றாரு.”

“பள்ளியிலதான் இதற்கு வாத்தியாருங்க இருக்காங்களே அப்புறம் ஏன் நம்மல தொல்லப்படுத்துறாங்க? நமக்குதான் தொடர்ந்து பாரதி விழா, பாவேந்தர் விழா, கண்ணதாசன் விழான்னு எத்தனையோ முக்கிய நிகழ்ச்சிங்க இருக்கே. இத அவருக்கிட்ட விளக்கமா சொல்லிடுங்க. சரி, வாங்க கூட்டத்த ஆரம்பிக்கலாம்” தலைவர் எழுந்துகொண்டார். தமிழ்மாறன் நினைவில் பொன்னையாவின் ஏமாற்றம் சுமந்த முகம் வந்து போனது.

@ @ @ @ @ @ @ @

வண்ண வண்ணத் தோரணங்கள் சூடி விழா மண்டபம் புதுப்பொலிவாய்க் காட்சி தந்தது. மூன்று மாத உழைப்பை, சிறப்பான திட்டமிடலை ஒவ்வொரு நிகழ்விலும் உணர முடிந்தது.

மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்த மண்டபத்தில் மாண்புமிகு கதிரவன் சிறப்புரை ஆற்றினார்.

தமிழவேள் கோ.சாரங்கபாணி தொடங்கிய தமிழர் திருநாள் கொண்டாட்டம் தமிழர்களிடையே மொழி உணர்வையும், இன உணர்வையும் தட்டியெழுப்புவதில் வெற்றி கண்டிருப்பதால் இத்தகைய அரிய பணியில் ஈடுபட்ட ஏற்பாட்டுக்குழுவை வெகுவாகப் பாராட்டினார். ஏற்பாட்டுக் குழுவினரின் முகங்களில் ஆனந்த அருவி.

“இந்த அருமையான விழாவிலே உங்களுக்கு என் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைக்க விரும்புகிறேன் தோழர்களே. நம் நாட்டில் நம் மொழியை, இலக்கியத்தைப் பயில அரசு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளது. அதை நாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாளிதழ்களைப் பார்த்திருப்பீர்கள். எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நான்காயிரம் என்பது மிகவும் குறைவு. அது பத்தாயிரமாக உயர வேண்டும். உங்கள் வட்டாரத்தில் அந்த எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சியில் நீங்கள் ஈடுபடவேண்டும். இது நமது உரிமை என்பதை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. உங்கள் பகுதியில் இந்த ண்டு இலக்கியம் பயிலும் மாணவர்கள் ஐம்பது பேர் இருப்பார்களா?” மேடையில் அமர்ந்திருந்த தலைவரின் பக்கம் திரும்பினார் கதிரவன்.

“ஆமாம், இருப்பாங்க..” தலைவர் சமாளித்தார்.

“அப்படியானால் இந்த ஆண்டுக்கும் அடுத்த ஆண்டுக்கும் சேர்த்து நூறு மாணவர்களுக்குத் தேவையான இலக்கியப்பாட புத்தகங்களின் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்” மாண்புமிகு கதிரவனின் அறிவிப்பைக் கேட்டு கூட்டம் கரவொலியில் ஆரவாரித்தது. கதிரவன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்...

அதற்குப் பிறகு, ஒரு மாதம் கடந்தும்..

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி பதினைந்து மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியம் போதிக்கும் ஓர் ஆசிரியரைத் தேடி அலைந்துகொண்டிருந்தார் பொன்னையா.

No comments:

Post a Comment