எளிமையானது உன் கவிதை
ஆடம்பர அணிவகுப்புகளை இரசிக்கஇதயம் தவிப்பவர்களுக்கு
இடமில்லை உன்னிடம்
சாலையோர மரங்களின் இலைகளில்
படிந்து கிடக்கும் மண்துகள்களாய்
உன் கவிதைகளில் உன் அனுபவங்கள்
உன் போக்கில் நீ முன்னால் பயணமானாய்
பின்னால் வரும் வாசகர்களின்
உணர்வுக்காக பயணத்தைத் தாமதித்ததில்லை
கட்டுமானப் பகுதியில்
ஒவ்வொரு செங்கல்லாய் அடுக்கும் இடத்தை
நீ கடந்திருப்பாய் யினும்
உன் கவிதையில் அதன் பாதிப்பு இராது
நீ வித்தையேதும் கற்றவனில்லை
ஆயினும் வேகமாக ஓடும்
எந்த வாசகனும் உன் கவிதை கடக்கையில்
வேகம் குறைக்கிறான்
நீ வீண் செலவுகளை விரும்பிச் செய்பவனல்லன்
உன் கவிதையில்
நீ எண்ணியெண்ணிச் செலவு செய்வதை
விருந்துக்கு வந்தவர்களுக்கு உணர்த்துகிறாய்
உரத்தக்குரல்களில் கத்தல்களையும்
போலிப் பிரசாரங்களையும் நீ வெறுத்தவன்
உன் கவிதையில் நீ தனியனாய் மேடையில்
ஒலிபெருக்கியோடு ஒதுங்கியதில்லை
எளிய மக்களின் இன்னல்களை
இதயத்தில் ஏந்தியவன் நீ
அவர்களின் காயாத கண்ணீர்ச் சுவடுகளை
உன் கவிதையில் வரைந்துகொண்டே இருந்தாய்
அமைதியானது உன் கவிதை
ஊரடங்கிய வேளையில்
புறம்போக்கு நிலத்துக் குடிசையில் நிகழ்ந்த
உன் மரணத்தைப்போல
No comments:
Post a Comment