நம் குரல்

Tuesday, February 16, 2010

மாறும் முகம்


என் முகம் இப்பொழுது மாறியிருக்கிறது
என் பழைய முகத்தை மட்டும் அறிந்தவர்கள்
எனை அடையாளம் காணுவதில் சிரமமிருக்கலாம்

முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த
வெள்ளிக் கம்பிகள் தலைமுழுக்க
மொத்தக் குத்தகை எடுத்துவிட்டன

கம்பீரம் காட்டிய மீசையின்
அடர்த்தி இப்பொழுது குறைந்து விட்டது
நெற்றியின் பரப்பளவு கூடியிருக்கிறது
கண்களுக்குக் கீழே கரு வளையங்கள்
முகங்களில் புதிதாய்க் கோடுகள்

வண்ணங்களைக் குழைத்து
ஆனமட்டும் என்மேல் வரைந்துகொண்டே
இருக்கின்றன காலனின் கைகள்

“உங்கள எங்கோ பார்த்த மாதிரி இருக்கே?”
என் முகத்தை ஊடுருவும் உங்களுக்கு
அடையாளம் காட்டுகிறேன்
உங்களுக்குப் பரிச்சயமான என் பழைய முகத்தை

எனைக் கூர்ந்து பார்த்து
பழைய முகத்தை நினைவுபடுத்தும்
உங்களால்
அவதானிக்க முடியலாம்
முடியாமலும் போகலாம்

தன் போக்கில் மாறிக்கொண்டிருக்கும்
என் கவிதை முகத்தை

No comments:

Post a Comment