நம் குரல்

Wednesday, February 17, 2010

என் பார்வையில்.. (கவிதை ஆய்வு)


மலேசிய தேசியப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆண்டுதோறும் தேசிய அளவில் இளையோருக்குச் சிறுகதை, கவிதைப் போட்டிகளை நடத்தி அவற்றை நூலாக்கும் வரிசையில் இது 13வது இலக்கிய முயற்சியாகும். 1997இல் தொடங்கிய இலக்கியப்பணி விடாமுயற்சியோடு தொடர்வது நெஞ்சுக்குள் ஆச்சரியங்களை அள்ளி இறைக்கிறது.

நூல் வெளியிடுவது எளிய பணியன்று. அ·து அரும் பணி. தேர்வுக்காகப் பாட நூல்களுக்குள் கூடுகட்டிக்கொண்டு வாழாமல் தமிழ்த்துறை இல்லாத நிலையிலும் படைப்பிலக்கியத்திற்குத் தம் பங்களிப்பை ஆண்டுதோறும் வழங்கி வருகிற செயல்துடிப்புமிக்க மாணவர்களை வாழ்த்துகிறேன்.

16 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட கவிதைப்போட்டிக்கு இம்முறை 160 கவிதைகள் வந்து குவிந்தன. எண்ணிக்கையளவு தரத்திலும் இருக்கவேண்டுமே என்ற இதயவேண்டுதலோடு கவிதைகளை ஆராய்ந்தேன். கொஞ்சம் வியப்பு, கொஞ்சம் ஆறுதல், கொஞ்சம் ஏமாற்றம் என கலவையான மனநிலைக்கு ஆளானேன்.

மலேசியாவில் 1964இல் தமிழ் முரசில் சி.கமலநாதனின் “கள்ள பார்ட்டுகள்” எனும் மரபு மீறிய முதல் கவிதை வெளியானது. 45 ஆண்டு காலக்கட்டத்தில் இந்தப் புதிய கவிதையின் வளர்ச்சி பல்வேறு பரிணாமங்களை எட்டிப்பிடித்துள்ளது. புதுக்கவிதைக் கருத்தரங்கம், புதுக்கவிதைப் போட்டி, புதுக்கவிதை நூல்கள் என இப்புதிய கவிதை தன் பயணத்தைத் தொடர்கிறது. வல்லினம், அநங்கம், மௌனம் போன்ற தீவிர இலக்கிய இதழ்கள் நவீன கவிதையின் வளர்ச்சிக்கு நெம்புகோல்களாகி அதன் அடுத்தகட்ட பயணத்திற்குப் பாதை அமைக்கின்றன.

மரபான கவிதை வடிவத்திற்கு எதிரான கலகமாக உருவெடுத்த கவிதை காலந்தோறும் தனக்கான மொழியை புனரமைக்கும் முயற்சியில் உள்ளது. 1980இல் மலேசியாவில் எழுதப்பட்ட புதுக்கவிதைகளுக்கும் புத்தாயிரத்தில் எழுதப்படும் நவீன கவிதைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை ஆழ்ந்து நோக்கினால் இதனை உணர முடியும்.

இன்றையை கவிதை பழைய பிரச்சார பாணியை விடுத்து, அழகியல் கூறுகளைப் புறமொதுக்கி, சொல் விளையாட்டுகளை விட்டு விலகி, அலங்காரங்கள் இல்லாமல் உரைநடைத் தன்மையிலேயே வாசகனை நெருங்கி வருகிறது. இன்றைய கவிதை இதுவரை சொல்லாத வாழ்வின் கணங்களைப் பதிவு செய்கிறது; எந்தக் கருத்தாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது; மதிப்பீடுகளைக் கலைத்துப் போடுகிறது; எழுதி எழுதி சலித்துப்போன வழக்கமான சொல்லாடல்களை விலக்குகிறது; மனத்தின் ழங்களை திறந்து காட்டுகிறது. மொத்தத்தில் படைப்பாளிகள் தங்களைப் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ள கவிதை மொழி நெகிழ்ந்து கொடுக்கிறது.

இம்முறை போட்டிக்கு வந்த கவிதைகள் இருவகைகளில் (பழைய முறையிலும் புதிய முறையிலும்) அமைந்துள்ளன. இன்று இளையோரிடையே கவிதை எழுதும் ஆர்வம் தணியாமல் இருப்பதைப் போட்டிக்கு வந்த கவிதைகள் அறிவிக்கின்றன. போட்டிக்கு வந்த படைப்புகளின் எண்ணிக்கை மகிழ்வைத் தந்தாலும் அவற்றின் தரம் மனத்திற்கு நெருடலைத் தருகிறது.

மாறிவரும் கவிதையின் போக்கைப் பல கவிதைகளில் காண முடியவில்லை. ஒரு படைப்பாளியின் வாழ்க்கை அனுபவத்தோடு பரந்த வாசிப்பு அனுபவமும் இணையும்போதுதான் கவனத்தைக் கவரும் படைப்புகள் தோன்றும். உள்ளூர் ஏடுகளில் அச்சில் வரும் படைப்புகளை மட்டும் வாசித்துவிட்டு அவற்றையே கவிதைக்கான முகவரியாக ஏற்றுக்கொள்ளும் நிலையை நம் படைப்பாளர்கள் கட்டாயம் தவிர்க்கவேண்டும். அவற்றை நகலெடுத்து அதே பாணியில் எழுதுவதால்தான் நீர்த்துப்போன, உள்ளடக்கப் புதுமையில்லாத, தரமான வாசகனின் பொறுமையைச் சோதிக்கும் படைப்புகளாக அமைந்துவிடுகின்றன.

கவிதையில் எல்லாவற்றையும் சொல்லத்துடிக்கும் ஆர்வம் அதன் கலைநேர்த்தியைச் சிதைத்துவிடலாகாது. எல்லாவற்றையும் விளக்கிச் சொல்வது கட்டுரையின் வேலை. கவிதை தேர்ந்த சொற்களால் வாசகனின் மனத்தில் கல்லெறிந்து சலனத்தை ஏற்படுத்துகிறது. கவிதையில் சொல்வதைவிட உணர்த்தலே முக்கியம்.

இனி, பரிசுக்குரிய படைப்புகளையும் தேர்வான படைப்புகளையும் உங்களின் பார்வைக்குக் கொணர்கிறேன்.

‘திரும்பவும் ஒரு பறவை’ முதல் பரிசைப் பெறுகிறது. இதில் நகரம் துயரப் பெருவெளியாக நம் கண் முன்னே விரிகின்றது. அங்கு வெறுமைக்கும் பரபரப்பான இயந்திரகதி வாழ்வுக்கும் இரையாகும் மனிதனைக் காட்சிபடுத்துகிறது.

சுவர்களில் படிந்திருந்த
வெயிலை விழுங்கத் துவங்கினார்கள்
சில பரபரப்புகளுடனும் அவசரத்துடனும்
ஒருவரை ஒருவர் கடந்து சென்றுகொண்டிருந்த
நிர்பந்தத்தில்

நகரத்தில் மனிதரைப்போல் பறவைகளும் புறக்கணிக்கப்படுகின்றன. மீண்டும் மீண்டும் அவை நகரம் திரும்பி நகரச் சந்தையில் காணாமல் போவதுபோல் மனிதனும் கரைந்து காணாமல் போகும் கொடுமை குறியீடாகக் காட்டப்படுகிறது. அன்பானவர்களை, உறவுகளை நகரப் பெருவெளியில் தொலைத்துவிட்டுத் திரியும் மனிதனின் உள்ளார்ந்த வலி இதனில் உரக்கக் கேட்கிறது.

நேற்றைய அனுபவங்களும் இரைச்சல்களும்
பெரும் கூச்சலுடன்
ஒரு பறவையைப் போல
நகரம் திரும்பியது

மீண்டும் முதலிலிருந்து
அடுக்கத் துவங்கினேன்
தொலைந்தவர்கள் பற்றியும்
தொலைத்தவர்கள் பற்றியும்

தோட்டப்புறங்களை விட்டு, நகரங்களை நோக்கி நகரும் மனிதர்கள் அங்கே அந்நியப்பட்டு விளிம்பு மனிதர்களாகிவிடும் நவீன வாழ்வின் நலிவை இங்கே ஆழமாக உணரமுடிகிறது. பறவையைப்போல் மனிதன் மீண்டும் மீண்டும் அங்கே திரும்பிக்கொண்டிருக்கிறான். வாழ்க்கையை வயிற்றுக்கு விற்றுவிட்டவனால் வேறு என்னதான் செய்ய முடியும்?

‘வார்த்தைகளும் காயங்களும்’ இரண்டாம் பரிசைப் பெறுகிறது. மனித வாழ்க்கையே சொற்களால் பின்னப்பட்டுள்ளது. நம்மை மாற்றிக்கொள்ள முக்கியத் தேவை சொற்கள்தாம். மனத்தில் உள்ளதை எப்படிப் பேசவேண்டும் என்பதையும் பிறரைக் காயப்படுத்தாமல் எப்படிச் சொற்களை வெளிப்படுத்தவேண்டும் என்பதையும் பலர் அறியாமல் இருக்கின்றனர். சொற்கள் விதைகளாகி நமக்கு சிறந்த விளைவைத் தரும் என்ற சிந்தனையை இக்கவிதை நமக்குத் தருகிறது.

வார்த்தைகள் பல
என்னைச் சுற்றி
உதிர்ந்து கிடக்கின்றன
உயிரோடும் உயிரற்றும்..
சில சமயம்
வார்த்தைகளுக்குக்
கைகள் முளைக்கின்றன..
முளைத்த கைகள்
மெல்ல நீண்டு
கழுத்தை நெரிக்கின்றன..

ஆசிரியரின் சொற்கள் மந்திரமாகி, மருத்துவரின் சொற்கள் மருந்தாகிப் பலரின் வாழ்வில் திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. பிறரைப் புறக்கணிக்காத, அவமதிக்காத சொற்களால் பெரும் நன்மைகள் விளைகின்றன என்ற கருத்தை இக்கவிதை வலியுறுத்துகிறது.

புன்னகையோடு
வார்த்தைகளை அணிந்துகொள்ள
தொடங்கிய நாள்முதல்
வார்த்தைகளின் கைகள்
இறுக்கம் தளர்ந்து
காயப்பட்டுக் கிடக்கின்றன

‘தேநீர் மிச்சங்களில் சில எச்சங்கள்’ மூன்றாம் பரிசைப் பெறுகிறது. இதன் பாடுபொருள் பழையது என்றாலும் பெண் பார்க்கும் படலத்தில் பெண்ணுக்கு நேரும் அவமானங்களை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது.

ஆரம்பமே
தொழில் தொடங்கி
கல்வியில் நிற்க..
உன் முதுகலையும்
என் இளங்கலையும்
முரண்பாடுகளில்

இன்றைய நிலையில் உறவை நிச்சயிப்பதில் கல்வியிலும் பொருளாதாரத்திலும் காணும் ஏற்றத்தாழ்வுகள் இடையூறாக இருக்கும் கொடுமையை இது படம் பிடிக்கிறது. ஒப்புக்கு அரங்கேறும் உரையாடல்களில் பெண்ணின் மன உணர்வுகள் புறக்கணிக்கப்படும் நிலையை பின்வரும் வரிகள் நம் முன்னே காட்சிகளாக்குகின்றன

பிடித்தது பிடிக்காதது
அரசியல்
மார்க்சியம்
கடவுள் என
உன் கொள்கைப் பரப்புகளை
மலையாய்ப் பேசி முடித்து
துளியாய் என்னையும்
கேட்டு வைத்தாய்

‘புத்தகங்களுக்குள் எனது சமாதி’, ‘உயிர் சுடுகிறது’, ஒரே மலேசியா’, ‘வலித்தாலும் சிரிக்குதம்மா எம் மனசு’ கிய நான்கும் றுதல் பரிசுகளைப் பெறுகின்றன. புத்தகங்கள் மனிதச் சிந்தனையின் சேமிப்புக் கிடங்குகளாகி அவனின் உயர்வுக்கு அடித்தளமாக உள்ளன. ஆனால், வெறும் ஏட்டுக்கல்வியினால் முழுமையான மனிதனை உருவாக்க முடியாது. புத்தகங்கள் மனிதனை மீட்டெடுப்பதை விடுத்து அவனை உள்ளீடற்ற மனிதனாக, மூளைக்குள் தகவலைச் சேமிக்கும் இயந்திரமாக உருவாக்கும் கொடுமையைப் ‘புத்தகங்களுக்குள் எனது சமாதி’ கவிதை பேசுகிறது. புத்தகங்களுக்குள் வலிந்து தள்ளப்படும் மனிதன் அவற்றை வெறுத்து ஒதுக்கிறான்.

என் மனமும் கவனமும்
லயிக்காத அந்தப் புத்தகச் சிறைக்குள்
எல்லாரும் விரும்பித் தள்ளிவிடுகிறார்கள்

என் பூத உடலைப் பிடித்து
நூலின்முன் நிறுத்திவிடலாம்
என் ஆன்மாவைப்
பிடிக்க முடியுமா உங்களால்?

‘உயிர் சுடுகிறது’ கவிதை, மது அருந்திவிட்டு விபத்தில் சிக்கிக் காயமடைந்து கிடக்கும் ஒருவனின் இமைகளின் வழி பதிவான காட்சிகளை நம் முன் விரிக்கின்றது.

கசக்கி விடப்பட்ட
மேகங்கள்
பரிதாபத்தை
முணுமுணுக்கிற
உதடுகள்

குருதியின் எச்சத்தில்
விரிகிற
சாலை

சில்லுகளாய்ச்
சிதறிக்கிடக்கிற மகிழுந்து

கடந்த ஆண்டு (2009) நம் நாட்டில் 6000 மனித உயிர்களைச் சாலை விபத்துகள் தின்று தீர்த்து விட்டன. அதன் அகோரப் பசி என்றும் தீர்வதில்லை. அவற்றில் மதுவினால் நிகழ்ந்த விபத்துகள் எத்தனையோ என்ற சிந்தனையை இக்கவிதை நம்முள் எழுப்புகிறது.

மலேசிய மக்களை இனவேறுபாடின்று ஒரே உணர்வில் ஒன்றிணைக்கும் முயற்சியான நம் பிரதமரின் கொள்கைமீது விமர்சன அம்புகளை வீசுகிறது ‘ஒரே மலேசியா’ கவிதை. இரயில் பயணத்தில் சிலர் சகல வசதிகளோடு சொகுசாகப் பயணப்பட, வேறு சிலரோ இருக்கையில்லாமல் நின்றுகொண்டு பயணிக்கும் அவலத்தைக் காட்டி, ஒரு குறியீடாக விமர்சனத்தை முன் வைக்கிறார் படைப்பாளர். அந்நியத் தொழிலாளிகளின் வருகையும் அதனால் விளையும் பாதிப்பும் இங்கே சுட்டப்படுகிறது.

ஒரு குழுவினருக்கு உட்காரவும்
கால்நீட்டிப் படுத்துக்கொள்ளவும்
இடம் தாராளமாய்
ஒதுக்கப்பட்டிருக்கிறது

நானும்
என்னைப்போல் சிலரும் இன்னும்
நின்றுகொண்டிருக்கிறோம்

இடையே
ஒரு நிறுத்தத்தில்
புதிய பயணி -
அந்நியத் தொழிலாளி

‘வலித்தாலும் சிரிக்குதம்மா எம் மனசு’ ஆணாகவும் பெண்ணாகவும் இல்லாமல் இடையிலே வேறு பாலினமாகப் பிறந்துவிட்டவரின் சோக இராகங்களை மீட்டுகிறது. தன் சோகத்தைத் தன் தாயிடமே சொல்லி அரற்றுவதோடு அவரைக் காலமெல்லாம் காக்கக் கிடைத்த வாய்ப்பாகத் தன்னைத் தேற்றிக்கொள்ளும் நிலையை இப்படைப்பு பதிவு செய்கிறது.

ஏன் இந்தப் பிறப்பு
யாருக்காக?
எத்தனைப் பெயர்கள்
எனக்காக

கீழ்த்தரப் பேச்சும்
ஏளனப் பார்வையும்
நீங்காத கதையாய்
என் வாழ்க்கையில்

காலமெல்லாம்
உன் ஆயுள் வரை
உன்னைக் காக்கத்தான்
அரவாணியாய் இப்பிறவி
கடவுள் எனக்காகக் கொடுத்தாரோ!

இம்முறை போட்டிக்கு வந்த பெரும்பாலான கவிதைகள் ஆய்வாளனுக்கு அதிகம் வேலை வைக்காத படைப்புகளாக அமைந்துவிட்டன. சொற்சிக்கனமும் கலைநேர்த்தியும் இன்னும் கைவரக்கூடாத படைப்புகளின் படையெடுப்பு இன்னும் எத்தனை காலத்திற்கோ யானறியேன்!

“கவிதைகள் பற்றிய பேச்சுகளை நாம் தொடர்ந்து விரிவுபடுத்துவதன் மூலமே கவிதை என்ற வடிவத்தில் படியும் பூஞ்சைகளை விலக்கித் தமிழ்க் கவிதையைத் துலங்கச் செய்ய முடியும்” என்று மனுஷ்ய புத்திரன் நம் கவிதைத் துறையின் தொடர்ந்த வளர்ச்சிக்கு சிறந்த லோசனையை முன் மொழிகிறார். கவிதை குறித்த உரையாடல்களில் நம் கவனம் குவிந்தால் கவிதை முயற்சிகள் எதிர்பார்க்கும் பலனைத் தரும் எனத் திண்ணமாய் நம்பலாம்.

ஆயினும், கவிதைப் போட்டிக்குப் படைப்புகளை அனுப்பியவர்களில் பலர் புதியவர்கள் என்பதை அவர்களின் படைப்புகளே சான்று கூறுகின்றன. கவிதை வயலின் வரப்புகளில் நின்று வேடிக்கை பார்க்காமல் நாற்றுநட சேற்றுக்குள் இறங்கிவிட்ட இவர்களை வரவேற்பதோடு நல்ல விளைச்சலை நோக்கிப் பயணப்பட வாழ்த்துகிறேன்.

இன்னும் நம்பிக்கையோடு,

ந. பச்சைபாலன்
15.1.2010

1 comment:

  1. நல்ல மதிப்பீடு. வலைப்பூ இன்னும் வளர வாழ்த்துக்கள்.

    ரெ.கா.

    ReplyDelete