நம் குரல்

Monday, February 15, 2010

பதுங்கு குழிகளாலானது வாழ்வுநிச்சயமற்ற தருணங்களின்
மிஞ்சியிருக்கும் வழிகளில்
பிதுங்கிக் கசிந்துகொண்டிருக்கிறது
பெருமதியான எங்கள் வாழ்வும்
நம்பிக்கையும்

நினத்தபோதெல்லாம் வாந்தியெடுக்கும்
வானத்தின் உலோகப் பறவையின்
உக்கிரத்தில் உதிர்ந்து உதிர்ந்து
இன்னும் சிலரே மிஞ்சியிருக்கிறோம்

வீடுகள் சிதைந்து சின்னாபின்னமானதால்
அனாதையாக நீளுகிறது
எங்களூர்த் தெரு

பனைமரங்களும் பழமரங்களும்
செழித்து வளர்ந்த கிராமத்தின்
அழகு முகத்தில் காறி உமிழ்ந்து
கொடூரக்காயங்களால் கோலம் சிதைந்து
விளையாடிக்கிறார்கள்

மரணத்தின் நாக்குகள் நீண்டு
தொடத் துடிக்கும் தூரத்தில்
இருக்கின்றன எங்களின்
தற்காலிக உயிர்காக்கும் கவசங்களாய்
பதுங்கு குழிகள்

எங்களின் நிலைக்கு ‘இச்’கொட்டி
வண்டி வண்டியாய் நீங்கள் அனுப்பிவைத்த
உணவுப்பொருட்கள் வருவதற்குள்
பதுங்கு குழிகளுக்குள் மீளாத்தூக்கத்தில்
மூழ்கியிருப்போம்

நீங்கள் ஆசைசையாய் அனுப்பிய
அரிசி மூட்டைகள்
வாய்க்கரிசியாய்க்கூட
எங்களுக்குப் பயன்பட வாய்ப்பிருக்காது

No comments:

Post a Comment